Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மரணிக்கும் வரை மக்களுக்காகக் குரல்கொடுத்த மரடோனா

மரடோனா,சாவேஸ்,கஸ்ரோ
மரடோனா,சாவேஸ்,கஸ்ரோ

உலகின் மிகப்பெரும் உதைபந்தாட்ட சாதனையாளராகக் கருதப்படும் மரடோனா மரணித்துவிட்டார். தனது 60 வது வயதில் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி மரணித்த மரடோனா உதைபந்தாட்ட நட்சத்திரம் என்பதற்கு அப்பால் தன்னை ஏகாதிபத்திய எதிர்பாளராக முன்னிறுத்திக்கொண்டார். 40 வருடங்களாக நடந்த வீரம்செறிந்த போராட்டத்தின் பின்னரும் உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்த எந்த சிந்தனையுமின்றி அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் இழுத்துவந்து தமிழீழம் பெற்றுத்தருவோம் என்று கூறும் ஈழத் தமிழ்த் தலைவர்களோடு வாழும் அவமானகரமான நமது நாட்களில் மரடோனாவும் வாழ்ந்தார் எனப் பெருமையுடன் கூறிக்கொள்ளலாம்.

மரடோனா கஸ்ரோ

ஆர்ஜன்டீனாவில் தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளர்களாக வேலைபார்த்த தாய் தந்தையரின் குடும்பத்தில் பிறத்த மரடோனா சிறிய வயதிலிருந்தே உதைபந்தாட்டத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். 1982 ஆம் ஆண்டிலிருந்து உலகக் கோப்பை உதைபந்தாட்டத்தில் பல சாதனைகளைப் படைத்த பின்னர், 1994 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுக்கொண்டார்.
தனது கரங்களில் சே குவாராவின் படத்தைப் பச்சை குத்திக்கொண்டு தான் அவர் விளையாட்டுத் துறையின் நட்சத்திரமானார். மெக்சிகோ நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பைக்கா உதைபந்தாட்டப் போடியில் வெற்றி பெற்ற பின்னர் தான் கியுப நாட்டிற்குச் சென்ற மரடோனா அங்கு பிடல் கஸ்ரோவைச் சந்திகிறார்.முதல் சந்திப்பிலேயே தனது இரண்டாவது தந்தை கஸ்ரோ எனக் கூறுகிறார்.

2005 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் ஆர்ஜன்டீனாவிற்குச் சென்ற போது, அவரின் வருகைக்கு எதிரான போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார். பிடல் கஸ்ரோவின் மரணத்தின் போது கியூபா சென்ற மரடோனா மரண ஊர்வலத்தில் ஆற்றிய உருக்கமான உரை கியூபாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் பிரபலமானது.

அமெரிக்காவின் கொல்லைப் புறத்திலிருந்து அந்த நாட்டையே உலுக்கிய வெனிசூலாவின் அதிபர் ஹூ கோ சாவேசை சந்தித்த மரடோனா, அவருக்கு ஆதரவான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தினார்.

சாவேஸின் மரணத்தின் போது, அவரின் தொடர்ச்சியும், வெனிசூலா நாட்டின் தொழிற்சங்கத் தலைவருமான நிகொலாஸ் மதூரோ வுடன் இணைந்து அஞ்சலிக் கூட்டத்தில் கலந்துகொண்டார். தான் மரணிக்கும் வரை மதுரோவிற்கு எதிரான அமெரிக்க அரசின் ஒவ்வோர் தாக்குதல்களுக்கு எதிராகவும் செயற்பட்ட மரடோனா தன்னை ஒரு சோசலிஸ்ட் என்றும் கம்யூனிஸ்ட் என்றும் பிரகடனப்படுத்தினார்.

போதைப் பொருட்களுக்கு அடிமையாகி தனது வாழ்க்கையை 60 வயதிலேயே முடித்துக்கொண்ட மரடோனாவின் சமூக உணர்வும், மக்கள் பற்றும் இன்றும் பேரினவாத ஒடுக்குமுறைக்குள் வாழும் எமது சமூகத்திற்கு மற்றொரு பாடம்.

Exit mobile version