Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பொது பல சேனா – நோர்வே,அமெரிக்கக் கூட்டுச் சதி – விலகும் மர்மம்

இன்றைய திகதியில் அதிகாரத்திலுள்ள கோரமான பயங்கரவாதிகளில் கோத்தாபயவின் பெயர் முதலாமிடத்தில் திகழ்கிறது. கூட்டுக்கொலை, உயர் மட்டக் கப்பம் கோரல், தனி நபர் கொலை, சூறையாடல், பணப்பதுக்கல், மிரட்டல், போதைப்பொருள் கடத்தல் போன்ற எல்லா கிரிமினல் செயற்பாடுகளையும் தலைமைதாங்கும் வலிமையும் திறமையும் கோத்தாபயவிடம் காணப்படுகிறது. தெற்காசியாவின் தெற்குப் பகுதி மூலையான இலங்கையை மாபியாக்களின் தலை நகரமாக மாற்றும் பணி கோத்தாவின் தலைமையிலேயே நடைபெறுவதற்கான அத்தனை ஆதாரங்களும் விவாதங்களுக்கு இடமில்லாமல் எமக்கு முன்னே நீண்டு கிடக்கின்றன.

பொதுபல சேனா என்ற கிரிமினல் கும்பலைத் தோற்றுவித்து மக்கள் மத்தியில் கட்டவிழ்த்துவிட்ட கைங்கரியத்தை நிறைவேற்றுவதற்குத் தெரிவுசெய்யப்பட்ட பயங்கர மனிதனும் கோத்தாபயவே. அமெரிக்க இராணுவ முகாம்களிலும், இந்திய இராணுவத்திடமும் பயிற்சிபெற்ற கோத்தாபய என்ற இரக்கமற்ற சமூகவிரோதி பொதுபல சேனாவை உருவாக்குவதற்கு உதவிபுரிந்த நிறுவனத்தின் பெயர் Worldview International Foundation(WIF) என்பதாகும்.

திலந்த விதானகே

நோர்வே நாட்டின் தன்னார்வ நிறுவனமான WIF இன் நிர்வாக இயக்குனராகப் பதவி வகித்தவர் திலந்த விதானகே(Dilanthe Withanage). 2006 ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டு வரை இந்த நிறுவனத்தின் நிறைவேற்று இயக்குனராக(Executive director) வேலைபார்த்த விதானகே இற்கு ஐந்து இலக்க சம்பளம் டொலர்களில் வழங்கப்பட்டது.இக்காலப் பகுதியில் WIF இன் வேலைகள் அனைத்தும் இலங்கையின் வடக்கு மாகாணத்தை மையப்படுத்தியதாக அமைந்திருந்தது. வடக்கிலிருந்த உயர் குடி கிரீஸ்தவ தமிழர்கள் மத்தியில் நெருக்கமான தொடர்புகளை நிறுவனம் வளர்த்துக்கொண்டது.

அடிப்படையில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் போவதாக மார்தட்டிக்கொள்ளும் இந்த நிறுவனத்திற்கு மன்னார் கடற்பரப்பில் மீதும் அங்கிருக்கும் எண்ணை வளத்தின் மீதும் ‘அக்கறை’ இருந்தது என்பது மற்றொரு வரலாறு.

இங்கு நமது திலந்த விதானகே 2008 ஆம் ஆண்டு வன்னி இன அழிப்பு முடிவிற்கு வந்த பின்னர் அமைப்பிலிருந்து காதும்காதும் வைத்த மாதிரி விலகிக் கொள்கிறார். இவர் தனது ‘இடைவிடாத முயற்சியன்’ பலனாக, இலங்கை அரசு மற்றும் நோர்வே அரசு ஆகியவற்றின் அனுசரணையுடன்  உருவாக்கிய அமைப்பின் பெயரே பொது பல சேனா. இன்று பொது பல சேனா என்ற பௌத்த பயங்கரவாத நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி(CEO)திலந்த விதானகே. நோர்வே நாட்டு என்.ஜீ.ஓ வழங்கிய அதி உயர் ஊதியத்தை உதறிவிட்டு பொது பல சேனாவை உருவாக்கி அதன் அதிகாரியாக உட்கார்ந்துகொள்ள வேண்டுமானால் WIF அமைப்பை விட பொதுபல சேனா அதிகமாகத் தீனி போடுகிறது என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

2008 ஆம் ஆண்டின் இறுதியில் இலிருந்து வெளியேறும் விதானகே 2012 இல் தான் பொது பல சேனாவைத் தோற்றுவிக்கிறார். இடைப்பட்ட நான்கு வருட காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் அமைச்சகங்களின் உயர்மட்ட அதிகாரியாகவும் ஆலோசகராகவும் பணியாற்றுகிறார்.

சில காலங்கள் அமைச்சர் ஒருவரின்  ஆலோசகராகப் பணியாற்றும் விதானகே அந்த அமைச்சகத்தின் முக்கிய அலுவல்களைக் கவனித்துக்கொள்கிறார். இன்று பொதுபல சேனாவைத் தடை செய்ய வேண்டும் என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார என்ற போலிக் கம்யூனிஸ்ட் அமைச்சரின் ஆலோசகராகவே விதானகே பணியாற்றுகிறார். எந்தக் கூச்சமும் இல்லாமல் தன்னை இன்னும் கம்யூனிஸ்ட் என்றே சொல்லிகொள்ளும் வாசுதேவ நாணயக்கார என்ற பாசிச அடிவருடிக்கு மகிந்த – கோத்தா கும்பல் போடும் தீனியின் வயிறுபுடைத்து எடுத்த வாந்தியே பொதுபல சேனா என்பது இன்று வெளிப்படையாகிவிட்டது.

