இன்று நிலைமை வேறு, தமிழ் மக்களின் உரிமைக்காக விக்னேஸ்வரன் பேசுவதான தோற்றப்பாட்டை ஏற்படுத்துகிறார்கள். யாழ்ப்பாணத்தில் விக்னேஸ்வரனின் வாழ்க்கை அவரைத் தலைகீழாக மாற்றிவிட்டதாக வேறு நம்பச் சொல்கிறார்கள். விக்னேஸ்வரன் என்பவர் ஒன்றுமறியாக் குழந்தை என்றும் அவர் யாழ்பாணத்தில் வாழ்ந்த போது மட்டுமே முதிர்ச்சியடைந்தார் என மக்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு பிரச்சாரம் செய்கிறார்கள்.
இலங்கைப் பேரினவாத அரசின் இராணுவ ஒடுக்குமுறையால் கொசுக்கள் போல மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் பாலியல் சாமியார் பிரேமாந்தாவின் சீடரான விக்னேஸ்வரன் சாமியார் சிறைப்பிடிக்கப்பட்டது தவறு என தனது கட்டுரைகளால் யுத்தம் ஒன்றையே நடத்திக்கொண்டிருந்தார்.
இன்று சாமியாருக்குப் பதில் தமிழ்த் தேசியம்.
ஒரு தேசிய இனத்தின் சுய நிர்ணைய உரிமைக் கோரிக்கை அழிக்கப்படுவதற்கு விக்னேஸ்வரன் என்ற பொருத்தமான நபர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
விக்னேஸ்வரன் தேவையான நேரத்தில் தேவையான அறிக்கைப் பிரகடனத்தை மட்டும் செய்துவிட்டு உறங்கச் சென்றுவிடுவார். தமிழ்த் தேசிய வாதிகளுக்கு அதிலும் குறிப்பாக புலம்பெயர் தமிழ்த் தேசியப் பிழைப்பு வாதிகளுக்குத் தீனி போடும் வெற்று அறிக்கைகளே விக்னேஸ்வரனை எந்தக் கூச்ச உணர்வுமின்றி பேஸ் புக்கிலும் ரிவிட்டரிலும் தூக்கி நிறுத்துவதற்குப் போதுமானதாகிவிடுகின்றது.
சுன்னாகம் குடி நீர்ப் பிரச்சனையில் விக்னேஸ்வரனின் செயற்பாட்டால் தமிழர்களின் ஒரு பகுதி வளங்கள் அழிக்கப்பட்ட போது தமிழ்த் தேசிய வாதப் பிழைப்புவாதிகள் கண்டுகொள்ளவில்லை. விக்னேஸ்வரன் தனது விரிவாக்கப்பட்ட குடும்ப சகிதம் சென்று மகிந்த்விடம் ஆசிபெற்ற நாளிலிருந்து இன்று வரைக்கும் எதைச் சாதித்திருக்கிறார்?
சம்பந்தன் சிங்கக்கொடி பிடித்த போது ஆர்ப்பரித்த தமிழ்த் தேசியவாதிகள் விக்னேஸ்வரன் அதே சிங்கக்கொடியை ஏற்றிய போது இறுகக் கண்களை மூடிக்கொண்டு உறங்கிவிட்டார்கள்.
வடக்கு மாகாணத்தில் மக்களதும் போராளிகளதும் அவலத்திற்கு என்ன செய்திருக்கின்றார்? அல்லது அவை குறித்து குறைந்தபட்ச திட்டங்களையாவது முன்வைத்திருக்கின்றார்?
விக்னேஸ்வரன் போன்ற பிழைப்புவாதிகளின் அறிக்கைகள் தமிழர்களுக்கு எதாவது பயனிளித்துள்ளதா?
விக்னேஸ்வரன் போன்றே தமிழ்த்தேசியவாதிகள் என அறிவித்துக்கொள்ளும் வியாபாரிகளுக்குத் தீனி போட்டே தன்னை வளர்த்து, தமிழர்களின் அழிவிற்குப் பொறுப்பானவர்களின் பட்டியலில் விக்னேஸ்வரனோடு இணையாகப் பேசப்பட வேண்டிய ஆபத்தானவர் ஜெயலலிதா.
