முஸ்லீம்களின் பிறப்பு விகிதம் அதிகமாகிறது என்றும், அவர்களே இலங்கையின் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துகின்றனர் என்றும், இலங்கை இஸ்லாமிய நாடாக மாறிவிடும் என்றும் வன்னி இனப்படுகொலையின் பின்னான காலப்பகுதியில் பேரினவாதிகளால் பிரச்சாராம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. எந்தவகையான ஆதாரமும் தெளிவான புள்ளிவிபரங்களுமற்ற திட்டமிட்ட இப்ப்பிரசாரம் இலங்கை முழுவதும் முஸ்லீம்களுக்கு எதிரான மனோ நிலையை ஏற்படுத்திற்று.
‘நல்லாட்சி’ என்று தன்னை அழைத்துக்கொள்ளும் பேரினவாதத்தின் மறு முகமான இன்றைய இலங்கை அரசு இதற்கு எதிரான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை.
ஒரு புறத்தில் சிங்கள பவுத்தர்களையும் மறு புறத்தில் முஸ்லீம்களையும் போர் முனைக்குக் கொண்டுவந்து நிறுத்திய திட்டமிட்ட பிரச்சாரத்தின் பின்புலத்தில் சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளும் அதன் தேவையை உணர்ந்த ஏகபோக நாடுகளும் செயற்பட்டன.
இஸ்லாமியர்களின் ஒரு சிறிய பகுதியினரை மத அடிப்படைவாதத்தை நோக்கி இழுத்துவந்த தொடர்ச்சியான தாக்குதல்களின் பின்னர் இலங்கையில் ஏற்கனவே தனது வேர்களைப் பரப்பியிருந்த இஸ்லாமிய மத அடிப்படைவாதக் குழுக்கள் 2009 இற்குப் பின்னர் தம்மைப் பலப்படுத்திக்கொண்டன.
சவுதி அரேபியாவிலிருந்து லட்சங்கள் செலவில் ஈச்சை மரங்கள் தருவிக்கப்பட்டு ஏழை முஸ்லீம் குடியிருப்புகளைச் சுற்றி நட்டுவைக்கப்பட்டன. மசூதிகளில் சில இஸ்லாமிய தூய்மை வாதத்தைப் பிரச்சாரப்படுத்தின.
மத அடிப்படைவாதம் தமக்கும் தமது சமூகத்திற்கும் எதிரானது என்பதை அறியாத அப்பாவி இஸ்லாமியர்கள் மதவாதிகளின் சூழ்ச்சிக்கு இரையாகினர்.
பவுத்த மத வெறியர்களின் தாக்குதல்கள் இஸ்லாமிய மத வெறியை மேலும் வேகத்துடன் வளர்த்தது.
கண்டியில் பௌத்த சிங்களப் பேரினவாதிகள் இஸ்லாமியர்களின் வியாபார நிறுவனங்களையும் வீடுகளையும் தாக்கியழித்தனர். பல முஸ்லீம்கள் தாக்கப்பட்டனர். பவுத்த மதகுருக்களின் தலைமையில் சென்ற குழு ஒன்று இரண்டு மசூதிகளைத் தீமூட்டிக் கொழுத்தியது.
பவுத்த பயங்கரவாத அமைப்பான பொதுபல சேனாவின் நெருங்கிய நண்பர் கோத்தாபய ராஜபக்ச இலங்கையில் சுதந்திரமாக உலா வரும் அதேவேளை வன்முறைகள் உச்சத்தை அடைந்துள்ளன.
இலங்கை அரச அதிகாரவர்க்கம் சிங்கள பவுத்தத்தை அடிப்படையாக்கொண்டு கட்டமைக்கப்பட்டது. சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதும், இனக்குழுக்கள் மீதும் அதிகாரவர்க்கம் நடத்தும் தாக்குதலே அதன் இருப்பையும் பலத்தையும் உறுதிப்படுத்துகிறது.
