Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இது, லெனின் இயக்கவியல் முறையை தன் வயப்படுத்தியது: என்.குணசேகரன்

“Concrete Study, of Concrete Conditions” என்ற லெனின் கூற்று , வெறும் மேற்கோள்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படுறது.
–சமுக மாற்றத்திற்காக மக்கள் இயக்கங்களை பலப்படுத்துவதற்கும்,
–எதிர் முகாமில் உள்ள முரண்கள் உள்ளிட்ட அனைத்து நிலைமைகளையும் அறிந்து
–செயல் திட்டங்களை வகுத்திட, இயக்கவியல் அவசியம்.
*புரட்சி இலட்சியம் வாயளவிலும், ஆவண அளவிலும் வைத்துக் கொண்டிக்கும் போது, இயக்கவியல் பயிற்சி இல்லாமல் போகிறது .

முதலாம் உலகப் போரின்போது,உலகம் முழுவதும் வெடிகுண்டு சத்தங்கள் இடையறாது ஒலித்துக் கொண்டிருக்கும் வேளையில்,ஒரு மனிதர் நூலகத்தில் ஹெகெல் எழுதிய “தர்க்கவியலின் அறிவியல்” போன்ற கனமான நூல்களைப் படித்து, விரிவான குறிப்புக்களை எடுத்துக் கொண்டிருந்தார்.

யாரும் அடையாளம் காணாத அந்த நபர், அடுத்த ஒரு குறுகிய காலத்தில், உலகின் மிகப் பெரிய நாட்டின் அதிபராக, பதவியேற்க இருக்கின்றார் என்பது ஒரு விசித்திரமான உண்மை.

அவ்வாறு,நூலகத்தின்,ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு அமைதியாக குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தவர் ,லெனின்.இயக்கவியல் பற்றி தத்துவயியல் மேதை ஹெகல்,எழுதிய நூல்களையும்,அது பற்றிய அவரது பார்வையையும் லெனின் ஆய்வு செய்து கொண்டிருந்தார்.

லெனினுக்கு ரஷியப் புரட்சியை நிகழ்த்த இயக்கவியல் எனும் தத்துவ அறிவில் தேர்ச்சி தேவைப்பட்டது.இதற்காக அவர் அறிவுலக தளத்தில் தனிமையில் போராடிக் கொண்டிருந்தார்.அதற்கு அவருக்கு ஹெகலின் துணை தேவைப்பட்டது.

லெனினது குறிப்புக்கள் பிறகு “தத்துவார்த்த குறிப்புக்கள்”(The philosophical Notebooks)எனும் தலைப்பில் வெளிவந்து தத்துவ உலகில் பெரும் பங்களிப்பினை செய்தது.இயக்கவியல் பற்றியும்,அதனுள் அடங்கியிருக்கும் உன்னதமான “முரண்பாடு”எனும் கோட்பாடு பற்றியும் பேசுகிற நூல் இது………………………………………………..

லெனின் ஹெகலின் இயக்கவியல் பற்றிய வாசிப்பினை மேற்கொண்ட காலம் அவரது வாழ்க்கையில் மிகவும் சோதனையான காலம்.போல்ஷ்விக் கட்சி மிகவும் சிதைந்து இருந்த நிலை.பிரச்சாரம்,கிளர்ச்சி எதையும் செய்ய இயலாத ஒரு சூழல்.

இந்த பாதகமான சூழலை வாசிப்பு மற்றும் ஆய்வுக்கான வாய்ப்பாக லெனின் பயன்படுத்திக் கொண்டார்.ஒரு புறம் ஹெகலிய இயக்கவியலையும்,மறுபுறம்,அதுவரை உருவாக்கப்பட்ட ஏகாதிபத்தியம் பற்றிய தத்துவங்களையும் ஆராய்ந்தார் லெனின்.

மார்க்ஸ் தனது மூலதனம் பற்றிய ஆய்வுகளுக்கு ஹெகலின் இயக்கவியல் ஆய்வு முறையை பின்பற்றினார்.ஹெகலின் பார்வையில் உள்ள குறைபாடுகளைக் களைந்து மார்க்ஸ் தனக்கே உரித்தான இயக்கவியல் பொருள்முதல்வாதம் எனும் ஆய்வுமுறையை உருவாக்கினார்.
இயக்கவியலும் புரட்சியும்

இயக்கவியல் குறித்த ஆழமான வாசிப்பினை மேற்கொண்டு, அந்த அறிவியல் முறையை முழுமையாக சுவீகரித்த நிலையில்தான் லெனின் புரட்சி பற்றிய நிலைபாடுகளை எடுத்தார். இரண்டு தளத்தில் இந்த நிலைபாடுகளை மேற்கொண்டார்.ஒன்று உலகச்சூழல்:மற்றொன்று ரஷிய சூழல்.

