சீனாவையும் சோவியத் ரசியாவையும் அழிப்பதில் உலக முதலாளித்துவம் பெற்றது தற்காலிக வெற்றியே. முதலாளித்துவம் தோன்றி முன்னூறு வருடங்களுக்கு உள்ளாகவே அழிவைச் சந்தித்து இன்று தன்னைப் பாதுகாத்துக்கொள்ள இராணுவ உலகம் ஒன்றைக் உருவாக்க முனைந்துக்கொண்டிருக்கிறது.
ஒடுக்கும் அரசுகள் போலி அடையாளங்களை மக்கள் மீது திணித்து அவர்களை மோதவிட்டு இலாபம் சம்பாதித்துக்கொள்கின்றன. கருத்து மக்களைப் பற்றிக்கொள்ளாமல் அதனை உறை நிலையில் வைத்துள்ளன. மத வெறியையும் இன வெறியையும் தன்னிலை அடையாளங்களையும் ஆழப்படுத்தி ஒடுக்கப்படும் மக்களைப் பிழந்து கொன்று குவிக்கின்றன.
மனிதர்களின் சிந்தனைத் திறனை மழுங்கடிக்கும் தலைமை வழிபாட்டையும், துதிபாடலையும், அடையாள வெறியையும், குழுவாதத்தையும் சமூகத்தின் பொதுப் புத்தியாகக் கட்டமைத்து சரியான கருத்துக்கள் மக்களைப் பற்றிக்கொள்ளாமல் அதிகாரவர்க்கம் பாதுகாத்துவருகின்றது.
இன்று சமூகத்திற்கு துணிந்து உண்மையைக் கூறத் தவறினால் நாளைய சந்ததி அழிந்துபோகும்.
நாளையை முழு சமூகத்தின் அழிவின் ஆரம்பத்தையும் அறிந்துகொண்டு தமது சுய இலாபத்திற்காக உண்மைகளை உறை நிலையில் வைத்திருக்கும் ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த நலனை மனச்சாட்சி என அழைத்துக்கொள்கிறான். மனச் சாட்சி என்பதே வாழ் நிலையும் அவனைச் சுற்றியுள்ள புறச்சூழலும் தீர்மானிக்கும் கருத்து என்பதைக்கூட உணர்ந்துகொள்ள மறுக்கிறார்கள்.
தாம் உண்மையைக் கூறினால் அன்னியப்பட்டுப் போய்விடுவோம் என அச்சமடையும் சுய இலாப நோக்கத்தைக் கடந்து, தாம் வாழ்ந்த சமூகத்தின் எதிர்ப்பிற்கு மத்தியில் நாளைய சந்ததிக்கு உண்மையைக் கூறியவர் சில மனிதர்களுள் ஏங்கல்சும் ஒருவர்.
மார்க்சும் ஏங்கெல்சும் சமூகத்தில் ஏற்கனவே புதைந்துகிடந்த தத்துவங்களை தொகுத்து உலகத்திற்கு உண்மையைக் கூறினார்கள். வறுமை அவர்களைக் கொன்று தின்றது. வறுமயின் பிடியில் மார்க்ஸ் மரணித்துப் போனார்.
நூறு பூக்கள் மலரட்டும் நூறு கருத்துக்கள் மோதட்டும் என மாவோ உலகத்திற்கு அறைகூவல் விடுத்தார். கட்சியின் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு கணமும் மக்களின் கண்காணிப்பில் இருக்கவேண்டும் என்ற திட்டத்தை மாவோ நடைமுறைக்குக் கொண்டுவந்தார். கட்சி மக்களுக்கு எதிரானதாக மாறுமானால் அதனை உடைத்தெறியுங்கள் என்றார்.
மாவோ தலைமையில் உருவான உலகத்தின் மிகப்பெரும் நாடுகளில் ஒன்றான சீனாவை உடைத்தெறிய உலகம் முழுவதுமுள்ள ஏகாதிபத்திய ஆளும் வர்க்கங்கள் பில்லியன்களைச் செலவு செய்தன. தமது முழு வலுவையும் பல தசாப்தங்களாகப் பயன்படுத்தி சீனா – ரசியா போன்ற நாடுகள் மீதான தாக்குதல்களைத் தொடுத்தன.
புரட்சிக்கான தத்துவமான மார்க்சியத்திற்கு எதிரான இளம் சந்ததியை உருவாக்க பள்ளிகளிலிருந்தே பொய்களை கற்பித்தன.
இவற்றையெல்லாம் தாண்டி இன்றும் உலக மக்களின் விடுதலைக்கான இனம், மதம் போன்ற தன்னிலை அடையாளங்கள் அனைத்தையும் கடந்து தத்துவமாக மார்க்சியம் தலை நிமிர்ந்து நிற்கின்றது. மார்க்சியத்தையும் தகவல் தொழில் நுட்பத்தையும் நிராகரித்து இனி மனிதகுலம் வாழ முடியாது என்பதை பெரும்பாலான மக்கள் உணர்ந்துகொள்கிறார்கள்.
