Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் எதிர்காலம் : தோழர் தம்பையாவுடன் நேர்காணல்

07 newகூட்டு ஒப்பந்த பேச்சு என்பது தொழிலாளர்களின் போராட்டமாகும் ஓப்பீட்டு ரீதியில் கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களின் உரிமைகளை உறுதி செய்ய ஏற்றது. மாதச் சம்பளத்தைக்கூட கூட்டு ஒப்பந்தம் மூலம் சாத்தியப்படுடையது. எனினும் இன்றைய சூழலில் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து பொது இணக்கப்பாட்டுடன் சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைக்க வேண்டும். அதுவே தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக்கூடியது என மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா ‘இனியொரு’வுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டார். பெருந்தோட்டத் துறை தொழிலாளர்களின் சம்பளம் உட்பட ஏனைய பிரச்சினைகள் மற்றும் பெருந்தோடத் தொழிற்துறை தொடர்பில் அவர் வழங்கிய நேர்காணலை காண்க.

கேள்வி: பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தம் மார்ச் 31 ஆம் திகதியுடன் காலாவதியாகின்ற நிலையில் அது தொடர்பாக மீண்டும் பரவலாக பேசப்படுகிறது. கூட்டு ஒப்பந்தம் பற்றி உங்கள் சங்கத்தின் நிலைப்பாடு என்ன?

பதில்: உண்மையில் மார்ச் 31 ஆம் திகதியுடன் காலாவதியாவது 2013 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட சம்பள உடன்பாடாகும். 2003ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தின் பிரிவு 06ற்கு அமைய 02 வருடங்களுக்கு ஒரு முறை செய்யப்படும் ஒரு திருத்தமாகவே தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையிலான சம்பள இணக்கப்பாடு காணப்படுகிறது. கூட்டு ஒப்பந்தம் என்பது தொழிலாளர்களின் போராட்டத்தின் விளைவாக தொழிலாளர்களுக்கு தொழில் வழங்குனர்களுடன் பேரம் பேசுவதற்கு கிடைத்துள்ள சட்டரீதியான ஏற்பாடாகும். இலங்கையில் தொழில் பிணக்கு சட்டத்தில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொழிலாளர்களை தொழிற்சங்கங்கள் நேர்மையாக பிரதிநிதித்துவப்படுத்தி பேரம் பேசுமாயின் கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்கள் உரிமைகளை சிறப்பாக உறுதி செய்ய முடியும். எனினும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தமானது ஏனைய துறைகளில் செய்யப்படும் கூட்டு ஒப்பந்தங்கள் போன்று தொழிலாளர்களுக்கு உரிமைகளை சலுகைகளை முறையாக வழங்கவில்லை என்பதே உண்மை.

கேள்வி: ஏன் அவ்வாறு கூறுகின்றீர்கள்?

பதில்: பொதுவாக கூட்டு ஒப்பந்தங்கள் நியதிச் சட்டங்களை அதாவது பொதுவான தொழிற்சட்டங்களை மீறி அமையக்கூடாது. ஆனால் பெருந்தோட்ட கூட்டு ஒப்பந்த ஏற்பாடுகள் நியதிச்சட்டங்களை அப்பட்டமாக மீறியுள்ளன. ஊ.சே.நி மற்றும் ஊ.ந.நி (நுPகுஃநுவுகு) ஆகியவற்றுக்கு மொத்த சம்பளத்தில் அறிவிடப்பட வேண்டும் என சட்டங்களில் குறிப்பிட்டுள்ள போதும் கூட்டு ஒப்பந்ததில் அடிப்படைச் சம்பளத்திலேயே அறிவிடப்படும் என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஞாயிறு, பௌர்ணமி மற்றும் நியதிச்சட்ட விடுமுறை தினங்களில் வேலை செய்து பெறும் சம்பளத்தில் ஊ.சே.நி மற்றும் ஊ.ந.நி ஆகியன வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் இல்லை.

