நடந்து முடிந்துள்ள பீகார் மாநில தேர்தல் எதிர்கால இந்தியாவுக்கான மாடல் தேர்தலாகப் பார்க்கப்படுகிறது. காரணம், இதுவரை இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் ஆட்சிக்கவிழ்ப்பு குதிரை பேரம் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி வந்த பாஜக முதன் முதலாக தன் கூட்டணிக் கட்சி ஒன்றை பலவீனமாக்கி அதையே தன் பலமாக மாற்றியுள்ளதால் இதே பாணியில் தமிழகத்திலும் ஆட்சியைப் பிடிக்குமா? அதாவது பீகாரில் நிதிஷ்குமார் போல தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியைப் பயன்படுத்தி அதிமுகவின் கட்டமைப்பை தன் வெற்றிக்கு பாஜக பயன்படுத்திக் கொள்ளுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன?
ஆனால், நேரடியாக இதற்கு பதில் சொல்வதாக இருந்தால் இப்போதைக்கு இல்லை எனலாம். ஆனால், இப்போதிருந்தே அந்த முயற்சிகளை பாஜக துவங்கியிருக்கிறது என்பதாகவும் கொள்ளலாம்.
இன்று நினைத்து நாளை தமிழகத்தைக் கைப்பற்றுவது பாஜகவின் நோக்கம் அல்ல. இப்போதிருந்தே துவங்கி அடுத்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கலாம் என நினைக்கிறது பாஜக. தங்கள் ஆசையை நிறைவேற்ற கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்புதான் அதிமுக.
இதற்கு பீகார் மாநில முதல்வரும் நடந்து முடிந்த தேர்தலில் மோசமாக தோல்வியடந்த நிதிஷ்குமாரின் அரசியல் தொடர்பாகவும் சில புரிதல்கள் நமக்கு அவசியமாகின்றன. பீகார் தேர்தல் முடிந்த புதிதில் பாஜகவை தன் தோளில் நிதிஷ்குமார் சுமந்தார் என்றுதான் முதலில் பேசப்பட்டது. ஆனால், இப்போதைய பார்வைகள் இன்னும் நிதிஷ்குமாரின் அரசியல் வரலாற்றை நெருக்கமாக ஆய்வு செய்கின்றன. அந்த ஆய்வின் முடிவில் நிதிஷ்குமாரை பீகார் மக்கள் நிராகரித்து விட்டதை நாம் பார்க்க முடியும். பாஜகவையும் தான் ஆனால் வாக்குகள் சிதறியதால் பாஜக பலவீனமான நிதிஷ்குமாரை விட தான் பலமாக வந்துள்ளது. இது ஒரே நாளில் நடந்தது அல்ல. 1996-ம் ஆண்டில் இருந்து நிதிஷ்குமாரின் பாஜகவுடனான நட்பு தொடர்கிறது.
இடையில் சில காலம் மோடி மீது மட்டும் அவர் அதிருப்தியில் இருந்திருக்கிறார். பாஜகவுடனோ இந்துத்துவ அரசியலுடனோ அவருக்கு எந்த முரண்பாடுகளும் இல்லை என்பதோடு இதை பொருத்திப் பார்க்கிறார்கள்.
ஆனால், பீகாரின் மிகப்பெரிய மக்கள் தலைவராக இருந்த லாலுபிரசாத் யாதவ் திவீரமான இந்துத்துவ எதிர்ப்பாளர் அத்வானியைக் கண்டு நாடே அஞ்சிக் கொண்டிருந்த போது துணிச்சலாக அவரை கைது செய்து ரதயாத்திரையை தடை செய்தவர். பாசிச எதிர்ப்பு, வலதுசாரி எதிர்ப்பு என பிற்படுத்தப்பட்டோருக்கான அரசியலை முன்னெடுப்பவர்.2015-ஆம் ஆண்டு பீகார் சட்டமன்ற தேர்தலில் லாலுவின் கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியை விட நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் குறைவான தொகுதிகளில் வென்ற போதும் நிதிஷ்குமார் பாஜகவுடன் சென்று விடுவார். பாஜக பீகாருக்குள் நுழையும் என்பதை முன் கூட்டியே தெரிந்து. பீகார் முதல்வர் பதவியை நிதிஷ்குமாருக்கு விட்டுக் கொடுத்தார்.
