Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வல்லூறுகள் எச்சரிக்கை!… ஏன் தேர்தலைப் புறக்கணிப்பது அவசியம்?

இலங்கைப் பேரினவாத ஒற்றையாட்சிக் கோட்பாடு நடத்திய மனிதப் படுகொலைகளின் கோரத்தில் வன்னியில் கொத்துக்கொத்தாக அப்பாவிகள் படுகொல செய்யப்பட்டனர். மனிதகுலத்தின் ஒரு பகுதி ஒருசில மணித்துளி நேரங்களுக்குள் இரத்தமும் சதையுமாக துவம்சம் செய்யப்பட்டது. அப்பாவிகள், கர்ப்பிணித் தாய்மார், பச்சிழம் சிறுவர்கள் என்று லட்சம் அப்பாவிகள் மட்டுமல்ல ஈழப் போராட்டத்தின் நியாயமும் அங்கு அழிக்கப்பட்டது.

அங்கு மாமிசமாக்கப்பட்ட மனிதகுலத்தின் சாம்பல் மேடுகளிலிருந்து உயிர்பெற்றது மனிதத்தை நேசிக்கும் கூட்டங்கள் அல்ல. அழிவுகளை மீண்டும் திட்டமிடும் ஏகாதிபத்திய முகவர்கூட்டங்கள். ஒற்றையாட்சியை ஏற்று பாராளுமன்றத்தில் ஜனநாயகம் படைப்போம் என்று கூறுகின்ற கயவர் கூட்டங்கள்.

இன்று தேர்தலில் தமக்கு வாக்களியுங்கள் என்று மக்கள் குடியிருப்புக்களில் வல்லூறுகள் போல வட்டமிடும் வாக்குப் பொறுக்கும் அரசியல் வாதிகளே அமெரிக்காவையும் இந்தியாவையும் கையைப்பிடித்து அழைத்துவந்தார்கள்.

அழித்துப்போட்ட ‘சர்வதேசத்தோடு’ பேசி உரிமைகளைப் பெற்றுக்கொள்ள பாராளிமன்றப் பதவிக்கு விண்ண்ப்பிக்கும் ஒவ்வொரு குழுவும் அரசியலிலிருந்து நீக்கம் செய்யப்பட வேண்டியவர்கள். யாரிவர்கள்?

1. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரால் அடையாளப்படுத்தப்படும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் அல்லது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

கட்சியின் பெயரிலேயே அகில இலங்கை என்று தலைப்பிட்டிருக்கும் கஜேந்திரகுமார் என்ற கொழும்பு உயர் குடி மனிதனின் இன்றைய தரிப்பிடம் யாழ்ப்பாணம். கடந்த இலங்கை ஜனதிபதித் தேர்தலைப் புறக்கணித்து வாக்களிக்க வேண்டாம் என்று கூறிய கஜேந்திரகுமாரின் சுலோகம் ‘மாற்றத்திற்கான குரல்’. இலங்கை ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்தை ஏற்று அதற்குள் மாற்றத்தை ஏற்படுத்த முனையும் கஜேந்திரகுமார், தேர்தல் வியாபாரத்திற்காக முன்வைக்கும் முழக்கம் ஒரு நாடு இரு தேசம் என்பதாகும்.

சுய நிர்ணைய உரிமையை மிக நுட்பமாக நிராகரிக்கும் இவர்கள் சுய நிர்ணைய உரிமையைக்காகப் பாடுபடுவோம் என்கிறனர்.

சுய நிர்ணைய உரிமை என்பது பிரிந்துசெல்லும் உரிமை. அங்கு ஒரு நாடு என்று கூறுவது சுயநிர்ணைய உரிமையை நிராகரிப்பதாகும். சரி, கஜேந்திரகுமார் சுயநிர்ணைய உரிமையைக் தவறாகப் புரிந்துகொண்டிருக்கும் அப்பாவி என ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும், அதையும் பாராளுமன்றத்திற்கு நுளைந்து பெற்றுக்கொள்ளப் போகிறாராம். மக்களை மந்தைகளாக்கும் ஏமாற்று வித்தையலாவா இது.?

இதுவரை காலமும் அமெரிக்காவையும் அதன் அடியாள் அமைப்புக்களையும் நம்பி உரிமை பெற்றுத்தருவோம் என மக்களை ஏமாற்றும் போது கஜேந்திரகுமார் அப்பாவியா என்ன?

