Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழினியின் கூர் வாளின் பின்னணியில்… : வியாசன்

thamiliniவன்னி இனப்படுகொலை நடத்தி முடிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் வெறுமையோடு கலைந்துவிட்டன. போராட்டமும் சுய நிர்ணைய உரிமைக்கான நியாயமும் சர்வதேச மயப்படுத்தப்படுகிறது என்ற தலையங்கத்தில் அவற்றை அழிப்பதற்கான அத்தனை வழிமுறைகளும் கையாளப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபை உட்பட இராசதந்திரிகள் என உலாவரும் அதிகாரிகளின் பார்வைக்குள் மட்டுமே மக்களின் உயிர்களும் தியாங்களும் முடக்கப்பட்டுவிட்டது. வரலாற்றின் வரைபடங்களில் கூட இடம்பெற்றிராத தீவுகளின் போராட்டங்கள் கூட உலகின் ஜனநாயகவாதிகளை மையப்படுத்தி சர்வதேச மயப்பட்டிருக்க, ஈழப்போராட்டம் மட்டும் அதிகாரிகளின் பிடிக்குள் முடக்கப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டது.

தமிழ்ப் பேசும் மக்களின் தன்னுரிமையைக்கான நியாயத்தை சர்வதேச மயப்படுத்துகிறோம் என அதனைக் கையகப்படுத்தி அழித்த பெருமை புலம்பெயர் அமைப்புக்களையே சாரும்.

தவிர, போராட்டம் தொட ர்பான காத்திரமான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்குக் கூட இக் கால இடைவெளி பயன்படுத்தப்படவில்லை. உலகின் அத்தனை போராட்டங்களின் தோல்விகளும் வெற்றிகளும் உலக மக்களுக்கும் புதிய சந்ததிக்கும் நிறையவே கற்பித்திருக்கின்றன. ஈழப் போராட்டத்தின் அழிவு இரண்டு ஆபத்தான முகாம்களுக்குள் அரசியலை முடக்குவதில் முடிவடைந்திருக்கிறது.

புலி ஆதரவு இல்லையெனின் புலி எதிர்ப்பு என்ற இரண்டு வியாபாரக் கும்பல்களின் பிடிக்குள் அரசியல் முடக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு எதிரெதிர்த் துருவங்களுக்கு அப்பால் சமூகத்தின் இயக்கம் தடுத்துவைக்கப்பட்டு தண்டிக்கப்படுகின்றது.

இந்த இரண்டு துருவங்களைக் கடந்து தமிழ்ப் பேசும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைக்கான போராட்டத்தின் நியாயம் வெளியே வராத வரைக்கும் அது மேலும் அழிவுகளுக்கே உள்ளாக்கப்படும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கதின் பெண் தலைவர்களின் ஒருவரான தமிழினியின் கூர் வாள் என்ற நூல் அவரின் அரசியல் வாழ்வு என்பதை புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்த பலரும் ஏற்றுக்கொள்ள, நூல் தொடர்பான விமர்சனங்களும் இந்த இரண்டு முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளது.

புலிகளின் ஆரம்பகாலங்கள் தொடர்பான விமர்சனம் சுய விமர்சனம் என்ற அடிப்படையிலான நூலான ஐயரின் ‘ஈழபோராட்டத்தில் எனது பதிவுகள்’ வெளியான நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழினியின் ‘கூர் வாளின் நிழலில்’ நூல் வெளியாகியிருக்கிறது.

ஈழப் போராட்டம் தொடர்பான இன்றைய ‘நாடுகடந்த’ அரசியலை நாடி பிடித்துப் பார்ப்பதற்கு தமிழினியின் நூலை விட அது தொடர்பான விமர்சனங்களே போதுமானவை.

நூலின் பல்வேறு கூறுகள் புலிகள் இயக்கத்தை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளதால் அதனை முதலில் கையகப்படுத்திக்கொண்டவர்கள் புலியெதிர்பாளர்களே. நூல் வெளியிடு, அது தொடர்பான விமர்சனங்கள் போன்ற அனைத்து சம்பிரதாயங்களும் புலியெதிர்ப்பாளர்களாலேயே முன்வைக்கப்படுகின்றன. இவர்களி ல் பெரும்பாலனவர்கள், இலங்கை அரச சார்புக் குழுக்களையும், ஏகாதிபத்திய நிதி வழத்தில் இயங்கும் தன்னார்வ நிறுவனங்களையும், இது போன்ற அதிகாரம் சார்ந்த நிறுவனங்களையும் மையமாகக்கொண்டு செயற்படுபவர்கள்.

இலங்கை அரசின் பெருந்தேசிய ஒடுக்குமுறையிலிருந்து அதன் இனப்படுகொலை வரைக்கும் இந்த நபர்களின் பார்வைக்கு ஒடுக்குமுறை என்ற பக்கத்திலிருந்து எட்டுவதில்லை. அதிகாரவர்க்கத்தின் பிரதி விம்பங்களான இக் குழுக்களைப் பொறுத்தவரை புலி எதிர்ப்பு என்பது அரசைச் சார்ந்து செயற்படுவதற்கான தந்திரோபாயம்.
புலிகள் இயக்கத்தின் மீதான விமர்சனம் என்பது எதிர்காலத்தைச் செழுமைப்படுத்துவதற்கானதா அன்றி அதனை அழிப்பதற்கா என்ற வினவப்பட வேண்டும். ‘புலி எதிர்ப்புக்’ கும்பல்களைப் பொறுத்தவரை போராட்டத்தையும், உரிமைக்கான குரலையும் புலிகளின் தவறுகளை முன்வைத்து அழிப்பதற்கான ஆயுதமாகவே விமர்சனம் பயன்படுகிறது. அதிகாரவர்க்கத்தின் தரப்பிலிருந்து முன்வைக்கப்படும் விமர்சனமாகவே புலியெதிர்ப்புக் கும்பல்களின் கூச்சல்கள் கணிக்கப்பட வேண்டும்.

