Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈராக்கில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் பிரித்தானிய இராணுவம் சீற்றம்!

John-Chilcot-பிரித்தானியா அளவிற்குக் கூட இலங்கையின் நிலை இல்லை. அங்கு போர்க்குற்ற விசாரணையையே இனப்படுகொலையில் பங்காற்றியவர்களின் பிடியில் விட்டுவிட்டார்கள். தற்செயலாக போர்க்குற்ற விசாரணை நடந்தாலும் அங்கு அதன் சூத்திரதாரிகளான கோத்தாபய மற்றும் மகிந்த ராஜபக்சக்கள் தண்டனைக்கு உட்படாமல் தப்பிக்கொள்வார்கள். சரத் பொன்சேகா போன்ற இராணுவ அதிகாரிகளும் எந்தச் சலனமுமின்றி சமூகத்தில் உலா வருவார்கள்.
இதையெல்லாம் புரிந்துகொள்ளத் திரணியற்றவர்கள், பெரும் பணச்செலவில் ஜெனீவாவில் வருடாந்த ‘போர்க்குற்ற விசாரணை’ என்ற திருவிழாவை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதற்கூடாக மக்களுக்குப் போலி நம்பிக்கைகள் வழங்கப்படுகின்றன. வன்னிப் படுகொலைகளுக்குப் பின்னான போராட்ட அரசியலைச் சிதைப்பதற்கு இவ்வாறான போலி நம்பிக்கைகளை வழங்கிய அரசியல் தலைமைகள் தம்மைச் சுயவிமர்சனத்திற்கு உட்படுத்திக்கொண்டு புதிய அரசியலை முன்வைக்க வேண்டும்.

சில்கொட் அறிக்கையினைப் போர்க்குற்றங்களிற்காக பிரத்தானிய இராணுவத்தை தண்டிப்பதற்காக பயன்படுத்த முடியும்.  ஆனால் ரொனி பிளேயர் எந்தவிதமான தண்டனைகளுக்கும் முகம் கொடுக்க மாட்டார்.

———————————————————————————

மொழியாக்கம் : சுகன்யா

டெய்லி மெயில்

4 ஜூலை 2016

லான் ட்ரூறி & லறிசா பிறவுண்

ஈராக் யுத்தம் தொடர்பிலான சில்கொட் அறிக்கையானது போர்க்குற்றங்கள் தொடர்பில் பிரித்தானிய துருப்புக்களை சட்ட ரீதியாகத் தண்டிப்பதற்குப் பயன்படுத்த முடியும் என்பதுடன் பிரித்தானியாவின் அப்போதைய பிரதம மந்திரி ரொனி பிளேயர் அக்குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பி விடுவார் என்பது குறித்தும் பிரித்தானியத் துருப்பினர் தமது கோபத்தினையும் வெறுப்பினையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

பிரித்தானியத் துருப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்கான சான்றாக 2.6 மில்லியன் சொற்களைக் கொண்ட இந்த அறிக்கையினை ஆய்வு செய்யப் போவதாக இனப்படுகொலைகளுடன் தொடர்புடைய சர்வாதிகாரிகளை விசாரிக்கின்ற சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆயினும் 2003ம் ஆண்டு, 179 பிரித்தானிய குடிமக்களையும் ஆயிரக்கணக்கான சிவிலியன்களையும் காவு கொண்ட ஈராக்கின் மீதான படையெடுப்பிற்கு ஆதரவு தெரிவித்து பாராளுமன்றத்தை ஏமாற்றினார் என்று கண்டுபிடிக்கப்பட்டால் கூட முன்னை நாள் பிரதமர் ரொனி பிளேயர் எந்த விதமான தண்டனைகளுக்கும் முகம் கொடுக்க நேரிடாது என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பேரழிவினை ஏற்படுத்தவல்ல சதாம் ஹுசைனின் ஆயுதங்கள் தொடர்பிலான தவறான பிரகடனத்தைச் செய்த முன்னை நாள் தொழிலாளர் தலைவர் தீர்ப்பிலிருந்து தப்பியதைப் போன்று, இந்த விடயம் தனிப்பட்ட இராணுவ வீரர்கள் வேட்டையாடப் படுவதன் அவலட்சணத்தை அதிகரித்துக் காட்டுகின்றது.

