சிங்கள இனம் ஒரு கலப்பினம் ஆகும். இலங்கையின் பூர்வீக குடிகளான நாகர், இயக்கர், இராட்சதர், தேவர் போன்ற இனத்தவரே நாளடைவில் சிங்களவர்களாக உருவெடுத்தனர். வேடர் விதிவிலக்கு. அவர்கள் தங்கள் தனித்துவத்தை இன்றும் காப்பாற்றி வருகிறார்கள். குவேனி இயக்கர் குலப் பெண் என்று மகாவம்சம் கூறுகின்றது. இராவணன் இராட்சத குல மன்னன் என எண்ணப்படுகிறான்.
இன்றைய சிங்கள இனத்தவர் ஆதி காலத்தில் இந்துக்களாக இருந்து பின்னர் பவுத்த மதத்துக்கு மாறியவர்கள். மனுதர்மம் போன்ற நூல்கள் முற்பிறப்பில் செய்த வினைப் பயனே சாதியில் மேலோனாகவும் கீழோனாகவும் பிறப்பதற்குக் காரணமென்ற சித்தாந்தத்தை கொண்டவை. இலங்கையில் பவுத்தமானது அதன் முற்போக்குத் தன்மையை இழந்து இந்துத்துவ சிந்தனைமுறையைப் பின்பற்றுகிறது. றதல, கொவிகம ஆகிய ஆதிக்க சாதிகள் தங்களை உயர் சாதியரெனப் பிரகடனப்படுத்த இந்த சித்தாந்தம் உதவுகிறது.
இரண்டாம் இடத்தில் ‘கொய்கம’ எனும் சாதிப்பிரிவினர் காணப்படுகிறார்கள். இவர்கள் சிங்கள சமூகத்தில் 50 விழுக்காட்டினர் ஆவர். அரசனுக்கு சேவகம் செய்து வந்தவர்களாகவும் பிற்பாடு அவர்களின் செல்வாக்கின் பயனாக விவசாய ஆதிக்கம் இவர்களிடமே இருந்துவந்துள்ளது. சிங்களவர்கள் மத்தியில் ஆதிக்க சாதியான கொவிகம இன்றுவரை இலங்கையின் அரசியல் – பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறது. விதி விலக்காக சாதி அடுக்கில் மிகவும் பிற்பட்ட இடத்தில் இருந்த இரணசிங்க பிரேமதாச 1988 இல் இலங்கையின் சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அடுத்து ‘கரவா’ (கரையோரப் பகுதிமக்கள்) ‘பத்கம’ (கொய்கம சாதியினருக்க சேவகம் செய்பவர்கள்) ‘வக்கும்புர’ (சக்கரைத்தொழில்) எனும் சாதிப்பிரிவினர் இடைப்பட்ட சமூக தட்டில் இருக்கும் சாதியினராகும்.
சிங்களச் சமூகத்தின் விளிம்பு நிலைச்சமூகமாக இருப்பவர்கள் ‘கின்னர’ (காட்டிலுள்ள மூலப்பொருட்களை பயன்படுத்தி பாய்போன்ற கைப்பணிப் பொருட்களை செய்பவர்கள்) ‘கஹல’ (குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவோர்) ‘றொடியா’ (துப்பரவுப்பணி புரிபவர்கள்.) மற்றும் ‘நவன்தன்ன’ (கொல்லர்) ‘கும்பல்’ (குயவர்) ‘படு’ (சலவைத்தொழில்) ‘துறாவ’ (சீவல்தொழில்) ‘சலாகம’ ( (கறுவாத்தொழில்) ‘பெறவா’ (பறைமேளம் அடிப்பவர்கள்) ஆகியோர் ஆவர்.
இலங்கையில் சிங்கள (பவுத்த மத) சாதியத்தைப் பற்றிக் குறிப்பிடும் மிகவும் பழமைவாய்ந்த மானுடவியல் நூலான ”ஜனவங்சய”வில் 26 சாதிகள் குறிப்பிடப்படுகிறது. மத்தியகால இலங்கையில் இருந்ததாகச் சொல்லப்படும் சாதிகள் 17ஐ ஜே.டி.லெனரோல் குறிப்பிடுகிறார். பேராசிரியர் நந்ததேவ விஜேசேகர எழுதிய ”இலங்கை மக்கள்” எனும் நூலில் 43 சாதிகளின் பட்டியலைக் குறிப்பிடுகிறார்.
