Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை முஸ்லிம்கள் தமிழர்களா? : சபா நாவலன்

Sri Lankan Muslims shout slogans and carry placards during a protest against the government in Colomboஇலங்கையில் 9 வீதமான சனத்தொகைப் பரம்பலை நிரப்பிக்கொண்டிருக்கும் இஸ்லாமியர்களின் 97 வீதமானவர்கள் தமிழ் பேசுபவர்கள். பேரினவாதிகளின் பிரித்தாளும் நோக்கங்களுக்காகவும், பிழைப்புவாத அரசியல்வாதிகளின் நோக்கங்களுக்காகவும் இலங்கைத் தமிழ் முஸ்லீம்கள் அரேபியர்கள் என்ற புனைவு நீண்டகாலமாகவே கட்டமைக்கப்பட்டிருந்தது. இதற்கான எந்த அடிப்படையுமற்ற நிலையில், இலங்கை முஸ்லிம்கள் தமிழர்களாகவிருந்து மதம் மாறிய தமிழ் பேசும் மக்களே என்ற உண்மை பல்வேறு ஆய்வாளர்களால் நிறுவப்பட்டது.

1885 ஆம் ஆண்டில் சட்டவாக்கப் பேரவையில் சேர்.பொன்.இராமநாதன் ஆற்றிய உரையில் இலங்கையில் தமிழ்ப் பேசும் முஸ்லிம்கள், முன்னதாகத் தாழ்த்தப்பட்ட இந்துக்களாகவிருந்து மதம் மாறியவர்களே என்ற ஆய்வை முன்வைத்தார். பல்வேறு தரவுகளோடு முன்வைக்கப்பட்ட இந்த ஆய்வுகளின் அடிப்படையில் முஸ்லிம்கள் தமிழர்களே என வாதிட்டார். இந்த வாதத்தை ராமநாதன் தனது இனவாத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தினார் என்பது வேறு விடயம். அவரைப் பொறுத்தவரை இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் தமிழர்கள் தமிழ்த் தேசிய இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குத் தனியான பிரதிநிதித்துவம் வழங்குதல் தவறானது என வாதிட்டார். வரலாற்று உண்மையக் கூட தமிழ்த் தரகு முதலாளிய இனவாதிகள் மற்றொரு தேசிய இனத்தை ஒடுக்குவதற்காகப் பயன்படுத்திய அவமானம் ராமநாதனிலிருந்து ஆரம்பமானது எனலாம்.

சோனகர், இஸ்லாமியத் தமிழர்கள்

இலங்கை அரசாங்கம் வழங்கும் குறியீடுகளின் அடிப்படையில் சிங்களவர், தமிழர், சோனகர் என்றே மூன்று வெவ்வேறு இனக்குழுக்களையும் வேறுபடுத்தினர். தமிழர் மற்றும் சோனகர் என அடையாளப்படுத்தப்பட்ட இனக்குழுக்கள் தமிழ் பேசுபவர்கள்.

இலங்கைச் சோனகர்கள் அல்லது இஸ்லாமியத் தமிழர்கள் வடகிழக்கில் செறிந்து வாழும் தமிழர்களின் ஒரு பகுதியினரே என சேர்.பொன்னம்பலம் இராமநாதன் அடையாளப்படுத்த முற்பட்ட போது இஸ்லாமியத் தமிழர்கள் மத்தியில் தமது தனித்துவத்தை வலியுறுத்திக் குரல்கள் எழுந்தன.

இஸ்லாமியர்களில் 97 வீதமானவர்கள் தமிழ் பேசுபவர்களாகவும், மூன்று வீதமானவர்கள் மலாய், அரபு சிங்களம் ஆகிய மொழிகளைப் பேசுபவர்களாகவும் உள்ளனர் என்பதால் மட்டுமே அவர்களை வட-கிழக்குத் தமிழ்த் தேசிய இனத்துடன் இணையக் கோருவது அபத்தமானது.