பத்து வருடங்களிற்கு முன்பிருந்தே சம்பவங்கள் தொடர்பில் பலவிதமான விசாரணைகளிற்கு பிரித்தானியத் துருப்பினர் முகம் கொடுக்க நேரிட்டதற்கான இடைவிடாத சூனிய வேட்டையினை முடிவுக்குக் கொண்டுவர டெய்லி மெயில் கடும் பிரயத்தனம் மேற்கொண்டிருந்தது.

புதன் கிழமை வெளியிடப்பட இருக்கும் சேர் ஜோன் சில்கோட் இனது அறிக்கையானது 7 வருடங்களைப் பிடித்ததுடன் பத்து மில்லியன் ஸ்ரேர்லிங்க் பவுண்ஸினையும் செலவளித்திருந்தது. இப்போர் தொடர்பான பிளேயரதது நிலைப்பாட்டினை உறுதிப்படுத்துவதற்கு அவரது அறிவினைத் தவறாகப் பயன்படுத்தியமையினை உள்ளடக்கிய கடுமையான விமர்சனம் இந்த அறிக்கையில் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரித்தானியப் படை வீரர்கள் ஈராக்கிய சிறைக்கைதிகளைச் சித்திர வதைக்குள்ளாக்கியதாகவும் அவர்களை குரூரமாக வழி நடத்தியதாகவும் ஆயிரத்துக்கும் அதிகமான குற்றச் சாட்டுகளை ஏற்கனவே சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் ஆய்வு செய்து வருகின்றது. அதாவது படைவீரர்கள் பிரித்தானிய நீதிமன்றங்களிலிருந்து விடுவிக்கப்பட்டாலும், போர்க்குற்ற விசாரணைகளுக்கான நீதி மன்றங்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய தேவை இன்னமும் உள்ளது.

ஈராக்கியர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற வழக்குத் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாக 12 வருடங்கள் நரகத்தை அனுபவித்திருந்த சார்ஜன்ற் கெவின் வில்லியம் கூறுகையில் “ பிளேயரை விசாரிப்பதை விடுத்து துருப்பினரை விசராணை செய்வது என்பது முற்று முழுதாக வெறுப்பூட்டுகின்றது. சதாம் ஹுசைன் என்பவர் உலகத்திற்கு அச்சுறுத்தல் என்ற புனையப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலேயே படை வீரர்கள் ஈராக்கிற்குச் சென்றார்கள். இத்தகைய ஆதாரங்களைப் புனைந்தவர்களே ஈராக்கில் நடைபெற்ற போரில் காவு கொள்ளப்பட்ட எண்ணிக்கையற்ற உயிர்களிற்கான இழப்பின் பெரும் பொறுப்பினை ஏற்க வேண்டும்” என்றார்.

2005ம் ஆண்டு தெருவோரக் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட மேஜர் மத்தியூ பேகொன் என்பவரின் தந்தை ரோஜெர் பேகொன் கூறுகையில் “ இது மிகவும் அதிர்ச்சியூட்டத்தக்கது. இது இரட்டை நிலைப்பாட்டுடையது. இந்த வீரர்கள் எங்களுக்காக தங்களால் முடிந்தவற்றை நிறைவேற்றுவதற்காகச் சென்றிருந்தார்கள். அவர்கள் இங்கே வேட்டையாடப்படுகிறார்கள். ஆனால் அவர்களை அங்கே அனுப்பிய மனிதன் இங்கே கவனிக்கப்படவில்லை.”

2003ம் ஆண்டு தற்பாதுகாப்புச் சூட்டுச் சம்பவத்தில் ஈராக்கியர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட சார்ஜன்ற் றிச்சார்ட் கற்றரோல் என்பவர் தற்போது விடுவிக்கப்பட்டாலும் கூட பலதரப்பட்ட விசாரணைகளிற்கு முகம் கொடுத்ததன் நிமித்தம் பேசுவதற்குக் கூட சக்தியற்றுக் காணப்பட்டார். அவரது மகள் டெமி கூறுகையில் “ இந்தச் சம்பவத்திற்கு யாராயினும் பொறுப்புக் கூற வேண்டியிருந்தால் அது ரொனி பிளேயராகத்தான் இருக்க வேண்டும். இது தொடர்பில் நான் மிகவும் சினம் கொண்டுள்ளேன். பிரித்தானிய வீரர்கள் அவர்களுக்கு என்ன சொல்லப்பட்டதோ அதைத்தான் செய்தார்கள். யாரோ ஒருவர் இட்ட கட்டளைக்காக இவர்கள் ஏன் பொறுப்பாளிகளாக்கப்படவேண்டும்?