சட்டத்தின் பிரகாரம் ஒரு வாரத்திற்கு 1-1ஃ2 நாள் நியதிச்சட்ட விடுமுறை இருக்கின்ற போதும் வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே (ஞாயிறு மட்டுமே) விடுமுறையாக வழங்கப்படுகின்றது. நிதிச்சட்ட விடுமுறை நாட்களில் தொழிலாளர்கள் வேலை செய்யும் போது 1-1ஃ2 நாள் சம்பளம் வழங்கப்படுவதாக கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள போதும் வருகை ஊக்குவிப்புக் கொடுப்பனவு சேர்க்கப்படாது அந்த 1 ½ நாள் சம்பளம் கணக்கிடப்படுகிறது. இவைகள் கூட்டு ஒப்பந்தத்தின் சட்ட ரீதியான தன்மையைக் கேள்விக்கு உட்படுத்தும் அம்சங்களாகும்.

இதற்கு மேலாக கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள தொழில் நியதிகள் பெருந்தோட்ட தொழிலாளர்களின் தொழில் உரிமைக்கும் அவர்களின் நலன்களுக்கும் குறிப்பாக பெருந்தோட்ட தொழிற்துறைக்கும் சார்பாக இல்லை. அத்தோடு தோட்ட முகாமையாளர்கள் இருக்கின்ற கூட்டு ஒப்பந்த ஏற்பாடுகளை பின்பற்றப்படுவதில்லை. இவை பெருந்தோட்டத் தொழிற்துறையை அழிவிற்கே இட்டுச் செல்கின்றன.

கேள்வி: தொழில் நியதிகள் எவ்வாறு பெருந்தோட்டத்தை அழிக்கிறது என்று கூறுகின்றீர்கள்?

பதில்: ஒரு தொழிற்துறையில் தொழிலாளர்களே உற்பத்தியில் ஈடுபடும் பிரதானமான பிரிவினர். அவர்களுக்கான நியாயமான சம்பளம், வேலை நியதிகள் இருக்கும் போதே எந்த தொழிற்துறையும் நிலைத்து நின்று முன்னேறும். பெருந்தோட்டத் துறையில் இதற்கு எதிர்மாறாகவே நடக்கின்றது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தாம் ஒரு மாதத்தில் பெறப்போகும் சம்பளம் என்ன என்பதை கணக்கிட முடியாத அளவு சிக்கலான முறையில் நாளுக்கான சம்பளம் தீர்மானிக்கப்படுகிறது. தற்போது நாட் சம்பளமாக ரூ 620 வழங்கப்படுவதாக கூறப்பட்டாலும் உண்மையில் நாட்சம்பளம் வெறும் ரூ 450 மட்டுமே.

வழங்கப்படும் வேலை நாட்களில் 75 வீதம் அல்லது அதற்கு மேல் வேலை செய்யும் போது அந்த ரூபா 450வுடன் ஒரு நாளைக்கு ரூபா 140 சேரும். அதவாது தோட்டத்தில் 25 நாள் வேலை வழங்கி இருந்தால் 18 நாட்கள் வேலை செய்ய வேண்டும். 75 வீத வரவு கோரும் செயற்பாடானது தொழிலாளர்கள் ஏனைய தொழிலை நோக்கி தள்ளும் விடயமாக உள்ளது. கூட்டு ஒப்பந்தத்தில் ஆண்டு ஒன்றுக்கு 300 நாட்கள் வேலையையும் மாதம் ஒன்றுக்கு 25 நாட்கள் வேலை வழங்க கம்பனிகள் உடன்பட்ட போதும் நடைமுறையில் பல தோட்டங்கள் அவ்வாறு வழங்கப்படுவதில்லை.

