பொதுவாக `Refugee` என்ற சொல்லுக்கு நிகராக `அகதி ` என்ற சொல்லே பயன்படுத்தப்படுகின்றது. `அகதி` என்ற சொல்லானது தமிழ்ச் சொல்லல்ல; அது மட்டுமன்றி
இப்போது சங்க இலக்கியங்களில் `ஏதிலிகள்` /`இடப் பெயர்வுகள்` காணப்பட்டதா எனப் பார்ப்போம்.
சங்க காலப் புலப் பெயர்வுகள் :-
சங்க காலத்தில் தமிழர்களின் புலப் பெயர்வுகள் எவ்வாறிருந்தது எனப் பார்க்க முன்பு, வேறு இனத்தவர்கள் யாராவது தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்துள்ளார்களா! எனப் பார்ப்போம். பின்வரும் பட்டினப்பாலைப் பாடலினைப் பாருங்கள்.
மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்து
புலம் பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்
முட்டா சிறப்பின் பட்டினம் பெறினும்`
: பட்டினப்பாலை 216-218
{பொருள்: மொழிகள் பல பெருகிய பிற தேசங்களிலே (தத்தம்) நிலத்தைக் கைவிட்டுப்போந்த மக்கள் கூடி மகிழ்ந்து இருக்கும், குறைவுபடாத சிறப்புகள் கொண்ட பட்டினம்}
மேலுள்ள பாடலில் வேற்று மொழிகளையுடைய பிற தேயத்து மக்கள் எந்த வித வேறுபாடுகளுமின்றிச் சிறப்பாகக் கலந்து வாழும் நகரமாக எமது தமிழ் நகரம் காட்டப்படுவதனைக் காணலாம். எனவே இங்கு ஏதோ காரணத்துக்காகப் புலம் பெயர்ந்த வேறு புலத்தாரினைச் சமமாக நடாத்தும் ஒரு பரந்த மனப்பான்மையுடைய பன்மைத்துவத் தமிழ்ச் சமூகத்தினைக் காணலாம்.
இனி எமது புலப் பெயர்வுகளைப் பார்ப்போம். தொல்காப்பியமானது பிரிவுக்கான காரணங்களாக நான்கு காரணங்களைக் குறிப்பிடுகின்றது.
‘ஓதல் பகையே துதிவை பிரிவே‘
:(தொல்-அகத்-25)
கல்விக்காகவும், பகைப் புலம் நோக்கிப் படையெடுக்கும் காரணமாகவும், பொருள்
இப்போது நாம் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் சில புலப் பெயர்வுகளை நேரடியாகப் பாடல்களில் பார்ப்போம்.
போர் காரணமான புலப் பெயர்வுகள்:-
சங்க இலக்கியப் பாடலொன்றில் அரசனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் ஆதிக்கப் போர் காரணமாகப் பகையரசர்களின் நாட்டிலுள்ள மக்கள் சொந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்து விட்டனர் எனச் சொல்லப்படுகின்றது. மருதநில வளங்களோடு சிறப்புற்றிருந்த பகைவரின் நிலங்கள் மீளச் சீராக்க முடியாதளவிற்குப் பாழ்பட்டுப் போயிருந்தன எனவும் சொல்லப்படுகின்றது. இதனைக் கீழுள்ள பதிற்றுப்பத்துப் பாடல் எடுத்துச் சொல்லுகின்றது.
`இனம் தோடு அகல ஊர் உடன் எழுந்து
நிலம் கண் வாட நாஞ்சில் கடிந்து நீ
வாழ்தல் ஈயா வளன் அறு பைதிரம்
அன்ன ஆயின பழனம்`
:பதிற்றுப்பத்துப் பாடல் 19:16-19
{பொருள்-பசுக்கூட்டங்கள் கூட்டம் கூட்டமாகச் சிதறியோட, ஊர்மக்கள் ஒன்றுசேர ஓடிப்போக, விளை நில இடங்களெல்லாம் அழிந்து போக , உழவுத்தொழிலினை அழித்து, நீ வாழ்வு தராததால் வளம் அற்றுப்போன பகைவர் நாடுகள் அப்படிப்பட இயல்பினை அடைந்தன}
இன்னொரு பாடலில், நலங்கிள்ளியின் படையெடுப்புக் காரணமாக மக்கள் தங்களின் சொந்த நாட்டினை விட்டு விட்டு காட்டிற்குள் புலம் பெயர்ந்தமையினைப் பின்வரும் பாடல் புலப்படுத்துகின்றது.
`முனை புலம் பெயர்த்த புல்லென் மன்றத்து
பெயல் உற நெகிழ்ந்து வெயில் உற சாஅய்
வினை அழி பாவையின் உலறி
மனை ஒழிந்திருத்தல் வல்லுவோர்க்கே`
: புறநானூறு 157 :
{பொருள்-போர் நிகழ்வதால் குடிகளை இடம்பெயரச் செய்ததால் பொலிவிழந்துபோன ஊர் மன்றத்தில் மழைபெய்யும்போது இளகிப்போய், வெயிலடிக்கும்போது மெலிந்து போய் சாயம்போன பாவையைப் போல அழகிழந்து வீட்டுக்குள் முடங்கிக்கிடக்க யாருக்கு முடியுமோ}
போர் காரணமாக நாடு காடாவதனைப் பின்வரும் பாடல் படம் பிடித்துக் காட்டுகின்றது.
`நாடெனும்பேர் காடுஆக
ஆசேந்தவழி மாசேப்ப
ஊர் இருந்தவழி பாழ்ஆக`
: மதுரைக் காஞ்சி
பொருள் தேடிப் போன புலப் பெயர்வுகள் :-
கீழுள்ள பாடலில் உப்பு வணிகர்களின் புலம்பெயர்தல் கூறப்படுகின்றது. இது ஒரு வகையான பொருள் தேடிப் போன இடப் பெயர்வு.
`அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து
உமணர் போகலும் இன்னாது ஆகும்`
: நற்றிணை 183 : 4-5.
இன்னொரு இடத்தில் உயர்ந்த மலைகளைத் தாண்டிப் பொருள் தேடி இடம் பெயர்வோர் சுட்டிக் காட்டப்படுகின்றார்கள்.
கோடு உயர் பிறங்கல் குன்று பல நீந்தி
வேறு புலம் படர்ந்த வினை தரல் உள்ளத்து`
அகநானூறு 393: 1-2
வேறு காரணங்களுக்கான புலப் பெயர்வுகள்:-
இயற்கையின் சீற்றத்தினால் ஏற்பட்ட இடப் பெயர்வுகளையும் சங்க இலக்கியங்கள் காட்டத் தவறவில்லை.
புலம் பெயர் புலம்பொடு கலங்கி கோடல் 5
நீடு இதழ் கண்ணி நீர் அலை கலாவ`
:நெடுநல்வாடை 5-6
மேலுள்ளது வெள்ளப் பெருக்கினால் சொந்த இடத்தினை விட்டு வருத்தத்துடன் இடம் பெயர்ந்து போகும் முல்லை நில மக்கள் பற்றிய பாடலாகும்.
இவ்வாறு பல வகையான புலப் பெயர்வுகள் காணப்பட்டாலும், போரின் காரணமான புலப் பெயர்வே சங்க காலம் முதல் இன்றுவரைப் பெரும் இன்னலாகவுள்ளது.