1. அஹிங்குந்தய (நாடோடிகள்)
2. பட்டஹல – குயவர்
3. பத்கம – பாரம்பரிய விவசாயிகள் (பிரித்தானிய ஆட்சியின் போது இவர்கள் பல்லக்குத் தூக்கிகளாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள்)
4. பெராவ – பறையடிப்பவர்
5. கொவிகம – பாரம்பரிய கமக்காரர்கள் மற்றும் பண்ணையாளர்கள்.
6. ஹாலி – நெசவாளர்கள்
7. ஹன்னாலி – தையற்காரர்
8. ஹூனு – சுன்னக்கல் செய்பவர்கள்.
9. கின்னரய – பாய் பின்னுபவர்கள்.
10. நவந்தன்ன – பொற்கொல்லர். (பல கிளைச்சாதிகளைக்கொண்டது)
11. பமுனு – கூலி விவசாயிகள்
12. பன்ன – புல்வெட்டுவோர்
13. அம்பெட்ட (பனிக்கி) – முடி திருத்துவோர்
14. பட்டி – கால்நடை வளர்ப்போர்
15. பொரவக்கார – மரம் தறிப்போர்
16. றதல – நிலப்பிரபுக்கள் (குறிப்பாக கண்டி இராச்சிய காலத்தில்)
17. ராஜக்க, ஹேன – சலவைத்தொழிலாளர்கள்
18. றொடியா -தாழ்த்தப்பட்டோர்
19. வக்கும்புர (ஹக்குறு) – கருப்பட்டி தயாரிப்பாளர்கள்
20. கராவ – பாரம்பரிய மீன்பிடித் தொழில் செய்வோர்
21. துராவ – பாரம்பரிய படைவீரர் – காலனித்துவத்திற்குப் பின் கள் இறக்குவோர்
22. கட்டர – விவசாயிகள்
23. தெமல கட்டர – தமிழ் தாழ்த்தப்பட்டோர்
24. பட்டஹல (கும்பள்) – குயவர்
25. ஹன்னலி – தையற்காரர்
26. ஹின்ன – சலாகம சாதியனருக்கான சலவைத்தொழிலாளர்
27. ஹாலி – நெசவு, ஐரோப்பியர் காலத்தில் கருவா தொழில்
28. கஹல – கொலைத் தண்டனை நிறைவேற்றுவோர், சுத்திகரிப்போர்
29. கின்னர – பாய் பின்னுவோர்
30. ரதா – உயர்சாதியினருக்கு உடைதுவைப்போர்
31. ஹின்ன – மாவு சலிப்போர்
32. சலாகம – கருவா செய்கையில் ஈடுபடுவோர்
சிங்கள சாதியமைப்புக்கும் தமிழ் சாதியமைப்புக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதைக் காணலாம்.
கரவ, துரவ, சலகம போன்ற சிங்கள சாதிகள், தென்னிந்தியாவில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் என்பதற்கான வரலாற்று சான்றுகள் உள்ளன. பண்டாரநாயக்கவின் மூதாதையர் கூட, தமிழ்நாடு மற்றும் கேரளம் இரண்டிலும் இருந்து வந்தவர்களே. நாயக்க என்ற பின்னொட்டு பெயர்களைக் கொண்டோர் தமிழ் பின்னணியைக் கொண்டவர்களே. பண்டாரநாயக்கா, ஜெயவர்த்தன உட்பட அதிதீவிர சிங்கள – பவுத்தர்கள் தமிழ்ப் பரம்பரையில் வந்தவர்கள். இவர்களே சிங்கள – பவுத்த தேசியத்தை உருவாக்கியவர்களில் முன்னிலை வகித்தார்கள்.
துறாவ வகுப்பினர் கேரளத்து ஈழவர், தமிழ்நாட்டு நாடார் வகுப்பினரோடு ஒத்தவர்கள். இன்றைய வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர துறாவ வகுப்பைச் சேர்ந்தவர் ஆவர்.
கரவா, சலாகம, துறாவ சாதியினர் போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர் காலத்தில் தமிழ்நாடு மற்றும் .இன்றைய கேரள (சேரநாடு) நாடுகளில் இருந்து கொண்டு வந்து தென்னிலங்கையில் குடியேற்றப்பட்டவர்கள். இவர்களில் பெரும்பான்மை மீனவ சாதியினர். சிறுபான்மை படையினர்.
சிங்களவர்களின் மத்தியில் இன்றைக்கும் காணப்படும் ஒவ்வொரு சாதியும் தனக்கென தனியான வரலாற்றைக் கொண்டுள்ளது. சிங்கள சாதிகள் எல்லாமே தென்னிந்தியாவை பூர்வீகமாக கொண்டுள்ளன.