உலகில் அமெரிக்கா தலையிட்ட எந்த நாட்டிலும் உரிமகளைப் பெற்றுக்கொடுத்தாக வரலாறு கிடையாது, மாறாக உரிமைகளை அழித்ததாகவே வரலாறுண்டு. இன்று அமெரிக்காவையும், இலங்கை அரச பாராளுமன்றத்தையும் தவிர இவர்களிடம் வேறு வேலைத்திட்டங்கள் இல்லை.

புலிகளதும் போராளிகளதும் அடையாளங்களை வியாபாரமாகிப் பிழைப்பு நடத்தும் கஜேந்திரகுமார் குழுவினர் ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்தை ஏற்றுக்கொண்டு மக்களை வாக்களிக்குமாறு கூறுவது அயோக்கியத்தனம்.

புலிகளின் பெயரால் புலம்பெயர் நாடுகளில் பணச் சூறையாடலில் ஈடுபட்ட பலர் கஜேந்திரகுமாருக்கு ஆதரவு வழங்குவதென்பது எதிர்காலத்திற்கான முதலீடு.

உலகில் மிகப்பெரும் இராணுவ பலம் பொருந்திய புலிகள் இயக்கம் அழிக்கப்படுவதற்கான காரணங்களில் ஒன்று அதன் அதிகாரத் தரகர்கள். இலங்கை அரசு, அமெரிக்கா, புலிகள் இயக்கம் ஆகியவற்றிற்கு இடையே தரகு வேலைகளில் ஈடுபட்ட கஜேந்திரகுமார் குழு இன்று பாராளுமன்றம் சென்று உரிமை பெற்றுத்தருவதாகக் கூறுவது இலங்கைப் பேரினவாதப் பாராளுமன்றத்தை அங்கீகரிப்பதாகும்.

மகிந்தவிற்கு எதிரான தேர்தலைப் புற்க்கணிக்கக் கோரியவர், ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டு வாக்குக் கேட்பது சந்தேகத்திற்குரியது.

2. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரலாற்று வழிவந்த வாக்குப் பொறுக்கிகள்

இன்றைய இலங்கை அரசியலின் கதம்ப கூட்டங்களில் கூட்டமைப்பிற்கு முன்னணி இடம் வழங்கலாம். கஜேந்திரகுமார் மற்றும் புலம்பெயர் தேசிய வியாபரிகளின் சமன்பாட்டின் அடிப்படையில், மகிந்த ஆட்சிக்குத் தெரிவு செய்யப்பட்டால் அவரை விழுத்துவது என்ற பெயரில் அமெரிக்காவைக் கூட்டிவரலாம் என கஜேந்திரகுமார் குழுவினர் நம்புகிறார்கள். அதே போல ரனில் ஆட்சியமைத்தால் ரனிலோடு ஒட்டிக்கொண்டு அமெரிக்காவைக் குளிர்ச்சிப்படுத்தலாம் என கூட்டமைப்பு நம்புகிறது.

இனக்கொலையாளி சரத் பொன்சேகாவுடன் இணைந்து ஆட்சியமைக்க 2010 ஆம் ஆண்டு முனைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கஜேந்திரகுமார் குழுவைப் போன்றே அமெரிக்காவின் அடியாள்படை தான்.

தமிழரசுக் கட்சி ஏனைய சிறிய கட்சிகளை இணைத்துக்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக உருமாற்றம் எடுத்தாலும் தமிழரசுக் கட்சியையே கூட்டமைப்பு பிரதிநிதித்துவம் செய்கிறது. வரலாறு முழுவதும் இலங்கை அரசோடு பேசுவதையே தமது அரசியலாக வரித்துக்கொண்ட தமிழரசுக் கட்சி இதுவரை எதையாவது சாதித்திருக்கிறார்களா?

ஈழப் போராட்டத்தை அமெரிக்காவிற்கும் ஏகபோக அரசுகளுக்கும் காட்டிக்கொடுத்த இக் கட்சியும் இறுதிக்கட்ட யுத்தத்தில் தரகுத் தொழிலில் ஈடுபட்டது. பிரிந்து செல்லும் உரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமை. ஐ.நா சபையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த உரிமையைக் கோருவது அடிப்படை ஜனநாயகத்தைக் கோருவதாகும்.

