ஆக, மதங்களின் ஆதிக்கமும் அதன் எச்ச சொச்சங்களும் முக்கியத்துவம் இழந்து, தேசங்கள் தோன்றியது முதலில் ஐரோப்பாவில் தான். தொழில் புரட்சி சீராக நடைபெற்ற பிரித்தானியா பிரான்ஸ் போன்ற நாடுகளில் பல மொழிகளும் கலாசாரங்களும் கலந்து ஒரு மொழி பேசும் தேசிய இனமாக தேசங்கள் தோன்றின. அதே வேளை அது சீராக நடைபெறாத நாடுகளில் ஒரு நாட்டின் உள்ளேயே பல் வேறு மொழிகள் பேசுகின்ற பல தேசிய இனங்களும் தேசங்களும் தோன்றின. உதாரணமாக யூகோஸ்லாவியா போன்ற நாடுகளில் பல்வேறு தேசிய இனங்கள் தோன்றின.
இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில் அந்த நாடுகளை ஆக்கிரமித்திருந்த ஆங்கிலேயர்களால் முதலாளித்துவம் எற்றுமதி செய்யப்படுகின்றது. அதனோடு கூடவே இந்து மதமும் பாதுகாக்கப்படுகின்றது. இந்து மதத்தின் சாதீய அடுக்குகளும் சாதீய ஒடுக்குமுறையும் முதலாளித்துவத்தின் வளர்ச்சியைத் தடை செய்ய முழு நாடும் இலகுவாகவே அன்னிய ஏகாதிபத்தியத்தின் சுரண்டலுக்கு உட்படுத்தப்படுகின்றது.
இந்த சூழலில் இந்தியாவில் வாழும் பல தேசிய இனங்கள் மேற்கு ஐரோப்பிய நாடுகளைப் போன்று முழுமையான வளர்ச்சி பெற்றவையாக அன்றி சாதி அடிப்படையில் பிழவடைந்ததவையாகக் காணப்பட்டன. இதனால் தேசங்களின் வளர்ச்சி மட்டுமன்றி, முதலாளித்துவத்தின் வளர்ச்சியும் தேக்க நிலை அடைந்ததிருந்தது என்பதைக் குறிப்பாக ‘ஆசியப் பொருளாதாரம்’ என கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.
கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்ட தேக்க நிலையிலிருந்து விடுவித்துக் கொள்வதற்கு இந்துத்துவமும் அது தோற்றுவித்த நால் வர்ண சாதிய அமைப்பும் அழிக்கப்பட வேண்டும் என்ற முன் நிபந்தனை காணப்படுகின்றது.
உதாரணமாக தமிழ் நாடு, தமிழ்ப் பேசும் தேசிய இனமாக முழுமை பெற வேண்டுமானால் அங்கு சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான கருத்தியலும், செயற்பாடும் அவசியமாகிறது. சாதியம் அழிவது தேசியக் கருத்தியலின் முழுமையான வளர்ச்சிக்கு அவசியம் என்றால் அதனை முதலில் திராவிடம் என்ற கோட்பாட்டின் ஊடாக முன்வைத்தவர் பெரியாரே.
பெரியாரின் கருத்துக்களுக்கு திராவிட இயக்கங்கள் செயல்வடிவம் கொடுத்தன. அதனூடாக சாதீய அமைப்பிற்கும் இந்துத்துவத்திற்கும் எதிரான கருத்தியல் வளர தேசிய உணர்வும் பொருளாதாரமும் வளர ஆரம்பித்தது. மதவாதக் கட்சிகள் இடம் தெரியாமல் அகற்றப்பட்டன. இந்திய தேசியக் கட்சிகள் செல்வாக்கிழந்தன.
