Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிசாசுகளின் நடனம் : ஆனந்த் டெல்டும்டே

marxist-may-2016-2ஐம்பதாண்டுகளுக்கு முன் பாபாசாகேப் அம்பேத்கார் அரசியலமைப்புச் சட்டத்தைக் கைவிட்டார். அது ஒரு உபயோகமற்ற ஆவணம் என்று கண்டித்தார். இன்றோ, அம்பேத்காரை அரசியலமைப்புச் சட்ட ஆவணத்தின் சிற்பி என்று கொண்டாடிக்கொண்டே வலதுசாரிகள் அரசியலமைப்புச் சட்டத்தின் மெய்ப்பொருளை மிதித்துத் துவைத்துக் கொண்டிருக்கின்றன. அவர் கைவிடும்போது கூறிய வார்த்தைகள் உண்மையாகிக் கொண்டிருக்கின்றன.

பாபாசாகேப் அம்பேத்கார் ஒருமுறை கூறினார், “நாம் கடவுள் உள்ளே வருவதற்காக ஒரு கோவிலைக் கட்டினோம் . . . ஆனால் கடவுள் சிலை நிறுவப்படுவதற்கு முன்னால் . . . பிசாசு அதனை தன்வசப்படுத்திக் கொண்டு விட்டது.” அவரது வார்த்தைகள் மாநிலங்களவையில் முன்பு ஏற்பட்ட கோபாவேசத்துக்கு விளக்கமாகும். அங்கு அவரை அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி என்று கூறியவர்களைக் கண்டனம் செய்திருந்தார். அந்த நேரத்தில் அம்பேத்கார் அரசியலமைப்புச் சட்டத்தைக் கைவிட மட்டும் செய்திருக்கவில்லை – காங்கிரஸ் அவரைக் கருவியாக உபயோகித்துக் கொண்டதாகக் குற்றம் சாட்டினார் – அந்த ஆவணம் உபயோகமற்றது என்றும் கண்டனம் செய்திருந்தார்.

அப்போதிலிருந்து ஆட்சியாளர்களின் பிசாசுத்தனம் பலமடங்காக வளர்ந்து விட்டது. கடந்த சில மாதங்களில் மட்டும் அம்பேத்கார் உயிரோடு இருந்திருந்தால், ஐதராபாத் பல்கலைக்கழகத்தின் ரோஹித் வெமுலாவைப்போல் வெறுப்பால் உயிரை விட்டிருப்பார் அல்லது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் கன்னையா குமாரைப்போல் தேசத்துரோகி என்று குற்றம் சாட்டப்பட்டிருப்பார்.

சில மாதங்களுக்கு முன்வரை விஷயங்கள் சரியாக நடந்து கொண்டிருந்தன என்று கூற வரவில்லை. அம்பேத்காரின் கற்பனைகள் சிதறுண்டு போவதற்கு சுதந்திரம் பெற்று மூன்றாண்டுகள் கூட ஆகவில்லை என்பது அப்போதே விஷயங்கள் மோசமாக இருந்ததைக் காட்டுகிறது. (அவர் முன்பு அவரது சீடர்கள் போராட்ட முறைகளைக் கைவிட்டுவிட்டு, அரசியலமைப்புச் சட்டத்தை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டுமென்று வலியுறுத்தியிருந்தார்). இந்தியாவின் புதிய ஆட்சியாளர்கள் காலனியாதிக்க ஆட்சியாளர்களின் வன்பொருள் ஆட்சிமுறையை அப்படியே எடுத்துக்கொண்டு அதனை அரசியலமைப்புச் சட்டத்தின் உயர்ந்த மொழியால் அலங்கரித்தார்கள், ஆனால் மேற்கத்திய ஆட்சி முறையின் தாராள மென்பொருளை பிராமணீய தந்திரத்துடன் மாற்றியமைத்தார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் ஜனநாயகம், முதலாளித்துவம், சோஷலிசம், சுதந்திரம் மற்றும் மதச்சார்பின்மையின் பொருளை திறனுடன் பின்னுக்கு இழுத்து விட்டார்கள்.

