Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆண்டாள்-தேவடியாள்-வைரமுத்து-சர்ச்சை: வி.இ.குகநாதன்

சில நாட்களிற்கு முன் தினமணி செய்தித்தாளில் கவிஞர் வைரமுத்து எழுதிய “தமிழை ஆண்டாள்” எனும் கட்டுரையில் மேற்கோள் காட்டிய ஒரு வாக்கியம் இன்று தமிழக ஊடகப்பரப்பிலும், பொதுவெளியிலும் பெரும் கருத்துமோதலை ஏற்படுத்தியுள்ளது.  அதில் அவர் மேற்கோள் காட்டிய ஒரு வாக்கியத்தில் ஆண்டாள் ஒரு தேவடியாள் எனக் குறிப்பிட்டதே இந்தக் குழப்பங்களிற்கெல்லாம் காரணம்.  இதனை இவர் ஒன்றும் சொந்தக்கருத்தாகக்கூறவில்லை, மாறாக அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகத்தின் சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராகக்கொண்டு வெளியிட்ட “Indian movement – some aspects of dissent, protest and reform” என்ற ஆய்வு நூலில் ஆண்டாள் பற்றி இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது என மேற்கோளே காட்டியிருந்தார்.  உடனேயே ஆண்டாளினை வைரமுத்து கேவலப்படுத்திவிட்டார் என இந்துமதவாதிகள் பொங்கியெழுந்து அவரது தலையினை வெட்டவேண்டும் என தலிபான் அவதாரம் எடுத்துவிட்டார்கள். இன்று இவ்வாறு கூச்சலிடும் மதவாதிகளின் முன்னோர்களே இந்துமதத்தின் ஒரு சடங்காக தேவடியாள்/ தேவதாசி முறையினைப் பேணியவர்கள் என்பதுதான்  இங்கு வேடிக்கையானது.

தேவடியாள்(பரத்தை)வரலாறு:

இந்த விலைமகளிர் தொழிலே உலகின் முதற்தொழில் என வேடிக்கையாகக் கூறுவார்கள். அந்த வகையில் பார்த்தால் இந்த விலைமகளிரின் தோற்றம் என்பது வரலாற்றுக்காலத்திற்கு முற்பட்டது. வரலாற்றில் தாய்வழிச் சமுதாயமாக மனிதர்கள் இருந்தபோது எல்லோருமே பொதுமகளிராகவேயிருந்தார்கள்(1). அதே போன்று சங்ககாலத்திலும் இற் பரத்தை(ஒருவனிற்கு மட்டும்),நயப்புப் பரத்தை(பலருக்கும் நயப்பவள்) மருதநிலத்தில் இருந்ததாகக் குறிப்புக்கள் உண்டு. அதே போன்று சங்கமருவிய காலத்தில் பரத்தையர்முறைமை இருந்தற்கு தரவாக மாதவி சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறார். இவ்வாறு காலகாலமாக பரத்தைமுறை காணப்பட்டாலும் அதனை மதச்சடங்காக மாற்றி கடவுளுடன் தொடர்புபடுத்தியது பார்ப்பன வைதீக(இன்றைய இந்து) மதமேயாகும்.  வைதீக மதமே தேவடியாள் (தே= தெய்வம்+அடியாள்= பணிபுரிபவள்) எனும் கருத்துருவாக்கத்தினை உருவாக்கி அதனை பொட்டுக்கட்டல் எனும் சடங்காக கோயிலிலேயே அந்தணர்களைக் கொண்டு நடாத்திவைத்தது.  இதனை பெருமளவிற்கு நிறுவனரீதியான நடைமுறைக்குள்ளாக்கியது இராசராச சோழன் ஆட்சியிலேயிலேயே இடம்பெற்றது என்பதற்கு தரவாக தஞ்சைப் பெருங்கோயில் கல்வெட்டுக்கள் (2)காணப்படுகின்றன. இராசராச சோழன் காலத்திலேயே இவ்வாறு தேவடியாள் முறை நிறுவனரீதியாக மதச் சடங்காக ஆக்கப்பட்டிருந்தாலும் அதற்கு முன்னரே கோயில்களில் நிறுவனரீதியற்ற முறையில் பின்பற்றப்பட்டு வந்திருக்கலாம் என உய்த்துணரமுடிகிறது. அக் காலப்பகுதியிலேயே (குறிப்பாக எட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ) ஆண்டாள் வாழ்ந்தாகக் கருதப்படுகிறது.

