Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முட்டுச் சந்தில் முடங்கும் பிரித்தானிய பொருளாதாரம்   :வி.இ.குகநாதன்        

கடந்து சென்ற வாரங்களில் இடம்பெற்ற  பிரித்தானியாவின் இரு பெரும் கட்சிகளின் மாநாடுகளானது நாட்டினது அரசியல், பொருளாதார நிலமைகளைப்  புரட்டிப் போட்டுள்ளன.

முதலாவதாக லேபர் கட்சியின் தலைவராக மீண்டும் முன்னரை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் தெரிவு செய்யப்பட்ட கோபன் தலமையிலான கட்சி மாநாட்டில் சில நலத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. ஊடகங்கள் என்னதான் வெல்ல முடியாதவராக அவரினைச் சித்தரித்தபோதும், மக்கள் மத்தியில் அவரின் செல்வாக்கு அதிகரித்தே செல்கின்றது. எனவே இதற்குப்  பதிலடியாக சில அறிவிப்புக்களை வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு பிரதமர்  திசரா மே தள்ளப்பட்டார். இந்தப்   பின்புலத்திலேயே கொன்சர்வேட்டிக் கட்சி மாநாட்டில்  திசரா  மே  கடுமையான வெளியேற்றம்(Hard Brexit) என்ற அறிவிப்பினையும் , அட்டவணை 50(article50 triggering)வரும் மார்ச் மாதமளவில் பிரயோகிக்கப்படும் என்ற  அறிவிப்பினையும் வெளியிட்டார். இதற்கு முன்னர் பேச்சுவார்த்தை மூலமாக சில இணக்கப்பாடுகளை ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொண்ட பின்னரே வெளியேற்ற அறிவிப்பு என்று கூறிவந்த திசரா மே திடீர்க்  குத்துக்கருணம் அடித்து மார்ச் மாதத்தில் வெளியேற்ற அறிவிப்பு வெளியிடப்படும் எனக்கூறியமை குறுகிய கட்சி அரசியல் நலனற்றி வேறில்லை. இதனையடுத்து பிரான்ஸ் அதிபரும் இவ்வறிவிப்பிற்கு எதிர்வினையாற்ற, அதன் பின்பு  பிரித்தானிய பவுண்சும், பொருளாதாரமும் தள்ளாடத்தொடங்கியுள்ளன.

               இந்த அறிவித்தலிற்கு பின்னர் முதலில் சர்வதேச நாணய நிதியமானது (IMF) நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான அடுத்த வருட எதிர்வுகூறலினை 1.1 வீதமாகக் கணித்தது.( Brexit கருத்துக்கணிப்பிற்கு முன்னரான வளர்ச்சி வீதத்தின் பாதியே இதுவாகும்). இந்த வீழ்ச்சியின்மூலம் தற்போது ஜீ7 (G7)நாடுகளில் வளர்ச்சி வீதத்தில் முதலிடத்தில் இருக்கும் பிரித்தானியா அடுத்த வருடம் இத்தாலி, யப்பான் தவிரந்த ஏனைய அனைத்து ஜீ7 நாடுகளையும் விட பின்னனி நிலமையினை அடையும். மேலும் பணவீக்கமானது 0.7% இலிருந்து 2.5% ஆக அதிகரிக்கும் என்று அடுத்த குண்டினையும் IMF போட்டது. IMFஇன் எச்சரிக்கைகள், அறிவுறுத்தல்கள் எப்போதும் மக்கள் நலன் சாரந்திருக்காது , சில வேளைகளில் வேறு சில நோக்கங்களைக் கொண்டிருந்த வரலாறு இருக்கின்றபோதும் இந்த எச்சரிக்கைகளை அவ்வாறு எளிதில் புறந்தள்ளமுடியாது. இதனை தெசரா மேயின் “அடுத்த வருடம் மேடு பள்ளமான வீதியிலேயே(Bumpy ride) நாம் பயணிக்கவேண்டியிருக்கும்” என்ற சுயவாக்குமூலலத்தின் மூலமே அறிந்து கொள்ளமுடியும்.