இந்தச் சூழலில் புலிகள் இயக்கத்தின் தவறுகளை முன்வைத்து மொத்தப் போராட்டத்தையும் அழிக்க முனையும் புலி எதிர்ப்புக் கும்பல்களுக்கு தமிழினியின் நூல் பொன்முட்டை போடுகின்ற வாத்து! எந்தக் கூச்சமுமின்றி முன்னை நாள் பெண் போராளி ஒருவரின் வாக்குமூலத்தை அரச பாசிஸ்டுக்களின் சார்பில் கையகப்படுத்திக்கொண்ட இக் குழுக்கள் தமக்கு வழங்கப்படும் ஊதியத்திற்காக உழைக்கும் கைக்கூலிகள்.

இதன் மறுபக்கத்தில் புலி ஆதரவுக் குழுக்கள் தமது வியாபார இருப்பிற்காகப் புலிகளைப் புனிதப்படுத்தி வழிபட வேண்டியை கட்டாயத்திலுள்ளனர். தவறுகளை நியாயப்படுத்துவதன் ஊடாக புலி எதிர்ப்புக் குழுக்களை வளர்க்கும் இவர்கள் போராட்டத்தின் மீதும் மக்கள் மீதும் எந்த நம்பிகையும் அற்றவர்கள்.மக்களின் கண்ணீரையும் அவலத்தையும் தமது சொந்த வயிற்றுப்பிழைப்பிற்காகப் பயன்படுத்திக்கொள்பவர்கள்.

புலிகள் இயக்கம் மட்டமன்றி கடந்த காலப் போராட்டம் மற்றும் வரலாறு தொடர்பான மதிப்பீடு ஒன்றை முன்வைப்பதை தமது பிழைப்பிற்கு ஆபத்தானது என்பதை அறிந்துவைத்திருப்பவர்கள். இக் கும்பல்களின் சதியை அறிந்துகொள்ளாத அப்பாவிப் போராளிகள் உட்படப் பலர் இவர்களின் பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர்.

கடந்த காலத்தை விமர்சிப்பது என்பதே எதிர்காலத்தைச் செழுமைப்படுத்தும் என்ற அடிப்படையை துரோகத்தனம் என்று கூறும் இக்குழுக்களைப் பொறுத்தவரை புலி அடையாளம் என்பது வெற்றிகரமாக நடைபெறும் வியாபாரத்திற்கான சின்னம். இந்த அடையாளம் தென்னிந்தியாவில் வாக்குப் பொறுக்கும் சீமான் வை.கோ போன்ற பிழைப்புவாதிகளிலிருந்து மக்களின் பணத்தைச் சூறையாடிய புலம்பெயர் குழுக்கள் வரைக்கும் பயன்பட்டுப் போகிறது.

தமிழினியின் நூல் தொடர்பாக அவதூறுகளை கட்டவிழ்த்துவிடும் இக் கும்பல்கள் மக்களுக்கு உண்மையை அறிந்துகொள்ளும் உண்மையை மறுத்துவருகின்றன. கடந்த காலத்தின் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு புதிய மக்கள் சார்ந்த அரசியலை முன்வைப்பதற்குப் பதிலாக அவற்றை நியாயப்படுத்தி அழித்துவருகின்றன.

தமிழினியின் நூல் வெளியானதும் பதைபதைத்துப்போன இக் குழுக்கள் அவர்மீதானதும் நூல் மீதானதுமான அவதூறுகளை கட்டவிழ்த்துவிட்டன. தமிழ் நாட்டிலிருந்த ‘சினிமப்பாணி’ கதைகளைத் தமிழினியைக் கொச்சப்படுத்தும் வகையில் புனைய ஆரம்பித்துள்ளனர். புலம்பெயர் மற்றும் தமிழ் நாட்டு புலி ஆதரவுப் பிழைப்புவாதிகள் முன்னைநாள் போராளியையும் அவரின் படைப்பையும் கொச்சைப்படுத்தி தமது பிழைப்பை உறுதிப்படுத்திக்கொள்கின்றனர்.

இன்றைய புலம்பெயர் மற்றும் தமிழ் நாட்டை மையமாகக் கொண்டிருக்கும் ஈழ ஆதரவு அரசியலின் இரண்டு பிரதான முகாம்களின் மோதல் தமிழினீயின் கூர் வாளை மட்டுமன்றி சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் நியாயத்தையும் அழித்துத் துவம்சம் செய்கின்றது.

ஆக, பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் சார்ந்த அரசியல் என்பது இந்த இரண்டு முகாம்களின் அழிவிலிருந்தே தோன்ற முடியும். இவர்களின் வஞ்சக அரசியலை நீக்கம் செய்வதலிருந்தே புதிய அரசியல் உதித்தெழ முடியும். அடிப்படை அரசியல் நேர்மையற்ற, மக்கள் விரோதக் குழுக்களான இந்த எதிரெதிர் முகாம்கள் ஒன்றையொன்று ஊட்டி வளர்க்கின்றன. தமிழினியின் நூல் மக்கள் சார்ந்த அரசியல் தளத்தில் விமர்சிக்கப்பட வேண்டும். புலியெதிர்ப்பு மற்றும் புலியாதரவுக் கும்பல்களின் பிடியிலிருந்து கூர் வாள் மட்டுமன்றி, தமிழ்ப் பேசும் அரசியலும் விடுவிக்கப்பட வேண்டும்.

Exit mobile version