கூட்டமைப்பின் தலைப்பில் தேசியத்தை சுமந்துகொண்டு பிரிந்துசெல்லும் ஜனநாயக உரிமையை நிராகரிக்கும் இக்கட்சியும் தமிழ் மக்களுக்கானதல்ல. கஜேந்திரகுமார் குழுவைப் போன்றே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உள்ளுர் அடியாள் படைகள்.

கஜேந்திரகுமாரின் அரசியலுக்கு பேரினவாதி மகிந்த தேவை என்பதைப்போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியலுக்கு பேரினவாதி ரனில் தேவைப்படுகிறார்.

3. டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்ற வர்த்தக நிறுவனம்

இலங்கையில் எந்தப் பேரினவாதக் கட்சி ஆட்சியமைத்தாலும் அதனோடு ஒட்டிக்கொள்ளும் இக் கட்சிக்குக் கொள்கை கோட்பாடு எல்லாம் எப்படி ஒட்டிக்கொள்வது என்பதிலேயே தங்கியுள்ளது. வன்னிப் படுகொலை நடைபெற்ற போது பயங்கரவாதம் அழிக்கப்படுகிறது என்று மக்களைப் பயங்கரவாதிகளாக்கிய தேவானந்தா, இனக்கொலையாளிகளுடன் எந்தக் கூச்சமுமின்றி ஒட்டிக்கொண்டார்.

துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பி இன் வன்முறைகள் ஒரு இராணுவம் என்ற அடிப்படையில் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்தப்பட்டது. மணல் கொள்ளை, கப்பல் வியாபாரம் என்று இலங்கையில் வர்த்தகப் பேரரசு ஒன்றை நடத்திவரும் ஈபி.டிபி ஐப் பொறுத்தவரை பாராளுமன்றம் என்பது தமது வியாபாரத்தை சுமூகமாக நடத்துவதற்குரிய நுளை வாசல்.

இலங்கை முழுவதையுமே சூறையாடிய மகிந்த குடும்பத்துடன் இக்கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு உள்ள நெருங்கிய உறவு சமூக விரோதிகளுக்கு இடையிலான உறவு. ஈழப் போராட்டத்தில் இடதுசாரிகளின் நிழல் கூடப் படக்கூடாது என அவதானமாகவிருந்த இந்திய ஏகபோக அரசு ஈ.பி.டி.பி போன்ற துணைக் குழுக்களை இடதுசாரிகள் என்ற போர்வையில் இறக்கிவிட்டது.

உலகில் அதிகமாக அழிக்கப்பட்டவர்கள் இடதுசாரிகளே என்றால் டக்ளஸ் தேவானந்தாவல் அதிகமாகச் சேறடிக்கப்பட்டவர்கள் இடதுசாரிகளே.

கடந்தகால அழிவின் கோரத்தைச் சுமந்துகொண்டு மக்கள் மத்தியில் வாக்குக் கேட்கும் இவ்வாறான குழுக்கள் கலைக்கப்பட வேண்டும்.

4. பேரினவாதக் கட்சிகள்

ஐக்கிய தேசியக் கட்சி, சிறீ லங்கா சுதந்திரக் கட்சி போன்ற பேரினவாதக் கட்சிகளால் வழி நடத்தப்பட்ட இராணுவத்தின் விமானக் குண்டுகளின் கந்தக வாசனை மாறும் முன்னமே தமிழ் மக்களின் மண்ணில் வாக்குப் போடுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

தமது ஆட்சியில் அனுப்பப்பட்ட கொலை வெறிகொண்ட இராணுவம் ஈழ மண்ணின் அழுக்குப் போல நகரங்கள் கிராமங்கள் எல்லாம் படர்ந்திருக்க மக்களிடம் எந்த அவமான உணர்வுமின்றி வாக்களிக்கக் கோரிக்கை விடுக்கின்றனர்.

விஜயகலா மகேஸ்வரனிலிருந்து அங்கயன் வரைக்குமான பேரினவாதத்தின் தமிழ் அடியாட்கள் கிஞ்சித்தும் கூச்ச உணர்வின்றி மக்கள் மத்தியில் மனிதர்களாக உலா வருகின்றனர்.

மக்கள் ஓரளவு இக் குமபல்களைப் புரிந்து வைத்திருக்கிறார்கள். எது எவ்வாறாயினும் மக்கள் மத்தியிலிருந்து அகற்றப்படவேண்டிய அழுக்குகள் இவை.

