வணக்கம்.
லாக் டவுனில் இருக்கிறேன்.
இந்த இடைவெளி அல்லது இடைவேளை எத்தனை நாட்கள் தொடரும்?
எனக்குத் தெரியவில்லை.
இடைவெளியின் காலத்தைத் துல்லியமாக கணிப்பதைக் காட்டிலும், இந்த இடைவெளி நம் மீதும் சமூகத்தின் மீதும் ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்பது பற்றி கவலைப்படுவது பயனுள்ளதாக இருக்குமெனக் கருதுகிறேன்.
எனவேதான் வலைப்பூ என்ற இந்த முயற்சி. பயனுள்ளதெனக் கருதினால் பகிருங்கள். நன்றி.
https://idaiveli.wordpress.com/2020/04/12/corona-how-is-our-future/
மருதையன்.
இனி வரும் காலம்…..
ஏப்ரல் இறுதி வரை லாக் டவுனை நீட்டிப்பது என்று பல
லாக் டவுன் தளர்த்தப்படுவதையே கார்ப்பரேட் முதலாளிகள் பலர் விரும்புகிறார்கள். இதற்கு மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் தொழில்கள் திவாலாகிவிடும் என்றும் 22 வயது முதல் 39 வயது வரை உள்ளவர்களுக்கு நோய் தொற்றுவதற்கான வாய்ப்பு குறைவென்பதால் மக்கள் தொகையில் சுமார் 15 கோடி அளவில் உள்ள அவர்களை வேலைகளில் ஈடுபடுத்தலாம் என்று முதலாளிகள் சங்கமான பிக்கி கோரியிருக்கிறது.
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட இரண்டாவது நாளிலேயே பிரதமரின் தொகுதியான வாரணாசியில் குழுந்தைகள் பசிக்கு புல்லைத் தின்னும் வீடியோக்கள் வெளிவந்தன. அவர்கள் செங்கல் சூளையில் வேலை செய்யும் தலித் சமூகத்தினரின் குழந்தைகள்.
உயிருக்கும் வாழ்வாதாரத்துக்கும் (life and livelihood) தொடர்பு இருக்கிறது என்ற உண்மை, அதைப் பார்த்த பின்னரும் பிரதமருக்குப் புரியவில்லை. முதலாளி வர்க்த்தின் முறையீடு ஒலிக்கத் தொடங்கிய பின்னர்தான், “ஜான் பி ஜஹான் பி” என்று பஞ்ச் டயாலாக் மாறியிருக்கிறது. ஏப்ரல் மத்தியில் வட மாநிலங்களில் ரபி பருவ அறுவடைக்காலம் தொடங்குகிறது. எனவே, விவசாயிகளின் பெயரைச் சொல்லி பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்த்தப்படக் கூடும்.
இது உலகு தழுவிய பெருந்தொற்று (Pandemic). எனவே இது விசயத்தில், எல்லா அறிவிப்புகளும் இடைக்கால ஏற்பாடுகளாக மட்டுமே இருக்க முடியும்.
0000
உலகு தழுவிய பெரும் தோற்று நோய்களை பொருத்தவரை கடைசியாக உலகம் எதிர்கொண்ட பேரழிவு – ஸ்பானிஷ் ப்ளூ. 1918 மார்ச் முதல் 1920 வரை அந்த நோயின் தாக்கம் உலகெங்கும் வெவ்வேறு அளவுகளில் நீடித்திருக்கிறது.
1918 ஆம் ஆண்டு மே மாத இறுதியில் முதல் உலகப்போரில் ஈடுபடுத்தப்பட்ட பிரிட்டிஷ் ராணுவத்தின் இந்திய சிப்பாய்கள் மும்பை துறைமுகத்தில் வந்து இறங்கினார்கள். அவர்களில் 7 பேர் வழியாகத்தான் இந்தக் காய்ச்சல் இந்தியாவுக்குள் வந்தது. அதன் பின்னர் ரயில் போக்குவரத்தின் வழியாக இந்தியா முழுதும் இந்த வைரஸ் பரவியது.
