இலங்கையின் வடக்குப் பகுதிக்குச் செல்லும் ஒவ்வொரு மனிதனும் ஆனையிறவு இராணுவ முகாமிலும், கிளிநொச்சி சந்திரன் பூங்காவிலும் இராணுவத்தால் உயிரிழந்த இராணுவத்திற்காக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிகளைச் சந்திக்காமல் மேலே செல்லமுடியாது. சாரிசாரியாக மனித குலத்தின் ஒரு பகுயை அழித்துவிட்டு அதே மக்களின் மத்தியில் நினைவுத் தூபிகளை நிறுவிய கொடூரத்தை மக்கள் கனத்த இதயத்துட சகித்துக்கொண்டிருப்பதற்கு ஒரே காரணம் இலங்கை அரசு ஏற்படுத்தியிருக்கும் மயான அமைதி கலந்த அச்சம் மட்டுமே.
இந்த நினைவுத் தூபிகள் இலங்கை சிங்களப் பேரினவாத அரசு இலங்கை என்பது ஒரு தேசம் அல்ல என்று உரக்கச் சொல்வதற்கான குறியீடுகள். இலங்கை என்பது சிங்கள பௌத்த பாசிசத்தால் சிதைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளம்.
இந்தியாவில் இந்துத்துவ பாசிசம், ஐரோப்பாவில் நிறவெறி, தெற்காசியா எங்கும் ஆங்காங்கே துளிர்விடும் மொழி வெறி என்ற என்ற அனைத்திற்கும் இவ்வாறான குறியீடுகள் முக்கியமானவை. மக்களின் மத்தியில் முரண்பாடுகளை ஆழமாக்கி வன்முறையைத் தூண்டும் இனப்படுகொலை இராணுவத்தின் இக் குறியீடுகள் அழிக்கப்படவேண்டும்.
இக் குறியீடுகளின் சொந்தக்காரர்களால் அழிக்கப்பட்ட அப்பாவி மக்களின் நினைவாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நிறுவப்பட்டிருந்த சமாதானத்தின் மக்கள் சார்ந்த குறியீடான முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தரும், முன்னை நாள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளருமான சிறீ சற்குணராஜாவின் ஆணையின் அடிப்படையில் தகர்க்கப்பட்டிருக்கிறது.
ஆரம்பத்தில் தனது சொந்த ஏற்பாட்டிலியே தூபி அகற்றப்பட்டதாகக் கூறிய துணை வேந்தர் சற்குணராஜா, பின்னதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் அழுத்தம் காரணமாகவே அகற்றப்பட்டது என்கிறார்.
ஒரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருக்கான சமூகப் பொறுப்பை கிஞ்சித்தும் சிந்திகாமல் இலங்கை அரச பேரினவாதத்தின் நம்பிக்கையான ஏஜண்ட் போல செயற்பட்டிருக்கிறார் சற்குணராஜா. யாழ்.பல்கலைகழகத்திற்கு ஒரு போராட்ட மரபு உண்டு. ஏதாவது ஒரு மூலையில் அதிகாரத்திற்குத் துணை செல்லமறுத்த வரலாறு உண்டு. சிறீஸ்கந்தராஜா, கேதீஸ்வரன், விமலேஸ்வரன், செல்வி என்ற பல்வேறு மாணவர்களை உரிமைக்கான போராட்டத்தில் பலிகொடுத்துள்ளது. அந்த மரபிலிருந்து பிறழ்வடைந்து குட்டி கோத்தாபய போன்று செயற்படும் சற்குணராஜா மக்களிடம் மன்னிப்புக்கோரி மாணவர்களின் போராட்டத்தோடு இணைந்துகொள்வதே இன்றை துணைவேந்தரின் தார்மீகக் கடமை.