மார்க்சியம் என்பது தேசியம் அல்ல, ஆனால் தேசங்கள் ஒடுக்கப்படும் போது அதன் விடுதலைக்கான கோட்பாட்டை வரையறுத்துக்கொள்ள மார்க்சியம் வழங்குகிறது. அதே போன்று இந்தியா போன்ற அரசியல் சூழலில் தமிழ் நாட்டில் தேசியம் வளர்ச்சிபெற திராவிடம் உந்து சக்தியாக அமைகிறது. ஆக, திராவிடம் என்பது தேசியம் அல்ல, ஆனால் தேசியம் வளர்ச்சியடைவதற்கான் கோட்பாட்டை அது வழங்குகிறது. கார்ல் மார்க்ஸ் கோடிட்டுக் காட்டிய தடையை உடைக்க அது பயன்படுகிறது.
திராவிடக் கோட்பாட்டல் வளர்ச்சியடைந்த தமிழ் நாடு சார்ந்த தேசியவாதம் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டமாக பரிணாமம் பெற்றுவிடலாம் என்ற அச்சம் அதிகாரவர்க்கத்திற்கு ஏற்பட தமிழ் நாட்டைக் கையகப்படுத்த இந்துத்துவா வர்ணம் பூசிய அதிகாரவர்க்கம் முயற்சித்ததன் எதிர் விளைவே இன்றைய தமிழகம்.
தமிழகத்தில் தோன்றிய தேசிய உணர்வை சிதைத்து அழிப்பதற்கு மத்திய இந்துத்துவ அரசு தனது நிகழ்ச்சி நிரலைத் தயாரித்தததன் முதல் திட்டமாக திராவிடக் கட்சிகள் அற்ற தமிழகத்தை உருவாக்குவோம் என்ற முழக்கத்தை முன்வைத்தன.
பெரியார் சிலை உடைப்பு வரை பல் வேறு வழிகளில் திராவிடத்தை அழிக்க முயற்சித்த இந்துத்துவா, அதன் மறுபக்க நிகழ்ச்சி நிரலை திராவிடத்திற்கு எதிராக சீமானின் தமிழ்த் தேசியத்தின் ஊடாக முன்வைத்தது. பாரதீய ஜனதாவும் இந்திய உளவுத்துறையும், தம்மை விட மிக அதிகமாக திராவிடத்தையும் அதனூடாக தமிழ்த் தேசியத்தையும் தீவிரமாக அழிக்க முற்படும் சீமானை வளர்க்க ஆரம்பித்தது.
விடுதலை புலிகளின் சினிமாப் படப்பிடிப்பிற்காக வன்னிக்குச் சென்றுவந்த சீமான், வன்னி இனப்படுகொலையின் போது கொல்லப்பட்டவர்களின் பிணங்களை முன்வைத்து நடத்தும் அருவருப்பான அரசியல் இந்துத்துவாவின் மற்றோரு முகமே.
ஒரு நாடு ஒடுக்கப்பட்டால பிரிந்து செல்லும் உரிமையை மக்கள் கோரவேண்டும், அதுவே தேசியத்தின் உச்சபட்ச வடிவம் மட்டுமன்றி அடிப்படையும் கூட. தமிழ் நாட்டில் பிரிந்து செல்வதற்கான சுய நிர்ணைய உரிமையைக் கோர மறுத்து தனது எசமானர்களான இந்திய அதிகாரவர்க்கத்திற்குச் சேவையாற்றும் சீமான் எந்தப் பாதுகாப்புமின்றி ஈழத்தில் வாழும் தமிழர்களைக் காட்டிக்கொடுக்கிறார் என்பது மட்டுமே இன்றைய அவரின் வெற்றி. மிக நீண்ட காலமாக திராவிடக் கோட்பாட்டை உள்வாங்கிக்கொண்ட தமிழக மக்கள், டெல்ல்லியின் நிகழ்ச்சி நிரலுக்கு இசைவாக, தமிழ் நாடு தேசிய உணர்வை அழிக்க முற்படும் முயற்சியைத் தோற்படிப்பார்கள் என்பது வெளிப்படை.
-வரதன்