     அடுத்த அதிர்ச்சி வெள்ளி  (07-10-2016)  அதிகாலை 00.05  மணியளவில் நாடே தூங்கிக்கொண்டிருந்தபோது  பவுண்சின் டொலரிற்கெதிரான பெறுமதியோ துள்ளிவிளையாடிக் கொண்டிருந்தது. இவ்வாறான சடுதியான ஏற்ற- இறக்கம் பிளாஸ் கிராஸ் (Flash crash)இற்கு பல Fat finger error, Automatic trading என்பன போன்ற கலைச்சொற்கள் பயன்படுத்தப்பட்டபோதும் , எல்லாவற்றுக்கும் திசரா மே அறிவிப்பு, பிரான்ஸ் அதிபரின் எதிர்வினை என்பனவே காரணமாகும். முடிவில் பவுண்சின் பெறுமதி கடந்த முப்பது வருடங்களில் சந்தித்திராத வீழ்ச்சியினைச் சந்தித்தது. டொலரிற்கெதிரான பவுண்சின் பெறுமதி 2017 இறுதியில் 1.10ஆக இருக்கும் என எதிர்வுகூறப்படுகிறபோதிலும் நிலமை இதனைவிட மோசமாகவே அமையலாம். இப்போதே சில விமான நிலையங்களில் (வெள்ளிக்ககிழமை நிலமை Gatwick airport , Southend airport)ஒரு பவுண்ஸ் மூலம் ஒரு டொலரினையே வாங்கமுடியாத நிலையே இருந்தது. (பொதுவாகவே விமான நிலையங்களில் நாணய மாற்று செலவு கூடியதாகையால், வெளியிலேயே நாணயக் கொடுக்கல் வாங்கலை மேற்கொள்வதே சிறந்தது). இவ்வாறு பவுண்சின் பெறுமதி குறைவடையும்போது, அது நன்மையே என்பது இப்போது அரசின் வாதம். (வீழ்ந்தாலும் மீசையில் மண்ணில்லை என்பது போன்ற வாதம்) . அதாவது  நாணயத்தின் பெறுமதி குறையும்போது ஏற்றுமதி பொருட்களின் விலை டொலரில் குறைவடைவதால் ஏற்றுமதி அதிகரிக்கும்(.உதாரணம்- யப்பானிய யென்) என்பதே அவ் வாதமாகும். ஆனால் அவ்வாதம் இங்கு பொருந்தாது. ஏனெனில் பிரித்தானியா ஒன்றும் யப்பான், சீனா போன்று பொருள் ஏற்றுமதியில் தங்கியுள்ள நாடல்ல. இங்கு (uk)பொருளாதாரத்தின் மொத்தப் பங்கில் 78 வீதமானது சேவைத்துறையினையே தங்கியுள்ளது. அதிலும் வங்கி போன்ற நிதித்துறையிலே தங்கியுள்ளது. மேலும் இங்கு ஏற்றுமதியினை விட இறக்குமதியானது சுமார் 50 வீதம் அதிகம். எனவே பவுணிசின் வீழ்ச்சியானது பாதகமாகவே அமையும்.

பவுண்சின்  வீழ்ச்சியால் ஏற்படும் விளைவுகள்:

பவுண்சின் பெறுமதி வீழ்ச்சியானது இறக்குமதிப் பொருட்களின் விலையினை உள்நாட்டில் அதிகரிக்கச் செய்யும். இந்த வகையில் எரிபொருட்களின் (பெற்றோல், டீசல்) விலை  அதிகரிக்கப்போகின்றது. இந்த விலை அதிகரிப்பானது உள்ளூர் பொருட்களின் விலையினையும் சேர்த்தே அதிகரிக்கச்செய்யும் (ஏனெனில் விநியோகச்செலவு அதிகரிக்கும்). அடுத்ததாக இலத்திரனியல் பொருட்களின் விலையேற்றம் இடம்பெறும். இது அடுத்த மாதங்களில் நத்தார் பரிசுக்கான கொள்வனவில் (Christmas purchase) ஈடுபடும்போது மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தும். இப்போதே அண்மையில் வெளிவந்த ஐ போன் 7 இன் ($649)விலையானது கடந்த மாதம் £486 இலிருந்து இன்று பவுணசின் டொலரிற்கெதிரான வீழ்ச்சியால்  £599 ஆக அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கலாம். அதே போன்று உலகின் வேறு நாடுகளிற்கு விடுமுறையில் செல்வதற்கான செலவும் (holiday) அதிகரிக்கும். அதே போன்று புலம்பெயர்ந்தோரினைப் பொறுத்தவரையில் நாட்டிற்கு பணம் அனுப்பும்போது ரூபாவில் குறைவாகவே சென்றடையும். சுருக்கமாகக்கூறின் பணவீக்கமும் விலைவாசி உயர்வும் ஏற்படப்போகின்றது. இவ்வாறு பணவீக்கம் ஏற்படும்போது இப்போதுள்ள நாணயங்களைப்போல (coins).சிறிய தாள் (notes)காசின் பெறுமதி குறைந்து புழங்குதல் அதிகரிக்கும். இதனை உணர்ந்துதானோ என்னவோ இங்கிலாந்து வங்கியானது நீண்டகாலம் உழைக்கக்கூடிய புதிய ஐந்து பவுண்ஸ் தாளினை பிளாஸ்ரிக் கலந்த தாளில் வெளியிட்டுள்ளது.

