Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தேர்தல் படிப்பினைகள் தொடர்பான குருபரன் அவர்களின் குறிப்புகளுக்குப் பதில்

Kuruparanகுருபரன்:

1. தமிழ்த் தேசிய அரசியலில் உள்ளடக்கம் முக்கியமில்லை அதன் வடிவம் (form) (அதை எந்தக் கட்சி பேசுகிறது என்பது) தான் முக்கியம் என்பதை இத்தேர்த…ல் உணர்த்தியிருக்கிறது. (உதாரணமாக அதிகாரப் பகிர்வு எதிர் தேச அங்கீகார அணுகுமுறை என்பது இத்தேர்தலின் பேசு பொருளாக இருக்கவில்லை). இது கவலை தருவது.

பதில்:

தவறான வாதம், உள்ளடக்கமோ வடிவமோ பிரதான பாத்திரம் வகிக்கவில்லை. இரண்டு கட்சிகளுமே தேசியம் என்பதைத் தவறாகப் புரிந்து வைத்துள்ளன. கஜேந்திரகுமார் குழுவின் தமிழ்த் தேசியத்திற்கும் கூட்டமைப்பின் தமிழ்த் தேசியத்திற்கும் குறிக்கத் தக்க வேறுபாடுகள் இருந்ததில்லை.

இரண்டுமே உரிமைகளைச் சர்வதேசம் சார்ந்து பெற்றுக்கொள்வதாக சாத்தியமற்ற, தோற்றுப்போன வழிமுறைகளை முன் மொழிந்தன. மக்கள் தமது குறியீட்டு எதிர்ப்பைத் தெரிவிக்க விரும்பினார்கள், இரண்டு வேறுபாடுகளற்ற கட்சிகளுள் கூட்டமைப்பைத் தெரிந்தெடுப்பது வசதியானது. தவிர, தாம் புலிகளின் தொடர்ச்சி என்ற கூடுதலான தோற்றுப்போன வழிமுறை ஒன்றை கஜேந்திரகுமார் முன்வைத்தமை முற்றுமுழுதான நிராகரிப்பிற்கு உள்ளானது. 

புலிகளின் போராளிகளையும் அவர்களின் விலைமதிப்பற்ற தியாகங்களையும் மக்கள் மதிக்கிறார்கள், ஆனால் புலிகளின் வழிமுறை வெற்றிபெற்ற ஒன்றல்ல என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். 

குருபரன்:

2. தமிழ் தேசிய அரசியல் செய்பவர்களில் யாரை நம்புவது (trust worthy) என்பது யார் அந்த வடிவத்தை (கட்சியை) உருவாக்கினார்கள் என்பதை பொறுத்தது என்று மக்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின் யாரை நம்புவது என்பது தான் தமிழ் மக்களுக்கு பெரிய பிரச்சனை. விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பை நம்புவோம் என்று தீர்ப்பளித்திருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளால் 2004 தேர்தலில் தனது நேரடிப் பிரதிநிதிகளாக முன்னிறுத்தப்பட்ட மூவரும் அந்தக் கட்சியில் இல்லை என்பது இந்தத் தெரிவில் (2010 இலும் 2015 இலும்) பாதிப்பை ஏற்படுத்தவில்லை. விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்த போது அரசாங்கத்தோடு 2010 வரை செயற்பட்டுக் கொண்டிருத்த கட்சியின் தலைவர் அமோகமாக மக்களின் விருப்பு வாக்குகளை இத்தேர்தலில் பெற்றுள்ளமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

கூட்டமைப்பு என்ற அடையாளம் யாரையும் புனிதராக்கும். தமிழ் தேசிய அரசியலில் ஆணை பெறப்பட்டு அது தமிழ் தேசிய அரசியல் நீக்கத்திற்கு பயன்படுத்தப்படும் என்பது தான் சோகம். தமிழ் தேசிய அரசியல் நீக்கத்திற்காக பாடுபட்ட, கூட்டமைப்பிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதிராக இருந்த பலர் கூட்டமைப்பின் குறிப்பிட்ட ஒருவருக்கு ஆதரவாகக் களமிறங்கிய வினோதத்தையும் இந்த தேர்தலில் கண்டோம்.

பதில் :

இவை குருபரனின் அனுமானங்கள் மட்டுமே. கூட்டமைப்பு புலிகளால் உருவாகப்பட்டது என்ற அடிப்படையிலேயே வாக்களித்திருக்கிறார்கள் என்பது முழுப் பூசணிக்காயை மட்டுமல்ல அதன் செடி கொடிகளையும் சேர்தே சோற்றுப் பருக்கைக்குள் புதைக்கும் முயற்சி இது!