இவ்வாறு மார்க்சியம் நிலை பெறுகிறது என்றால் அதனை தோற்றுவித்தவர்களில் ஏங்கெல்ஸ் பிரதானமானவர்.
வர்த்தகத்தில் பெரும் பணமீட்டிய பருத்தி ஆலை உரிமையாளர் ஒருவரின் மகன் அரச படைகளால் தேடப்படுவதை அறிந்த தாய் பதைபதைதுப் போகிறார். “நான் நாளாந்த செய்திப் பத்திரிகையை எடுத்த போது எனது மகன் தேடப்படுவதைத் தெரிந்துகொண்டேன். கடவுளுக்கு மட்டும் தான் தெரியும் நான் எவ்வளவு வேதனையடைந்திருப்பேன் என்று” என்று அந்தத் தாய் மகனுக்கு எழுதிய கடிதத்தை இன்று உலகில் பலரும் படித்துவிட்டார்கள். பஞ்சு ஆலை உற்பத்தித் தொழிற்சாலைகள் 19ம் நூற்றாண்டின் பெரும் வருவாயை ஈட்டும் வர்த்தகம். ஜேர்மனியிலும் இங்கிலாந்திலும் ஆலைகளைக் விரிவுபடுத்தியிருந்த செல்வந்தர், தனது மகனையும் வியாபாரத்தில் ஈடுபடுத்த விரும்பினார்.
மகனிற்கோ வியாபாரத்தில் நாட்டம் வரவில்லை. சமூகக் கொடுமைகளைக் கண்டு கொதித்தெழுந்தார். அதற்கான அரசியல் தத்துவங்களைக் கற்க ஆரம்பித்தார். அவர் 17 வயதாகவிருக்கும் போது ஹேகல் என்பவரின் தத்துவம் சமூகத்தின் வளர்ச்சியை விபரிப்பதாக பல இளைஞர்களால் கருதப்பட்டது. ஜேர்மனியில் ஹேகலிய இளைஞர்கள் சமூகத்தில் கலகம் விளைவித்தனர். அவர்களோடு பருத்தி ஆலைச் செல்வந்தரின் மகனும் இணைந்துகொண்டார்.
அந்த இளைஞனின் சிந்தனை இல்லாமலிருந்தால் உலகம் இன்னும் நூற்றுக்கணக்கான வருடங்கள் பின் நோக்கிச் சென்றிருக்கும். துறை சார்ந்த கல்வி, பொருளியல், தத்துவம், விஞ்ஞானம், போன்றவை மட்டுமல்ல உலகின் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான போராட்டங்களும் அவரின் நிழல் படாமல் கடந்து செல்ல முடியாது. தான் வாழ்ந்த போது உலகில் அறியப்படாமலிருந்த அந்த மனிதன் தான் ஏங்கல்ஸ்.
ஏங்கெல்ஸ் 28.11. 1820 ஜேர்மனியில் பிறந்தார்.
வியாபரத்தில் ஏங்கல்சிற்கு ஈடுபாட்டை ஏற்படுத்த முனைந்த அவரது பெற்றோர்கள் அவரை இங்கிலாந்திற்கு பயணமாகக் கோரினர். ஏங்கல்ஸ் இற்கு 22 வயதாகும் போது அவரது தந்தை பங்குதாரராகவிருந்த நூல் நெய்யும் ஆலையில் வேலை செய்வதற்காக இங்கிலாந்திலுள்ள மன்செஸ்டர் என்ற இடத்திற்கு ஏங்கெல்ஸ் அனுப்பப்படுகிறர்.
விக்ரோரியா மில் என்று அழைக்கப்பட்ட அந்த ஆலை இன்று இன்று மூடப்பட்டுவிட்டது. பெரும்பாலான பகுதிகள் புனரமைக்கப்பட்டு வியாபார நிறுவனங்களுக்கான அலுவலகமாகப் பயன்படுத்தப்படுகின்றது. மன்செஸ்டர் செல்லும் வழியில் ஏங்கெல்ஸ் கார்ல் மார்க்சைச் சந்திக்கிறார். அப்போது கார்ல் மார்க்ஸ் ஜேர்மனிய ஊடகம் ஒன்றின் ஆசிரியராகப் பணி புரிகிறார்.
கார்ல் மார்க்ஸ் ஹேகலின் தத்துவத்தின் பிற்போக்கான பகுதிகளோடு முரண்பட்டிருந்த வேளையில் இருவருக்கும் இடையேயான கருத்து உடன்பாடு ஏற்படவில்லை. மன்செஸ்ரரில் மேரி பேர்ன்ஸ் என்ற பெண்ணை சந்திக்கும் ஏங்கல்ஸ் அவரோரு 20 வருட காலம் வாழ்க்கை நடத்துகிறார்.
மன்செஸ்டரில் தொழிலாளர் குடியிருப்புக்களின் அவலத்தைக் காண்கிறார். அடிப்படை வசதிகள் கூட இல்லாமல், சேரிகளில் வாழ்ந்த தொழிலாளர்களின் அவலங்கள் தொடர்பாகவும், குழந்தைத் தொழிலாளிகள் தொடர்பாகவும் ஏங்கெல்ஸ் எழுத ஆரம்பிக்கிறார். தனது ஆக்கங்களைக் கார்ல் மார்க்சின் ஊடகத்திற்கு அனுப்பி வைக்கிறார்.
