Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முட்டாள்களா நாம்…? – மு. நியாஸ் அகமது ( மீள் பதிப்பு )

இதை இன்னும் இரண்டு வாரங்கள் கழித்து தான் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், எனக்கு தொடர்ந்து வரும் மின்னஞ்சல்களும், குறுஞ்செய்திகளும் இதை என்னை உடனடியாக எழுத தூண்டியது.

எந்த வார்த்தை வர்ணனைகளும் இல்லாமல் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன். நான் சொல்லும் விஷயம் உங்களில் பலரை காயப்படுத்த கூடும். ஆனால், அனைவருக்கும் பிடிப்பது போல் என்னால் பேச முடியாது.

இங்கு வெள்ள நிவாரண பணியில் ஈடுப்பட்ட தன்னார்வலர்கள் பலருக்கு அரசியல ஆசை வந்துள்ளது. தொடர்ந்து வரும் அழைப்புகள், மின்னஞ்சல்கள் மூலமாக இதை அறிய முடிகிறது. அரசியல் பழகுவது நல்ல விஷயம் தான். ஆனால், இதில் துரதிஸ்டம் என்னவென்றால், இங்கு பல தன்னார்வலர்கள் அரசியலென்றால், தேர்தலில் நிற்பது, அதிகாரத்தை கைப்பற்றுவது என்ற கண்ணோட்டதிலேயே பதிவிடுகிறார்கள். நண்பர்களே, இன்று ஊடகவியலாளர் அண்ணன் சமஸ் தமிழ் இந்துவில் எழுதி இருப்பது போல் கக்கா போவதில் கூட அரசியல் இருக்கிறது. நாம் முதலில் அதை பழகுவோம்.

வெள்ளம் வரும் போது, நிவாரணம் கொடுப்பது அரசியல் நடவடிக்கை அல்ல நண்பர்களே. வெள்ளம் வரும் முன் காப்பதும், வெள்ளத்தினை உருவாகாமல் தடுக்கும் முறைகளை பற்றி ஆராய்ந்து, மழை நீரினை, முன்னோர்கள் போன்று, சேமித்து பயன் பெறுவதே மக்கள் சேவை. அதுதான் உண்மையான அரசியலாகும் நண்பர்களே…

இப்போது நிவாரணம் கொடுக்கும் நாம், அன்று ஏரிகள் ஆக்கிரமிக்கப்படும் போது, எங்கு சென்றோம்? ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக அன்றே திரண்டிருந்தால் இந்த பேரழிவு ஏற்பட்டிருக்காது. சில மாதங்களுக்கு முன்பு போரூர் ஏரியை காக்க அழைப்பு விட்ட போது, நீங்கள் எத்தனை பேர் திரண்டீர்கள்.? இதில் 1 சதவீதம் கூட அல்ல நண்பர்களே!!!

நாம் பாதுகாப்பான இடத்தில் நின்றுக்கொண்டு நன்மை செய்வது என்பது அரசியல் அல்ல. சொல்ல போனால் அது அரசியல் நடவடிக்கைக்கு எதிரானது நண்பர்களே. நீங்கள் கொஞ்சம் யோசித்து பாருங்கள், நாம் யாரும் நிவாரண பணியில் உடனடியாக இறங்கி இருக்காவிட்டால், இங்கு என்ன நடந்திருக்கும்? நிச்சயம் கலகம் வெடித்திருக்கும். நாம் நிவாரணப் பணியில் உடனடியாக இறங்கியதன் மூலம், மக்களை சாந்தப்படுத்தி உள்ளோம். மக்கள் தன்னெழுச்சியாக கிளர்ந்து எழுந்து அவர்கள் உரிமைகளை கேட்பதை தடுத்து இருக்கிறோம். நாம் நம்மை அறியாமல் இந்த அரசை காப்பாற்றி இருக்கிறோம். (நான் இந்த அரசு என்று சொல்வது அதிமுக வை அல்ல. இந்த அமைப்புமுறையை). உண்மை இவ்வாறானதாக இருக்கும் போது, நாம் நிவாரணம் கொடுப்பது எப்படி அரசியல் நடவடிக்கை ஆகும்? இந்த இவ் அமைப்பு முறையை, இவ்வாறுதான், தொண்டு நிறுவனங்கள், தொண்டு செய்கின்றோம் எனும் பெயரில், மக்கள் போராட்டங்களினை, தமக்கு கீழ் படுத்தும் சாந்தமான முறைகளை பயன்படுத்தி, அரசினை இயக்கும் நிறுவனங்களிடம் இருந்து பணத்தினை உதவியாக பெற்று, அரசுகளை, அழிவுகளை ஏற்படுத்தும் நிறுவனங்களை, மக்களிடம் இருந்து உண்மைகளை மறைக்கும் இலகுவான உத்திகளை பயன்படுத்தி, காக்கின்றன.