பொது பல சேனாவை ஆரம்பித்த காலத்திலேயே உயர் அமைச்சர்களுக்கன செயலகத்தில் முக்கிய புள்ளியாக வேலைபார்த்த விதானகே 2013 ஆம் ஆண்டு முதல் பொது பல சேனாவின் முழு நேர தலைமை நிர்வாகச் செயலாளர் ஆகிவிடுகிறார்.

ஆக, நோர்வே அரசின் தன்னார்வ நிறுவனம், கோத்தாபய ராஜபக்ச, லியந்த விதானகே இடையேயான மர்மத் தொடர்பு ஒன்றின் அடிப்படையிலேயே பொதுபல சேனா ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை இங்கு எந்த ஆழமான அரசியல் படமாக்கலும் இல்லாமலேயே புரிந்துகொள்ளலாம். இந்த இடைக்குள் மொட்டையாக பொது பல சேனாவைத் தடைசெய்யுங்கள் என மதில் மேல் பூனை போல கூறும் வாசுதேவவும் சமன்பாட்டில் மற்றொரு அங்கமாக இருக்கலாம்.

மிக நீண்டகாலமாக பௌத்த தீவிரவாத்தைப் பரப்பபுவதற்குத் திட்டமிட்டிருந்த நோர்வே, அமெரிக்கா, கோத்தாபய இணைந்த நாசகார சக்திகள்,  பொது பல சேனா  அமைப்பை 7ம் திகதி மே மாதம் 2013 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கின்றனர். அதற்கு முன்பதாக 2011 ஆம் ஆண்டு பொது பல சேனாவின் இன்றைய மத்திய குழு உறுப்பினர்கள் நோர்வேயை நோக்கிப் பயணமாகின்றனர்.

பொது பல சேனாவை உருவாக்கும் பௌத்த துறவிகளுடன் திலந்த விதானகே யும் நோர்வே நாட்டிற்குச் செல்கின்றனர். நோர்வேக்கான பயணத்தை ஒழுங்கு படுத்தியவர்கள் இரண்டுபேர். ஒருவர் திலந்த விதனகே மற்றவர் ஆர்ன் ஜோர்டோப்(Arne Fjortoft). இரண்டாமவர் நோர்வே நாட்டவர். இலங்கையில் WIF இன் நிர்வாக இயக்குனராக திலந்த விதனகேயிற்குப் பின்னதாக வேலைபார்ப்பவர்.

மகிந்த ராஜபக்சவுடன், கிரீட் லோச்சன்

WIF உடன் இணைந்து பொது பல சேனா அமைப்பாளர்களின் பயணத்தை ஏற்பாடு செய்த மற்றைய அமைப்பு (Norwegian Peacebuilding Resource Centre)NOREF என்று இலங்கைகான நோர்வே நாட்டின் தூதுவர்கிரீட் லோச்சன் (Ms.Grete Løchen)  கூறுகிறார். நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பௌத்த அடிப்படைவாதத் துறவிகள் புலம்பெயர் தமிழ்ப் பிரதிநிதிகளைச் சந்திப்பதாகவே தாம் எண்ணியிருந்தோம் என்கிறார் நோர்வே துதுவர்.

சரி நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் பௌத்த துறவிகளும் என்ன உறவு, இலங்கையில் தேசிய இனப்ப்பிரச்சனை உள்ளதே தவிர மதப்பிரச்சனை கிடையாது என்பதெல்லாம் நோர்வேக்குத் தெரியாதா என்ற கேள்விகள் எல்லாம் தொக்கு நிக்க பிக்குகள் நோர்வே நாட்டிற்குப் பயணமாகின்றனர்.

இந்தப் பயணத்திற்கான பணம் நோர்வே அரசினால் வழங்கப்பட்டது என்றும் அது ‘ஒரு தடவை மட்டுமே’ வழங்கப்பட்டது என்றும் மீண்டும் ஒரு ‘உலக மகா உண்மையை’ நோர்வே தூதுவர் நம்பச் சொல்கிறார்.

ஒரு தடவை செய்தால் குற்றமில்லை என்பது என்று வாதாட முயலும் நோர்வே அரசு அப்படமாகப் பொய் சொல்கிறது. அமெரிக்கா, நோர்வே, கோத்தாபய, விதானகே, வெறிகொண்ட பௌத்த துறவிகள், தமிழ் மற்றும் முஸ்லீம் இடைத் தரகர்கள் என்ற மிகப்பெரும் வலைப்பின்னல்கள் இணைந்து நீண்டகாலமாகத் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டதே பொதுபல சேனா. மகிந்த இனக்கொலை அரசின் தொழில் முறைக் கிரிமினல்களுடன் இணைத்து இன்று தெருவில் அவிழ்த்துவிடப்பட்டுள்ள இந்த வன்முறைக் கும்பலின் நோக்கம் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தவல்லது.

நோர்வேக்குப் பயணமான பௌத்த சிங்களப் பயங்கரவாதிகள் சுவீடன் பாரிஸ் ஊடாக இலங்கைக்கு வரும் வரை யார்யாரையெல்லாம் சந்தித்தனர், பொது பல சேனா எப்படி இயக்கப்படுகிறது, இந்த நாசாகாரக் கூட்டின் எதிராகாலத் திட்டம் என்ன என்பன போன்ற தகவல்களுடன் மிகுதி விரைவில்…

பொது பல சேனா – நோர்வே,அமெரிக்கக் கூட்டுச் சதி – விலகும் மர்மம்(2)

Exit mobile version