மூன்று அலைகளாக உலகம் முழுதும் இந்த காய்ச்சல் பரவியது. முதல் அலை 1918 ஜூலை வரை நீடித்தது. இரண்டாவது அலை ஆகஸ்டில் தொடங்கி 1918 இறுதி வரை நீடித்தது. முடிந்தது என்று கருதி கட்டுப்பாடுகளை பல நாடுகள் தளர்த்திய நிலையில், மூன்றாவது அலை 1919 சனவரியில் ஆஸ்திரேலியாவில் தொடங்கி அமெரிக்கா பிரான்சு, ஜப்பான் எனப் பரவியது. 1920 மார்ச் வரை இது நீடித்தது என்று மதிப்பிடுகிறார்கள்.
இந்த இரண்டாவது, மூன்றாவது அலைகளில்தான் பெருந்தொகையான மக்கள் இறந்தனர். இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்களில் காந்தியும் ஒருவர் இரண்டாவது அலையில் நோய்த் தொற்று ஏற்பட்ட ஆயிரம் பேரில் 4.7 பேர் பிரிட்டனில் இறந்தனர். அதே நேரத்தில் இந்தியாவைப் பொருத்தவரை நோய்த் தொற்று ஏற்பட்ட ஆயிரம் பேரில் 20 பேர் இறந்திருக்கின்றனர்.
இந்தியாவின் மரண விகிதம் மிக அதிகமாக இருந்ததற்கு முக்கியமான காரணங்கள் இரண்டு. அன்று மருத்துவ வசதிகள் அனேகமாக இல்லாமல் இருந்தன. இந்தியாவில் இருந்த மருத்துவர்களையும் போர்முனைக்கு அனுப்பிவிட்டது பிரிட்டிஷ் அரசு.
1918 இந்தியாவைத் தாக்கிய மாபெரும் பஞ்சம் இதனுடன் சேர்ந்து கொண்டது
உணவுப் பஞ்சத்தின் விளைவாக நோய் எதிர்ப்பு ஆற்றல் இழந்த மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்தனர். பஞ்சம் தலைவிரித்தாடிய நிலையிலும் தானியங்கள் அனைத்தையும் போர்முனைக்கு அனுப்பி மக்களைப் பட்டினியில் தள்ளியது பிரிட்டிஷ் அரசு.
“அன்றைய நிலையை காட்டிலும் இன்று மருத்துவம் மேம்பட்டிருக்கிறது உணவு உற்பத்திக்கும் குறைவில்லை. ஆனால் வர்க்க ஏற்றத்தாழ்வுகள் ஆழமாகி இருக்கின்றன. சமூக இடைவெளியை பராமரித்தல், ஊரடங்கை கடைப்பிடித்தல், தரமான மருத்துவம் ஆகிய அனைத்துமே வசதிபடைத்தவர்களுக்கு எளிதில் கிடைத்துவிடும். சாதாரண இந்திய மக்களைப் பொறுத்தவரை இவை இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளன.
அன்றைக்கு இருந்தது காலனி அரசாங்கம். இன்று இருப்பது ஜனநாயக பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் . இந்த வேறுபாடு நடை முறையில் என்ன மாற்றத்தைக் காட்டப் போகிறது என்பதைக் காலம் தான் கூற வேண்டும்” என்று எகனாமிக் டைம்ஸ் நாளேட்டில் எழுதியிருக்கிறார் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் அமித் கபூர்.
“காலம்” என்பது இதையெல்லாம் கண் முன்னால் பார்த்துக் கொண்டிருக்கும் நாம்தான்.
