அமெரிக்காவிலிருந்து 90 மைல்கள் தொலைவிலிருந்து உலகின் ஏகாதிபத்திய சர்வாதிகார அரசான அமெரிக்காவையே ஆட்டிப்படைத்த கியூபா என்ற நாட்டின் தோற்றம், வளர்ச்சி தொடர்பான நூற்றுக்கணக்கான மதிப்பீடுகள் வெளியாகியுள்ளன. அந்த நாட்டின் அரசியலைத் தலைமை தாங்கிய பிடல் கஸ்ரோ இன் மரணத்தின் பின்னர் அவர் தொடர்பாகவும், கியூபா தொடர்பாகவும் மறு மதிப்பீடு ஒன்றின் அவசியம் உலகின் புரட்சிகர சக்திகளால் உணரப்படுகிறது. கஸ்ரோ யார். கியூபாவின் சமூக அமைப்பு என்ன, அதன் அரசியல் வழிமுறை என்ன, சே குவேரா இற்கும் கியூபாவிற்கும் இடையிலான உறவு போன்ற பல்வேறு கேள்விகளுக்கு தீர்க்கமான பதில் இன்னும் தெளிவாக முன்வைக்கப்படவில்லை.
ஆனால் கஸ்ரோ வின் மரணத்தின் பின்னர் உலகத்தின் அரசியல் குறுக்குவெட்டு முகம் தெளிவாகத் தெரிகிறது.
அமெரிக்க காட்டுமிராண்டி சர்வாதிகாரி டொனால்ட் ரம்ப் கஸ்ரோவின் மரணத்தைக் கொண்டாட ஆரம்பித்ததிலிருந்து உலகம் முழுவதுமுள்ள முதலாளித்துவ சர்வாதிகாரிகள் கஸ்ரோவின் மரணத்தில் மகிழ்ச்சியடைந்தனர். பிரித்தானியாவில் நிறவாத பாசிச அமைப்புக்கள் பிடல் கஸ்ரோவின் மரணம் மகிழ்ச்சியைத் தருவதாகத் தெரிவித்தன. பிரித்தானிய சுதந்திரக் கட்சியின் தலைவர் நைஜெல் பிராக், உலகின் பயங்கரமான சர்வாதிகாரி மறைந்துவிட்டார் என்கிறார்.
அதன் மறுபக்கத்தில் ஆபிரிக்க நாடுகளில், இந்தியாவில், சீனாவில் ரசியாவில், மக்கள் பிடல் கஸ்ரோவைத் தமது கதானாயகன் என்கிறார்கள். உலகின் ஒவ்வோர் சந்துகளிலும் கஸ்ரோவிற்காகக் கண்ணீர்வடிப்பதை மறைக்கும் வியாபார ஊடகங்கள், மியாமியில் அமெரிக்க ஆதரவாளர்கள் குழு ஒன்று நடத்தும் கஸ்ரோவிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை மட்டும் பிரதானப்படுத்திக் காட்டுகின்றன.
இவை அனைத்தையும் மீறி, நிறம், இனம், மதம் கடந்து ஒடுக்கப்பட்ட மக்கள் பிடல் கஸ்ரோவிற்காகக் கண்ணீர் வடிக்கின்றனர்.
அமெரிக்க சர்வாதிகாரி டொனால் ரம்ப், கஸ்ரோவை சர்வாதிகாரி என அழைக்க, ஒபாமா, கியுப மக்கள் துயரடையத் தேவையில்லை, அமெரிக்கா நட்புப் பாராட்டும் என்கிறார். கியூபாவின் ஜனநாயகம் தொடர்பாக மூச்சுக்கூட விடாத பாராளுமன்றவாதிகள் சிலர் தவிர்க்க முடியாமல் கஸ்ரோவைப் பாராட்டுகின்றனர்.