எனது தந்தை உட்பட இவர்கள் அனைவரும் உண்மையில் ஏற்கனவே விசாரணைகளிற்கு மேல் விசாரனைகளுக்குட்படுத்தப்பட்டது என்பது ஒரு அவமானத்திற்குரியது என்பதே உண்மையாகும். விசாரணையின் போது இவர்கள் எத்தகைய உளவியல் வதைகளைக் கடந்து செல்கிறார்கள் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என நான் நினைக்கவில்லை. . இந்த விடயம் அவர்களது வாழ்வின் ஒவ்வொரு சிறிய விடயத்தையும் பாதிக்கின்றது. இவர்கள் தங்களது பணியினைச் செய்தார்கள். தங்களிற்குக் கற்பிக்கப்பட்டவற்றை நிறைவேற்றினார்கள், அவர்களுடைய முழு வாழ்க்கையும் எங்களைப் பாதுகாப்பதற்காக எங்கள் நாட்டைப் பாதுகாப்பதற்காக அதற்கான விதிமுறைகளைப் பாதுகாப்பதற்காக இராணுவத்தைச் சுற்றியே இருந்தது. அவர்கள் கொண்டாடப் படவேண்டியவர்களேயன்றி தண்டிக்கப்படவேண்டியவர்களல்ல” என்றார்.

2003ம் ஆண்டு ஈராக்கில் மேற்கொள்ளப்பட்ட பதுங்கித் தாக்குதலில் கொல்லப்பட்ட 20 வயதான லான்ஸ் கோப்ரல் தோமஸ் கீயின் தந்தை றெஜ் கீ கூறுகையில் “சில்கோட் இனது அறிக்கையினை ரொனி பிளேயரிற்கு எதிரான நடவடிக்கைக்குப் பயன்படுத்தல் என்ற அடிப்படையிலேயே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பயன்படுத்தவேண்டும்” எனக் கூறினார்.

ஆப்கானிஸ்தானில் துருப்புகளிற்கு கட்டளை வழங்கிய கேணல் றிச்சார்ட் கெம்ப் தெரிவிக்கையில் “ இது அரசியலிற்கு இலகுவானது ஆனால் பதவி நிலையில் மிக உயர்ந்த தரத்திலுள்ளவர்களை விடுத்து மிகவும் குறைந்த பதவி நிலையிள்ளவர்கள் மீது மேற்கொள்ளப்படும் அனத்துவிதமான விசாரணைகளும் நிச்சயமாக தவறான ஒன்றாகும்” எனக் கூறினார்.

முன்னைய ஸ்கொட்லாந்து முதலமைச்சர் அலெக்ஸ் சல்மண்ட் “சட்டரீதியான அல்லது அரசியல் ரீதியான தீர்விற்கு முகம் கொடுக்க வேண்டுமென” ரொனி பிளேயருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் “ ரொனி பிளேயர் ஏன் மக்கள் தன்னை போர்க்குற்றவாளி என எண்ணுகிறார்கள், ஏன் மக்களுக்குத் தன்னைப் பிடிக்கவில்லை” என்பது தொடர்பில் குழப்பமடைந்துள்ளார். அதற்குக் காரணம் என்னவெனில் 179 பிரித்தானியர்கள் மரணித்துள்ளமை. ஈராக்கில் முரண்பாடுகளின் காரணமாக 150,000 மக்கள் உடனடி மரணம் அடைந்துள்ளமை, மத்திய கிழக்கு நாடுகள் எரிந்து கொண்டிருக்கும் காட்சி, பயங்கரவாதத்தினால் உலகம் எதிர்கொண்ட இருப்பியல் நெருக்கடி என்பனவாகும். இவையெல்லாம் சில காரணங்களாக அமைந்தாலும் மக்கள் அவரை ஏன் உயர்வாக மதிக்கவில்லை என்பதற்கான காரணத்தை அவர் உணர்ந்து கொண்டிருக்கக் கூடும் . பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கான விளக்கம் தரப்படல் வேண்டும் என தீர்மானித்திருக்கிறார்கள்.

முடிவில், எந்தவிதமான தீர்வுகளுமின்றிய பயங்கரமான பாரதூரமான பின் விளைவுகளுடன் கூடிய சட்ட விரோதமான யுத்தத்தின் மூலம் பெருந்தவறுகளை இந்த நாடு மேற்கொள்கிறது என்பதற்கான ஒரு சூழ் நிலையை நீங்கள் உருவாக்கமுடியாது என அவர்கள் நம்புகின்றார்கள். அதற்காக ஒரு சட்டரீதியான அல்லது அரசியல் ரீதியான தீர்வு ஒன்று அதற்காக அங்கிருக்க வேண்டும்.
.

