பிட்கொயின்(Bitcoin):
பிட்கொயின் என்பது டிஜிட்டல் நாணயத்தின் ஒரு அலகாகும்( A unit of digital currency). இதற்கென ஒரு பௌதீக வடிவம் இல்லை. இது கணனிக்குறியீட்டுத் தொடரிலேயே பேணப்பட்டுவருகின்றது. Satoshi Nakamoto என்பவரினால் (இவர் இன்னமும் முழுமையாக அடையாளங்காணப்படவில்லை) 2009 தை மாதத்தில் பிட்கொயின் வெளியிடப்பட்டது. இந்த பிட்கொயினை இணையத்தில் (Blifinex, Coinbase , etc) வாங்கவும் விற்கவும் முடியும். இந்த பிட்கொயினை சாதாரண கோப்பி குடிப்பதற்கு முதல் விடுமுறை கால முன்பதிவு இணையத்தளங்களில் செய்வதற்குவரை பயன்படுத்தலாம். இவ்வாறான செலவீனங்களை மேற்கொள்வதனைக் காட்டிலும் முதலீட்டு நோக்கத்தில் இந்த நாணயத்தை வாங்குவோரே அதிகம்.
பிட்கொயின் முதலீடுகள் பாதுகாப்பானவையா?
மேலும் இதன் ஆதரவாளர்கள் இங்கு ஏற்படும் ஏற்ற இறக்கங்களை பங்குச் சந்தையுடன் ஒப்பிடுகிறார்கள். அந்த ஒப்பீடும் தவறு, ஏனெனில் பங்குகளின் தளம்பல்களை ஒரளவிற்குப் பொருளியல், அரசியல் அறிவுடையோரால் எதிர்வுகூறமுடியுமாகக் காணப்பட, மறுபுறத்தே பிட்கொயின் தளம்பல்களை யாராலும் எதிர்வுகூற முடியாதநிலையே காணப்படுகிறது.
இந்த பிட்கொயின் நடைமுறை சற்றுச் சிக்கலானதாயினும் நாம் எளிமையாக விளங்கிக்கொள்ள இதனை நாம் வளர்முக நாடுகளில் காணப்படும் வைப்புக்களிறகு அதிக வட்டி வழங்கும் தனியார் நிதிக்கம்பனிகளுடன்(finance companies) ஒப்பிட்டு விளங்கிக்கொள்ளலாம். இந்த நிதிக்கம்பனிகள் வங்கிகளைவிட வைப்புக்களிற்கு அதிகவட்டி வழங்குவதால் திடீரென வாடிக்கையாளர்கள் படையெடுப்பர். வைப்புக்கள் அதிகரிக்க அதிகரிக்க வட்டியும் அதிகமாக வழங்கப்படும். வைப்புக்களின் வருகை ஒரு கட்டத்தில் குறைய ஆரம்பிக்க இந்த நிதிநிறுவனங்கள் பிரச்சனைகளைச் சந்திக்கும். வளர்ந்ததை விட பல மடங்கு வேகத்தில் சரிவடையும். இதே நிலமைதான் இந்த பிட்கொயின்களிற்கும் ஏற்படப்போகின்றது.
இந்த பிட்கொயின்களின் பெறுமதியானது எப்போதுமே இன்னொருவரின் வாங்கும் விருப்பத்தில் மட்டுமே தங்கியுள்ளதுடன் இதன் பெறுமதியினை உறுதிப்படுத்துவோரும் யாருமில்லை. ஒரு கட்டத்தில் இதனை வாங்குவோரின் விருப்பம் குறைவடையத்தொடங்கும்போது,இதன் சரிவும் ஆரம்பிக்கும். இதிலுள்ள மற்றொரு குறைபாடு யாதெனில் மற்றைய முதலீடுகளில் காணப்படும் வருமானவழிமுறைகள் எதுவுமே இதிலில்லை. அதாவது பங்குமுதலீட்டில் கிடைக்கும் பங்கிலாபம், வீட்டுமனைத்துறை (Real estate)யிலுள்ள வாடகை போன்ற வருமான மூலங்கள் எதுவுமே இங்கில்லை. இந்த பிட்கொயினானது பெறுமதி அதிகரிப்பில் மட்டுமே தங்கியிருப்பதுடன், அதன் பெறுமதிக்கு எந்தவித உத்தரவாதமும் காணப்படவில்லை. மேற்கூறிய காரணங்களாலேயே பிட்கொயினானது ஒரு முதலீடாகவல்லாமல் சூதாட்டமுறையாகவே கருதப்படவேண்டியுள்ளது.
இதுகாறும் பிட்கொயின் நடைமுறையால் பொதுமக்களிற்கு ஏற்படும் பாதிப்புக்களைப் பார்த்தோம். அரசுகளைப் பொறுத்தவரையில் பிட்கொயினானது ஒரு கறுப்புப்பண முதலீடாகவும், சட்டவிரோத மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளிற்கான பணப்பரிமாற்ற வழியாகவும் இலகுவாக பயன்பட நிறைய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. இவளவு ஆபத்துக்கள் காணப்படுகின்றபோதும் இந்த பிட்கொயினை அரசுகள் கண்டுகொள்ளாமலிருப்பதற்கான அரசியல் நுட்பமாக ஆராயப்படவேண்டியுள்ளது.