(2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘தேசிய இனப்பிரச்சனையில் ஏகாதிபத்தியங்களின் சதி’ என்ற நூலின் 10 வது அத்தியாயத்திலிருந்து..)
காலனி நாடுகளில் ஏற்பட்ட மூலதன உருவாக்கத்தால் தூக்கியெறியப்படக்கூடிய நிலையிலிருந்த நிலப்பிரபுத்துவ அணிகளைத் தமது பக்கம் சேர்த்துக்கொண்டு தமது நம்பிக்கைக்குரிய பிரதிநிதிகளாக்கினர். அதற்கேற்றவாறு கல்வி மற்றும் அரசியல் அமைப்புமுறைகளை ஒழுங்குசெய்தனர்.
முன்னரே குறிப்பிட்டவாறு, தேசிய உணர்வு கொண்டெழுந்த மத்தியதர வர்க்க அணிகள் உள்நாட்டின் மூலதன வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருக்க இவர்களின் நிலப்பிரபுத்துவ அமைப்புமுறைக்கெதிரான உணர்வும் அந்நிய பொருளாதார ஆக்கிரமிப்புக்கு எதிரான உணர்வும் மேலோங்கத் தொடங்கியது. இதனால் அந்நியப் பொருளாதாரமும் நிலப்பிரபுத்துவமும் கைகோர்த்துக்கொண்டு தேசியப் பொருளாதார வளர்ச்சியை அழிக்க ஆரம்பித்தது.
அதாவது, எகாதிபத்தியமும், நிலப்பிரபுக்களும் இணைந்துகொண்டு நாட்டின் தேசிய வளர்ச்சிக்கு எதிராகச் செயற்பட்டனர். இதனால் தொடர்ச்சியாக வந்த புதிய ஏகாதிபத்திய ஒழுங்கமைப்பில், இந்த பெருநிலப்பிரபுக்கள் ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிகளாக மாறினர்.
இந்தக் கூட்டணிக்கு எதிராக தேசிய உணர்வுகொண்ட மத்தியதர வர்க்கம் தன்னைத் தயார் படுத்திக்கொள்ள ஆரம்பித்த வேளையில்தான், நிலப்பிரபுக்களின் உதவியுடன் ஏகாதிபத்தியங்கள் தேசிய உணர்வுகொண்ட மத்தியதர வர்க்கத்தைக் கூறுபோடத் தொடங்கினர்.
ஆரியக் கோட்பாடு, சிங்கள-பௌத்த அடிப்படைவாதம், என்பன இந்த நோக்கத்திற்காகவே ஆரம்பிக்கப்பட்டன. உருவாகி வளர்ந்த தேசிய உணர்வும், உருவான தேசமும், தேசிய இன முரண்பாடுகளால் சீரழியத் தொடங்க ஆங்கிலேயர்களும் நிலப்பிரபுக்களும் இந்தச் சீரழிவுகளின் சுடுகாட்டில் தமது ஆட்சியை வலுப்படுத்திக்கொண்டனர்.
1915ம் ஆண்டில் முதன்முதலாக இலங்கைத்தீவில் இனக்கலவரம் உருவானது. சிங்கள-முஸ்லிம் கலவரத்தினைத் தூண்டியவர்கள் ஆங்கிலேயர்களுக்குச் சேவை செய்த நிலப்பிரபுக்களாக இருக்க நிலப்பிரபுக்களின் தலைமையில் கலவரத்துக்கு செயல்வடிவம் கொடுத்தவர்கள் மத்தியதர வர்க்க இளைஞர்களும் தொழிலாளர்களுமாவர்.
அதுவரையில் நிலப்பிரபுக்களை எதிர்த்த தேசிய உணர்வுகொண்ட மத்தியதர வர்க்க அணியும், தொழிலாளர்களும்கூட இந்தக் கலவரத்தில் நிலப்பிரபுத்துவத் தலைமைக்குள் உள்வாங்கப்பட்டனர். தமது எதிரிகளையே ஆதரவாளர்களாக அணிதிரட்டும் தந்திரோபாயத்தை இந்த இனக்கலவரம் அதிகாரத்திற்குக் கற்பித்தது.
ஆக, தேசிய பொருளாதாரத்தைச் சீரழிப்பதற்காகக் கூறுபோடப்பட்ட தேசம், அதனைக் கூறுபோட்டவர்களையே தியாகிகளாகவும் கதாநாயகர்களாகவும் பெறும் துர்ப்பாக்கிய நிலைக்கு உள்ளானது.
தொடர்ச்சியாக இவ்வாறான உள்முரண்பாடுகளை உருவாக்கி அவற்றைக் கையாள்வதனூடாக தேசியவாதத்தின் தலைமையையே தமது கையிலெடுத்துக்கொண்டு அதனைச் சீரழிக்கும் பணியைத் தமது அந்நிய எஜமானர்களுக்காக இந்த நிலப்பிரபுக்கள் மேற்கொண்டனர்.
1915ம் ஆண்டில் நடைபெற்ற முஸ்லிம் சிங்கள கலவரத்தினைத் தூண்டியவர்கள் எனக் கருதப்படுபவர்களுள் முக்கியமானவர்களாக D.S.சேனநாயக்க என்ற இலங்கையின் முதலாவது பிரதம மந்திரி,ஹேவா வித்தாரண என்ற அநகாரிக்க தர்மபாலவின் சகோதரர் ஆகியோர் அடங்குவர்.
