ராஜபக்ச ஆண்டாலென்ன மைத்திரி-ரனில் குழு ஆண்டாலென்ன என்று ஒரு சாரார் இன்னும் கேட்கின்றனர். இரண்டு பகுதியுமே பேரினவாதப் போக்கைக் கொண்டவர்கள் தான் என்பதில் ஐயமில்லை. ஆனால் ரனில்-மைத்திரி குழுவிடமிருந்த சனநாயக இடைவெளியில் மக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டார்கள் என்பதை ஒத்துக்கொண்டாகவேண்டும். குறைந்தபட்சம் நாம் ஒடுக்கப்படுகிறோம் என்று வெளிப்படையாகப் பேசுவதற்காவது இந்த இடைவெளி பயன்பட்டது.
அந்த குறைந்தபட்ச சனநாயகம் மீண்டும் பறிபோய்விடுமோ என இன்றைய சூழல் அச்சம் தருகிறது. இலங்கை முழுவதும் நடப்பது யூ.என்.பி மற்றும் மகிந்த குழுவிற்கு இடையிலான போட்டியே தவிர வேறு ஒன்றுமில்லை.
சிரிசேன வாக்குக் கொடுத்தபடி நூறு நாளில் தேர்தலை நடத்தவில்லை. ஆறு மாதங்கள் ராஜபக்சவைப் பலமடையச் செய்த பின்னரே தேர்தலை அறிவித்தார். நீண்ட அந்த இடைவெளி ராஜபக்ச கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்ற வழிசெய்தது. சிரிசேன மீது பல சந்தேகங்கள் ஆரம்பத்திலிருந்தே இருந்தது. ராஜபக்ச என்ற கொடூரமான எதிரியை விழுத்திய பின்னரும் ராஜபக்சவின் மெய்ப்பாதுகாவலர்களையே சிரிசேன தனக்கும் பயன்படுத்திக்கொண்டார்.
ராஜபக்சவின் சொத்துக்கள் முடக்கப்படவில்லை. மாறாக ராஜபக்சவின் ஆதரவாளர்கள் சிறிது சிறிதாகப் பலமடைய வழிகள் திறந்துவிடப்பட்டன. பசில் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பினார். ராஜபக்சவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடக மிகத் தந்திரமாக மைத்திரி நியமனம் வழங்கினார்.
யூ.என்.பி, ராஜபக்ச குழுக்களுக்கு இடையேயான போட்டியில் மைத்திரி நடுநிலை வகிப்பது போலத் தோன்றினாலும், சுதந்திரக் கட்சியின் வாழ்நாள் உறுப்பினரான மைத்திரி ராஜபக்சவின் ஆதரவாளராகவே செயற்படுவார். கடந்த காலமும் இதனையே உணர்த்துகிறது.
ரனில் மக்கள் மத்தியில் செல்வாக்கற்ற பரம்பரைப் பணக்காரன். உள்ளூர் அரசியலைவிட சர்வதேச அரசியலே ரனிலுக்கு அத்துப்படி. சாதாரண மக்களை விளங்கிக்கொள்ள முடியாதவர். தமிழர்களுக்கு எதிராக வெளிப்படையா இனவாதம் பேசுவதைக் குற்ற உணர்வாகக் கருதும் மேல் தட்டு வர்க்கமும் படித்தவர்களும் பணக்காரர்களும், மட்டுமே ரனிலின் நேரடி ஆதரவாளர்கள்.
தனக்கு மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற முடியாது என்று தெரிந்தும் அரசியலை விட்டு விலக மறுப்பவர் ரனில்.
ரனில் – ராஜபக்ச என்று வந்துவிட்ட நிலையில் ராஜபக்சவே மக்கள் முன்னால் துருத்திக்கொண்டு தெரிவார். அடிமட்ட மக்கள் மத்தியில் பௌத்த சிங்கள வெறியை ஏற்படுத்தி அவற்றை வாக்குகளாக அறவிடத்தெரிந்த பேச்சுத் திறமை மிக்கவர் அவர்.
