Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலி எதிர்ப்புக் கும்பல்களின் நச்சு அரசியலின் கீழ் : வியாசன்

douglas_mahindaமைத்திரிபாலவும் பரிவரங்களும் ஆட்சியைக் கையகப்படுத்திக்கொண்ட பின்பு ஜனநாயகத்தை மீட்கிறோம் உரிமை வழங்கிறோம் என ஆங்காங்கே மக்களைக் கூப்பிட்டுக் காட்சிப்படுத்தி வருகின்ற சம்பவங்கள் நடந்துகொண்டிருக்க அதன் அடியில் நச்சு விதைகள் விதைக்கப்படுகின்றன. மகிந்த ராஜபக்ச ஆட்சி செய்த காலத்தில் அரச பாசிசத்தின் தொங்கு தசைகளாக ஒட்டிக்கொண்டிருந்த தமிழ்ப் புலியெதிர்ர்புக் கும்பல்கள் மைத்திரிபால அரசால் தற்காலிகமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. புலி எதிர்ப்பு கூட்டங்களை இணைத்துக்கொண்டால் தமது மனித உரிமைக் காட்சிப்படுத்தலுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மட்டுமே இவர்கள் ஒதுக்கப்படுகின்றனர். இதனால் டக்ளஸ், கருணா மற்றும் மகிந்த ஆதரவுச் சாதிச் சங்கங்கள் போன்றன போக்கிடமின்றி நடுத்தெருவில் விடப்பட்டுள்ளன.

மக்களிடமிருந்து விரட்டப்படும் போது பாசிச அரசுகளின் நிழலில் ஒதுங்கிக் கொள்ளும் புலியெதிர்ப்பு குழுக்கள் மைத்திரிபால அரசால் ஒதுக்கப்படுவது தற்காலிமானது என்றாலும் திசையற்று நட்டாற்றில் விடப்பட்டுள்ளனர்.
புலிகளை எதிர்ப்பதால் மட்டுமே ஜனநாயகம் கிடைத்துவிடும் என தம்மைச் சுற்றியிருக்கும் சிறிய வட்டத்தை ஏமாற்றி, அரசுகள் போடும் பிச்சையில் பிழைப்பு நடத்திய இவர்கள் மீட்சிபெற பல்வேறு வழிகளில் முயற்சிக்கின்றனர்.

மகிந்த அரசின் நிழலில் வன்னியில் நிழல் அரச அலுவலகம் நடத்திய சிறீ ரெலோ அமைப்பு, மகிந்தவை எதிர்ப்பதாக இப்போது கூறுகிறது. கருணா மைத்திரிக்கு ஆதரவு என்கிறார். இவர்களின் அனைத்துலகக் கதாநாயகனான டக்ளஸ் தேவானந்தா மகிந்த குடும்பத்தின் உறுப்பினர் போன்றே செயற்பட்டவர். மகிந்தவின் வெற்றிலைச் சின்னத்திற்குச் சுண்ணாம்பாகத் திகழ்ந்த டக்ளஸ் மைத்திரியிடம் ஒட்டிக்கொள்ள சந்திரிக்காவின் ஊடாக மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.

மைத்திரியின் வழியோ தனி வழி. இனங்களிடையே நல்லிணக்கத்தைப் பற்றிப் பேசுவார். தமிழ் அமைப்புக்களைப் பேச்சுக்கு அழைப்பார். யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கே காணிகளை மக்களுக்கு வழங்கி விளம்பரப்படுத்துவார். ஆனால் பல்தேசிய வியாபார நிறுவனமான எம்ரிடி வோக்கஸ் பிஎல்சி சுன்னாகத்தைச் சுற்றியுள்ள ஒரு பிரதேசத்தையே அழித்து நச்சு நிலமாக்கும் போது அது குறித்து மூச்சுக்கூட விடமாட்டார். இனப்படுகொலை பற்றிப் பேசும் விக்னேஸ்வரன் ஊடாக போலி ஆணைக்குழுவை நியமித்து சுன்னாகத்தில் நீர் சுத்தமாகத்தான் இருக்கிறது மக்களை ஏமாற்றுவார்.

இந்தப் புள்ளியில் மைத்திரியைப் புரிந்து கொண்ட புலியெதிர்ப்பு அரசியல் கும்பல்கள் சுன்னாகத்தைப்பற்றி மூச்சுவிடாமல் அங்கு சாதியைப்பற்றி ஏவறையே விட்டிருக்கின்றன.

ஈபிடிபி மற்றும் சாதிச் சங்க ஊடகங்கள் வெளியேற்றிய கழிவுச் செய்திகளில் சுன்னாகம் கழிவு நீர் வராவிட்டாலும் சாதி வந்து போனது.

பொதுபல சேனாவுடன் பிரன்ஸ் தலித் முன்னணி

“தாழ்த்தப்பட்ட (நளவர் சமூக) மரம் ஏறி கள்ளிறக்கும் மக்கள் வாழும் இந்த பகுதியில் இயங்கும் இந்த பாடசாலை இதுவரை காலமும் கவனிப்பாரற்று கிடந்தது. இந்த பிரதேச சனசமூக நிலையத்தின் தலைவராகவும் பனை அபிவிருத்தி சங்க தலைவராகவும் அண்மைக்காலங்கள் வரை செயல்பட்ட பசுபதி சீவரத்தினம் ஆவார்.
அமைச்சர் டக்ளசினுடைய உதவியுடன் இப்பிரதேசத்தில் பல அபிவிருத்தி திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.கடந்த காலங்களில் வெறும் ஐந்தாம் தரம் வரையுமே கல்வி கற்க முடிந்த இந்தபிரதேச ஒடுக்கப்பட்ட சமுக மாணவர்களுக்கு அண்மையில் இப்பாடசால தரமுயர்த்தப்பட்டதனால் தரம் 11 வரை படிக்கும் வாய்ப்பை பெற்றனர்.
இந்நிலையில் ஒடுக்கப்பட்ட மாணவர்களின் வளர்ச்சியை பொறுக்க முடியாத ஆதிக்க சாதி விசமிகளே மாணவர்களின் கல்வியை தடுக்க இந்தவிதமான விஷம் கலக்கும் கொடிய செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என தெரிய வருகின்றது.” என்பது தான் செய்தி.

