Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நாம் தவறுகளைத் தொடர்கிறோம், அழிவுகளை ஊக்கப்படுத்துகிறோம் : அன்பரசு

“தயவு செய்து வாருங்கள். என்னை இரவு பகலாக விமர்சனம் செய்யுங்கள் . பின்னர் நான் உட்கார்ந்து இதுபற்றி அமைதியாக சிந்திப்பேன். இரண்டு அல்லது மூன்று இரவுகள் தூக்கம் போய்விடும். முழுமையாக சிந்தித்த பின், அதனை புரிந்துகொண்டபின், நேர்மையுடன் சுய விமர்சனம் எழுதுவேன்… நீங்கள் மற்றவர்களை மனம் திறந்து பேசவிட்டால், வானம் இடிந்து வீழ்ந்துவிடாது. நீங்களும் சீரழிந்துவிடமாட்டீர்கள். நீங்கள் செய்யாவிட்டால், நீங்கள் சீரழிந்துபோகும் அந்தநாள் தவிர்க்க முடியாமல் வந்தேதீரும்.

மாறுபட்ட கருத்தை காதுகொடுத்து கேட்கவும், எந்த விமர்சனத்தையும் தோழர்கள் தாங்கிக்கொள்ள வேண்டும் ” –மாவோ

வன்னியில் இன அழிப்பு நடந்த காலப்பகுதியிலும் சரி, இன்றும் சரி நடந்து முடிந்த போராட்டம் தொடர்பான நேர்மையான விமர்சனம் முன்வைக்கப்படவில்லை. நடந்தவை அனைத்தும் சரியானதே என்கிறது ஒரு கூட்டம். தவறுகளை அக் கூட்டம் மூடி மறைப்பதால் எதிரிகள் அவற்றைக் குற்றச்சாட்டாக முன்வைத்து முழுப் போராட்டத்தையுமே சேறடிக்கிறார்கள்.

நாங்கள் தவறுகள் இழைத்திருக்கிறோம், அவற்றை ஒப்புக்கொள்கிறோம் அதனால் போராட்டத்தையும் தியாகங்களையும் தவறானது என்று கூறவில்லை. இன்றும் தமிழ் மக்கள் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட வேண்டிய நிலையிலேயே உள்ளனர்.

இப்படி எமது தவறுகளை நாமே சுய விமர்சனம் செய்துகொண்டால் எதிரிகள் வாயடைத்துப் போவார்கள். மக்களின் போராட்டங்களை முன்னைய தவறுகளைப் பயன்படுத்தி சேறடிக்க மாட்டார்கள்.

அது மட்டுமல்ல, தவறுகளை மூடி மறைத்து போராட்டத்தை பணம் கொழிக்கும் வியாபாரமாக்கும் புலம்பெயர் குழுக்களையும் எமக்கு மத்தியிலிருந்து அகற்ற முடியும்.

போராட்டம் என்பது முழுமையான வியாபாரமாக்க்கப்பட்டு, அடையாளங்களை மட்டுமே முன்னிறுத்தி நடத்தப்படும் அழிப்பின் பின்னணியில் இலங்கை அரசின் உளவுத்துறையும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய உளவுத்துறைகளும் செயற்படுகின்றன.

நடந்து முடிந்த போராட்டத்தின் அரசியல் தவறுகள் என்ன, அவை எவ்வளவு கோரமான அழிவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை பேச மறுத்து மக்களுக்கு தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமையை மறுக்கும் குழுக்களின் மத்தியில் புலம்பெயர் குழுக்களான பீ.ரி.எப் மற்றும் ரீ.சீ.சீ ஆகியன செயற்படுகின்றன.

அழிவுகளுக்கு மக்கள் அனைவரும் இணைந்தெ பொறுப்பேற்கிறோம் ஆனால் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை வெல்வதே மக்களுக்கு ஆற்றும் கடமை என்று துணிந்து கூறுவதற்கு எமக்கு மத்தியில் ஒரு தனிமனிதானவது இல்லாமலிருப்பதே அவமானம்.

உலகத்தில் எமது நண்பர்களாக இருக்கவேண்டிய போராட்டக் குழுக்கள் எம்மை விமர்சனம் கூடச் செய்துகொள்ள திராணியற்ற கோழைகளாகவே பார்க்கின்றனர். அவர்கள் எம்மை நோக்கி வர அச்சப்படுகின்றனர்.

இலங்கையில் நடத்தப்படும் அழிவுகளை ஏறெடுத்தும் பார்க்காத குழுக்களை இயக்குவது பிரித்தானிய அரசும் அதன் உளவுத்துறையும் என்பது ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டடுள்ளது.

புதிய மக்கள் சார்ந்த, சமூகப்பற்றுள்ள அமைப்புக்கள் தோன்றிவிடக் கூடாது என்பதற்காகவும், இலங்கையில் தமது எண்ணப்படி அழிப்பை நடத்தவும் உளவுத்துறைகள் இந்த அமைப்புக்களைப் பாதுகாத்து வருகின்றன.

மாவீரர் தின வியாபாரம் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர், இப்போது முள்ளிவாய்க்கால் வியாபாரத்திற்கான ஒத்திகை ஆரம்பமாகிவிட்டது. இந்த நிகழ்வுகளை மக்கள் சார்ந்த புரட்சிகர நிகழ்வுகளாக நடத்துவதா அல்லது களியாட்டங்களாக மாற்றுவதா என்பதை இனியாவது புலம்பெயர் தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

Exit mobile version