       ஆண்டாள் உண்மையிலேயே தேவடியாளா (தேவதாசியா) என்றால் அது விவாதத்திற்குரியது. இந்துமத விளக்கத்தின்படி தெய்வத்திற்கே (தே) பணிபுரிபவள்(அடியாள்) என்றவகையில் தேவடியாள் எனத் துணிந்து கூறலாம். மறுபுறத்தில் பொதுவழக்கிலுள்ள தேவதாசி என்ற சொல்லிற்கான விளக்கத்தின்படி பொதுமகளா எனப் பார்த்தால், அதற்கான நேரடித்தரவுகள் எதுவுமில்லை.  மேலே குறிக்கப்பட்ட இண்டியானா பல்கலை ஆய்வானது ஆண்டாளின் பாடல்களில் காணப்படும் பாலியல் விடுதலைத் தன்மையினை அடிப்படையாகக்கொண்டே குறித்த முடிவிற்கு வந்திருக்கலாம். அதாவது பெண்களின் விடுதலை பெருமளவிற்கு அடக்கிவைக்கப்பட்டிருந்த அன்றைய நிலையில் ஒரு இளம்பெண் இவ்வாறு பாலியல் வேட்கை சொட்ட சொட்ட பாடல்களைப் பாடியிருக்க முடியுமா என்ற கேள்வியின் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டிருக்கலாம். அது முடிந்த முடிவல்ல என்பது உண்மையே.

ஆண்டாள் அவமானக் குறியீடா?

ஒரு வாதத்திற்காக ஆண்டாள் அவ்வாறு பரத்தையாகவிருந்திருந்தாலும்கூட, அது அவரிற்கான அவமானமல்ல, மாறாக அது அந்த மதப் பிற்போக்குத்தன மற்றும் ஆணாதிக்கத்தின் அவமானமாகவே கருதப்படவேண்டும்.  ஆண்டாளின் பாடல்கள் கூட ஒரு பெண்ணின் பாலியல் விடுதலை உணர்வின் வெளிப்பாடாகவே கருதப்படவேண்டும்.  அதே போல ஆண்டாளின் தமிழ்ப் புலமையும், தமிழே வழிபாட்டு மொழியாகக் கருதப்படவேண்டும் என்ற மொழியுணர்வும் போற்றப்படவேண்டும். இதனால்தானோ என்னவோ  வைணவத் தென்கலை  சித்தாந்தத்தின் படி  ஆழ்வார்கள் பத்து  பேர் மட்டுமே (ஆண்டாள் , மதுரகவி ஆகியோரிற்கு இடமில்லை) . பின்பு ஆழ்வார்கள் பன்னிரண்டாக அதிகரிக்கப்பட்டாலும், சில வைணவர் ஆண்டாளையும், மதுரகவியினையும் இன்றும் ஏற்றுக்கொள்வதில்லை.  அதே போன்று ஆண்டாள் என்பதே ஒரு கற்பனைப் படைப்பு என ஏற்கனவே ராஜாஜி கூறியபோது (3) எதுவுமே பேசாதிருந்த மதவாதிகள், பா.ராகவன் ஆண்டாளைப் பற்றி ஏற்கனவே கிழக்குப் பதிப்பகத்தின் பெயரில் இதனைவிட கடுமையாக விமர்சித்து நூல் வெளியிட்டபோது மவுனமாகவிருந்த  மத வாதிகள் இப்போது பொங்குவதன் நோக்கம் கவனித்திற்கொள்ளப்படவேண்டும்.

