Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எம். ஏ. நுஃமான் குழு அங்கீகரிக்கின்றதா: சபா நாவலன்

protest-muslim-Sri-Lankaஇலங்கையின் அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பாக நடைபெறும் வாதப் பிரதிவாதங்களின் முழுமையான பின்னணியை ஆராய்ந்தால், கிழக்கு மாகாணத்தைத் தனிமைப்படுத்தி வடக்குக் கிழக்கை நிரந்தரமாகப் பிரித்தாளும் பேரினவாதச் சூழ்ச்சிக்குத் துணைபோகும் வகையிலேயே அமைந்துள்ளது. வட கிழக்கு இணைப்பிற்கு எதிராக இலங்கை அரச எடுபிடிகள் போன்று பணியாற்ற முஸ்லீம் தமிழர்களைத் தூண்டும் புதிய குழுக்கள் புத்திசீவிகள் என்ற தலையங்கத்தில் களமிறக்கப்பட்டுள்ளன.

தேசிய இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் என்பதே ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் பிரிந்து செல்லும் உரிமையை அங்கிகரிப்பதிலிருந்தே ஆரம்பமாகிறது. பெருந்தேசிய சிங்கள சமூகத்தின் மத்தியிலிருந்து தமிழ்ப்பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்படுமானால் தமிழர்கள் பிரிந்து செல்வதற்கான தேவையே அற்றுபோய்விடும்.

இஸ்லாமிய நாடாகக் கருதப்படும் துருக்கியிலிருந்து குர்தீஸ் மக்களின் பிரிந்து செல்லும் உரிமைக்கான குரல் எழுந்த போது தான் குர்தீஸ் விடுதலைப் போராட்டம் இனவாதச் சகதியிலிருந்து வெளியே வந்தது.

இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சிங்கள ஒடுக்கப்படும் மக்கள் மத்தியிலிருந்து எழுந்தால் பேரினவாதத்தின் அத்திவாரம் ஆட்டம்காண ஆரம்பித்துவிடும். மறுபுறத்தில் தமிழ் இனவாதிகள் தமது இருப்பிற்கான நியாயத்தை இழந்துவிடுவார்கள். புலம்பெயர் நாடுகளில் மக்களை அவலங்களைத் தமது சுய இலாபத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ளும் குழுக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

பேரினவாதத்தை அடித்தளமாகக்கொண்டு கட்டியெழுப்பப்பட்ட இலங்கை அரச அதிகாரம் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமையை அங்கீகரிப்பதும், அதனூடாக இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் கனவில் கூட எண்ணிப்பார்க்க முடியாத செயற்பாடாகும். பேரினவாதம் அழிந்துபோகுமானால் இலங்கை அரச அதிகார அமைப்புமுறையும் அழிந்துபோகும்.

இதனால் இலங்கை அரச அதிகார அமைப்பு முறை பேரினவாதத்தைத் தொடர்ச்சியாகப் பேணிக்கொள்ள தன்னாலான அனைத்து அரசியல் நடவடிகைகளையும் மேற்கொள்ளும்.

இந்தவகையில் அதன் முதல் பணி, சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கையை சிங்கள மக்களுக்கு இனவாதமாகக் காட்டமுயல்வதிலிருந்தே ஆரம்பிக்கும்.
தமிழ்ப்பேசும் மக்கள் மத்தியிலிருந்து சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கை முன்வைக்கப்படுவதற்கு முதல் சிங்கள ஆசிரியர்களைப் பெரும்பான்மையாக கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கமே சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமையை அங்கீகரிக்கும் முழக்கத்தை முன்வைத்தது என்பது இலங்கை அதிகாரவர்க்கத்திற்கு நன்கு தெரிந்திருந்தது.
அதன் பின்னர் தன்னைச் சுதாகரித்துக்கொண்ட இலங்கை அரச அதிகாரவர்க்கம் இரண்டுபக்க இனவாதத்தையும் தீனிபோட்டு வளர்க்க ஆரம்பித்தது.

நான்கு தசாப்பத்தப் போராட்டத்தின் இறுதியில் இன்று இலங்கை முழுவதும் சிங்கள பௌத்த அதிகாரவர்க்கத்தின் அரசியல் பொதுப்புத்தியாக்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரவர்க்கத்தைக் கடந்து இலங்கையில் ஒரு துரும்பு கூட அசைய முடியாது என்ற மனோபாவம் விதைக்கப்படுகின்றது. இதன் மறுபுறத்தில் சிங்கள பௌத்த சிந்தனை ஆழ வேரூன்றுகிறது. சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கை தீண்டத்தகாததாக மாற்றப்படுகின்றது.