எனினும் சுதந்திரத்துக்குப் பிறகு முதல் நாற்பதாண்டுகளில் பிராமணீயத்தின் நிர்ப்பந்தம் சற்று அடங்கியே இருந்தது. 2014இல் தெளிவான பெரும்பான்மையுடன் பாரதீய ஜனதாக் கட்சி மத்தியில் ஆட்சியில் அமர்ந்ததும் அதன் முகமூடி கழன்று விட்டது. பிராமணீயம் முன்னெப்போதையும் விட இப்போது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.

சுயமாக உருவாகிக் கொண்ட குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மார்ச் 11 முதல் 13 வரை மூன்று நாட்களுக்கு நடத்திய கலாச்சார நிகழ்ச்சி எந்தத் தடையுமின்றி நடந்து முடிந்தது. அதற்கு மதச்சார்பற்ற இந்தியாவின் பிரதமர் நேரடியாக ஆசி வழங்கியது மட்டுமல்ல, யமுனையாற்றின் கரையை சேதப்படுத்திய இந்த நிகழ்வை எதிர்த்தவர்களை அவர் வெளிப்படையாகக் கண்டனம் செய்தார். ஆனால் இந்த முரண்பாடு சில அதிக ஆர்வமுடைய சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கைவேலை மட்டும்தானா?

பொய் சொல்லும் கலை

இந்தப் பெரும் நிகழ்ச்சி வெளிப்படையாக சட்டத்தை மீறியதுடன், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தையும் மீறியது. முரண்பாடு வெடித்ததும், பல தவறான செயல்பாடுகள் வெளிவந்தன. அவை எப்படி அதிகாரிகள் அமைப்பாளர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கையில் தவறுகளை இழைத்தார்கள் என்பதை வெளிப்படுத்தின. மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் கீழுள்ள தில்லி வளர்ச்சிக் குழுமம் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் பல உண்மைகளை மறைத்து சமர்ப்பித்த விண்ணப்பத்துக்கு அனுமதி அளித்தது. கொசைன் தலைமையிலான இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், சுற்றுச்சூழல் விஷயத்தில் மிகவும் பலவீனமான யமுனை நதிக்கரையில் நடைபெறக்கூடிய எந்த நிகழ்வுக்கும் எதிராக இருந்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், எந்த சேதத்தையும் சீர்ப்படுத்த 120 கோடியை வைப்பில் செலுத்துமாறு ”வாழும் கலை” அமைப்பிடம் கூறியது. அமைப்பாளர்கள் அதைக் கண்டு கொள்ளவேயில்லை. பின்வாங்கிய பசுமைத் தீர்ப்பாயம் வைப்புத் தொகையை ஐந்து கோடியாகக் குறைத்தது. ஆனால் தன் வழியில் செல்ல விரும்பிய ஸ்ரீஸ்ரீ தான் ஒரு பைசா கூடக் கொடுக்க முடியாதென்றும், சிறைக்குச் செல்லத் தயாரென்றும் கூறிவிட்டார். ஆனால் பின்னால் இவர் 25 லட்சம் செலுத்தினாலும், அது பசுமைத் தீர்ப்பாயத்துக்கு மானத்தைக் காத்துக் கொள்வதாக இருந்ததே தவிர, ஸ்ரீ ஸ்ரீக்கு எந்த வகையிலும் சங்கடத்தை ஏற்படுத்தவில்லை.