தமிழர்களோடு கலந்துவிடக் கோரிக்கை

சேர்.பொன்.இராமநாதனில் ஆரம்பித்த இந்தக் கோரிக்கை, பின்னர் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி என்று நீட்சி பெற்று இறுதியில் ஆயுதம் தாங்கிய ஈழ விடுதலை இயக்கங்களுக்குள் உட்புகுந்து தோல்வியில் முடிவடைந்ததது.

முஸ்லிம் தமிழர்களைத் தனித்துவமானவர்களாக ஏற்றுக்கொள்ள மறுத்த ராமநாதன், செல்வநாயகம் ஆகியோரின் கருத்துக்களோடு இசைந்துபோன முஸ்லிம் அரசியல் வாதிகள் இடம்தெரியாமல் தொலைந்துபோனார்கள். ஈழ விடுதலை இயக்கங்கள் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு யுத்ததையே கட்டவிழ்த்து விட்டது. இன்று இஸ்லாமியத் தமிழர்கள், வடக்குக் கிழக்குத் தமிழர்களின் ஒரு பகுதி என்ற கோரிக்கை மீட்சி பெற்றுள்ளது.

இவ்வாறு ஒரே மொழியைப் பேசும் ஒரே காரணத்திற்காக தனித்துவத்தையும் தனியான தேசிய இனம் என்பதையும் ஏற்றுக்கொள்ள மறுத்த ஒடுக்கு முறை அரசியல் வரலாற்றில் பல அழிவுகளின் பிறப்பிடமாகியுள்ளது. அயர்லாந்து மக்களும் இலங்கிலாந்து மக்களும் ஆங்கிலம் பேசுகின்ற ஒரே காரணத்திற்காக அயர்லாந்து மக்கள் தம்மை ஆங்கிலத் தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளவில்லை. பிரித்தானியாவிலிருந்து பிரிந்துசெல்வதற்காக நீண்ட ஆயுதப் போராட்டத்தையே நடத்தினார்கள்.

ஒரு நாட்டின் எல்லைக்குள் வாழ்கின்ற ஒரே மொழியைப் பேசுகின்ற இனக்குழுக்கள் தமது சுய நிர்ணைய உரிமைக்காகப் போராடிய வரலாறு புதியதல்ல. ஆங்கிலேயர்களும், ஸ்கொட்லாந்துக்காரர்களும்,, ஐரிஷ் மக்களும் ஆங்கில மொழியையே பேசுகின்ற போதும் அவர்கள் தனியாக வேறுபட்டவர்களாக உணர்கின்றனர். தமது தனித்துவத்திற்காகப் போராடுகின்றனர்.

இலங்கையில் மலையகத் தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்கள், வடகிழக்குத் தமிழர்கள் என்ற வேறுபட்ட இனக்குழுக்கள் தமிழ் மொழியையே பேசுகின்றன எனினும் அவை தனித்துவத்தைக் கொண்ட வேறுபட்ட மக்கள் கூட்டங்கள்.

பெரும்பான்மைத் தேசிய இனங்கள் சிறுபான்மையினரைத் தம்முடன் இணைந்துகொள்ளுமாறு கோருவதும் மறுக்கும் சந்தர்ப்பங்களில் அவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பதும் பெருந்தேசியவாதமாகவும் மேலாதிக்கவாதமாகவும் கருதப்படுகின்றது.

ஒரே மொழியும் தேசியமும்

இலங்கை அரசாங்கமோ அன்றி சிங்களமக்கள் மத்தியில் வலு மிக்க அரசியல் இயக்கமோ சிறுபான்மைத் தேசிய இனங்களின் பிரிந்து செல்லும் உரிமையை ஏற்றுக்கொள்ள முன்வந்திருக்குமானால், வட-கிழக்கில் பிரிவினைக்கான கோரிக்கை எழுந்திருக்காது.

