அமெரிக்காவில் ஆரம்பித்து ஐரோப்பிய நாடுகள் வரை 1.4 மில்லியன் மக்களை இதுவரைக்கும் கொரோனா பலி கொண்டுள்ளது. அவசர அவசரமாக பாவனைக்கு வரவுள்ளதாகக் கூறப்படும் கொரோனா தடுப்பு மருந்து ஜேர்மனி மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் கூட்டாகத் தயாரித்துள்ளன. மருந்தை முதலில் முன்மொழிந்ததும் கண்டுபிடித்ததும் BIONTECH என்ற ஜேர்மனிய நிறுவனமானாலும், Pfizer இன் ஆதிக்கம் அதனை சந்தைப்படுத்தும் இலாப நோக்கத்தைக் கொண்டது. மருந்து நிறுவனத்தின் பங்குச் சந்தைப் பெறுமானம் கடந்த வாரத்தில் 4.4 வீதம் அதிகரித்துள்ளது. இது இன்னும் பல மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்கப்படுகிறது. இதுவரையில் நடத்தப்ப்பட்ட சோதனைகளில் பெரும்பாலும் பக்கவிளைவுகள் ஏற்படாத காரணத்தால் இந்த வருட இறுதிக்குள் தடுப்பு மருந்தைப் பாவனைக்குக் கொண்டுவரலாம் என நம்புவதாக நிறுவனம் தெரிவிக்கிறது.
மருத்துவம் முழுவதும் இலவசமாக வழங்கப்படும் நாடுகளில் மக்களின் வரிப்பணத்தில் பெருந்தொகைப் பணம் நிறுவனத்தின் இலாப வெறிக்குத் தீனி போடும். சில வருடங்களின் பின்பதாக தடுப்பு மருந்தால் பின் விளைவுகள் ஏற்படுமான என Pfizer நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், அவ்வாறான சூழல் ஏற்பட்டாலும், இறுதியில் வெற்றிகொள்ளப் போவது இந்த நிறுவனங்களே.
அல்சைமர் மற்றும் பார்கின்சன் – Alzheimer’s and Parkinson’s- நோய்க்கான ஆய்வையும் மருந்துத் தயாரிப்பையும் தனது பொறுப்பிலெடுத்துக்கொண்ட நிறுவனம், அரச மானிய உதவியுட 300 ஆய்வாளர்களையும் இணைந்துக்கொண்டது. இறுதியில் 2018 ஆம் ஆண்டு இந்த ஆய்வினால் Pfizer நிறுவனத்திற்கு போதிய இலாபம் கிடைக்காது என்று தனது ஆய்வுகளையும் தயாரிப்பையும் நிறுத்திக்கொண்டது. வேலைக்கு அமர்த்திய 300 பேரையும் உடனடியாகவே பதவி நீக்கம் செய்தது. ஆக, உலகம் முழுவது கொரோனா நோய் அவலத்தைப் பயன்படுத்தி அவசரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்தின் பின்னால் சமூகப் பற்றுக் கிடையாது, இலாப நோக்கம் மட்டுமே உண்டு.
தவிர, கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மருந்து அமெரிக்காவில் அங்கீகாரம் பெற்ற முதல் நாளிலேயே 5.6 மில்லியன் டொலர் பெறுமதியான தனது பங்குகளை விற்பனை செய்துவிட்டார் அதன் பிரதான அதிகாரியான அல்பேர்ட் பௌர்லா. இந்த அவசர பங்கு விற்பனையின் பின்னாலுள்ள காரணம் என்ன என்பதை பலர் சந்தேகத்தோடே விமர்சிக்கின்றனர்.
பெரியம்மை நோய்க்கான தடுப்பு மருந்தே உலகில் முதலில் பாவனை கிடைத்த முதலாவது கண்டுபிடிப்பு. மாடுகளுக்கு ஏற்படும் இதே வகையான நோய் மனிதர்களுக்குத் தொற்றும் போது பெரியம்மை போன்று பெரும் அபாயத்தை ஏற்படுத்துவதில்லை என்பதால். மனிதர்களுக்கு அந்த நோயை உருவாக்குவதன் ஊடாக பெரியம்மைக்கான எதிர்ப்புச் சக்தியை வெற்றிகரமாக ஏற்படுத்தினார் எட்வார்ட் ஜென்னேர்ஸ் என்பவர். 1796 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்த இந்த முறைமையானது உலகில் பெரியம்மை நோயை முற்றாகத் தடுப்பதற்கான வழி முறையாக அமைந்தது. இதற்கு பல வருடங்களுக்கு முன்பதாகவே முதலாம் நூற்றாண்டிலிருந்தே இதே வகையான தடுப்பு முறை சீனா மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.