தீவீரமானதும், தீய குறியீடுமான இன்னொரு விஷயம் ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு மிதக்கும் பாலத்தை அமைக்க இராணுவத்தை அழைத்ததாகும்; பணியில் இருக்கக் கூடிய, ஓய்வு பெற்ற இராணுவத் தளபதிகள் மற்றும் பொறுப்புள்ள மக்கள் இராணுவப் பொறியாளர்கள் தவறாக உபயோகிக்கப்படுவதை எதிர்த்த போதும், எந்தப் பலனும் இல்லை. சட்டப் புத்தகம் – இராணுவத்துக்கான கட்டுபாடுகள், 301ஆம் பத்தி, பக்கம் 100 – சட்ட ஒழுங்கை நிர்வகிப்பதில் அவசரநிலைகள், அத்தியாவசிய சேவைகளை அளிப்பதை உறுதிப்படுத்துவது, பூகம்பம், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரழிவுகளின்போது, உதவி வழங்குதல் ஆகியவற்றுக்கு ஆயுதப் படைகளின் உதவியைக் கோர சிவில் அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கிறது. ஆனால் ”வேறு சூழ்நிலைகளிலும்” இராணுவத்தை உதவிக்கு அழைக்க அது அதிகாரிகளை அனுமதிக்கிறது. இந்த அனைத்து அவசர நிலை என்ற ஓட்டை ரவிசங்கரின் கலாச்சார நிகழ்ச்சிக்கு இராணுவத்தின் சேவையை அளிக்க பாதுகாப்பு அமைச்சரால் உபயோகித்துக் கொள்ளப்பட்டு விட்டது. எனினும் சட்டப் புத்தகத்தின் இந்த ஓட்டையால் இது அரசியல் கைம்மாறுதான் என்பதை மறைக்க முடியவில்லை. 2014 பொதுத் தேர்தலில் நரேந்திர மோடிக்கு ஸ்ரீஸ்ரீ தனது ஆதரவை வெளிப்படையாகவே தெரிவித்தார். வி.கே.சிங் போன்ற இராணுவத் தளபதிகள் இந்துத்துவா ஆதரவாளர்களாக இருந்த போதும், ஒருபோதும் இவ்வளவு அப்பட்டமாக சிவில் அதிகாரிகள் இராணுவத்தைத் தவறாகப் பயன்படுத்தியதில்லை.

பிசாசுகளின் சலுகைகள்

ரவிசங்கரின் வாழும் கலை இந்துயிசத்திலிருந்து கிடைத்த கச்சாப் பொருட்களைக் கொண்டு உலகெங்கும் ஆன்மீகச் சரக்கை விற்கும் ஒரு வர்த்தக நிறுவனம். யமுனையாற்றங் கரையில் நடத்தப்பட்ட இந்த மேளா இந்துயிசத்தை கடை பரப்பிய ஒரு நிகழ்வு. இத்தகைய ஒரு நிகழ்ச்சிக்கு அரசின் ஆதரவு அரசியலமைப்புச் சட்டத்துடன் தெளிவாகவே முரண்பட்டது. கும்ப மேளாவின் போது இராணுவத்தின் உதவி பெறப்பட்டதுடன் ஒப்பிட்டு தனது அரசின் தவறான செயல்பாட்டைப் பிரதமர் மூடி மறைக்க முயன்றார். சட்ட ஒழுங்கைத் தவிர கும்பமேளாவுக்கு அரசின் ஆதரவையும் விமர்சனம் செய்ய வேண்டும். வாழும் கலை நிகழ்ச்சியை எந்த வகையிலும் கும்பமேளாவுடன் ஒப்பிட முடியாது. கும்பமேளா என்பது அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றிய அறிவியல் உணர்வை வளர்த்திருந்தால் தவிர்த்திருக்கக் கூடிய அப்பாவி மக்களின் மதப் பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகும். அது மாறாக குழப்பவாதத்தை வளர்த்து விட்டது.

இன்னொரு வகை பிசாசுகளின் சலுகையை போன்ற பொதுப்பணத்தில் கொண்டாட்டங்களை அனுபவிக்கும் விஜய் மல்லையா போன்றோர் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். மல்லையாவின் கடன்கள் 2011இலேயே செயல்படாச் சொத்துக்கள் என்று அறிவிக்கப்பட்டுவிட்டன. 2014இல் கொல்கொத்தாவில் தலைமையகமாகக் கொண்டிருக்கும் யுனைடட் வங்கி வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர் என்று மல்லையாவை அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்பை கொல்கொத்தா உயர்நீதிமன்றம் செல்லாது என்று அறிவித்து விட்டதால் அது அத்தோடு முடிந்து போனது. வங்கியின் நேர்மையான செயல் இயக்குனர் ஏராளமான குற்றச்சாட்டுக்களால் பல்வேறு அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டார். 2015மார்ச் மாதம் அவர் ஓய்வு பெற்றதும் அவரது ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. பின்னால் ஸ்டேட் வங்கியும், பஞ்சாப் நேஷனல் வங்கியும் மல்லையாவை வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர் என்று அறிவித்தன.