5. இடதுசாரிக் கட்சிகள் எனத் தம்மை அழைத்துக்கொள்ளும் போலிகள்

மக்கள் விடுதலை முன்னணி(JVP), முன்னிலை சோசலிசக் கட்சி(FSP) போன்றவை இடதுசாரிக் கட்சிகள் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் நடத்தும் வாக்குப் பொறுக்கும் நாடகம் அவமானகரமானது. உலகில் முதன் முதலில் சுய நிர்ணைய உரிமை என்ற கருத்தை முன்வைத்தவர்கள் இடதுசாரிகளே. அயர்லாந்து மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை ஆதரித்த கார்ல் மார்க்ஸ் , இங்கிலாந்துத் தொழிலாளர்கள் விடுதலையடைவதற்கான முன் நிபந்தனை அயர்லாந்து விடுதலையடைவதே என்றார்.

சோவியத் ரஷ்யாவில் அனைத்துத் தேசிய இனங்களுக்கும் பிரிந்து செல்லும் உரிமை வழங்கப்பட்டிருந்தது. ஸ்டாலின் தேசிய இனங்கள் தொடர்பான மார்சியக் கோட்பாட்டை வரையறுத்தார். இலங்கையில் காளான்கள் போல முளைத்த போலி இடதுசாரிகள் சுய நிர்ணைய உரிமையை ஏற்றுக்கொள்ளாது பேரினவாதத்திற்குத் துணை சென்றனர். முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன பேரினவாதக் கட்சிகளே.

தமிழ்த் தேசியம் பேசும் இரண்டு கட்சிகளும் மக்களை நுட்பமாக ஏமாற்றி சுயநிர்ணைய உரிமையை நிராகரிக்கின்றன. இடதுசாரிகள் என்று கூறும் போலிகள் சுய நிர்ணைய உரிமையை நேரடியாகவே நிராகரிக்கின்றன. பேரினவாதக் கட்சிகளும் துணைக்குழுக்களும் சுய நிர்ணைய உரிமைப் போராட்டத்தின் வரலாற்று எதிரிகள்.

சந்தர்ப்பவாதிகளும், வியாபாரிகளும், நயவஞ்சகர்களும், பேரினவாதிகளும், உளவாளிகளும் புடை சூழ்ந்து மக்களைச் சூறையாட முனைகின்ற தேர்தல் களத்தில் மக்கள் வாக்களிப்பதால் என்ன பலனை அடையப் போகின்றனர்.

தேர்தலைப் புறக்கணித்தால்…

1. மேற்குறித்த பிழைப்பு வாதிகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற செய்தியை மக்கள் உலகிற்குச் சொல்லலாம்.

2. சிங்கள பௌத்த பேரினவாத அரசின் பாராளுமன்ற ஒற்றையாட்சி முறையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை சிங்கள மக்களுக்கும் உலக மக்களுக்கும் தமிழ்ப் பேசும் மக்கள் தெளிவுபடுத்தலாம்.

3. குறைந்தபட்சம் ஒற்றையாட்சி முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான களமாக தேர்தல் புறக்கணிப்பை மக்கள் பயன்படுத்தலாம்.

4. தேர்தல் முறையில் நம்பிக்கையில்லை என்ற சுலோகத்தை முன்வைத்தால் மட்டுமே வாக்குப் பொறுக்கும் நயவஞ்சகர்களுக்கு வெளியில் மக்கள் சார்ந்த அரசியல் உருவாகும்.

ஆக, ஒற்றையாட்சியை நிராகரிப்பதற்கும், சிங்கள பௌத்த ஆட்சியமைப்பை நிராகரிப்பதற்கும், மக்கள் விரோதிகளை அகற்றுவதற்கும், வியாபரிகளைச் சிதைப்பதற்கும் தேர்தலைப் புறக்கணிப்பதே இன்று மக்கள் முன்னாலுள்ள ஒரே வழி. இலங்கைப் பாராளுமன்றத்திற்குச் சென்று மாற்றத்தை ஏற்படுத்துவோம் என மக்களை மந்தைகளாக்கும் குழுக்களின் முகங்களில் அறைந்து மக்கள் தங்களை இனியும் ஏமாற்ற முடியாது என்ற செய்தி இன்று சொல்லப்பட வேண்டும்.

இனியொரு ஆசிரியர் குழு…

Exit mobile version