கடந்த மார்ச் 14ஆம் தேதியன்று கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான தேசிய அவசர நிலையை அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரகடனம் செய்தார். அதே நாளில் அமெரிக்க பெடரல் அரசின் சார்பில், இந்த நோய்த்தொற்றை சமாளிப்பதற்கான 100 பக்கத் திட்டம் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது பொதுமக்களின் பார்வைக்கு அல்ல என்ற தலைப்பிட்டு எழுதப்பட்டிருக்கும் அந்த அறிக்கையின் படி இயல்புநிலை திரும்புவதற்கு குறைந்தபட்சம் 18 மாதம் பிடிக்கும் என்று குறிப்பிடுகிறது. https://www.nytimes.com/2020/03/17/us/politics/trump-coronavirus-plan.html
ஏப்ரல் 14 அன்று ஊரடங்கு விலக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் எந்தெந்த அளவில் கடைப்பிடிக்கப்பட்டால், எத்தனை லட்சம் பேருக்கு நோய் பரவுவதற்கான சாத்தியம் இருக்கிறது என்று கேரளா மாநில அரசின் பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஏப்ரல்10 ஆங்கில இந்து நாளேட்டில் வெளியாகியிருக்கிறது. https://www.thehindu.com/news/national/kerala/coronavirus-3-pronged-steps-post-lockdown/article31303428.ece
இந்தியாவிலேயே இந்த நோயை கட்டுப்படுத்துவதில் முன் மாதிரியாக செயல்பட்டுள்ள மாநிலம் என்ற வகையில் கேரள மாநிலத்தில் இந்த அறிக்கையை நாம் கவனத்துடன் பரிசீலிக்கலாம். எல்லாவிதமான கட்டுப்பாடுகளும் மிதமான அளவில் கடைப்பிடிக்கப் பட்டால் ஏப்ரல் 2021 இல்தான் இப்பிரச்சனையிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு “இயல்பு நிலைக்கு” திரும்ப இயலும் என்று கணிக்கிறது அந்த அறிக்கை.
ஸ்பானிஷ் ஃபுளூவுக்குப் பிந்தைய ஒரு நூற்றாண்டில், உலக முதலாளித்துவம் இயற்கையை அழிக்கும் வேகமும், நாடு கடந்து செல்வோரின் வேகமும் அதிகரித்திருப்பதால், புதிய நோய்கள் உருவாகும் வேகமும், தொற்றுப் பரவலின் வேகமும் அதிகரித்திருக்கிறது. அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக மருத்துவத்துறை ஆய்வின் வேகமும் அதிகரித்திருக்கிறது. தகவல் பரிமாற்றத்தின் மீது ஏகாதிபத்திய வல்லரசுகள் செலுத்தும் நேரடி, மறைமுக செல்வாக்கின் காரணமாக, பொய்களையும் வதந்திகளையும் பரப்பும் வேகமும் அதிகரித்திருக்கிறது.
எனவே, நமது கணிப்புகள் இந்த வரம்புகளுக்கு உட்பட்டவையாகவே இருக்க முடியும்.
000
ஸ்பானிஷ் ஃபுளூவுக்கு அந்தப் பெயர் வரக் காரணம் என்ன என்பது குறித்து ஒரு செய்தி உண்டு. அந்த காய்ச்சல் ஸ்பெயினில் தோன்றவில்லை. முதல் உலகப்போரில் ஈடுபட்டிருந்த நாடுகளில், குறிப்பாக இராணுவத்தினர் மத்தியில் இந்தக் கொள்ளை நோய் பரவி லட்சக்கணக்கானவர்களை பலி கொண்டிருந்தது. இருப்பினும் உண்மையை வெளியிட்டால், சிப்பாய்களின் கலகத்துக்கும், புரட்சிக்கும் அது வழி வகுத்துவிடும் என்பதால் “தேச நலனை முன்னிட்டு” அன்றைய ஏகாதிபத்திய அரசுகள் உண்மையை இருட்டடிப்பு செய்தன.
ஸ்பெயின் அரசு அந்தப் போரில் ஈடுபடவில்லையாதலால் தங்கள் நாட்டில் பரவிவரும் விநோத காய்ச்சல் பற்றிய செய்தியை அந்நாட்டு பத்திரிகைகள் வெளியிட்டன. எனவே அது “ஸ்பானிஷ் ஃபுளூ” வாகிவிட்டது. அன்று உலகமுழுவதும் இந்த நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 4 முதல் 5 கோடி. அதில் இந்தியாவில் மட்டும் 1.7 கோடி. மரண விகிதத்தின் அடிப்படையில் அந்த நோய்க்கு பெயரிடுவதாக இருந்தால், அதனை இந்தியன் ஃபுளூ என்றுதான் அழைத்திருக்க வேண்டும்.
“தேச நலனை முன்னிட்டு” செய்யப்படும் இருட்டடிப்புகள் தொடரத்தான் செய்கின்றன.
இன்றைக்கும் கூட இந்த விநோதக் காய்ச்சல் பற்றி டிசம்பர் 30 அன்றே அபாயச் சங்கு ஊதிய லி வென் லியாங் என்ற கண் மருத்துவரை சீன அரசு ஒடுக்கத்தான் செய்தது. பிப்ரவரி 7 அன்று கொரோனாவுக்கு அவரே பலியானார்.