நாய் கடிக்கு எதிரான பிரஞ்சு மருத்துவர் லுயீ பாஸ்தோரின் கண்டுபிடிப்பு, 1885 ஆம் ஆண்டில் ஆரம்பித்து உலகில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திற்று.
இக் கண்டுபிடிப்புகளின் போதெல்லாம், மருத்துவம் முழுமையாக வியாபார மயப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
கிரேக்கம், துருக்கி, ஸ்பெயின் உட்பட பல நாடுகளில் போலியோ நோய் சமூகத்தில் பெரும் சவாலாக முளைத்திருந்தது. போலியோவிற்கான தடுப்பு மருந்தை
அன்று சோசலிச நாடாகவிருந்த சோவியத் ரசியாவும், அமெரிக்காவும் ஆய்வு செய்துகொண்டிருந்தன. சல்க் என்ற தடுப்பு மருந்தை அமெரிக்கா 1950 ஆண்டில் அறிமுகப்படுத்தியது. அதே வேளை சோவியத் ரசியாவில் மாற்று வழியிலான தடுப்பு மருந்தை, முன் மொழிந்தது. மாஸ்கோ போலியோ ஆய்வு நிறுவனத்தின் இயக்குனரின் தலைமையிலான குழு தனது ஆய்வு முடிவுகளுடன் சல்க் நோய்த் தடுப்பு மருந்தை ஆய்வு செர்ய்யும் நோக்குடன் அமெரிக்கா சென்றடைந்தது. அப்போது, அமெரிக்க விஞ்ஞானியான அல்பேர்ட் சபின், சல்க் தடுப்பு மருந்தை ஏற்றுக்கொள்ள மறுத்து புதிய வழி முறை ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தார். மாஸ்கோ ஆய்வகத்தின் முறையுடன் ஒத்துப்போவதால், அமரிக்க அரசின் அனுமதியுடன் மாஸ்கோ ஆய்வகத்தின் இயக்குனர் மிக்கையில் சூமக்கோ உடன் சோவியத் ரஷ்யவிற்குப் பயணமானர் சபின்.
அங்கு தனது ஆய்வுகளைத் தொடர்ந்த சபின், 1959 ஆம் ஆண்டு தனது தடுப்பு மருந்து பாதுகாபானது என்று அறிவித்தார். அதனை அமெரிக்க நிறுவனங்களுக்கு ஊடாக சந்தைப்படுத்தவும் அங்கு சோதனை செய்யவும் அமெரிக்க அரசு முன்வைத்த கோரிக்கையை சபின் நிராகரிக்க, அந்த மருந்து பாதுகாப்பற்றது என உலகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அதே வேளை கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சபின் தடுப்பு மருந்து வெற்றிகரமாகப் பாவனைக்கு வந்தது.
போலியோவை கட்டுப்படுத்தும் முயற்சியில் தோற்றுப்போன அமெரிக்கா அணி, 1962 ஆம் ஆண்டு சபின் மருந்திற்கான அனுமதியை வழங்கிற்று. சபின் மருந்து உலகமுழுவதும் போலியோவை அழித்தொழிப்பதற்கான தனது முழுமையான பங்களிப்பை வழங்கிற்று.
எது எவ்வாறாயினும் போலியோ நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து மருத்துவ அறிவியல் இன்று போல் வளர்சியடையத ஒரு சூழலிலேயே சில வருடங்களுக்கு உள்ளாகவே நோயை உலகின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் விரட்டியடித்துவிட்டது. போலியோவுடன் ஆரம்பித்த இலாப வெறியும், மக்கள் விரோத அரசியலும், அறிவியலை விட அதிக வேகத்தில் வியாபித்திருப்பதால் இன்னும் கொரோனா தொடர்ப்பான நிச்சயமற்ற சூழலிலுக்குள் உலக மக்கள் அமிழ்த்தப்பட்டுள்ளனர்.
Pfizer நிறுவனம் தடுப்பு மருந்தை 2020 இறுதிக்குள் பாவனைக்குக் உட்படுத்திவிடலாம் என நம்பிக்கை தெரிவிக்கும் நிலையின் சீன நிறுவனத்தின் இறுதி சோதனை முயற்சி உஸ்பெக்கிஸ்தானில் நடைபெறுகிறது. அதே வேளை, சீனா எதிரி நாடாக இருந்தாலும், அந்த நாட்டு மருத்துவ அறிவியல் துறையுடன் இணைந்தே கொரோனாவை அழிக்க முடியும் என புதிய அதிபர் ஜோ பிடன் தெரிவித்திருப்பது, போலியோ வரலாறு மீண்டும் சுழற்சி முறையில் கொரோனாவுடன் சங்கமிக்கிறதா என்ற எதிர்வுகூறல்களும் எழுகின்றன.