மேலும் சமயா சமய ஊழியர்களுக்கான சம்பள ஏற்பாடு என்ன என்பது கூட்டு ஒப்பந்தத்தில் இல்லை. அவர்கள் எவ்வளவு காலத்தின் பின்னர் நிரந்தர தொழிலாளர்களாக சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதும் இல்லை. இக்காரணிகளினால் பழைய தொழிலாளர்கள் தோட்டத் தொழில் இருந்து விலகும் அதேவேளை புதிய தொழிலாளர்கள் சேர்வதும் இல்லாமல் போயுள்ளது. இதனாலேயே தோட்டத் தொழிற்துறை அழிவடைகிறது என்று கூறுகின்றோம்.

கேள்வி: மாதச் சம்பளம் இப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்றாலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் சாத்தியம் இல்லை என்று சொல்லப்படுகிறதே…

பதில்: பெருந்தோட்டத்திலேயே உள்ள முகாமையாளருக்கும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கம் மாதச் சம்பளம் வழங்கப்படுகிறதே. அவர்களும் பெருந்தோட்டத் துறையில்தானே இருக்கின்றார்கள். உற்பத்திக்கான உதவிப் பணியை செய்கின்ற பணியாளர்களுக்கு மாதச் சம்பளம் வழங்கப்படும் போது உற்பத்தியில் நேரடியாக ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் ஏன் சாத்தியமில்லை! பெருந்தோட்டத் துறையில் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு மட்டுமே மாதச் சம்பளம் மறுக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை. பெருந்தோட்டத்தில் தொழிலாளர்கள் தொடர்ந்து நாட் கூழிகளாக இருக்க விரும்பவில்லை.

எனவே மாதச் சம்பளத்தை மறுக்கின்ற செயற்பாடுகளும் பெருந்தோட்டத் தொழிற் துறையை அழிக்கும் செயற்பாடாகும். அத்தோடு தோட்டத் தொழிலாளர்களை நாட்கூலிகளாக, அதாவது நவீன அடிமைகளாக தொடர்ந்து வைத்திருக்கும் செயற்பாடாகும்.

கேள்வி: சந்தையில் தேயிலை இறப்பர் விலை நிரந்தரமற்று மாறக்கூடியதாக இடம்பெறுவதனால் மாத சம்பளம் பொறுவதற்கான சாத்தியம் இல்லை அல்லவா?

பதில்: மாதச் சம்பள சூத்திரத்தில் அடிப்படைச் சம்பளம், ஏனைய கொடுப்பனவுகளில் விலை ஏற்ற இறக்கங்களின் போது மாறும் விதத்தில் ஏற்பாடுகளை செய்ய முடியும். தோட்ட முகாமையாளருக்கு நிலையான மாத சம்பளத்திற்கு மேலதிகமாக உற்பத்தி இலாபத்திற்கு ஏற்ப கொடுப்பனவுகள் தீர்மானிக்கப்படுகின்றதல்லவா. அது போன்ற ஏற்பாடுகளை செய்யலாம்.

கேள்வி: கூட்டு ஒப்பந்தம் மூலம் மாதச் சம்பளம் சாத்தியப்படுமா?

பதில்: நிச்சயம் சாத்தியப்படுடையது. இலங்கையில் ஏனைய துறைகளுக்கான கூட்டு ஒப்பந்தங்களில் மாதச் சம்பளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பெருந்தோட்ட பணியாளர்களுக்கும் (ளவயகக) கூட்டு ஒப்பந்தம் மூலம் மாதச் சம்பளம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தி கூட்டு ஒப்பந்த்தில் கைச்சாத்திடுபவர்கள் இதனை செய்வார்களா என்ற கேள்வியே இருக்கிறது.

கேள்வி: தேயிலை இறப்பர் விலை வீழ்ச்சியினால் இம்முறை சம்பள அதிகரிப்பை வழங்ககூடிய நிலையில் பெருந்தோட்டக் கம்பனிகள் இல்லை என்று சொல்லப்படுகிறதே. இதில் உண்மையுள்ளதா?