அமெரிக்காவில் டிரம்பின் வர்த்தகத்துறை ஆலோசகர் பீட்டர் நெவாரோ ஜனவரி 29 அன்றே இந்தக் கொள்ளைநோய் 5 லட்சம் அமெரிக்கர்களை காவு கொள்ளும் என்று டிரம்பை எச்சரித்திருக்கிறார். ஜனவரி 30 அன்று சுகாதாரத்துறை செயலர் அலெக்ஸ் எம் அசார் எச்சரித்திருக்கிறார். தேவையில்லாமல் பீதியைக் கிளப்புவதாக டிரம்ப் அவரை எள்ளி நகையாடியிருக்கிறார். இவையனைத்தையும் ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கிறது நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2020/04/11/us/politics/coronavirus-trump-response.html
மருத்துவமனையின் வாசலில் பல்லாயிரக்கணக்கில் நோயாளிகள் கூடவில்லை. இந்த நோயினால் ஆங்காங்கே மக்கள் இறப்பதாகவும் சமூக ஊடகங்களில் செய்தி வரவில்லை. இந்த அடிப்படையில் நோய் பரவல் இல்லை என்று நாம் ஆறுதல் கொள்ளலாம். ஏதோ சில காரணங்களினால் ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் போல இங்கே பாதிப்பு ஏற்படாமல் இருந்தால் நிம்மதி தான். இல்லையேல் வரவிருக்கும் நிலைமையை எண்ணிப் பார்க்கவே நடுக்கமாக இருக்கிறது.
இயல்பு நிலை திரும்ப ஓராண்டுக்கு மேல் ஆகும் என்று கூறுகின்ற கணிப்புகள் எல்லாம் மிகைப்படுத்தப்பட்ட பீதியூட்டும் நடவடிக்கைகள் என்று சிலர் கருதிக்கொள்ளலாம்.
எனவேதான், இடைவெளியின் காலத்தைத் துல்லியமாக கணிப்பதைக் காட்டிலும், இந்த இடைவெளி நம் மீதும் சமூகத்தின் மீதும் ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்று பரிசீலிப்பது பயனுள்ளதாக இருக்கும். வருங்காலத்தில், பல அரசியல், சமூக விவகாரங்களை பரிசீலிப்பதற்கு கொ.மு – கொ.பி என்ற புதியதொரு அளவுகோல் வந்தே தீரும்.
முதலாளித்துவ சமூக அமைப்பும், அரசுகளும் நமது சிந்தனையிலும் செயல்பாட்டிலும் உருவாக்கி வைத்திருக்கின்ற வரம்புகளைத் தாண்டி சிந்திப்பதற்கான சூழலை, இந்த பெருந்தொற்று நோய் ஏற்படுத்தியிருக்கிறது.
சமூக ரீதியான பிரச்சனைகளான பொதுச் சுகாதாரம், ஆரோக்கியம் போன்றவற்றுக்கு தனிநபர் சார்ந்த தீர்வுகளை முன்தள்ளி வந்த மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள், மருத்துவமனைகளை தற்காலிகமாகவேனும் தேசிய மயமாக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கின்றனர்.
“பக்கத்து வீட்டுக்காரன் செத்தாலும், சக தொழிலாளி வேலைநீக்கம் செய்யப்பட்டாலும் அது அவன் பாடு, நீ கவலைப்படாதே” என்று உபதேசித்து வந்த முதலாளித்துவம், “ஆப்பிரிக்காவில் யாரேனும் தும்மினால் அமெரிக்கா கவலைப்படவேண்டும் என்ற அறவுணர்ச்சியை” திடீரென்று கண்டுபிடித்திருக்கிறது.
அறிவுச்சொத்துடைமையைக் காட்டி பல உயிர் காக்கும் மருந்துகளின் உற்பத்தியை தடுத்து வந்த அமெரிக்க வல்லரசு ஒரு மாத்திரைக்காக இந்தியாவை சார்ந்து நிற்கிறது.
உருவாகி வரும் புதிய அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளைப் புரிந்து கொள்வதும், அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளைக் கண்டு பிடிப்பதும், செயல்படுத்துவதும், கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதை விடக் கடினமான முயற்சிகள்.
முயற்சிப்போம்…