நண்பர்களே… நீங்கள் செய்த பணியை நான் கொச்சைபடுத்துவதாக எண்ண வேண்டாம். நீங்கள் செய்தது உன்னத பணி. உங்கள் செயலின் மூலமாக, இங்குள்ள அனைத்து தேர்தல் அரசியல் கட்சிகளுக்கும் பல விஷயங்களை புரிய வைத்து விட்டீர்கள். உங்களுடைய பணி போற்றுதலுக்குரியது. ஆனால், இது எள்முனை அளவும் அரசியல் நடவடிக்கை அல்ல. நாளை ஏதாவது ஒரு பெரும் நிறுவனம் ஏரியை ஆக்கிரமிக்க முற்பட்டால், இன்று உதவிக்கு வந்த எத்தனை பேர் அதற்கு எதிராக கிளர்ந்தெழுவீர்கள்? அணு உலைகளுக்கு எதிராக எத்தனை பேர் குரல் கொடுப்பீர்கள்?

ஏன் அவ்வளவு தூரம்? இந்த பெருவெள்ள பொழுதில் நள்ளிரவில், மியாட் தனியார் மருத்துவமனை தம்மை நம்பி வந்த நோயாளிகளை கைவிட்டது. அதற்கு எதிராக நாம் எத்தனை பேர் கிளர்ந்தெழுத்தோம்? கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இந்த பேரழிவு பகலில் நடந்திருந்து, ஏதேனும் தனியார் பள்ளியில் தண்ணீர் புகுந்து, அந்த பள்ளி நிர்வாகம் தம் மாணவர்களை கைவிட்டிருந்தால், அப்போதும் அமைதியாக தான் இருந்து இருப்போமா? இன்னும் DLF வளாகத்தில் இருந்த நூற்றுகணக்கான தொழிலாளர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை? அரசிற்கு அழுத்தம் கொடுத்து நம்மால் ஒரு பதிலை பெற முடியவில்லை… ஆனால், நாம் அதிகாரத்தை கைப்பற்றும் கனவில் இருக்கிறோம்.

நண்பர்களே… முட்டாள்களா நாம்?

பெரும் நிறுவனங்கள் கோலாச்சும் இந்த அமைப்பு முறையானது, நாம் அரசியல்பட கூடாது என்று விரும்புகிறது.  நீங்கள் உதவி செய்ய விரும்பினால் CSR (Corporate Social Responsibility) மூலமாக செய்து கொள்ளுங்கள் என்கிறது. ஆனால், அதையும் மீறி இங்கு பெரும்பாலானோருக்கு அரசியல் ஆசை வந்துள்ளது வரவேற்க தக்கது.  ஆனால், உங்களின் ஆசையானது, உள்ளீடற்ற சட்டையாக இருக்கிறது, பெரும் காற்றடித்தால் காணாமல் போய்விடும்.

நண்பர்களே… முதலில் அரசியல் என்பது தேர்தலில் நிற்பது தான் என்ற கண்ணோட்டத்திலிருந்து வெளியே வாருங்கள்!!! இங்கு கடந்த எட்டு ஆண்டுகளாக போராட்ட களத்தில் நிற்பது, எந்த தேர்தல் அரசியல் கட்சியும் இல்லை நண்பர்களே. அதை முதலில் உணருங்கள்!!!

நீங்கள் உங்கள் தெரு, ஊர், நகர‌ அளவில் சிறு குழுக்கள் அமையுங்கள். உங்கள் வீதி,, ஊர், நகர‌ பிரச்சனைகளுக்கு குரல் கொடுங்கள். தலைமை பண்பை வளர்த்து கொள்ளுங்கள், அனைத்து தியாகத்திற்கும் தயாராக இருங்கள். அனைத்திலும் அடையாளப்பட வேண்டும் என்று விரும்பாதீர்கள். எந்த தத்துவத்தில் இயங்க போகிறீர்கள் என்று முடிவெடுங்கள். இதுவெல்லாம் இல்லாமல், அரசியலில் ஈடுபடுவது தான் தீர்வென்று நினைப்பீர்களானால், நீங்கள் மற்றுமொரு தவறான உதாரணமாகத் தான் இருப்பீர்கள். அதற்கு நான் பலியாக முடியாது.

நன்றி.

15.12.15
தருமபுரி

Exit mobile version