பிரித்தானியப் படையினரது குரூர நடத்தைகள் சார்ந்த சான்றுகள் வழக்குரைஞர் ஃபில் சைனர் என்பவரால் கையளிக்கப்பட்டதன் பின்னர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது தனது ஆரம்ப விசாரணைகளை இரண்டுவருடங்களிற்கு முன்னரே ஆரம்பித்ததாக அறிவித்திருந்தது.

ஈராக்கிய தடுப்புக் காவல் கைதிகளை படைவீரர்கள் கொலை செய்தமை, சித்திரவதைக்குள்ளாக்கியமை மற்றும் அங்கவீனப்படுத்தியமை தொடர்பில் 2014ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அல் ஸ்குவாடி விசாரணை குறித்த அதனது அறிக்கைகள் அழிக்கப்பட்டதன் பின்னர்திரு சைனரின் நிறுவனமாகிய பொது நல வழக்குரைஞர்கள் (PiL) குறித்து விமர்சனம் எழுந்தது.

பிரித்தானியத் துருப்பினரால் ஈராக்கியர்கள் மீது நடாத்தப்பட்ட குரூர நடவடிக்கைகள் மற்றும் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கான முறைப்பாடுகளுக்கு அந்த சட்ட நிறுவனமே பொறுப்பாகும்.

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குரைஞர்களது அலுவலகம் “கில்கோட் அறிக்கையிலிருந்து தாம் குறிப்புகள் எடுத்துக் கொள்வதாகவும், ஆரம்ப பரிசோதனை என்பது விசாரணை அல்லவெனவும் ஆயினும் ஒரு விசாரணையினை ஆரம்பிப்பதற்காக இருக்கக்கூடிய நியாய அடிப்படைகளை தீர்மானிப்பதனை நோக்கமாகக் கொண்ட ஒரு படி முறையாகும் எனத் தெரிவித்துள்ளது. ஈராக் மீதான பிரித்தானியாவின் படையெடுக்கும் முடிவானது நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு அப்பால் செல்கின்றது.

ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகளின் குழு ஒன்று பாரளுமன்றத்தைத் தவறுதலாக வழி நடாத்தியமைக்காக புராதன பாராளுமன்றப் பொறிமுறையினை பயன்படுத்தி திரு பிளேயரின் மீது குற்ற விசாரணையினை மேற்கொள்வது குறித்து ஆலோசித்து வருகின்றது.
ஒரு மிகப் பெரிய அழிவிற்கு வழிகோலுவதற்கு தனது ஆட்சியதிகாரத்திற்கும் அப்பால் சென்றிருக்கின்றார் என்ற அடிப்படையில் அவர் தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்திய வகையில் அவர் குற்றவாளி என நம்பும் துக்கித்துக் கொண்டிருக்கும் குடும்பத்தவர்களால் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைக்கும் இந்த முன்னை நாள் பிரதம மந்திரி முகம் கொடுக்க நேரிடலாம்.

திரு பிளேயர் ஸ்கை நியூசிற்குத் தெரிவிக்கையில் “ புதன் கிழமை அன்று அறிக்கை வெளியிடப்படுகின்றது. அறிக்கை வரும் வரை நான் காத்திருக்கின்றேன். அதன் பின்னர் அது தொடர்பான எனது நோக்கினை தெரிவிப்பதுடன் என்னைப்பற்றி சரியாகவும் முழுமையாகவும் வெளிப்படுத்துவேன் என கடந்த சில வருடங்களாக நான் பலதடவைகள் கூறி வருகின்றேன்” எனத் தெரிவித்தார்.

அந்த நோக்கினை நான் எடுத்திருக்கின்றேன். அந்த அறிக்கை வெளியிடப்படும் வரை நாங்கள் காத்திருக்கவேண்டும் என நான் நினைக்கின்றேன். அதன் பின்னர் என்னைப் பற்றி நான் வெளிப்படுத்துவேன். அதனை நான் நிஜத்தில் பார்வையிடும் வரை அது தொடர்பான விளக்கங்களுடனோ அல்லது அரசியல் நிலைப்பாட்டுடனோ தொடர்பு பட்டுக் கொள்ள மாட்டேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version