நிதிஷ்குமார் மீது கடுப்பான பாஜக அவரது ஜனதா தளம் கட்சியை முன்னாள் முதல்வர் மாஞ்சியை வைத்து உடைத்தது. ஆனால், பின்னர் நிதிஷ்குமார் லாலுவை கழட்டி விட்டு விட்டு பாஜகவுடனே செட்டில் ஆனார். 1996 முதல் நிதிஷ்குமாரை வைத்து திட்டமிட்டு மாபெரும் மக்கள் தலைவர் லாலுவை வீழ்த்த வளர்த்தெடுத்து இப்போது அவரையும் வீழ்த்தியிருப்பதையும் நாம் பார்க்க முடியும்.
243 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட பீகாரில் பாஜக- நிதிஷ்குமார் அணி தேசிய ஜனநாயகக் கூட்டணி என அழைக்கப்பட்டது. ஐக்கிய ஜனதா தளம் 115 பாஜக 110 இடங்களிலும் மீதி இடங்களில் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிட்டன. இதில் நாம் கவனமாக ஒன்றைப் பார்க்கலாம் பீகாரில் பெரும்பான்மை பெற 122 இடங்கள் தேவை. நிதிஷ்குமார் போட்டியிட்ட தொகுதிகள் பெரும்பான்மை பெற தேவையானவற்றை விட குறைவானது. ஆனால், பாஜக கடந்த தேர்தலை விட சுமார் இருபதுக்கும் மேற்பட்ட தொகுதிகள் அதிகம் பெற்று போட்டியிட்டது.
லாலுவின் மகன் தேஜஸ்வி -காங்கிரஸ் கூட்டணி மகாபந்தன் கூட்டணி என அழைக்கப்பட்டது. அதில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 144 இடங்களிலும், காங்கிரஸ் 70 இடங்களிலும் சிபிஐ (எம்.எல்) 19 இடங்களிலும் ஏனைய கம்யூனிஸ்ட் கட்சிகள் பத்து இடங்களிலும் போட்டியிட்டது. ஆனால், காங்கிரஸ் தன் சக்தியை மீறி தொகுதிகளைப் பெற்று தான் தோற்றதோடு தேஜஸ்வியின் வெற்றியையும் தடுத்து விட்டது. பாஜக தன் கூட்டாளியை பலவீனமாக்கி தன்னை பலப்படுத்திக் கொண்ட நிலையில் காங்கிரஸ் தன் கூட்டாளியின் வெற்றிக்கே கேடு செய்து விட்டதையும் நாம் பார்க்கிறோம். ஆனால், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் போன்ற இயக்கம் 12 தொகுதிகளில் வென்றது இந்தியாவின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தேஜஸ்வி முதல்வர் ஆகாமல் போனாலும் அதிக தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சி என்பதை நிரூபித்தி தனது செல்வாக்கையும் நிரூபித்திருக்கிறார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் 52% சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. 75 இடங்களில் அதிக இடங்களில் வென்றுள்ளது. இந்த முறை 23 இடங்களில் 2000 க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் வலதுசாரிகளை எதிர்ப்போர் சிதறி நின்றால் வாக்குகள் உடையும் போது பாஜக தன்னை பலம் பொருந்திய கட்சியாக உருவாகிறது என்பதையே பீகார் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகிறது.
தமிழகம்
ஏராளமான இடங்களில் பாஜக தமிழகத்தில் நோட்டாவை விட குறைவான வாக்குகளைப் பெறும் நிலையில், அதிமுக கூட்டணியில் 60 தொகுதிகளைக் கேட்டு 30 தொகுதிகளை வாங்கி அதில் 15 தொகுதிகளில் வென்று சட்டமன்றத்தில் வலுவான கட்சியாக காலூன்ற விரும்புகிறது.கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்புவரை பாஜக தமிழகத்தில் வெற்றிடம் என்று பேசி வந்தது. ஆனால், அதிமுக 39 தொகுதிகளிலும் வென்றது. ஒரே ஒரு தொகுதியில்தான் அதிமுக-பாஜக கூட்டணி வென்றது. மோடி அலை வீசிய 2014-ல் கூட பாஜக தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெல்ல வில்லை.2019-ல் முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெல்ல காரணம் காங்கிரஸ் கட்சி வழக்கம் போல அதிக தொகுதிகளைப் பெற்று தேனியில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவை நிறுத்தியது. அதனால் அந்த தொகுதி அதிமுக பக்கம் சென்றது.
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என்பது யதார்த்தமான நிலை என்னும் சூழலில் பாஜக 10 தொகுதிகளில் வென்றால் கூட அவர்களின் எதிர்கால இந்துராஷ்டிர தமிழகத்தை உருவாக்க அது முதல் புள்ளியாக அமையலாம். அதற்கு தமிழக வாக்காளர்கள் வழக்கம் போல இடம் கொடுக்க மாட்டார்கள் என நாம் நம்பலாம்.