அரசின் உத்திரவாதங்களின் நம்பகத்தன்மை:

மேற்குறித்த அச்சுறுத்தல்களிற்கு மத்தியிலும்

இங்கு அரசும், வெளியேற்ற ஆதரவாளர்களில் பலரும்  பொருளாதாரம் குறித்து வெளியிட்டுவரும் நம்பிக்கையான கருத்துக்கள் வெறும் விரும்பங்களே தவிர யதார்த்தங்கள் அல்ல. மேலும் குறிப்பாக கார் உற்பத்தியில் ஈடுபடும் யப்பானினன் நிறுவனங்களின் பிரித்தானிய கிளை நிறுவனங்களின் வெளியேற்ற எச்சரிக்கை உண்மையானால் மட்டுமே 140000 பேரளவில் வேலையினை இழக்கவேண்டிவரும். புதிதாக முதலீடுகளை கவர்ந்து எடுக்கலாம் (பவுண்ஸ் வீழ்ச்சியினை சாதகமாக்கி) என்றால் பிரித்தானிய வெளியேற்ற வாக்கெடுப்பு முடிவின் பின்பு இங்கு வெள்ளைநிற பிரித்தானியர் தவிர்ந்த ஏனையோரிற்கு எதிராக ஏற்படுத்துப்பட்டுள்ள வெறுப்புக்குற்றங்களும்(hate crimes) குறுகிய தேசயவாதமும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை  இங்கு வருவதற்கு அச்சப்படுத்தி தூரத்திலேயே வைத்துள்ளது. இங்கு மக்களை இவ்வாறு அச்சுறுத்துவதன் மூலம்  நிலமை மேலும் மோசமாகுமே தவிர என்ன பயன் என்ற ஒரு    கேள்வி எழுப்பப்படலாம் . அதற்கான பதில் ஒன்று இந்த அரசின் சந்தர்ப்பவாத அரசியலினை வெளிக்கொண்டுவருவது இரண்டாவது நோயினை எவளவு முன்கூட்டியே  அறிகிறோமோ அந்தளவிற்கு நோயிற்கு மருத்துவம் செய்வது இலகுவானது. இங்கு அரசும், பெரு நிறுவனங்களும் ஆபத்தினை எதிர்நோக்கித் தயாராகவேயுள்ளன. உதாரணமாக லோயிட்ஸ் (Lloyds tsb)வங்கியானது டிசம்பரில் முடிந்த ஆண்டில் 3.55 பில்லியன் இலாபமீட்டியபோதும் , இவ்வாண்டில் 200 கிளைகளை மூடி 3000 பேரளவில் ஆட்குறைப்புச் செய்யவுள்ளது. இவ் ஆட்குறைப்பிற்கு அன் நிறுவனம் கூறிய காரணம் அடுத்தாண்டு பிரித்தானிய வெளியேற்ற அறிவிப்பு மூலம் பொருளாதார வீழச்சி ஏற்பட்டு தனது இலாபமும் பாதிக்கப்படும், எனவே அதற்கான முன்னெடுப்பே இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை என்பதாகும். எனவே பெரு நிறுவனங்கள் தயாராகவே உள்ளன. பாதிக்கப்படப்போவது போலி நம்பிக்கையில் வைக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களே.

அரசும், ஊடகங்களும் செயற்படப்போகும் விதம்:

மேற்கூறியவாறு நிலமை மோசமடையும் போது இந்த அரசாங்கமானது தனது இயலாமையினை மறைப்பதற்கு மக்களின் கவனத்தினை குடியேற்றவாசிகளின் மீது திருப்பும். இதற்கு அரசின் ஊதுகுழல் ஊடகங்களும், வலதுசாரி ஊடகங்களும் துணைநிற்கும். அதற்கான அறிகுறிகள் கொன்சவேட்டிக் கட்சி மாநாட்டில் நிறையவே தெரிகின்றன. அவ்வாறு நிகழுமாயின் நிறவாதம் பொருளாதார நெருக்கடியுடன் இணைந்து நிலமையினை மேலும் சிக்கலாக்கும். தெசரா மே யின் பாணியில் கூறுவதானால்  மேடு பள்ளப் பயணமானது (Bumpy ride) மலை உச்சியிலிருந்து விழும் பயணமாகவே அமையும்.

Exit mobile version