அண்மைய நாட்களில் இந்தியாவில் இந்துமதம் தொடர்பாக இரு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. முதலாவதாக கர்நாடகத்தில் ஏறத்தாழ ஆறு மில்லியன் அளவிலான மக்கள் தாம் வலுக்கட்டாயமாக இணைத்து வைக்கப்பட்டிருந்த இந்துமதத்திலிருந்து பிரிந்துசென்று தமது பழைய மதமான “லிங்காயத்து” எனும் மதத்திற்குச் சென்றுள்ளனர். இரண்டாவது நிகழ்வாக ராமராச்சியம் அமைப்போம் எனக்கூறி ரதயாத்திரை ஒன்று தமிழகத்திற்குள் வந்துசேர்ந்துள்ளது. இதில் முதலில் லிங்காயத்துக்கள் பிளவு பற்றிப்பார்ப்போம்.
லிங்காயத்து:
இங்கு லிங்காயத்துக்களுடன் வீரசைவர்கள் என்ற பிரிவினைச் சேர்த்து நாம் குழப்பிக்கொள்ளக்கூடாது. இந்த வீரசைவர்கள் என்போர் பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு மற்றைய இந்துக்கள் போன்றிருப்பவர்கள், ஆனால் லிங்காயத்துக்கள் என்போர் பின்வரும் அடிப்படைகளில் இந்துக்களிடமிருந்து வேறுபடுகிறார்கள்.
- லிங்காயத்துக்கள் வர்ணாச்சிரம சாதிஅமைப்பினை ஏற்றுக்கொள்ளாதவர்கள். அதனாலேயே சாதி-வர்ணக் கோட்பாடுகளை வலியுறுத்தும் வேதங்கள், மனுதருமம், பகவத்கீதை போன்றவற்றையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
- லிங்காயத்துக்கள் பார்ப்பனர்களை மத குருமார்களாகவோ அல்லது சமசுகிரத மொழியினை வழிபாட்டுமொழியாகவோ ஏற்றுக்கொள்ளாதவர்கள்.
- லிங்காயத்துக்கள் பால்நிலை வேறுபாடுகள் பார்ப்பதில்லை. இங்கு ஆண்களிற்குள்ள அதே வழிபாட்டுரிமை பெண்களிற்கும் உண்டு.
பெண்களையும் சூத்திரர்களாகப் பார்க்கும் இந்துமனநிலை இங்கில்லை.
- லிங்காயத்துக்கள் சிலை வழிபாட்டினையோ அல்லது கோயில்களையோ அல்லது பார்ப்பனரின் முன்னைய வழிபாடான தீயினையோ வழிபடுவதில்லை. அவர்களைப்பொறுத்தவரையில் “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்பதுபோல் தமது உடலையே கோயிலாகக் கருதுவார்கள்.
- பார்ப்பனர்கள் தமது வயிற்றுப்பிழைப்புக்காக நம்பியிருக்கும் யாகம்,கோமம் போன்ற சடங்குகளை லிங்காயத்துக்கள் பின்பற்றுவதில்லை. இவர்களின் திருமணம், மரணம் போன்ற சடங்குளில் கூட நெருப்பு மூட்டிச் சடங்குகள் செய்வதில்லை (இறந்தவர்களை எரிப்பது நீங்கலாக).
இத்தகைய வேறுபாடுகளாலேயே
ஏற்கனவே தமிழர்களிலும் இவ்வாறான முயற்சிகள் தமிழை முன்நிறுத்தி பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து மறைமலை அடிகளார், வள்ளலார் போன்றோரினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதற்காகவே பார்ப்பனர்களால் வள்ளலார் சோதியில் கலந்து காணமற்போகச் செய்யப்பட்டிருந்தார். அதே போன்று லிங்காயத்துக்கள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த கல்புரி, கவுரி லிங்கேசு போன்ற அறிஞ ர்களும் கர்நாடாகவில் இந்துத்துவா வாதிகளால் சுடப்பட்டிருந்தனர். லிங்காயத்துக்கள் பிளவையடுத்து மீண்டும் தமிழகத்திலும் இந்தக் குரல்கள் கேட்கத்தொடங்கியுள்ளது.