இதன் மறுபக்கத்தில், தமிழ் இனவாதம், இஸ்லாமிய மதவாதம் என்பன தமக்குள் மோதிக்கொள்கின்றன.
இன்று இலங்கை அரசு பிறப்பித்திருக்கும் அவசரகால நிலைக்கான பிரகடனத்தை பலர் வரவேற்கிறார்கள். தாக்குதலில் ஈடுபட்ட பவுத்த சிங்கள துறவிகளையும் குண்டபடைகளையும் இலங்கை அரசு கைது செய்திருப்பதைல் கண்டு வியந்து போகிறார்கள். ஆனால் இதுவெல்லாம் தற்காலிகமான தீர்வு என்பதை யாரும் கண்டுகொளவில்லை. இலங்கை அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் முஸ்லீம் தமிழர்களின் தலைமைகள் தாம் எதோ சாதித்துவிட்டதாகக் கூறிக்கொள்கின்றன.
இது முழுமையக வெளித்தெரியும் உண்மையல்ல. இலங்கை அரசு பேரினவாதத்தையும், சிங்கள பவுத்த மேலாதிக்க வாதத்தையும் நிராகரிக்கிறது என்றால் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அடிப்படை உரிமைகளைக்கூட ஏன் நிராகரிக்கின்றது என்ற கேள்வியிலிருந்தெ இனிமேல் முஸ்லீம்கள் தாக்கப்படுவது நிறுத்தப்படுமா என்ற கேள்விக்கான பதில் கிடைக்கும்.
இன்றைய இலங்கை அரசு சிறுபான்மை இனங்கள் மீதான வன்முறையை நிராகரிக்கவில்லை. மாறாக இது சரியான சந்தர்ப்பம் இல்லை எனக் கருதுகிறது. இன்று நடத்தப்படும் தாக்குதல் மகிந்த அணிக்குப் பலம் சேர்த்துவிடும் என்பதால் அதன் எதிரணியிலிருக்கும் அரசு அஞ்சுகிறது. அதனால் தற்காலிகமாக வன்முறையைத் தடுக்க முற்படுகிறது. இதற்கு மேல் இலங்கை அரசு சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கான உரிமையை உறுதிப்படுத்தத் தயாரில்லை என்பதே இங்கு காணக்கிடைக்கும் உண்மை.
இன்று முஸ்லீம் தலைமகள் இன்னும் பேரினவாதத்தின் வால்களாகவே செயற்படுகின்றன. முஸ்லிம்களை ஒடுக்கப்படும் ஏனைய தேசிய இனங்களான வடகிழக்கு மற்றும் மலையகத் தமிழர்களுடன் இணைந்து அரசிற்கு எதிரான கூட்டிணைவை ஏற்பட்டுவிடாதவாறு பேரினவாதத்தைப் பாதுகாக்கின்றன.
இதன் மறுபக்கத்தில் தமிழ்த் தலைமைகள் வட கிழக்குத் தமிழர்கள் ஏனைய ஒடுக்கப்படும் மக்கள் பிரிவுகளுடன் இணைந்து போராட முடியாமல் தமது பெருமை பேசிக்கொள்கின்றன.
வடகிழக்குத் தமிழர்கள் மத்தியிலிருந்து முஸ்லிம் உழைக்கும் மக்களை நோக்கி நேசக்கரம் நீட்டப்பட வேண்டும். அவர்களுக்காகவும் பேரினவாதத்திற்கு எதிரான போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். இதனூடாகவே சந்தர்ப்பவாத முஸ்லிம் தமிழர்களின் தலைமை பலவீனப்படும். இதுவே பேரினவாதத்தைப் பலவீனப்படுத்தும். இதன் தொடர்ச்சியாகப் தேசிய இனங்கள் மத்தியிலிருந்து தன்னாட்சிக்கான குரல் எழ வேண்டும். அவ்வாறான தன்னாட்சி மட்டுமே இலங்கைத் தீவை அழிவிலிருந்து மீட்பதற்கான பாதை.