ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் வரலாறுகளும் ஆய்வுகளும் நேரியமுறையில் எழுதப்படுவது மிகக் குறைவு
சமீபத்தில், மு.நித்தியானந்தன் அவர்களின் “கூலித்தமிழ்” நூலை படித்தபோது, இந்த எண்ணமே எழுந்தது.
மலையக மக்களின் துயரங்களுக்கு ஆங்கிலத்துரைமார்களே காரணம் என நிறுவ முற்படுவதன் மூலம், இன்னொரு அதிகார சுரண்டல் வர்க்கத்தை காப்பாற்றும் முயற்சியும், அவர்களுக்கு முற்போக்கு முலாம் பூசும் “ஒரு தந்திரோபாய புத்திஜீவித் தனத்தையும்” இந் நூல் செய்கின்றது.
மலைய தோட்டத் தொழிலாளர்கள் பிரிட்டீஸ் ஆங்கில காலனித்துவ வாதிகளால் துயர் உற்றதைவிட , தமிழ் பெருந்தோட்ட முதலாளிமார்களாலும், இவர்களின் அடியாட்களாலும், கொடுமைப்படுத்தப்பட்டதும், சுரண்டப்பட்டதுமே பெரும் வரலாறு.
ஆங்கிலப் பெரும் முதலாளிகளால் மலையக மக்கள் வர்க்க ரீதியாக சுரண்டப்பட, நமது தமிழ் பெரும் முதலாளிகள் இம் மக்களை வர்க்க ரீதியாகவும், சாதிய ரீதியாகவும் கொடுமைப்படுத்தி சுரண்டினார்கள்.
இவ்வாறான தமிழ் பெரும்தோட்ட முதலாளிமார்களின் அனைத்து ஒடுக்குமுறைகளையும் இந் நூல் மூடிமறைத்துவிடுகின்றது.
மலையக மக்களின், ஒடுக்குமுறைகளின் கொடூர சக்தியாக விளங்கிய பெருந்தோட்ட முதலாளிகளான தமிழக செட்டிமாரின் அனைத்து செயல்களும் இந் நூலில் இருட்டடைப்பு செய்யப்படுகின்றது.
இவ் ஒடுக்குமுறை வர்க்கங்களின் சாதியங்களின் பிரதிநிதியான மு.நித்தியானந்தன் போன்றவர்களின் “ஆய்வுகள் ” இவ்வாறாகத்தான் அமைய முடியும்.
இந் நூலைப் படித்தபோது, பி.ஏ.காதர் எழுதிய ‘இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைகள்’ என்னும் மலையகம் பற்றிய ஆய்வு நூல் ஞாபகம் வந்தது.
ஆய்வுத்திறனும், நேரிய பார்வையும்கொண்ட ‘இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைகள்’ என்ற இந்த நூல் மீள் பிரசுரம் செய்யப்படவேண்டிய இன்றைய காலத்தின் அவசியம் என கருதுகிறேன்.
“கூலித்தமிழ்” நூல் படிக்கப்படவேண்டியது முக்கியம்.
படிப்பதன் ஊடாகவே, இந் நூலினுள் புதைந்திருக்கும் சாதிய – வர்க்க அதிகார மனோபாவத்தை அதன் அரசியலை நாம் புரிந்துகொள்ள முடியும்.இந் நூலை க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
குறிப்பு: மேற்கண்ட விமர்சனம் அனைத்தும் ,பாரீசில் நடைபெற்ற கூலித்தமிழ் வெளியீட்டு நிகழ்வில் மு.நித்தியானந்தன் அவர்களிடம், என்னால் முன்வைப்பட்டவை.’தரவுகள் தமக்கு கிடைக்கவில்லை’ என்பதே நித்தியானந்தம் அவர்களின் பதிலாக அமைந்தது.