பதில்: இது வழமையாக சொல்லப்படும் கதை. சம்பள உடன்பாடு காலாவாதியாகும் போது சிறிய விலை வீழ்ச்சி ஏற்பட்டாலும் பெருந்தோட்டக் கம்பனிகள் இந்த கருத்தை ஊடகங்கள் ஊடாக பரப்ப ஆரம்பித்துவிடும். இறப்பர் விலை கடந்த காலங்களில் பாரிய அளவில் அதிகரித்து தற்போது சிறிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. தேயிலை விலையில் இந்த வருடத்தில் ஆரம்பத்தில் சற்று சரிவு காணப்படுகிறது. இது தற்காலிகமான ஒன்றே. தேயிலை, இறப்பர் விலை அதிகமாக காணப்பட்ட போது தொழிலாளர்களுக்கு அதற்கேற்ப கொடுப்பனவுகளை கம்பனிகள் அதிகரிக்கவில்லை. எனவே விலை சற்று குறைந்தமையினால் சம்பளம் அதிகரிக்க முடியாது என்பது நியாயமற்ற வாதம்.

விலை குறைவடைந்துவிட்டது என்ற காரணத்திற்காக முகாமையாளர்களின் சம்பளம் குறைக்கப்படுகிறதா. வேறு எந்த துறையிலாவது உற்பத்தி செய்யும் பொருட்களின் விலை வீழ்ச்சியடைவதால் தொழிலாளர்களின் சம்பளம் குறைக்கப்படுகிறதா.

கேள்வி: உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதுடன் உற்பத்திதிறன் பெருந்தோட்டங்களில் குறைந்துள்ளதாக கூறப்படுகிறதே.

பதில்: இன்று எல்லா துறைகளிலும் உற்பத்தி செலவு அதிகரித்துதான் செல்கிறது. அதேநேரம் அதைவிட அதிகமாக உற்பத்தி அதிகரிக்கப்படுகிறது. பெருந்தோட்டங்களைப் பொறுத்தவரை உற்பத்தி திறனை அதிகரிக்கும் செயற்பாடுகளில் தோட்டக் கம்பனிகள் ஈடுபடுவதில்லை. தேயிலை முறையாக பராமரிப்பு செய்தல் மீள் நடுகை, புதிய நடுகை என்பன மிகவும் குறைவாகவே இடம்பெறுகின்றன. புதிய தொழில் நுட்பங்கள பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிக்க எந்த முயற்சியையும் அவர்கள் செய்யவில்லை.இந்நிலையில் தோட்டங்களில் உற்பத்திறனை அதிரிக்கும் என்று எதிர்ப்பார்க்க முடியாது. எனினும் தொழிலாளர்கள் அதிகளவு உழைப்பை தொடர்ந்து வழங்கியே வருகின்றனர். தோட்டங்களில் தொழிலாளர்கள் கணிசமாக குறைவடைந்துள்ள போதும் தோட்டங்களில் வழமைப்பேல தேயிலை இறப்பர் உற்பத்தி நடந்து வருகிறமை இதற்கு சான்று. கம்பனிகளின் நிர்வாத்தின் வினைத்திறன் இன்மையே உற்பத்தி திறன் வீழ்ச்சிக்கு காரணம். குத்தகை காலத்தில் தோட்டத்தில் உள்ள மரங்கிளை வெட்டி விற்றேனும் இலாபத்தை பெற நினைக்கின்றார்களே ஒழிய உற்பத்தியை அதிரிப்பதற்கான முயற்சிகள் எதுவும் இடம்பெறுவதில்லை. எனவே உற்பத்தி திறன் குறைவடைந்துள்ளது அதற்கு தொழிலாளர்கள் காரணம் என்று கூறுவது அடிப்படையற்றது.

கேள்வி: தோட்டங்கள் நடத்தில் இயங்குவதாக கூறப்படுகிறதே அதில் உண்மையுண்டா?