ரதயாத்திரை:
இதே நேரத்தில் ராமர் ராச்சியம் அமைப்பதற்கெனக் கூறிக்கொண்டு 1990 களில் பாபர் மசூதியை இடித்து முழு நாட்டையே கலவரமாக்கிய இந்துத்துவா கும்பல் மீண்டும் ஒரு ரதயாத்திரை ஆரம்பித்து பல மாநிலங்களூடாகத் தமிழகத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. விசுவ இந்து பரிசத்து (VHP) என்ற RSS இன் துணை அமைப்பினால் பின்வரும் நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு இந்த ஊர்வலம் நடாத்தப்பட்டுவருகின்றது.
- பாபர் மசூதியிருந்து இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டப்படவேண்டும்.
- ராமயணம் பாடசாலைகளில் முக்கிய பாடமாக கற்பிக்கப்படவேண்டும்.
- விடுமுறைநாளாக ஞாயிற்றுக்கிழமைப் பதில் ராமரிற்கு உகந்த நாளான வியாழன் அறிவிக்கப்படவேண்டும்.
மேற்கூறிய காரணிகளை அடிப்படையாகக்கொண்டு ராமராச்சியம் அமைப்போம் என்றே இந்த ரதயாத்திரை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
ராமராச்சியம்:
பாரதீய சனதாக் கட்சியைப் பொறுத்தவரையில் ஏற்கனவே 1990 களில் இவ்வாறான ஒரு ரதயாத்திரையின் மூலம் இந்துத்துவா உணர்வினைத்தூண்டி கணிசமானளவு வாக்குகளைப் பெற்றிருந்தது. இன்று அக்கட்சி மோடி தலமையில் மத்தியில் ஆட்சியிலிருக்கும் போதும், அக் கட்சியின் மக்கள் விரோதக்கொள்கைகளால் இழந்துள்ள செல்வாக்கினை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காகவே இத்தகைய ரதயாத்திரை, ராமர்கோயில் போன்ற நடவடிக்கைகள் ஊடாக மதக்கலவரங்களைத் தூண்டி மீண்டும் ஆட்சிக்கு வர நினைக்கிறது. இவ்வாறான நிலையில் தமிழகம் வந்துள்ள ரதயாத்திரையினைத் தமிழகத்தின் பல்வேறு அமைப்புக்களும், கட்சிகளும் எதிர்க்கின்றன. தமிழக அரசோ ரதம் செல்லும் பாதைகளில் 144 தடையுத்தரவு பிறப்பித்து மக்களின் எதிர்ப்பினை மழுங்கடிக்க முயன்றுவருகின்றது.
பொதுவாகக் கலவரங்களைத் தடுப்பதற்குப் பிறப்பிக்கப்படும் 144 தடையுத்தரவானது இங்கு கலவரத்தை ஏற்படுத்தவென வரும் ரதயாத்திரைக்கு உதவுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த ரதயாத்திரை ஒரு மதம்சார்பான ராமராச்சியம் உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்படுவதால் இது இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியலமைப்பிற்கு எதிரானது. மேலும் உச்சநீதிமன்றத்தில் இந்த பாபர்மசூதி- ராமர் கோயில் விவகாரம் நிலுவையிலுள்ளதால், ராமர் கோயல் கட்டவென ஊர்வலம் மேற்கொள்வது நீதிமன்ற அவமதிப்புமாகும். இவ்வாறான முறைகேடுகளிற்கு மத்தியில் மேற்கொள்ளப்படும் இந்த ரதயாத்திரைக்கு மத்திய-மாநில அரசுகள் வழங்கிவரும் ஆதரவானது சட்டவிதிகள் எல்லாம் பாமரமக்களிற்கேயன்றி, ஆள்வோரிற்கல்ல என மீண்டுமொருமுறை சான்றுப்படுத்தியுள்ளது.
இவ்வாறான அரசுகளின் ஒத்துழைப்புக்களிற்குப்பின்னரும் கூட மக்களின் எதிர்ப்பிற்குப் பயந்து ரதமானது யாத்திரை போல மெதுவாகச் செல்லாமல், மாறாக ஆள் நடமாட்டங்கள் குறைந்த வீதிகளில் காவல்துறையின் பாதுகாப்புடன் வேகமாக ஓடி மறைவதனைக் காணோளிகளில் காணும்போது, இது ஒரு ரத-ஓட்டப்போட்டி போன்றே காணப்படுகிறது.