கியூபாவில் சோசலிச அரசு நிறுவப்பட்ட பின்னர், அது கம்யூனிசத்தை நோக்கி வளர்ச்சியடையவில்லை. அது ஒரு வகையான தேக்க நிலையிலேயே இறுதிவரை காணப்பட்டது. பெருமளவில் மக்கள் பங்களிப்பற்ற, இறுக்கமான மக்கள் அமைப்புக்களை ஆதரமாகக் கொண்டிராத கியூப புரட்சி விசேடமான சூழ்நிலையில் நடத்தப்பட்டது. அது உலகில் புரட்சிகளுக்கான முன்னுதாரணம் அல்ல என்பது மட்டுமல்ல, புரட்சியின் வெற்றிக்குப் பினனர் மேலிருந்து தோற்றுவிக்கப்பட்ட சோசலிசக் கட்டுமானங்கள் முரண்பாடுகள் ஊடான பரிணாம வளர்ச்சியடையவில்லை.
கஸ்ரோ சர்வாதிகாரியா?
முதலாளித்துவ ஜனநாயகத்தில் பாராளுமன்ற ஆட்சி முறை, அதனைப் பாதுகாக்கும் அரச படைகள் போன்றவற்றின் தொகுதியான அரச இயந்திரத்தை உருவாக்கியது யார் என்ற கேள்விக்கு விடை கிடைத்தால், கியூபாவின் ஜனநாயகம் தெளிவாகிவிடும்.
மன்னராட்சியிலிருந்து பாராளுமன்ற ஜனநாயகம் தோன்றிய போது, அதனை உருவாக்கியது அதிகாரவர்க்கமே. முதலாளித்துவ அதிகாரவர்க்கமே அதனை வழி நடத்தியது. அந்த ஜனநாயகமே முசோலீனி, ஹிட்லர், ரம்ப். ராஜபக்ச போன்ற நூற்றுக்கணக்கான சர்வாதிகாரிகளை உருவாக்கக் காரணமாயிற்று.
பெரும் பணம் படைத்தவர்களே கட்சிகளை ஆரம்பிக்கவும் ஆட்சியைக் கைப்பற்றவும் இயலும் என்ற நிலை தோன்றியது. பல்தேசிய வர்த்தக நிறுவனங்களின் நிதி உதவியில் அவற்றின் நிர்வாகிகளாக ஆட்சியதிகாரத்தைக் கையகப்படுத்தும் கட்சிகள் மக்களுக்கு எதிரான சர்வாதிகார அமைப்புப் போன்றே செயற்பட்டன.
ஜனநாயகம் என்ற பெயரில் மக்கள் தெரிவு செய்வதற்கு இரண்டு அல்லது மூன்று கட்சிகள் மட்டுமே காணப்படும். அவற்றின் பின்னணியில் பல்தேசிய பெரு நிறுவனங்களே செயற்பட்டன.
ஆக, முதலாளித்துவ ஜனநாயகம் என்ற சர்வாதிகாரத்தை உருவாக்கிய முதலாளித்துவ அதிகார வர்க்கத்திற்கு எதிராக புதிய மக்கள் ஜனநாயகம் ஒன்றைத் தோற்றுவிப்பதற்கு புதிய மக்கள் சார்ந்த அதிகாரவர்க்கம் தேவை. அதுவே கம்யூனிஸ்ட் கட்சி என அழைக்கப்பட்டது. அக் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் வாக்குக் கேட்கும் கட்சியல்ல. ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவது அதன் நோக்கமல்ல.
மாறாக, முதலாளித்துவ அதிகாரவர்க்கம் தமது நிர்வாகிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பியது போன்று, ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்த ஜனநாயக அமைப்பையும் அதற்கான தேர்தல் அமைப்பையும் பாதுகாப்பதே கம்யூனிஸ்ட் கட்சியின் கடமை. கம்யூனிஸ்ட் கட்சிகள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான, நியாயமான தேர்தல் முறையைப் பாதுகப்பதற்கான முன்னணிப் படைகளே தவிர வேறொன்றுமில்லை.