இரண்டு சிறிய உதாரணங்கள்: மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டபோது திடீர் தேசியவாதி விக்னேஸ்வரன் புலிகளின் பிடிக்குள் இருந்தமையாலேயே அரசியல் நடத்த முடியாமலிருந்தது என்று பிரச்சாரம் செய்தார். தொடர்ந்த அவர் புலிகள் அழிக்கப்பட்டதால் இப்போது ஜனநாயகம் மீட்கப்பட்டு தம்மைப் போன்றவர்கள் அரசியலுக்கு வந்துள்ளதாக கூறினார். இரண்டாவதாக சுமந்திரன் புலிகளை விமர்சித்த அளவிற்கு வேறு ஒருவரும் மக்கள் மத்தியில் விமர்சனங்களை முன்வைக்கவில்லை.புலிகளின் தொடர்ச்சி என தம்மை வெளிக்காட்டிக் கொள்வதை கூட்டமைப்பினர் விரும்பவில்லை. (அனந்தி சசிதரனும் பிரேமச்சந்திரனும் விதிவிலக்கு.)
குருபரன் குறிப்பிடுவது போல் யாரும் யாரையும் புனிதராக்கவில்லை. மக்களின் வாக்களிப்பு தெளிவானது. 2010 ஐ விட இப்போது கூட்டமைப்பின் வாக்கு வீதம் அதிகரித்திருப்பதற்கு பிரதான காரணங்களில் ஒன்று, ‘புலிகளின் தொடர்ச்சி’ என கஜேந்திரகுமார் குழு மிரட்டியமை.

குருபரன்:

3. உள்ளடக்கம் சார்ந்த அரசியல் விவாதமாக இத்தேர்தல் களம் மாறாமைக்கு காரணம்:

அ) மக்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டு இல்லை. (இதில் விடுதலைப் புலிகளுக்கும் பங்குண்டு).

ஆ) கூட்டமைப்பு அல்லாத தமிழ் தேசிய கட்சி மீது (தமிழ் தேசிய மக்கள் முன்னணி மீது) அவர்களின் நம்பத்தகு தன்மை தொடர்பில் தமது கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் மூலம் நடத்தப்பட்ட பெருமெடுப்பிலான பொய்ப் பிரச்சாரம். இதை சமூக வலைத்தளம் மூலமாக எதிர் கொண்டமை போதாது என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபித்துவிட்டன.

இ) தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் இந்த பெரும் பலம் மிக்க பிரச்சாரத்திற்கப்பால் மக்கள் மத்தியில் சென்று சேரும் அளவிற்கு வலிமை இல்லாமை

ஈ) எவ்வளவு தான் விளக்கம் கொடுத்தாலும் திருப்பி திருப்பி புதுக் கதைகளை சரியான கால இடைவெளி விட்டு வெளிக் கொணர்ந்த கூட்டமைப்பு தேர்தல் முகாமையாளர்களின் சாமர்த்தியம்.

பதில்:

அ) மக்களை அரசியல் மயப்படுத்துவது என்றால் என்ன குருபரன் ? புலிகளின் தொடர்ச்சி என்றும், இனவாதிகளாக மாறுங்கள் என்றும் கூச்சலிடுவதா? புலம்பெயர் நாடுகளின் பிழைப்புவாதக் குழுக்களோடு இணைப்பேற்படுத்திக் கொள்வதா? ஆண்ட தமிழன் மீண்டும் ஆள்வான் என மன்னர்காலத்து பின் தங்கிய சமூக விழுமியங்களை மீண்டும் அறிமுகப்படுத்துவதா? குறைந்தபட்சம் தேசியம் என்றால் என்ன என்பது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக்குத் தெரிந்திருந்ததா?

ஆ) ஊடகங்கள் ஒரு பொருட்டே இல்லை. கிரேக்கத்தில் பொதுசன வாக்கெடுப்பின் போது நூறுவீதமான பலம் வாய்ந்த மேற்கு ஊடங்களின் மிரட்டல்களுக்கும் பிரச்சாரத்திற்கும் எதிராக 62 வீதமான மக்கள் வாக்களித்தார்கள். இத்தாலியில் ஐந்து நட்சத்திர இயக்கம் ஊடங்களால் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டிருந்தது. இன்று இத்தாலியில் மிகப்பெரும் அரசியல் சக்தியாக அது மாறியுள்ளது. ஏன், உங்களின் கொல்லைப் புறத்திலேயெ டக்ளஸ் உட்பட பேரினவாதக் கட்சிகளை ஊடகங்கள் ஆதரித்தில்லையே. கஜேந்திரகுமார் குழுவைவிட அவர்கள் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார்களே?