மாணவர்களின் ஒற்றுமைக்குப் ஊறு செய்யும் என்பதாலேயே தாம் தூபியை அகற்ற உத்தரவிட்டதாக மானியங்கள் ஆணைக்குழு ஒப்புக்கொள்கிறது. வடக்குக் கிழக்கில் பிரதான சந்திகளில் அமைக்கப்பட்டுள்ள போர் வெறியூட்டும் இலங்கை இராணுவத்தின் நினைவுச் சின்னங்கள் முழு மக்களையும் இலங்கையிலிருந்து அன்னியப்படுத்தும் செயற்பாடு என்பது தொடர்பாக இந்த உயர்மட்ட நிர்வாக அமைப்பு சிறிதும் ஒப்பு நோக்காமல் பல்கலைக் கழகத்தில் அப்பாவி மக்களுக்கான நினைவுச் சின்னத்தை அகற்றக் கோருவது அருவருப்பானது. நாளை வளரும் சந்ததியை மிருகங்கள் போன்று உருவாக்குவதற்கான முன்னேற்பாடு.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலிருக்கும் அப்பாவி மக்களின் நினைவுச் சின்னம் மீளக் கட்டமைக்கப்படுவதும், இராணுவ வெறியூட்டும் நினைவுச் சின்னங்கள் அகற்றப்படுவதும் மட்டுமே மக்கள் மத்தியிலான முரண்பாடுகளைத் தவிர்க்கும். இதற்கான போராட்டம் சிங்கள மக்களின் ஆதரவோடு முன்னெடுக்கப்படும் அனைத்து சாத்தியமும் இலங்கையில் உண்டு. ஆனால் அதற்கான தலைமைகள் இரண்டுபக்கத்திலுமே இல்லை என்பது தான் கவலைக்கிடமானது.
இச் சம்பவத்தில் பின்னணியில் ஏதாவது உள் நோக்கம் பொதிந்திருக்கிறதா என்ற ஐயம் அச்சம் தருகிறது.
இத் தூபி உடைப்பு நடைபெற்று சில மணி நேரங்களுக்கு உள்ளாகவே கமல்ஹாசன் போன்ற தென்னிந்திய அரசியல் கோமாளிகளே அறிக்கைவிடும் அளவிற்கு இது முக்கியத்துவம் பெற்றது. சமபவத்திற்கு 48 மணி நேரம் முன்பதாகத் தான் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கைக்கு எதிர்பாராத திடீர் பயணம் மேற்கொண்டு திரும்பியிருந்தார். இந்தியாவில் தமிழ் நாட்டில் வன்முறைக்கு ஊடாக ஆட்சியதிகாரத்தைக் கையகப்படுத்த பாரதீய ஜனதாக் கட்சி முயற்சிக்கும் இன்றைய சூழலில், டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தால் முற்றுகையிடப்பட்டிருக்கும் இந்திய அரசின் அவசர இலங்கைப் பயணத்தின் பின்புலத்தில் இந்த நினைவுச் சின்னம் அழிக்கப்பட்ட நிகழ்விற்கான உண்மை புதைந்திருக்கிறதா என்பது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
கடந்த நான்கு மாதங்களாக பீ.ஜே.பி கட்சியின் மைய அமைப்பான ஆர்.எஸ்.எஸ் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் சிலரை இணைத்து Zoom கூட்டங்களை நடத்தியது. அந்த நிகழ்வுகளில் இலங்கையில் தமிழர்களின் உரிமைக்காக ஆயுதப் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் வலியுறுத்தினர். தமிழ் நாட்டிலிருந்து பத்மநாதன் ஐயர் என்பவரின் தலைமையில் நடத்தப்பட்ட Zoom நிகழ்வில் இந்து தமிழ் இராணுவத்தை அமைப்பதற்கான ஆட்சேர்ப்பு தொடங்கிவிட்டதாக அறிவித்தார். இவை தமிழ் நாட்டின் தேர்தலை மையமாக வைத்தே நகர்த்தப்படும் காய்கள் என இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும்.
ஆக, இலங்கையில் வன்முறைக் களம் ஒன்றைஉருவாக்கும் நோக்கில் இலங்கை அரசுடன் இணைந்து இந்திய அரசு செயற்பட்டு அதனூடான வன்முறைகளுக்கு எதிராக எழுச்சி ஒன்றை தமிழ் நாட்டில் உருவாக்கி அதனை பீ.ஜே.பி இன் எதிரிகளுக்கு எதிரானதாகத் திசைதிருப்பும் திட்டத்தின் முதலாவது பகுதி தான் இந்த நிகழ்வா என்ற சந்தேகம் நியாயமற்றதன்று.