வட-கிழக்குத் தமிழர்கள் மலையகத் தமிழரதும் முஸ்லிம் தமிழர்களதும் சுய நிர்ணைய உரிமையை அங்கீகரித்து அவர்களது உரிமைப் போராட்டத்திற்கு பக்கபலமாக இருந்திருப்பார்களானால்  தேசிய இனங்களின் மத்தியில் உறுதியான ஐக்கிய முன்னணி தோன்றியிருக்கும். தேசிய இனங்களின் ஒன்றிணைந்த போராட்டம் இலங்கை அரசை நிலைகுலையச் செய்திருக்கும்.

தமிழ் பேசும் முஸ்லிம்கள் இலங்கையின் வரலாற்றில் இடையிலேயே வந்து சேர்ந்தவர்கள் அதனால் அவர்களை இலங்கையின் தேசிய இனங்களில் ஒன்றாகக் கருதமுடியாது என்று வாதிடுபவர்களும் உண்டு, அவ்வாறு ஒரு வாதத்தை முன்வைப்போமயின், அமெரிக்காவும் கனடாவும் செவ்விந்தியர்களுக்கே உரித்தானதாகியிருக்கும். செவ்விந்திய ஆதிகுடிகள் அழிக்கப்பட்டே இந்த நாடுகள் உருவாக்கப்பட்டன. அவுஸ்திரேலியா அப்ரோஜீன் இன மக்களுக்கே உரித்தானது. இந்தியா திராவிடர்களுக்கே உரித்தானது என்ற வாதங்களையும் முன்வைக்கலாம். இவ்வாறான வாதங்களுக்கு அப்பால் தேசியம் மற்றும் தேசிய இனங்கள் என்ற கருத்துக்கள் தோன்றுகின்றன. யார் பூர்விக்கக் குடிகள் என்பதற்கும், ஆண்ட பரம்பரை என்ற கருத்திற்கும் தேசியத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது மட்டுமல்ல இது தேசியத்திற்கு எதிரான நிலப்பிரபுத்துவக் கருத்து.

தேசிய இனங்கள்

தேசிய இனங்கள் என்பது ஒரு குறித்த காலத்தில் தோன்றிய மக்கள் கூட்டம். சந்தைப் பொருளாதாரம் என்று அழைக்கப்பட்ட முதலாளித்துவம் உருவான காலத்திலேயே தேசிய இனங்கள் என்று கருத்து உருவாகின்றது. இக் காலத்தில் பல்வேறு மொழிகள் இணைந்து ஒரு மொழியாகின. பல்வேறு பண்பாடுகள் இணைந்து கலாச்சாரமாகியது.

பிரஞ்சு தேசமும், தேசியமும் தோன்றிய போது 50 வீதமானவர்கள் மட்டுமே பேசிய லூ கோலுவா என்ற மொழி பிரான்சின் பொதுவான மொழியாக வளர்ச்சி பெற்று பிரஞ்சு மொழி என அழைக்கப்பட்டது. இத்தாலிய தேசம் தோன்றிய போது 12 வீதமானவர்கள் மட்டுமே பேசிய மொழி இத்தாலியின் தேசிய மொழியாக மாற்றமடைந்து இத்தாலிய தேசியமானது.

மறுபக்கத்தில் பிரித்தானியாவின் ஆங்கிலேய மேலாண்மையும், ஒடுக்கு முறையும் ஒரே மொழி பேசிய ஸ்கொடிஷ் காரர்களையும், ஐயர்லாந்துக்காரர்களையும் வெவ்வேறு தேசிய இனங்களாக்கியது. அவர்களை பிரித்தானிய அரசிற்கு எதிராகப் போராடத் தூண்டியது.