சுன்னாகத்திலிருந்து ஒரு பிரதேசம் முழுக்க அழித்து நாசப்படுத்தப்படும் போது வெள்ளி பார்த்துகொண்டிருந்த புலியெதிர்ப்பு மகிந்த ஆதரவுக் கும்பல்கள் ஊகங்களை வதந்திகளாக்கி அரசியல் நடத்த முயல்கின்றன. சுன்னாகத்தில் எம்ரிடி வோக்கஸ் என்ற நிறுவனம் வெளியேற்றிய நச்சு எண்ணையால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்டவர்களே. சுன்னாகம் அனல் மின்னிலையத்தின் வேலி கல்லாக்கட்டுவன் என்ற தாழ்த்தப்பட்ட கிராமத்தில் தான் அமைந்திருக்கிறது.

அதனைக் கடந்து சென்றால் உரும்பிராய் கொலனி, மொண்டி, உரெழு ஆகிய கிராமங்களைக் காணலாம்;. பெரும்பாலும் பள்ளர் சமூகத்தின் விளை நிலங்கள் அமைந்துள்ள இப்பகுதிகளில் விவசாயம் இன்று இல்லை. பயிர்கள் நச்சு நீரில் அழிந்து போகின்றன. டக்ளஸ் உட்பட சாதிச் சங்கங்களுக்கு இதற்கெல்லாம் உணர்ச்சி பொங்கி வழியாது என்பது என்னே கேவலம்?

இங்கு தான் சாதிச் சங்கங்களதும் புலி எதிர்ப்பு மகிந்த ஆதரவுக் கும்பல்க்ளதும் பன்னாட்டு கோப்ரட் நிறுவனங்கள் மீதான விசுவாசம் வெளிப்படுகிறது. மைத்திரியின் எசமானர்களும், புலி எதிர்ப்பு அரச ஆதரவு கும்பல்களின் எசமானர்களும் ஒரே பன்னாட்டுக் கோப்ரட்கள் தான்.

இலங்கை அரச பாசிஸ்டுகளோடு ஒட்டிக்கொள்வதற்கு புலம்பெயர் நாடுகளிலிருந்த பலருக்கு 2009 இற்கு முன்னர் கிடைத்த அரசியல் தான் புலி எதிர்ப்பு. இவர்கள் புலிகளை விமர்சித்தது சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தைச் செழுமைப் படுத்துவதற்காக அல்ல. மாறாக அதனை முற்றாக அழிப்பதற்காக. புலி எதிர்ப்பு என்ற பெயரில் இக் குழுக்கள் சுய நிர்ணைய உரிமைக்கான மக்களின் போராட்டத்திற்கான நியாயத்தையே கொச்சைப்படுத்தினார்கள். 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு புலிகள் அற்றுப் போன நிலையில் அரசோடு ஒட்டிக்கொண்டு இனப்படுகொலைக்குத் துணை போவதை இணக்க அரசியல் என்று பெயரிட்டு அழைத்தார்கள்.

இப்போது புலிகளின் வால்களே அரசோடு இணைந்து சுருண்டு போன நிலையில் புலியெதிர்ப்புக் கும்பல்களின் சந்தைப் பெறுமானம் குறைந்து போய்விட்டது. ஆக, பேரினவாத அரசோடு ஒட்டிக்கொள்ளப் புதிய வழிகளை அவர்கள் தேடிக்கொண்டிருக்கிறர்கள்.

இன்று இவர்களின் நச்சு அரசியலில் குடா நாட்டின் நிலமும் நீரும் மாசடைவதற்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது.

தண்ணீர் தாங்கியில் நஞ்சு கலந்தவர்கள் ஆதிக்க சாதியைச் சார்ந்த சிலரே எனச் சந்தேகங்கள் நிலவினாலும் அதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. இன்று வரை இவை வெறும் அனுமானங்கள் மட்டுமே. அதனை ஆதாரமாக முன்வைத்து சாதி உணர்வைப் பூதாகாரமாக்கும் இவர்கள் ஏன் சுன்னாகம் அழிவைப் பற்றி மகிந்தவோடு இணைந்திருக்கும் போது கூடப் பேசவில்லை என்பதிலிருந்து இவர்களின் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது.

சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்று அதன் பலன்களை அறுவடை செய்த உலகின் மிகக் குறித்த இடங்களுள் யாழ்ப்பாணமும் ஒன்று. சண்முகதாசன் தலைமையில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களே இதற்குக் காரணம். இப்படி முன்னுதாரணங்கள் இருந்தும் அரசுகளோடு ஒட்டிக்கொள்ள மட்டுமே அரசியலை முன்வைக்கும் பிழைப்புவாதிகள் எமது காலத்கின் சாபக்கேடுகள்.

பொது பல சேனா – நோர்வே,அமெரிக்கக் கூட்டுச் சதி – விலகும் மர்மம்(2)
Exit mobile version