அஸ்கிரியா – மல்வத்தை பவுத்த பீடங்கள் கொய்கம தவிர்ந்த ஏனைய சாதியினரை சங்கத்தில் சேர்ப்பதில்லை. இதனால் கரவா. சலாகம மற்றும் துவார சாதிகளைச் சேர்ந்தவர்கள் மைனமார் சென்று குருப்பட்டம் சூட்டிக் கொண்டார்கள். இவர்கள் அமரபுர என்ற பவுத்த மத பீடத்தை நிறுவினார்கள். இந்த சாதியினர் சிலர் சாதிப் பாகுபாடு காரணமாக கிறித்தவர்களாக மாறினார்கள்.
கொய்கம சாதிப் பிரிவுக்கு அடுத்ததாக உள்ள கரவா அல்லது மீனவ சாதியினர். இவர்களை தென்னிலங்கை கரையோரப் பகுதிகளில் செறிந்து வாழ்கிறார்கள். மொத்த சிங்கள மக்களது தொகையில் 10 விழுக்காட்டினர் இந்த சாதியைச் சேர்ந்தவர்களே. இவர்கள் நீர்கொழும்பு, புத்தளம், வென்னப்புவ, கொழும்பு வடக்கு, மொறட்ருவா, பாணந்துறை போன்ற நகரங்களில் செறிந்து வாழ்கிறார்கள்.
பவுத்த மதம் சாதி பாராட்டுவதில்லை. புத்தர் தனது காலத்தில் சகல சாதியினரையும் சங்கத்தில் சேர்த்துக் கொண்டார். பிறப்பு என்பது அவனவன் செய்த தீவினை நல்வினை என்ற இருவினைப் பயனாக தீர்மானிக்கப்பட்டுவிட்டன என்ற கருத்தாக்கங்களை புத்தர் நிராகரித்தார். “ஒருவன் தன் பிறப்பால் பிராமணனாகவோ விலக்கப்பட்டவனாகவோ மாறுவதில்லை. அவனது நடத்தையே அவனது குணத்தைத் தீர்மானிக்கின்றமது. நடத்தை மட்டுமே முக்கியம்” என்றார். புத்தரின் கருத்து திருக்குறளிலும் காணப்படுகிறது.
ஒரு காலத்தில் கண்டிச் சிங்களவர்கள் கரையோரச் சிங்களவர்களை மணம் செய்து கொள்வதில்லை. ஏன் சிங்களவர் என்றே கரையோரச் சிங்களவர்களை சொல்வதில்லை. இன்று கண்டிச் சிங்களவர் கரையோரச் சிங்களவர் என்ற பாகுபாடு அடியோடு இல்லாது போய்விட்டது.
சாதியமைப்பின் ஊற்றுக்கண் வர்ணாசிரம தர்மமே. வருணாசிரம கோட்பாட்டின்படி பிராமணரே உயர்ந்தவர்கள். அடுத்து ஷத்திரியர்களும், வைசியர்களும் நான்காவதாக சூத்திரர்களும் வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த வருண அமைப்பே பின்னர் அவரவர் செய்யும் தொழில் அடிப்படையில் நூற்றுக் கணக்கான சாதிகள் உற்பத்தி செய்யப்பட்டன. அப்படி உற்பத்தி செய்யப்பட்ட பின்னர் அது பிறப்பின் அடிப்படையில் அமைந்துவிட்டது. முன்னைய காலங்களில் வேளாளர் என்போர் பயிர்த் தொழில் செய்தார்கள். இன்று அவர்களில் பெரும்பான்மை வேறு வேறு தொழில் செய்கிறார்கள். இருந்தும் பிறப்பின் அடிப்படையில் வந்த சாதி தொடர்கிறது.
மொத்தம் 443 ஆண்டு கால கொலனித்துவ ஆட்சி, பொருளாதார உற்பத்தியில் ஏற்பட்ட மாற்றங்கள், எல்லோரும் கல்வி கற்கும் வாய்ப்பு, போக்குவரத்து போன்ற காரணிகளால் சாதிக் கட்டமைப்பில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சில சாதிகள் வழக்கொழிந்து போயின. சில சாதிகள் புதிதாகப் புகுந்து கொண்டன. தகப்பன் செய்த தொழிலை மகன் செய்ய வேண்டும் என்ற நியதி பேரளவு குறைந்துவிட்டது.
எம்எல்டி மகிந்தபால போன்ற தீவிர – சிங்கள பவுத்த தேசியவாதிகள் கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறியக் கூடாது. சாதி பாகுபாட்டில் தமிழ் – சிங்கள சமூகங்கள் இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.