மன்னர்களும், சக்கரவர்த்திகளும் அரசாண்ட நிலப்பிரபுத்துவத் அடிமைத்தளையை உடைத்துக்கொண்டு முதலாளித்துவப் பொருளாதாரம் தோன்றிய காலத்திலேயே தேசிய இனங்களும் தோன்றின. தேசியம் உருவானது. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து விழுமியங்கள் எல்ல்லாம் அழிக்கப்பட்டும் உருமாறியும் புதிய கலாச்சாரம் தோன்றியது. இவ்வாறு தோன்றிய மக்கள் கூட்டங்களையே தேசிய இனங்கள் என அழைத்தார்கள். இன்று உலகம் ஐக்கிய நாடுகள் நிறுவனம் உட்பட உலகம் முழுவதும் முதலாளித்துவம் தோன்றிய போது உருவான மக்கள் கூட்டத்தையே தேசிய இனங்கள் என்றும் அவ்வேளையில் மக்களை ஒன்றிணைத்த கோட்பாடுகளையே தேசியம் என்றும் ஒப்புக்கொண்டுள்ளன.

முதலாளித்துவம் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் எல்லாம் மக்கள் நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்தனர். நகரங்களும் உப நகரங்களும் துரித வளர்ச்சியில் தோன்றின. சாரிசாரியாக தொழிலாளர்கள் தோன்றினார்கள். இவையனைத்தும் சிறிய மொழிகள் அழிந்து பொதுவான ஒரு மொழி தோன்றக் காரணமாயிற்று. இதுவே வெவ்வேறு கலாச்சாரங்கள் இணைந்து பொதுவான புதிய கலாச்சாரம் தோன்றியது. தென் இத்தாலியில் குடியேறிய இந்தியர்கள் இன்று அடையாளம் தெரியாமல் இத்தாலியர்கள் ஆகிவிட்டார்கள் 16ம் நூற்றாண்டில் சில வருடங்களுக்கு உள்ளேயே இந்த மாறுதல்கள் நிகழ்ந்து முடிந்தன. இதே போன்று துலூஸ் போன்ற பிரஞ்சு நகரங்களில் வாழ்ந்த வட ஆபிரிக்க அரேபியர்கள் பிரஞ்சுக்காரர்களாகவே மாறிவிட்டார்கள்.

முதலாளித்துவப் பொருளாதாரம் மந்த கதியில் வளர்ச்சியடைந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், அது திணிக்கப்பட்ட இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலும் வெவ்வேறு முதலாளித்துவப் பொருளாதாரச் சந்தைகள் தோன்றின. அங்கெல்லாம் ஒரு நாட்டின் எல்லைக்குள்ளேயே பல்வேறு தேசிய இனங்கள் தோன்றின. வட கிழக்கு இணைந்த பொதுவான சந்தையை மொழி இணைத்தது. முஸ்லிம் தமிழர்களது சந்தையை கலாச்சாரமும் மொழியும் இணைத்தது. இதனால் இந்த இனக்குழுக்கள் தனித்துவமானவையாக வளர்ச்சியடைய ஆரம்பித்தன. இவர்களிலிருந்து வேறுபட்டு மலையகத் தமிழர்கள் வேறுபட்ட இனக்குழுவாக வளர்ச்சியடைந்தது.

இந்த அடிப்படையில் இலங்கையில் முஸ்லிம் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், வட-கிழக்குத் தமிழர்கள் என மூன்று சிறுபான்மைத் தேசிய இனங்கள் வளர்ச்சி பெற்றன. இந்த மூன்று தேசிய இனங்களது வளர்ச்சிக்கும் எதிரான பெருந்தேசிய வாதம் பல தடவைகள் இனப்படுகொலைகளை நடத்தியிருக்கிறது.
பெரும்தேசிய ஒடுக்குமுறையே இலங்கையில் பிரதான முரண்பாடாகக் காணப்படும் நிலையில், இம் மூன்று தேசிய இனங்களும் தமது பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் உரிமைக்காகப் போராடுவது ஒவ்வொருவரதும் விடுதலைக்கான முன் நிபந்தனை மட்டுமன்றி ஐக்கிய முன்னணிக்கான ஆரம்பமும் ஆகும்.

இதனை எவ்வாறு செயற்படுத்துவது…?

தொடரும்…

Exit mobile version