இவ்வாறு வலுப்பெற்ற நிலப்பிரபுக்களின் தலைமை, தேசிய பொருளாதார உருவாக்கத்திலிருந்தும் அபிவிருத்தியிலிருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும், நாடு தழுவிய தேசிய உணர்விற்கெதிராகச் செயற்படவும், அந்நிய மூலதனத்தின் தரகர்களாகச் செயற்படவும், ஏகாதிபத்தியங்களுடன் கூட்டுச் சேர்ந்தது மட்டுமல்லாது இனவாதத்தையும் தமது கொள்கைகளுள் ஒன்றாகக் கொண்டுமிருந்தது.
இந்தத் தலைவர்களில் D.S.சேனாநாயக்க போன்ற பலர் கிறிஸ்தவர்களாக இருந்த போதிலும் தம்மை பௌத்தத்தின் பாதுகாவலர்களாகவும், பௌத்த இனவாதிகளாகவும் காட்டிக்கொண்டு, கூறுபோடப்பட்ட தேசியவாதிகளின் பெரும்பான்மைப்பகுதியான சிங்கள தேசியவாதிகளைத் தமது தலைமைக்குள் கொண்டுவந்தனர்.
சந்தேக உணர்வும், உள்முரண்பாடுகளும் இனவாதமும் திட்டமிடப்பட்டு வளர்க்கப்பட்ட நிலையில், மக்களிடையே பரஸ்பரத் தொடர்பு குறைந்த நிலையில், மொழியையும் கலாச்சாரத் தொடர்புகளையும் பிரதேசவாதத்தையும் அடிப்படையாகக் கொண்டு சந்தைப் பொருளாதாரம் உருவாகத் தொடங்கியது. இந்தச் சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி தேசிய இனங்கள் உருவாகின.
இவ்வாறு உருவான தேசிய இனங்கள் ஆதிக்கத்திலிருந்த நிலப்பிரபுத்துவம் சார்ந்த அந்நிய தரகுகளுக்கு எதிரான உணர்வுடன் வளர்ச்சியடைய முற்பட்டபோதெல்லாம், இன உணர்வு தூண்டிவிடப்பட்டு சீரழிக்கப்பட்டது.
இந்த அந்நிய மூலதன ஆதிக்கத்திற்கு வசதியான சமூகக் கட்டமைப்பைத் தொடர்ச்சியாகப் பேணும் வகையில் இலங்கையின் அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டது. இது தேசிய இனங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை ஊக்குவித்தது.
1945ம் ஆண்டில் சோல்பரிக் கமிஷன் சிபாரிசுகளின் பின்னர் சோல்பரியே பின்வருமாறு கூறினார்.
‘மேற்கு நாடுகளின் ஜனநாயக அரசியல் திட்டங்களை இன மத ரீதியில் பிளவுண்ட நாடுகளில் அறிமுகப்படுத்தும்போது, அவர்கள் மேற்கு நாடுகளைப் போன்று சமூக, அரசியல் ரீதியில் பிரியாமல் இன மொழி அடிப்படையிலேயே பிரிவர். இதனால் மேற்குலகில் பின்பற்றும் பாராளுமன்ற அரசியல் முறைகளை இங்கு பின்பற்றுவது கடினமானது’.
இந்தக் கருத்தினை மேற்கூறப்பட்ட இலங்கையின் சமூக-அரசியல் பகைப்புலத்தில் பொருத்தி ஆராயும்போது பல உண்மைகள் புலப்படும்.
சோல்பரி கூறுவதுபோல, மக்கள் சமூக அரசியல்ரீதியில் பிளவுபடும்போது, புதிய சமுதாய எழுச்சிகளினூடாக தேசியப் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டிருக்கும். புதிய ஒன்றிணைந்த தேசம் அந்நியப் பொருளாதார ஆதிக்கத்திற்கெதிராக சொந்த மூலதனத்தை உருவாக்கியிருக்கும்.
அவர் கூறுவது போல இன, மொழி அடிப்படையில் பிளவுபடும்போது, மக்கள் மத்தியிலிருக்கும் தேசிய உணர்வு கூறுபோடப்பட்டு அது தமக்குள்ளேயே மோதிக்கொள்ளும். இதனால் ஏகாதிபத்திய ஆதிக்கத்துக்கெதிரான உணர்வு மறைந்துபோகும். அந்நிய ஆதிக்கம் தமது உள்ளுர் பிரதிநிதிகளினூடாகத் தொடர் வாய்ப்பை ஏற்படுத்தும்.
எனவே இந்த அரசியல் அமைப்பு முறையானது தேசிய இனப் பிளவுகளை நிரந்தரமான தொடர்ச்சியாக்கியது. தேசிய மூலதன உருவாக்கத்தைத் தடைசெய்து, அந்நிய மூலதன எற்றுமதியை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசியல் பொருளாதார அமைப்புமுறையானது பல தேசிய இனங்களையும் நிலப்பிரபுத்துவ தரகர்களது ஆதிக்கத்தையும் தேசிய இனச்சிக்கல்களையும் உருவாக்கியது. தேசிய இன முரண்பாட்டையும் தோற்றுவித்தது. தேசிய இன முரண்பாடு இலங்கையில் பிரதான முரண்பாடாகத் தோற்றம் பெற்றது. பேரினவாதம் அரசியல் அதிகாரத்தோடு பின்னிப்பிணைந்து அரச அமைப்பாக நிலைகொள்ளலாயிற்று.
http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=319667
http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=319667
http://www.nlb.gov.sg/newarrivals/item_holding.aspx?bid=13847587