24 மொழிகளைக் கற்றிருந்த ஏங்கெல்ஸ் இன் கட்டுரைகள் ஆங்கில ஊடகங்களிலும் பிரசுரமாகின்றன.
கார்ல் மார்க்சின் ஊடகம் ஜேர்மனியில் தடைசெய்யப்பட்டதும், அவர் பாரிஸ் நகரிற்குச் செல்கிறார். 1814 ஆம் ஆண்டில் ஏங்கெல்ஸ் ஜேர்மனிக்குச் செல்லும் வழியில் கார்ல் மார்க்சை பாரிசில் சந்திக்கிறார். இப்போது ஏங்கெல்ஸ் ஹெகலியன் அல்ல. மார்க்சின் கருத்துக்களோடு ஒன்று படுகிறார்.
அதன் பின்னான காலப்பகுதி முழுவதுமே ஏங்கெல்ஸ் கார்ல் மார்க்சுடன் இணைந்து பின்னாளில் உலகை மாற்றும் புரட்சிகரத் தத்துவங்களை எழுதினார். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை கார்ல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் இணைந்து எழுதினர்.
ஒரு தனிமனிதனால் இவ்வளவு ஆய்வுகளையும் தத்துவங்களையும் எழுதி முடிக்க இயலுமா என மார்க்சின் தத்துவங்கள் வியப்பை ஏற்படுத்தின என்றால் அவற்றின் ஒவ்வொரு உருவாக்கத்திலும் ஏங்கெல்சின் பங்களிப்பு இருந்தது. கார்ல் மார்க்சின் வாழ்க்கைச் செலவைக் கவனித்துக்கொள்வதற்காக ஏங்கெல்ஸ் தொடர்ச்சியாக அவரது தந்தையின் ஆலையில் வேலை பார்த்தார்.
1883 ஆம் ஆண்டு கார்ல் மார்க்ஸ் மரணித்த பின்னர், அவரது எழுத்துக்களைத் தொகுப்பதிலேயே ஏங்கல்சின் வாழ்க்கையின் பெரும்பகுதி செலவானது. ஏங்கெல்ஸ் குடும்பம் தனிச்சொத்து அரசு என்ற பிரபலம் மிக்கி நூலை எழுதினார். ஏங்கெல்சின் நூல் பல்கலைக் கழகங்களில் அவரின் மரணத்தின் பின்னர் பல்வேறு வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியது. துறைசார் கல்வியில் மனிதவியல் என்ற கற்கை நெறி புகுத்தப்பட்டது.
ஏங்கெல்சின் நூலின் ஆய்வு தவறானது எனவும் வேறு ஆய்வு முறைகளை முன்வைக்கிறோம் என்றும் முதலாளித்துவ தத்துவ ஆசிரியர்கள் கூறினர்.
ஏறக்குறைய அரை நூற்றாண்டு ஆய்வுகளின் பின்னர் மனித குலத்தின் தோற்றம் வளர்ச்சி பற்றிய ஏங்கெல்சின் கருத்துக்கள் சரியானவை என கல்விச் சமூகம் ஏற்றுக்கொண்டது.
ஏங்கெல்சும் மார்க்சும் முன்வைத்த கருத்துக்கள் மக்களைப் பற்றிக்கொண்டு தீயாகப் பரவின. முதலாளித்துவ அதிகார மையங்கள் இவர்களின் எழுத்துக்களைக் கண்டு அஞ்சின.
மார்க்சினதும் ஏங்கல்சினதும் மரணத்தின் பின்னர் மார்க்சியம் சோவியத் ரஷ்யாவில் உழைக்கும் மக்களின் ஆட்சியை நிறுவியது. உழைக்கும் மக்களுக்கான ஜனநயகத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திற்று. தேசிய இனங்களுக்குப் பிரிந்து செல்லும் உரிமை சோவியத் ஆட்சியில் வழங்கப்பட்டது. சீனாவில் மார்க்சியத்தின் நடைமுறை புதிய ஜனநாயக முறைமையை உருவாக்கிற்று. உலகின் எந்த மூலையில் மக்கள் சார்ந்த போராட்டங்கள் நடந்தாலும் மார்க்சியத்தை நிராகரித்து வெற்றிபெற முடியாது என்பதை மக்கள் உணர்ந்துகொண்டனர்.
ஐரோப்பிய அதிகாரவர்க்கம் மார்க்சியத்திற்கு எதிரான சதி முயற்சிக்காக மில்லியன்களைச் செலவிட்டது. கல்லூரிகளில் மார்க்சியத்திற்கு எதிரான பிரச்சாரம் பாடத்திட்டத்திலேயே மேற்கொள்ளப்பட்டது. 2008 ஆம் ஆண்டு பல்தேசிய வியாபார நிறுவனங்கள் உருவாக்கிய பொருளாதார நெருக்கடியின் பின்னர் மார்க்சிம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.