அதனால் தான் சோசலிட நாடுகளில் தம்மை ஆள்பவர்களை மக்களே தேர்தல் ஊடாகத் தெரிவு செய்தார்கள். தமது பிரதிநிதிகள் தவறு செய்தால் மக்களுக்கு அவர்களைத் திருப்பியழைக்கும் உரிமையும் அதிகாரமும் கிடைத்தது. பல் தேசிய வியாபார உடகங்கள் இவ்வாறான தேர்தல் ஒன்று இருந்ததையே மக்கள் மத்தியிலிருந்து மறைத்து பொய்யான பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டன.
கியூபாவில் அவ்வாறான ஒரு கம்யூனிஸ்ட் கட்சி கீழிருந்து தோன்றவில்லை எனினும் அதனை கியூப கம்யூனிஸ்ட் கட்சி மேலிருந்து நடைமுறைப்படுத்த முனைந்தது. அதனால் பல்தேசிய வர்த்தகத்திற்குப் பதிலாக தேசியமயமான உள்ளூர் வர்த்தகம் அரச கட்டுப்ப்பாட்டில் முதலாளித்துவத்தின் கூறுகளைக் கொண்டிருந்தது. இருப்பினும் முதலாளித்துவ சர்வாதிகார அமைப்பைப்ப் போன்று ஜனநாயகம் என்பது பணம்படைத்த சிலருக்கான நிர்வாக அமைப்பாக இருக்கவில்லை. ஆக, கஸ்ரோ சர்வாதிகாரி அல்ல.
சே குவேராவின் எதிர்வுகூறல்
அவ்வேளையில் சோவியத் பொருளாதார அமைப்பை கியூபா முற்றாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தது. தேக்க நிலையிலிருந்த கம்யூனிசத்திற்கான வளர்ச்சிப் பாதையின் இடை நடுவே, உலகைன் பல்தேசிய மருத்துவ வியாபர நிறுவனங்களை எதிர்த்து உலகின் தலை சிறந்த மருத்துவத்தை கியூபா தனதாக்கிக்கொண்டது. அனைத்து மக்களுக்கும் உணவு, உடை, கல்வி, மருத்துவம் என்பன உத்தரவாதம் செய்யப்பட்டன. பெண்களுக்கு தொழில் சார் சம உரிமை வழங்கப்பட்டிருந்தது.
இந்த தசாப்ததின் ஆரம்பத்திலிருந்த கியூபா இன்றில்லை.
பிடல் கஸ்ரோவும் சே குவேராவும் வணக்கத்திற்குரிய புனிதமான தலைவர்கள் அல்ல…
எது எவ்வாறாயினும் பிடல் கஸ்ரோவும், சே குவேரவும் வணக்கத்திற்குரிய புனிதமான தலைவர்களாக ஒடுக்கப்படும் மக்களால் கருதப்படுவதில்லை. இன்றும், புரட்சிக்காரர்களாகவும் போராளிகளாகவுமே ஒடுக்கப்படும் மக்கள் கஸ்ரோவைக் கருதுகிறார்கள்.
ஒரு நாட்டின் அரசியலை வழி நடத்திய கஸ்ரோ மிக எளிமையான வாழ்க்கை நடத்தினார். தனது அலுவலகத்தில் வரிசையில் காத்து நின்றே தனது உணவைப் பெற்றுக்கொண்டார். சாமானிய மக்களின் வாழ்கையையே கடைப்பிடித்தார். கஸ்ரோ தலைவனாக வாழ விரும்பியதில்லை. போராளியாகவும் மக்களில் ஒருவராகவுமே வாழ விரும்பினார்.
சே குவேராவை கோழைத்தனமாகக் கொலைசெய்துவிட்டு மரணத்தைக்கூட மறைத்த உலகின் அதிகாரவர்க்கம் கஸ்ரோவின் மரணத்தில் மகிழ்ச்சியடைவது புதியதல்ல, ஏகாதிபத்திய எதிர்ப்பின் புதியக காலகட்டத்தின் குறியீடாக விளங்கிய கஸ்ரோவை வரலாறு விடுதலை செய்துவிட்டது.
அஞ்சலிகள்!