விக்னேஸ்வரனை யாழ்ப்பான வாழ்க்கை மாற்றியதைப் போன்றே ஜெயலலிதாவை ஒரு சாமியார் மாற்றிவிட்டதாகத் தமிழ்த் தேசியவாதிகள் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
விக்னேஸ்வரனைப் போன்றே ஜெயலலிதா அறிக்கைகள் விடுத்தார். இலங்கை அரசைத் திட்டுவது போன்று நாடகமாடினார். தீர்மானங்கள் நிறைவேற்றினார். இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என அறிக்கைவிட்டார். தமிழ்த் தேசியவாதிகள் விசிலடித்துக் கைதட்டினர். தாம் பிழைப்பு நடத்துவதற்கு ஒரு சந்தர்ப்பவாதி கிடைத்துவிட்டதை எண்ணி மகிழ்ந்தனர். ஜெயலலிதாவை ஈழத் தாய் கௌரவித்தனர்.
மக்களை ஏமாற்ற விக்னேஸ்வரனும் ஜெயலலிதாவும் ஏறக்குறைய ஒரே வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர்.
சுன்னாகம் நிலக்கீழ் நீரின் வழியாக யாழ்ப்பாணம் அழிக்கப்பட்ட போது விக்னேஸ்வரன் அழித்தவர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டது போன்றே ஜெயலலிதாவும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருக்கு அப்பாவிகளை விடுதலை செய்வோம் என அறிவித்த ஜெயலலிதா, இன்று அவர்கள் விடுதலையாவதற்கு எதிராகச் செயற்படுகிறார்.
சிறைவைக்கப்பட்டிருப்பவர்களை மத்திய அரசு விடுதலை செய்யவில்லை என்றால் தமிழக அரசே தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை விடுதலை செய்யும் என்று 2014 பெப்ரவரி 19ம் திகதியன்று சட்ட மன்றத்திலேயே அறிவித்தார்.
விக்னேஸ்வரனின் அழிவுச் செயலுக்கு முச்சுக் கூட விடாத தமிழ்த் தேசியவாதிகள் ஜெயலிதாவின் செயலுக்கு மூச்சையே அடக்கிவிட்டார்கள்.
சரி, யாழ்ப்பாணம் சென்று திடீர்த் தமிழ்த் தேசியவாதியாக மாறிய விக்னேஸ்வரன் தனக்கு ஜெயலலிதாவிடமுள்ள உறவைப் பயன்படுத்தி நளினி உட்பட்ட ஏனைய அப்பாவிகளை விடுதலை செய்யக் கோரட்டும் பார்க்கலாம்! அப்படி ஒரு கோரிக்கைய முன்வைத்து தனது யாழ்ப்பாண முற்றத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தட்டும் பார்க்கலாம்!
இதே ஜெயலலிதாவிற்கு விக்னேஸ்வரன் வாழ்த்துச் சொல்ல, அவர் விக்னேஸ்வரனைச் சந்திக்கப் போவதாகக் கூற தமிழ்த் தேசியப் பிழைப்புவாதிகள் விழாக்கோலம் பூண்டனர்.
தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் எஞ்சிய பகுதிகளையும் சுத்திகரித்து முழுமையான அழிவிற்கு உட்படுத்த தெரிவு செய்யப்பட்ட இரண்டு பிரதான நபர்கள் ஜெயலிதாவும் விக்னேஸ்வரனும். இவர்கள் இருவரும் தமது எஜமானர்களான இந்திய மற்றும் அமெரிக்க அரசுகளுக்காக ஆடுகின்ற நாடகத்தால் அப்பாவி மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். இந்தியாவில் ஜெயலலிதா போன்றவர்கள் நிராகரிக்கப்பட்டு முற்போக்கு ஜனநயக சக்திகளுடனான இணைவு ஏற்படுத்தப்பட வேண்டும். ஈழத்தில் விக்னேஸ்வரன் சம்பந்தன் போன்ற அழிவு சக்திகள் நிராகரிக்கப்பட்டு புதிய அரசியல் தலைமை தோற்றுவிக்கப்பட வேண்டும்.