Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலம்பெயர் புலி அரசியல் சுய நிர்ணைய உரிமைக் கோரிக்கையை அழிக்கிறது:கோசலன்

gadendrakumaruk

மக்கள் சலுகைகளுக்கக அல்ல உரிமைகளுக்காகவே குரல் கொடுத்தனர்…

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் கூட்டம் கூட்டமாக மக்களோடு சேர்த்துப் புலிகளின் தலைமையும் போராளிகளும் அழிக்கப்பட்டார்கள். முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டது புலிகளும் அப்பாவி மக்களும் மட்டுமல்ல சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டமும் தான். சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்திற்கான தேவையையும் நியாயத்தையும் இன்னும் மக்கள் உயர்த்திப் பிடிக்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தேர்தல்கள் வரும்போதெல்லாம் இலங்கை அரச சார்புக் கட்சிகளுக்கு வாக்களித்தால் அது சலுகைகளுக்காக வாக்களிப்பதாகிவிடும் என்பதை உணர்ந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தார்கள்.

மக்களைப் பொறுத்த வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த உரிமைகளையும் பெற்றுத் தராது என்பதில் மிகத் தெளிவாக உள்ளார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அதன் தலையில் குந்தியிருக்கும் தமிழரசுக் கட்சியோ இன்றுவரை மக்களின் உரிமைகளுக்காக நேர்மையாகக் குரல்கொடுத்த வரலறு இல்லை.

அப்படியிருந்தும் குறுகியகால சலுகைகளை நிராகரித்து தமது உரிமைகளை மறுப்பவர்களுக்கு எதிரான எதிர்ப்புணர்வாகவே கூட்டமைப்பிற்கான வாக்குகள் கருதப்பட வேண்டும்.

பிழைப்புவாதிகள் நிராகரிக்கப்பட்டனர்…

அதன் மறுபக்கத்தில் கடந்த காலப் போராட்டத்தின் நினைவுகளை மட்டும் வைத்துக்கொண்டு அரசியல் நடத்தும் பிழைப்புவாதக் கும்பல்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. புலியெதிர்ப்பு-அரச சார்புக் கும்பல்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளைக் கூட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குழுவினர் பெற்றுக்கொள்ளவில்லை என்பதன் பின்னணி அதுவே.
புலம்பெயர் தமிழ்க் குழுக்கள் மட்டுமே போராட்டத்தின் தோல்வியை மீளாய்வு செய்ய மறுக்கின்றன. தோற்றுப்போன இராணுவயுத்தத்தைக் கொண்டாடுகின்றன.

முள்ளிவாய்க்காலில் கிடைத்தது இராணுவ வெற்றியா என்ன?

இல்லையே ! தோல்வியும் அழிவும் என்பதை தெரிந்துகொண்டும் மறைக்கிறார்கள். முதலில் தோல்வியை ஒப்புக்கொண்டால் மட்டுமே வெற்றிக்கான பாதைகளை காணமுடியும்.

உலகில் ஒவ்வொரு அரசியல் நிகழ்வும், கருத்தும், கோட்பாடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுவதன் ஊடாக மட்டுமே சரியான வழிகளைக் கண்டுகொள்ள முடியும். ஆயிரக்கணக்கான போராளிகளதும் மக்களதும் தியாகம் பெரு மதிப்பிற்குரியது, உயிரைத் துச்சமென மதித்து தமகு இளமைக்காலத்தை இழந்துபோன போராளிகளின் அர்ப்பணம் நூற்றாண்டுகள் வரை பேசப்பட வேண்டும். அதனால் நடந்துமுடிந்த போராட்டத்தைச் சேறடிக்க முடியாது; அதற்கான நியாயத்தை நிராகரிக்க முடியாது; அதே வேளை அதில் நிகழ்த்தப்பட்ட தவறுகளை மூடிமறைத்து ஏற்றுக்கொண்டு எதிர்கால சந்ததியைத் தவறாக வழி நடத்த முடியாது.

புலிகள் இயக்கப் போராளிகளின் தியாகம் எவ்வளவு முக்கியமானதோ, சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் எவ்வளவு முக்கியமானதோ அவ்வளவிற்கு புலிகளின் அரசியலை விமர்சித்து புதிய அரசியலை முன்வைப்பதும் முக்கியமானது.

