Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலம்பெயர் ஏகாதிபத்திய அடிமைகளுக்கு ஐ.நா வழங்கியுள்ள விடுமுறை அழிவுகளை மட்டுப்படுத்துமா?

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு இலங்கைக்கு இரண்டுவருட அவகாசம் வழங்கியுள்ளது. இலங்கையில் மனிதப்படுகொலைகளைத் தலைமையேற்று நடத்திய மகிந்த ராஜபக்சவும் அவரோடு இணைந்த அத்தனை கொடூரமான கொலையாளிகளும் மக்கள் மத்தியில் உலாவருகின்றனர். சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்ட இராணுவக் கூலிப்படைகள் தடுத்துவைக்கப்பட்டு புனர் வாழ்வு வழங்கப்படாமல் மக்கள் குடியிருப்புக்களை அண்மித்த பகுதிகளில் நிலைகொண்டுள்ளன.

இவ்வகையான அச்சம் தரும் சூழலில் மைத்திரி – ரனில் அரசு இலங்கையில் பௌத்த சிங்கள இராணுவம் தண்டிக்கப்படவோ விசாரணைக்கு உட்படுத்தவோ மாட்டாது என்கிறது. தமிழ்த் தேசியத்தின் பெயரால் வாக்குப் பொறுக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குகிறது.

இதன் மறுபக்கத்தில் அமெரிக்கா சார்ந்த ஏகபோக நாடுகளையும் அதன் துணை அமைப்புக்களான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தையும் நம்பக் கோரும் அமைப்புக்கள் இலங்கை அரசிற்கு எதிராகவும் சுய நிர்ணைய உரிமை கோருவதை நோக்கியும் செயற்படுவதாகக் கூறுகின்றன. இலங்கையின் நடத்தப்பட்ட இனப்படுகொலையின் பின்புலத்தில் இந்திய அரசு மட்டுமன்றி அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளும் செயற்பட்டதை மூடி மறைக்கும் இக் குழுக்கள், ஐ.நா இலங்கை அரசை இன்னும் தண்டிப்பதற்கான சாத்தியங்கள் காண்படுவதாகக் கூறுகின்றன.

தான் சார்ந்த ஏகாதிபத்திய நாடுகளின் சார்பாக இரவோடு இரவாக முடிவுகளை மேற்கொள்ளும் ஐ.நா, அமெரிக்காவின் அடியாள் அரசாகச் செயற்படும் இலங்கை அரசிற்கு 2 வருட கால எல்லையை வழங்கி மனிதப் படுகொலையின் போது நடைபெற்ற போர் அத்துமீறல் தொடர்பாகப் பொறுப்புக் கூறுவதற்கு இரண்டு வருடங்கள் தவணை வழங்யுள்ளது.

இப்போது ஐ.நா வின் காலடியைச் சுற்றி வந்த அத்தனை ‘செயற்பாட்டாளர்களுக்கும்’ எந்த அரசியலும் கிடையாது. ஆக, இரண்டு வருடக் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இக் கட்டாய விடுமுறையில் அவர்களது நடவடிக்கைகள் மற்றொரு வகையில் மாற்றமடைய ஆரம்பித்துள்ளன.

விழாக்கள், பொதுக் கூட்டங்கள், பழைய பெருமை பேசுதல் போன்ற செயற்பாடுகளைத் தவிர புதிய ஒன்று கூடல்கள் ஒழுங்கு செய்யப்படுகின்றன.

தேசியம் என்ற தலையங்கத்தில் இக் குழுக்கள் ஏற்படுத்தும் அழிவுகளை அதன் செயற்பாட்டாளர்களில் பலரும் புரிந்துகொள்வதில்லை.

கடந்த காலப் போராட்டத்தைக் கற்றுக்கொள்ளும் வெளியாக மாற்ற மறுக்கும் வெளிப்படைத் தன்மையற்ற மூடிய இருளுக்குள் அமிழ்த்திய அவர்களின் அரசியல் இலங்கை அரசிற்கு மட்டுமன்றி அமெரிக்கா போன்ற ஏகபோக அரசுகளுக்கும் நேரடியாகச் சேவையாற்றியுள்ளன.

இவ்வாறான சூழலில் இக் குழுக்கள் ஸ்கந்தனேவிய நாடு ஒன்றி தடல்புடலாக ஏற்பாடு செய்துள்ள ஒன்றுகூடல் புதிய மாற்று அரசியலுக்கான முன்மொழிவாகஅமைவதற்குப் பதிலாக அதனை நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ பலப்படுத்தும் மற்றோர் நடவடிக்கையாகவே அமையும் என்பதில் சந்தேகம் கிடையாது.

ஐக்கிய நாடுகள் சபை வழங்கிய இரண்டுவருட விடுமுறையில் பேரினவாதமும் இலங்கை அதிகார வர்க்கமும் தம்மைப் பலப்படுத்திக்கொள்ளும் அதே வேளை புலம்பெயர் குழுக்கள் ஏற்பாடு செய்யும் ஒன்று கூடல் அழிவுகளை மேலும் ஆழப்படுத்தாமலிருந்தாலே இப்போதைக்குப் போதுமானது.

Exit mobile version