மல்லையா வங்கிக் கடன்களையும், ஊழியர்களுக்கான ஊதியத்தையும் மட்டும் வேண்டுமென்றே கட்டாமல் இல்லை. வருமானவரி, சேவை வரி, ஊழியர்களின் வைப்புநிதி போன்ற சட்டபூர்வமாகக் கட்ட வேண்டிய தொகைகளையும் கட்டவில்லை. அவரை எளிதாக இவற்றுக்காகக் கைது செய்திருக்க முடியும். ஆனால் பிசாசுகள் அவரை மக்களின் கருத்துக்களுக்கு மாறாக சுதந்திரமாக உலாவ விட்டது மட்டுமல்ல, அவரை மாநிலங்களவையின் உறுப்பினராகவும் தேர்வு செய்ய வைத்தன.

அவர் நாட்டை விட்டு ஓடியதும் பெரும் அமளி எழுந்தது. ஏராளமான நாடகங்களும் நடந்தன. அவற்றில் பெரும்பகுதி தொடர்பில்லாத விஷயங்கள். மல்லையாவின் பல்வேறு குற்றங்களுக்கிடையில் அவரைத் தப்பிச் செல்ல விடுவதில் அரசின் அலட்சியப் போக்கு என்ற அடிப்படை உண்மையை அவை மறைத்தன. ஆனால் இப்படி வேண்டுமென்றே கடனைத் திருப்பிக் கட்டாதவர் மல்லையா மட்டுமே அல்ல, அல்லது அவர்தான் அவர்களில் அதிகமாகக் கட்ட வேண்டியவரும் அல்ல. மல்லையா சம்பவம் அம்பலப்பட்டுக் கொண்டிருக்கும் சலுகைசார் முதலாளித்துவத்தின் குறியீடே ஆகும். இந்தியாவில் முதலாளிகள் பயனுள்ள முதலீடுகளைச் செய்வதில்லை; அவர்கள் பொதுப்பணத்தைச் சூறையாட அனுமதிக்கும் பிசாசுகளின் வலைப்பின்னல்களில் பணத்தை முதலீடு செய்கின்றனர். ஐ.சி.ஐ.சி.ஐ. செக்யூரிட்டீஸ் 2015 மார்ச் 16 அன்று வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, பிரச்சனையிலிருக்கும் வங்கிகளின் சொத்து ரூ.10.31 லட்சம் கோடி என்ற பெரும் தொகையாக இருக்கிறது. இதில் பெரும்பகுதி பொதுத்துறை வங்கிகளுடையது. இவற்றில் வலுவான ஸ்டேட் வங்கியின் 60% சொத்துக்கள் சிரமத்தில் இருக்கின்றன. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 22% சொத்துக்கள் சிரமத்தில் இருக்கின்றன.

மக்கள் – பிசாசுகள்

ரவிசங்கரும், மல்லையாவும் ஐம்பதாண்டுகளுக்கு முன் அம்பேத்கார் பேசிய பிசாசுத்தனத்தின் வெளிப்பாடுகள் மட்டுமேயாவர். இந்த நாட்டின் சுயாட்சி உரிமை உள்ளவர்களாகக் கூறப்படும் மக்கள் கருவிகளாகத் துன்புறுகின்றனர்; சத்தீஸ்கரில் நடப்பது அவர்களது நிலைமையை ஒருவேளை வெளிப்படுத்தலாம். அங்கு மாவோயிஸ்டுகள் என்று முத்திரை குத்தப்பட்டுள்ள பழங்குடி மக்களுக்கும், அரசுக்கும் போரே நடந்து கொண்டிருக்கிறது.