இந்த பின்புலத்தில் தான் பேரினவாதத்தின் முகவர்கள் போன்று செயற்படும் இஸ்லாமிய அறிவுசீவிகளின் அறிக்கை தென்னிந்திய பிற்போக்கு இலக்கிய இணைய இதழில் வெளியாகியிருக்கின்றது.

கடந்தகாலத்தில் தம்மை முற்போக்கு புத்திசீவிகளாக அறிமுகப்படுத்திக்கொண்ட பேராசிரியர் எம். ஏ. நுஃமான் உட்பட்ட இத்தியாதிகளின் அறிக்கை வெளியாகியிருக்கின்றது.

தேசிய இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை நிரகரிக்கும் பேரினவாத அரசின் அரசியல் நிகழ்ச்சி நிரலை தமது மொழியில் இக் குழு காலச்சுவட்டில் பதிந்துள்ளது.

அதிகாரப்பரவலாக்கலைக் கோரும் இம் முகவர் குழு, சுய நிர்ணைய உரிமையை மட்டுமன்றி அதற்கான அடிப்படைகளையே நிராகரிக்கக் கோருகின்றது. வட கிழக்கு இணைப்பை முற்றாக நிராகரிக்கும் இக் குழு, அதற்கான காரணமாகக் குடிப்பரம்பலை ஆதாரம்காட்டுகின்றது.

கல்லோயாத் திட்டத்தில் ஆரம்பித்து கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட திட்டமிட்ட நிலப்பறிப்பையும் ஆக்கிரமிப்பையும் நிராகரிக்கும் இக் குழு, அவற்றிற்கான அங்கீகாரத்தைக் கோருகின்றது. இஸ்லாமியத் தமிழர்கள் வட கிழக்கு இணைப்பை நிராகரிப்பதாகவும், பூர்வீகத் தமிழர்களை அவர்களை ஆதரிப்பதாகவும் கூறுகிறது.

வடக்குக் கிழக்கு இணைந்த பிரதேசத்தில் கிழக்கில் திட்டமிட்ட குடியேற்றங்களை நடத்திவிட்டு அது தனியான மாகாணம் என்றும் தமிழர்கள் சிறுபான்மை என்றும் கூறுவது நியாயமென்றால், இன்று உலகம் முழுவதும் நடத்தப்படும் அத்தனை நிலப்பறிப்புக்களும் இலங்கை இஸ்லாமிய புத்திசீவிகளுக்கு நியாயமானதாகவே தென்படும். இஸ்ரேலிய சியோனிஸ்டுக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீனிய மக்களின் தன்னுரிமைக்கான போராட்டத்தையும் இவர்கள் நிராகரிப்பவர்களே.

சுயநிர்ணைய உரிமைக்கான கோரிக்கையைத் துடைத்தெறிவதற்கு இலங்கையில் நடத்தப்படுகின்ற திட்டமிட்ட நிலப்பறிப்பு, குடியேற்றங்கள், இனச்சுத்திகரிப்பு போன்றன இலங்கை அரசின் நேரடி நடவடிக்கைகள் என்றால் அதன் கருத்தியல் தளத்தில் பேராசிரியர் எம். ஏ. நுஃமான் போன்றவர்கள் செயற்படுகின்றனர்.

கண்டி போரம் என்ற பெயரில் பேரினவாதிகளின் அடியாள் குழுவாகச் செயற்படும் இக் குழுவின் ஏனைய உறுப்பினர்கள் சிலர் இலங்கை அரச சார்பு சமூகவிரோதக் குழுக்களுடன் நேரடியான தொடர்பைப் பேணியவர்கள். இவர்கள் தமிழ்ப் பேசும் பூர்வீகத் தமிழர்களின் சுய நிர்ணைய உரிமைக்கு மட்டுமல்ல இஸ்லாமியத் தமிழர்களின் தன்னுரிமைக்கும் எதிரானவர்கள். இன்றைய இலங்கைச் சூழலில் தேசிய இனங்களின் தோற்றம் இன்னும் முழுமை பெறவில்லை. இஸ்லாமியத் தமிழர்கள் உட்பட அனைத்துத் தேசிய இனங்களும் தமது உருவாக்கத்தில் முழுமை பெறுதல் என்பது முற்போக்கானதே. பேராசிரியர் எம். ஏ. நுஃமான் போன்ற பின் தங்கிய சிந்தனையைக் கொண்டவர்கள் காலச்சுவடு போன்ற இந்திய அதிகாரவர்க்க நூல்களின் ஊடாக தமது அதிகாரவர்க்க முகவர் வேலையை நிறைவேற்றிக்கொள்வது வியப்புக்குரியதல்ல.

காலச்சுவட்டில் வெளியான அறிக்கை:

http://www.kalachuvadu.com/issue-196/page72.asp

Exit mobile version