பாராளுமன்ற முதலாளித்துவ ஜனநாயக அமைப்பு முறை அது தோற்றம்பெற்ற மேற்கு நாடுகளில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் காலாவதியாகிவிட்ட காலகட்டத்தில் அதே ஜனநாயகம் இயல்பாகத் தோற்றம் பெறாது காலனியாதிக்க நாடுகளால் ஒட்டவைக்கப்பட்ட இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளில் கவலைக்கிடமான கேலிக் கூத்தாக மாறிவிட்டது.
மக்களின் உணர்வையும் சார்பு நிலையையும் கணித்துக் கூறமுடியாத அவர்களின் இயலாமையின் வெளிப்பாடாகவே தேர்தல்கள் அமைந்துவிடுகின்றன. பிரான்ஸ் நாட்டில் இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அந்த நாட்டின் நிறவாதக் கட்சிகளில் ஒன்றான தேசிய முன்னணி 33.8 வீத வாக்குகளைப் பெற்றிருந்தது. வெளிப்படையாகவே நிறவாதத்தை முன்வைக்கும் அக்கட்சியின் வெற்றி என்பதன் மறுபக்கத்தில் பிரான்ஸ் நாட்டில் அரைவாசிக்கும் சற்றுக் குறைவானவர்கள் நிறவாதிகளா என்றால் அது உண்மையல்ல.
அதே போன்றே, அமெரிக்கக் காட்டுமிராண்டி அரசியல்வாதி என வர்ணணை செய்யப்படும் டொனால்ட் ட்ரம்பின் வெற்றிச் செய்தியாக அமெரிக்கர்கள் அனைவரையும் நிறவாதிகளாகவும் நியாமற்றவர்களாகவும் கருத முடியாது.
அவர்களில் வெற்றியின் பின்னணியில் அதிகாரவர்க்கத்திற்கு எதிரான தமது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள் என்பதை செய்தியாக எடுத்துக்கொள்ளலாம். பிரான்சில் இதுவரைக்கும் சில பாராளுமன்ற ஆசனங்களைக்கூடப் பெற்றுக்கொள்ள முடியாத ஆளும் வர்க்கத்தின் அடையாளப்படுத்தப்படாத அரசியல்வாதியிடம் மக்களில் ஒரு பகுதியினர் சரண்டைந்தமைக்கு மக்களின் இயலாமையே காரணம்.
அந்த நாடுகளின் அதிகாரவர்க்கத்திடமிருந்து விடுதலை பெற புரட்சிகரக் கட்சிகளின் வெற்றிடம் ஏற்பட்டுள்ள சூழலே மக்கள் மாற்று வழிகளை அதுவும் இதுவரை பரீட்சித்துப்பார்க்கப்படாத வழிகளைத் தெரிவுசெய்ய முற்படுகின்றனர்.
இந்தியாவில் இதன் மறுபக்கம் மிகவும் நுண்ணியமானது.
குஜராத்தில் தேர்தலுக்கு முன்பான கருத்துக்கணிப்புகளில் அவ்வப்போது மத அடிப்படைவாதத்திற்கு எதிராகத் தம்மை முன்னிறுத்திக்கொள்ளும் காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகித்தது. ஆர்.எஸ்.எஸ். இயக்கும் பாரதீய ஜனதா பின்னடைவைச் சந்தித்திருந்தது.
காங்கிரஸ் கட்சியை இந்துத்துவ பாரதீய ஜனதாக் கட்சிக்கு எதிரான மாற்றாக மக்கள் கருதிய நிலையில், காங்கிரசின் தலைவர் தன்னையும் ஒரு இந்துத்துவா ஆதரவாளராக வெளிப்படுத்தினார். மறந்தும் இஸ்லாமியர்கள் எவரையும் பிரச்சார மேடைகளில் சேர்த்துக்கொள்ளவில்லை. தவிர, குஜராத் இந்துக்கோவில்களில் எதையும் தவறவிடாமல் ராகுல் காந்தி ஏறி இறங்கினார். மாற்றை எதிர்பார்த்த மக்கள், நரேந்திர மோடியின் குறுகிய மறுபதிப்பையே ராகுல் காந்தியிடம் கண்டார்கள். ராகுல் காந்தி நரேந்திர மோடி என்ற போட்டிக்கு இடையில் வேறு எந்தக் கட்சிகளும் இல்லாத நிலையில், போலியைவிட அசலே மேல் என மக்கள் கணிக்க மோடியின் பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சியைக் கையகப்படுத்திவிட்டது.
இந்துதுவா என்ற தலையங்கத்தில் நரேந்திர மோடி நடத்தும் கோப்ரட் கம்பனிகளின் ஏகாதிபத்திய அடிமை ஆட்சிக்கு மாற்றான தலைமையை ராகுல் காந்தி வழங்க முடியாது என்ற முடிவு மீண்டும் மோடியை ஆட்சி பீடத்தில் ஏற்றியது.
அதற்கு சமாந்தரமான போக்கே ஆர்.கே நகர் தேர்தலிலும் காணப்பட்டது. மோடியின் பாரதீய ஜனதா மற்றும் அதன் அடிமை அரசான எடப்பாடி பன்னீர் கொள்ளையர்களின் அரசிற்கு எதிரான மக்களின் எதிர்ப்புணர்வின் வடிகாலாக திராவிட முன்னேற்றக் கழகம் அமைந்திருக்கவில்லை. மத அடிப்படை வாதத்திற்கு எதிரான உயர்ந்த தொனியில் திருமா வளவன் பேசிய அளவிற்குக் கூட கருணாநிதியின் வாரிசான ஸ்டாலின் பேசவில்லை.
அதே வேளை தினகரனை மூலை முடுக்குகள் எல்லம் புகுந்து விரட்டிய பாரதீய ஜனதாவின் ஆட்சி அவரை மக்களிடம் கதாநாயகனாக மாற்றிவிட்டது. ஆக, இங்கும் பாரதீய ஜனதாவின் ஆட்சிக்கு எதிரான மாற்றை தி.மு.க விடமிருந்து எதிர்பார்க்க முடியாது என்ற சூழலில் அந்த ஆட்சியின் நேரடிப் பாதிப்பிற்கு உட்படுத்தப்பட்ட தினகரனைத் தவிர்க்க முடியாமல் மக்கள் தெரிவு செய்தனர்.
ஆக, குஜராத்திலும், ஆர்.கே நகரிலும் இந்துத்துவாவிற்கு எதிரான மாற்றையே மக்கள் எதிர்பார்த்தனர், ஆனால் அதன் எமாற்றம் எதிர்பாராத முடிவுகளைத் தந்துள்ளது.
இந்தியாவில் பிரித்தானியர்களால் ஒட்டவைக்கப்பட்ட பாராளுமன்ற அரசியல் கேலிக்கூத்தாகிவிட்டது. இந்தச் சூழலைப் புரட்சிகரக் கட்சிகள் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் ஆர்.எஸ்.எஸ் இன்னும் பல ஆண்டுகள் ஆட்யில் நீடிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்,