சோனி சோரியின் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். அவர் ஒரு மாவோயிஸ்டல்ல. கடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பாகப் போட்டியிட்டவர். அவரது ஒரே குற்றம் அவரது சக பழங்குடி மக்கள் மீது நடத்தப்படும் ஒடுக்குமுறைக்கு எதிராகப் பேசியதேயாகும். முன்பு அவர் கைது செய்யப்பட்டு பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்தப்பட்டார். இப்போது பொது முகமாக இருக்கும் அவர் மீது கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆசிட் வீசப்பட்டு அவரது முகம் சிதைக்கப்பட்டது. அவரது வயதான தந்தை, சகோதரி, முழுக் குடும்பமும் கைது செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப் பட்டனர். பத்திரிகையாளரான அவரது மருமகன் பொது இடத்தில் வைத்து தீ வைத்துக் கொள்வேன் என்று மிரட்டும் அளவுக்கு இந்தக் கொடுமை நிகழ்ந்தது.

ஜக்தல்பூரில் ஒரு பெண்களின் வழக்கறிஞர் குழு 2013இலிருந்து பழங்குடி இனத்தவருக்கு இலவச சட்ட உதவி அளிக்க சோர்வின்றி உழைத்தனர். அவர்கள் சந்தித்ததும் அரசு பிசாசுத்தனத்தின் வெளிப்படாகக் குறிப்பிடப்பட முடியும். அரசு அந்த வழக்கறிஞர் குழுவை “மாவோயிஸ்ட் முன்னணி” என்ற பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டது. அவப்பெயருடைய சல்வா ஜுடூமின் இன்னொரு முகம் என்று கூறத்தக்க போலீசின் சமஜிக் ஏக்தா மஞ்ச் இவர்களை பொதுவில் வைத்து “ரத்தவெறி பிடித்த மாவோயிஸ்டுகளின்” குழு என்று குற்றம் சாட்டியது. அவர்கள் அனாமதேயக் குற்றச்சாட்டுகளால் கொடுமைப்படுத்தப்பட்டனர். உள்ளூர் பார் சங்கம் அவர்களை வெளியாட்கள் என்று கூறி அங்கு தொழில் நடத்தக் கூடாதென்று தடை செய்தது. அவர்கள் தொழில் நடத்துவதற்கான இடைக்கால உத்தரவை மாநில பார் கவுன்சிலிடமிருந்து பெற்றனர். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி முதல் அவர்களது வீட்டு சொந்தக்காரரையும், அவர்களுக்கு உதவிய மக்களையும் நிர்ப்பந்திக்க புதிய வழியைக் கடைப்பிடித்தது. இவையெல்லாம் சேர்ந்து அந்த வழக்கறிஞர்கள் ஜதல்பூரைக் காலி செய்து விட்டு வெளியேற வைத்து விட்டன. அரசியலமைப்புச் சட்டம் விதி 39 ஏ அரசு தனது மக்களுக்கு சட்ட உதவி கிடைப்பதை உறுதி செய்யுமாறு கூறுகிறது. ஆனால் பிசாசுகள் அதை அனுமதிக்காது. அதேபோல் பழங்குடி மக்கள் பிரச்சனைகள், போலீசின் கொடுமைகள், பழங்குடிப் பெண்கள் மீது பாதுகாப்புப் படைகள் ஏவிய பாலியல் கொடுமைகள் ஆகியவை குறித்து தனது ஸ்க்ரால்.இன் என்ற இணையதளப் பத்திரிகையில் விரிவாக அம்பலப்படுத்திய ஒரு வெளியிலிருந்து வந்த பத்திரிகையாளர் மீதும் இதேபோல் கொடுமைப்படுத்தப்பட்டு பஸ்தாரை விட்டு வெளியேற வைக்கப்பட்டார்.

வையெல்லாம் அம்பேத்காரின் அரசியலமைப்புச்சட்டத்தின் பெயரால் நிகழ்கின்றன!

(தமிழில் கி.ரமேஷ்)

http://marxist.tncpim.org/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/

Exit mobile version