பதில்: கம்பனிகள் தொடந்தும் இலாபத்திலேயே இயங்கி வருகின்றன. கடந்த இரு வருடங்களை மட்டும் அடிப்படையாக கொண்டு கூறுவதாயின் 20 பெருந்தோட்டக் கம்பனிகளில் 02 கம்பனிகளை தவிர ஏனைய அனைத்து கம்பனிகளும் பல பத்தாயிரம் மில்லியன் இலாபத்தை உழைத்துள்ளன. இவைகள் மொத்தமாக பல பில்லியன்களை இலாபமாக பெற்றுள்ளன. நட்டமடைந்துள்ளதாக காட்டியுள்ள கம்பனிகள் நட்டத்துடன் தொடந்தும் எவ்வாறு, ஏன் தோட்டத்தை நடத்திச் செல்கின்றன என்ற கேள்வி எழுகிறது. சென்ற முறை சம்பள உடன்பாடு எட்டிய போது இரு கம்பனிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். அவை இரண்டும் இலாபமடையும் கம்பனிகள். எனினும் நட்டமடைந்து கம்பனிகள் சம்பள உயர்விற்கு எதிர்ப்புக் காட்டவில்லை. எனவே கம்பனிகள் உண்மையான இலாபத்தை தமது ஆண்டறிக்கைகளில் வெளியிடுகின்றார்களா என்ற கேள்வியும் எழுகிறது. கம்பனிகள் நடத்தில் இயங்குகின்றன என எவராவது கூறுவார்களாயின் அது பொய்யான கதை என்பதை எந்த இடத்திலும் ஆதாரத்துடன் நிரூபிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

கேள்வி: ஆயிரம் ரூபா நாட் சம்பளமாக பெற்றுக் கொடுக்க பேச்சுவாத்தை நடத்துவதாக இ.தொ.கா. கூறியுள்ளதே அதை பற்றி…

பதில்: என்றிமில்லாதவாறு இ.தொ.கா. இவ்வளவு சம்பளத்தை கேட்கப்போகின்றோம் என மக்களுக்கு கூறியுள்ளது. இது அவர்களின் கொள்கைப்படி, அவர்கள் ஆளுங்கட்சியில் இல்லாமல் எதிர்க்கட்சியில் இருப்பதால் மக்களுக்கு கிடைத்த ஒரு சிறு வெற்றி எனலாம். அடிப்படைச் சம்பளம் எவ்வளவு என்று குறிப்பிடவில்லை. எவ்வாறாயினும் ஆயிரம் நாட்சம்பளத்தைப் பெற கூட்டு ஒப்பந்தத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் எவ்வாறு பேரப்பேச்சில் ஈடுபடப் போகிறது மக்களை எவ்வாறு அணித்திரட்டப் போகின்றன என்பதே கேள்விக்குரிய விடயம். பேரப்பேச்சுகள் எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இது எதிர்வரும் தேர்தலை அமைப்படுத்திய வெற்று வார்த்தைகளாக இருக்க கூடாது என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பாகும்.

கேள்வி: தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பள உயர்வு சாத்தியப்படுத்த என்ன செய்யப்பட வேண்டும் என்று கருதுகின்றீர்கள்?

பதில்: கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் தொழிற்சங்கங்கள் ஏனைய தொழிற்சங்கங்களுடனும் சம்பள உயர்வு தொடர்பில் பேசி ஒருமித்த கருத்துடன் முழுத் தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்தி பேரப்பேச்சை மேற்கொண்டால் நியாயமான சம்பளத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். அத்தோடு மாதச் சம்பளத்தை உறுதி செய்து பெருந்தோட்டத் தொழிலாளர்களையும் தொழிற் துறையையும் பாதுகாக்க முடியும். கூட்டு ஒப்பந்தம் பேரப்பேச்சு என்பது தொழிலாளர்களுக்காக தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டமாகும். அதனை மனதில் வைத்து தொழிற்சங்கங்கள் செயற்பட்டால் நியாயமான சம்பள உயர்வு சாத்தியமே.

Exit mobile version