இ) வலிமை என்பது என்ன? பணம், ஆயுதம், நபர்களின் எண்ணிக்கை?? இவை அனைத்திற்கும் மேலாக கருத்துப் பலம் என்பதுவே உண்மையான வலிமை. கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று என்பது தேவை. அந்த மாற்றைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் கருத்துப் பலம் கிடையாது. ‘புலிகளின் தொடர்ச்சி’ என்பது போன்ற மக்களை மிரட்டும் முழக்கங்கள் புலம்பெயர் நாடுகளிலுள்ள பிழைப்புவாதிகளிடம் மட்டுமே விற்பனையகும். ஆக வலிமை என்பது நேர்மையான கருத்துப்பலம் மட்டுமே.

ஈ) ஒரு தேசம் இரு நாடு என்ற கருத்து உட்பட கஜேந்திரகுமார் குழு வேறு எதற்கும் விளக்கம் கொடுக்கவில்லை. சில அவதூறுகள் இரண்டுபக்கத்திலிருந்தும் வெளியாகின. அவ்வளவு தான் ! யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் துண்டுப் பிரசுரங்கள் சிறந்த உதாரணம். பல்கலைக் கழகத்தில் குறிப்பாக மூன்று குழுக்கள் இருந்தன. சுமந்திரன், சிறீகாந்தா மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்ந்தவை. மூவருமே தாங்கள் தான் மாணவர் ஒன்றியம் என அறிக்கைவிட்டுக்க்கொண்டனர். சுமந்திரன் துரோகி என கஜேந்திரகுமார் குழு கட்டவிழ்த்திருந்த பிரச்சாரத்தை எதுவும் விஞ்சவில்லை. வாக்குவங்கி அரசியலில் இவை சர்வ சாதாரணமனவை!

குருபரன்:

4. தமிழ் தேசிய அரசியல் மேலெழுந்தவாரியாக சிங்கள பௌத்த அரசியலின் வலிமையால் இன்னும் கொஞ்ச காலம் நிண்டு பிடிக்கும் என்றே நினைக்கிறேன். ஆனால் இது தான் ‘புதுத் தமிழ் தேசிய அரசியல்’ என்ற வியாக்கியானத்தில் தமிழ் தேசிய அரசியலை அதன் அடிப்படைகளில் இருந்து மீள்விவரணம் கொடுக்க முயற்சி நடக்கும். எமது பிரதிநிதிகளை பொறுப்புக் கூற வைப்பது மிகவும் கடினமானதாக இருக்கும். ஆனால் முயற்சியை விட முடியாது. தமிழ் தேசிய அரசியலின் சமூகக் கட்டமைப்புக்களை பலப்படுத்துவது, மக்களை அரசியல்மயப்படுத்துவது தான் இன்று நாம் செய்ய வேண்டியவை என்பதை இந்தத் தேர்தல்கள் உணர்த்துகின்றன.

பதில்:

எனக்குள் மிக நீண்டகாலமாகப் புதைந்து கிடக்கும் விடைகாண முடியாத வினாக்களில் ஒன்று தமிழ்த் தேசிய அரசியல் என்றால் என்ன என்பதே! தமிழ்ப் பேசும் மக்கள் பிரிந்து செல்வதற்கான உரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான அரசியல் சுயநிர்ணைய உரிமைக்கான அரசியல். தமிழ்த் தேசிய அரசியல் என்றால் அதன் உள்ளர்த்தம் என்ன? என்னைப் பொறுத்தவரை எந்தத் தலைமைகளும் இதற்கு வியாக்கியானம் கொடுக்கவில்லை. இனிமேல் தான் கொடுக்க முன்வரவேண்டும். பேரினவாதம் இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாதது. இலங்கையின் பிரதான முரண்பாடு தேசிய இன முரண்பாடு. ஆக, சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் தவிர்க்க முடியாத ஒன்று, அதனை கூட்டமைப்பாலோ, கஜேந்திரகுமார் குழுவாலோ முன்னெடுக்க முடியாது.

மாற்று ஒன்று தேவை. அந்த மாற்றை கஜேந்திரகுமார் குழு போன்ற பின் தங்கிய கருத்துக்களைக் கொண்டவர்கள் பிரதியிட்டால் நிலைமைகள் மேலும் சிக்கலாகும். மக்கள் இதனைத் தெளிவாகப் புரிந்துவைத்திருக்கிறர்கள்.

இனியொரு… சார்பில் சபா நாவலன்

Exit mobile version