வைரமுத்து எதிர்ப்பு அரசியலின் பின்னனி:

மேலே குறிப்பிடப்பட்ட பா.ராகவனும், ராஜாஜி ஆகியோர் பிரமணராகவிருந்தபடியால் அப்போது மவுனம் காத்த மதவாதிகள் இப்போது தமது மனுதர்மத்தின்படி பிரமணரல்லாத வைரமுத்து மேற்கோள் காட்டியதற்கே அவரது தலையினைக் காவு கேட்கிறார்கள். இன்னும் சில மிதவாதிகளோ(?) சன்னதியில் வந்து வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்கிறார்கள்.  வைரமுத்துவோ யாராவது தனது மேற்கோளைத் தவறாக புரிந்து துன்புற்றிருப்பார்களேயானால் அதற்கு ஏற்கனவே வருத்தம் தெரிவித்துவிட்டார். இதற்குப் பின்னும் மதவாதம் அடங்கியபாடில்லை.  இங்குள்ள நகைமுரண் என்னவெனில் இன்று வைரமுத்து இந்து மதத்தினை புண்படுத்திவிட்டதாக கூறும் மதவாதிகள்தான் அன்று தேவடியாள் முறையினை ஆதரித்து அதற்காக வாதிட, மறுபுறத்தே வைரமுத்துவின் கருத்துரிமைக்காகப் போராடும் பகுத்தறிவாளர்களே அன்று தேவடியாள் முறையினை ஒழிக்கப்போராடியிருந்தார்கள். குறிப்பாக சட்சபையில் தேவதாசி முறையினை ஆதரித்த இந்துமதக் காவலரான   சத்தியமூர்த்தி ஐயரினை எதிர்த்து சுப்புலட்சுமி ரெட்டி முன்வைத்த வாதம் (படம் காண்க) மிகவும் பரவலடைந்திருந்தது. தேவதாசி முறை ஒழிப்பில் டாக்டர் முத்துலட்சுமி, ராமாமிர்தம் அம்மையார், தந்தை பெரியார், அமிகம்மிகாயேல் என்ற கிறிஸ்தவ பெண் போதகர் ஆகியோர் ஆற்றிய பங்களிப்பு அளப்பெரியது.

          வைரமுத்து மீதான வன்மத்திற்கு மற்றொரு காரணமும்  உண்டு.  வைரமுத்துவின் இந்தக் கட்டுரையினை ஒரு தொடராகவே வெளியிட்டுவருகிறார். இதற்கு முந்திய ஒரு வள்ளலார் பற்றிய கட்டுரையில் வள்ளலாரின் மறைவு பற்றிய உண்மைத்தன்மையினை வெளிக்கொண்டுவந்திருந்தார்.  அதாவது வள்ளலாரின் பார்ப்பனய எதிர்ப்பு ஆன்மீகத்தில் கலங்கிப்போன மதவாதிகள் இறுதிக்காலத்தில் வள்ளலாரை தனிமைப்படுத்தி அவரினை எரித்துக்கொன்றுவிட்டு, அருட்பெரும் சோதியில் கலந்துவிட்டார் (நந்தனை எரித்துவிட்டு கூறியது போன்று)எனக் கதைகட்டிவிட்டிருந்ததனைக் கேள்விக்கு உட்படுத்தியிருந்தார். அப்போது கூச்சல் போட்டு தாம் அம்பலப்பட்டுப்போவதனை விரும்பாத பார்பனியம் இப்போது ஆண்டாள் விடயத்தினை முன்வைத்து தமது வன்மத்தை வெளிக்காட்டுகிறது. இவையே வைரமுத்து மீதான வன்மத்திற்கு காரணங்களே தவிர, அவர்களிற்கு ஆண்டாள் மீதான பற்றுக் காரணமில்லை.

     மதநம்பிக்கைகள் கேள்விக்கோ ஆய்விற்கோ அப்பாற்பட்டவை  என்று கருதுவோமாயின் இன்றைக்கும் பூமி தட்டை என்று நம்பிக்கொண்டும், கணவன் இறந்தவுடன் மனைவியினை எரித்துக்கொண்டும் இருக்கவேண்டியிருந்திருக்கும்.  எனவே வள்ளலார் அருட்சோதியில் எவ்வாறு கலக்கச்செய்யப்பட்டார் என்பது மட்டுமல்லாமல் ஆண்டாள் எவ்வாறு காற்றுடன் கலந்து காணமாற்போனார் எனவும் ஆய்வு செய்யப்படவேண்டும்.  துணைநின்றவை

  1. குடும்பம்,தனிச்சொத்து,அரசு ஆகியவற்றின் தோற்றம் (தமிழாக்கம்) (page7) -பிரடெரிக் எங்கல்ஸ்
  2. பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்(p.137) – க. கைலாசபதி
  3. “வாடாத மலர் ஆண்டாள்” – the tamil hindu.com (1-1-2015)
Exit mobile version