உலக முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் எனும் நிலைக்கு மாறுகிற நிகழ்வினையும்,அதன் பல தன்மைகளையும் லெனின் கண்டறிந்து அதன் எதிர்கால வரலாற்றுக் கட்டத்தை அவர் காண்கின்றார்.இது முதலாளித்துவ முறையின் இறுதிக்கட்டம் எனவும்,அடுத்து,சோஷலிச புரட்சி யுகம் துவங்குகிறது எனவும் லெனின் முடிவுக்கு வருகின்றார்.இதுவே அவரது,”ஏகாதிபத்தியம்:முதலாளித்துவத்தின் உச்சகட்டம்”என்ற நூலின் சாராம்சம்.

அனைத்துப் பொருட்களும்,சமுக நிலைமைகளும் மாறிக்கொண்டும்,இடையறாது இயங்கிகொண்டும் இருக்கின்றன;அனைத்திலும் இயங்கும் உள்முரண்பாடுகள் மாற்றங்களாக வெடிக்கின்றன போன்ற பல இயக்கவியல் விதிகள் முதலாளித்துவம் பற்றிய லெனின் சிந்தனைக்கு அடிப்படையாக அமைந்துள்ளன.

இதே போன்று ரஷிய நிலைமைக்கும் இயக்கவியலைப் பொருத்தி பல முடிவுகளுக்கு லெனின் வருகின்றார்.கெரென்ஸ்கி தலைமையிலான முதலாளித்துவ ஆட்சி மாற்றம் 1917-பிப்ரவரியில் நடந்த அந்த நிகழ்வு நிரந்தரம் அல்ல.அது அடுத்த கட்டமான சோசலிசப் புரட்சியை நோக்கிச் செல்ல வேண்டும் என லெனின் அழுத்தமான ஒரு கருத்துக்கு வந்தடைகிறார்.
தொழிலாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற கருத்துகளைக் கொண்ட “ஏப்ரல் கருதாய்வுரைகள்” எனும் குறிப்பை அவர் வெளியிட்டார்.தனது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு ஏற்பட்ட போதும் விடாப்பிடியாக போராடி புரட்சியை வெற்றி பெறச் செய்தார்.இது உயரிய இயக்கவியல் அறிவின் வெளிப்பாடு.வரலாற்றுக் இயக்கத்தில் சோசலிசப் புரட்சிதான் என்ற அடுத்த கட்டம் என்பதை ஆழமாக உணர்ந்த நிலையில் ஏற்பட்ட அசாதாரணமான துணிவு.
நேக்ரி தனது நூலில் மிக அழகாக விளக்குகிறார்:

“இயக்கவியலை உண்மையான வரலாற்றை வாசிக்கும் கருவியாக லெனின் பயன்படுத்தினார்.அதனை, துல்லியமாக நுண்ணுயிர்களை ஆராய உதவிடும் நுண்ணோக்கு கருவி(microscope) போன்று,- துல்லியமாக சுடுவதற்கு பயன்படும் ரைபிள் துப்பாக்கி போன்று,இலக்கை அடைய சரியான திட்டங்களை உருவாக்கும் கருவியாக இயக்கவியலைப் பயன்படுத்துவதில் லெனின் வெற்றி பெற்றார்.”

மார்க்சிய இயக்கம் வெற்றி பெற………

ஒரு மார்க்சிய தொழிலாளி வர்க்க இயக்கத்தின் புரட்சிகர வெற்றி எதில் அடங்கியிருக்கிறது? புரட்சி அரசியலுக்கும்,அரசியல் வியூகம் வகுப்பதற்கும் இயக்கவியலை அந்த இயக்கம் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைப் பொருத்தே அதன் வெற்றி அமைகிறது.

இயக்கவியல் என்பது இயற்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கான விதிகளைக் கொண்டது.இதே விதிகள் சமுக இயக்கத்திலும் இயங்குகிறது என்பதை புரிந்து கொண்டால் சமுக மாற்றம் சாத்தியம்.இதற்கு இயக்கவியல் முறையை கையாள்வதில் தேர்ச்சி பெறுதல் அவசியம்.

ஹெகலின் தர்க்கவியல் அறிவியலைப் பின்பற்றி,லெனின் எழுதிய “தத்துவார்த்த குறிப்புக்கள்” “அரசும் புரட்சியும்” போன்ற நூல்கள் அனைத்தும் இயக்கவியல் பரிசோதனைகள் ஆகும்.

பாட்டாளி வர்க்கத்தின் கருவியாக இயக்கவியலை லெனின் கையாண்டார் என்பதனை நேக்ரி விளக்குகிறார்.

,லெனினுக்குப் பிறகு பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மாபெரும் தலைவரான மாசேதுங் லெனினை அடியொற்றி இயக்கவியலின் மகத்துவத்தை உணர்ந்து,அதனைக் கையாண்டார்.அவரது “நடைமுறை பற்றி”,முரண்பாடுகள் குறித்து”போன்ற படைப்புக்கள் இதற்கு சான்றுகள்.சீனப்புரட்சியின் வெற்றிக்குப் இயக்கவியலில் தேர்ச்சி பெற்ற தலைமை முக்கிய காரணம்.

http://marxist.tncpim.org

 ‘புத்தகம் பேசுது’ பிப்ரவரி இதழில் எழுதிய கட்டுரை

Exit mobile version