தோல்வியை கொண்டாடும் கூட்டங்கள்…

இராணுவரீதியிலும் அரசியல் ரீதியிலும் தோற்றுப்போன, அழிவுகளை மட்டுமே எச்சமாக விட்டுச் சென்ற அரசியலைக் கொண்டாடுவது புலம்பெயர் பிழைப்புவாத அமைப்புக்களாக மட்டுமே இருக்கமுடியும்.

சில தனி நபர்களையும் முக நூல் விற்பனர்களையும் மட்டுமே வைத்திருக்கும் இப் புலம்பெயர் அமைப்புக்கள் தமிழர்கள் தோல்வியைக் கொண்டாடும் முட்டாள்கள் என உலக மக்களுக்குப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பது போல சில புலம்பெயர் அமைப்புக்கள் ஈழத்தில் ஏற்படக்கூடிய அழிவுகளைக் கருத்தில் கொள்ளாமல், எதிர்கால சந்ததியைக் கருத்திக் கொள்ளாமல் புலிகளின் தோற்றுப்போன அரசியலை மீட்போம் என்று வெற்றுகூச்சல் போடுகின்றார்கள்.

தமக்கு முன்னாலுள்ள அனைத்து ஒடுக்குமுறைகளையும் தயவு தாட்சண்யமின்றி விமர்சித்த ஜூலியன் அசாஞ் போன்றவர்கள் வாழ்ந்த சம காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் எனப் பெருமை கொள்ளல்லாம். அதேவேளை பிரபாகரனுக்கு ஒளிவட்டம் கட்டி அதனூடாக பிழைப்பு நடத்தி, கிடைப்பதைச் சுருட்டிக்கொள்ளும் புலம்பெயர் தமிழ்த் தலைமைகள் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என அவமானப்பட வேண்டும்.

அரசியல் தவறுகளை நியாயப்படுத்தி போராட்டம் தொடர்பான தவறான பார்வை வழங்கப்படுகிறது

உலக் நாடுகள் முள்ளிவாய்க்காலில் நடந்தது போன்ற அழிப்புக்களை நடத்தும் போது ஒடுக்கப்பட்ட மக்களும் மக்கள் சார்ந்த தலைமைகளும் ஒன்றிணைந்து போராடுகிறார்கள். தமிழர்கள் அழிக்கப்படும் போது மட்டும் அவ்வாறான போராட்டங்கள் ஏன் நடைபெறுவதில்லை என்பதை என்பதை இவர்கள் சிந்திப்பதில்லை.

கடந்த காலத்தில் புலிகளின் அரசியல் தவறு காரணாமாக நடத்தப்பட்ட வன்முறைகளும், கொலைகளும் சுய விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டியவை. ஏனைய இயக்க்ங்கள் மீதான படுகொலைகள், முஸ்லீம் மக்களை வெளியேற்றமை, தொழிற்சங்கங்கள் வெகுஜன அமைப்புக்கள் போன்றவற்றின் ஜனநாயக உரிமையை மறுத்தமை, சுய நிர்ணைய உரிமைக்கான மாற்றை முன்வைத்தவர்களை அழித்தமை, மக்களைவிட ஆயுதங்களைப் பலமடையச் செய்தமை போன்ற நூற்றுக்கணக்கான பிரச்சனைகள் சுய விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும். இதனை மக்கள் பற்றுள்ளவர்கள் சுய விமர்சனமாக முன்வைக்காவிட்டால், புலியெதிப்புக் கும்பல்கள் அதனை குற்றச்சாட்டாக முன்வைக்கும்.

இவ்வாறான விமர்சனங்களை விரும்பாதவர்கள் யார்? சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை நிராகரிப்பவர்கள், பிழைப்புவாதிகள், கற்றுக்கொண்டு புதிய வழிகளைத் தேட மறுப்பவர்கள், அடையாளங்களை முன்வைத்து வியாபாரம் நடத்துபவர்கள், வாக்குப் பொறுக்கிகள் என்ற இன்னோரன்ன தீய சக்திகளே.

புலிகளின் பெயரால் புலம்பெயர் நாடுகளில் நடத்தப்படும் பிழைப்புவாத அரசியல், இலங்கையில் முகவர்களை உருவாக்க முயலும் அவர்களின் நடவடிக்கை, அவற்றிற்கு அரசியல் முலாம் பூசும் புத்திசீவி அடிமைகள் என்ற அனைத்துதும் அரசியல் நீக்கம் செய்யப்பட வேண்டும் புதிய மக்கள் சார்ந்த அரசியல் தோன்றுவதற்கான வழிகளை இதுவே திறந்துவிடும்.

Exit mobile version