இந்தக் காரணங்களால், ராஜபக்சவும் ரனிலும் ஒரே அளவிலான ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் நிலை இன்று தோன்றியுள்ளது சிறீலங்கா சுதந்திரக் கட்சி பலமாகவுள்ள 12 தொகுதிகளிலும் ராஜபக்சவின் வெற்றியே உறுதி செய்யப்படும்.
அவ்வாறான சூழலில் மகிந்தவை ஆட்சியமைக்க சிரிசேன அழைப்பு விடுப்பார். இதன் போது சிறிய கட்சிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே ரனில் ஆட்சியமைக்க முடியும். இதன் காரணமாக சிறுபான்மைக் கட்சிகளை ராஜபக்ச குறிவைத்துத் தாக்கும் திட்டம் ஜனவரிக்குப் பிறகு ஆரம்பித்துவிட்டது.
15 தொகுதிகளில் ஜே.வி.பி வெற்றிபெறும் நிலை காணப்படுகிறது. . இப்போது ஜே.வி.பி கூறிவருதன் அடிப்படையில் ராஜபக்சவிற்கு எதிரான கூட்டணியில் ஜே.வி.பி இணைந்து கொள்ளும்.
இதனால் ஜே.வி.பி பலமடைந்திருக்கும் பகுதிகள் முழுவதும் பயணம் செய்யும் ராஜபக்ச பிரச்சாரக்குழு அங்கெல்லாம் இனவெறிக் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இளைஞர்களே விழிப்புடனிருங்கள் சிறுபான்மை இனங்கள் உங்களை அழித்துவிடும் என்று கூட மேடைகளில் பேசுகிறார்கள்.
அடுத்ததாக மகிந்த ராஜபக்ச குறிவைத்த சிறுபான்மைக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இக் கட்சி ராஜபக்க்ச குழுவிற்கு எதிராக யூ.என்.பி உடன் சேர்ந்து செல்லும் சந்தர்ப்பங்கள் காணபடுவதால், சனாதிபதித் தேர்தல் முடிந்த காலப்பகுதியிலிருந்தே கூட்டமைப்பின் மீது குறியாகவே ராஜபக்ச இருந்துவந்தார். கூட்டமைப்பின் 20 ஆசனங்களை அரைவாசியாகக் குறைத்துவிட்டால் அது ராஜபக்சவிற்குப் பெரும் வெற்றி. இதற்காக சனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிக்கக் கோரிக்கைவிடுத்த கஜேந்திரகுமார் இறக்கிவிடப்பட்டுள்ளார்.
வடக்கில் இரண்டு ஆசனங்கள் கஜேந்திரகுமாரின் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக்கும், ஒரு ஆசனம் யூஎன்.பி இற்கும், ஒரு ஆசனம் டக்ளசிற்கும் மிகுதி ஐந்து ஆசனங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும். சில வேளைகளில் வித்தியாதரனின் ஜனநாயகப் போராளிகள் கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைத்தால் கூட்டமைப்பின் தொகை நான்காகக் குறைவடையும்.
கிழக்கில் கூட்டமைப்பின் வாக்குகள் கஜேந்திரகுமாரால் பிளவுபடுத்தப்பட கூட்டமைப்பிற்கு ஐந்து ஆசனங்களை மட்டுமே வெற்றிபெறும் சந்தர்ப்பம் கிடைக்கும். இவ்வாறு மகிந்த ராஜபக்ச திட்டமிட்டவாறு கூட்டமைப்பின் ஆசனங்கள் அரைவாசியாக்கப்படும்.
இதனால் கூட்டாட்சிக்கான சாத்தியங்கள் இல்லாமல் போக மகிந்த வெற்றிவாகை சூடிக்கொள்வார்.
மேற்கு அரசுகளையும், இந்திய அரசையும் பொறுத்தவரை பெரும்பான்மை யூஎன்பி ஐ விட பலவீனமான ராஜபக்ச குழுவே இலகுவில் பயன்படக்கூடிய நிலையிலிருக்கும். இதனால் ராஜபக்சவின் வரவு தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிடும் சூழ்நிலையே காணப்படுகிறது.
சிறீகாந்தனின் கருத்துக்கள் இனியொருவின் கருத்துக்கள் அல்ல. விவாத நோக்கில் கட்டுரை பதியப்படுகிறது.