யானை என்றாலே எல்லோருக்கும் உடனே நினைவிற்கு வருவது, அதன் `தும்பிக்கை` (Trunk) தானே; எனவே அதனை முதலில் பார்ப்போம்.
“இரும் பனை அன்ன பெரும் கை யானை
கரந்தை அம் செறுவின் பெயர்க்கும்
பெரும் தகை மன்னர்க்கு வரைந்திருந்தனனே“
:புறநானூறு 340: 7-9.
மேலுள்ள பாடலில் அள்ளூர் நன்முல்லையார் என்ற புலவர் யானையினுடைய கையானது (தும்பிக்கை) கரிய பனையினைப் போன்றது எனக் கூறுகின்றார். அத்தகைய கரிய பனை போன்ற கையினைக் கொண்ட யானையினையும் கொல்லக் கூடியவனுக்கே தந்தையானவர் தனது மகளினை மணம் முடித்துக் கொடுப்பார் என முழுப்பாடல் சொல்லுகின்றது. புறநானூறு 369 வது பாடலிலும் யானையின் தும்பிக்கை பற்றிய குறிப்பு வருகின்றது.
“இருப்பு முகம் செறிந்த ஏந்து எழில் மருப்பின்
கரும் கை யானை கொண்மூ ஆக“
:புறநானூறு 369: 1-2
யானையின் தும்பிக்கை பெரியது எனப் பரணர் பாடுகின்றார். இப் பாடலில் வரும் `எழில் மருப்பு` என்பது யானையின் கொம்பினைக் குறிக்கும் , அதனைப் பின்னர் பார்ப்போம். இங்கு `இரும்பால் செய்யப்பட்ட பூண் அணிவிக்கப்பட்ட, உயர்ந்த, அழகிய கொம்புகளையும், பெரிய தும்பிக்கையையும் உடைய யானைகள்` எனப் பரணர் பாடுகின்றார். புறநானூறு மூன்றாவது பாடலிலும் யானையின் தும்பிக்கை பற்றிப் பாடப்படுகின்றது.
“கயிறு பிணிக்கொண்ட கவிழ் மணி மருங்கில் 10
பெரும் கை யானை இரும் பிடர் தலை இருந்து“
:புறநானூறு 3: 10-11
இப் பாடலில் நீண்ட கையையும், பெரிய கழுத்தையும் கொண்ட யானையின் வடிவம் பாடப்படுகின்றது.
இனி ஏற்கனவே தொட்டுச் சென்ற யானையின் கொம்புகள் பற்றிப் பார்ப்போம். யானையின் கொம்பினைச் (Elephant’s tusk ) சங்க இலக்கியங்கள் `மருப்பு` என்ற சொல்லால் அழைக்கின்றன. யானையின் மருப்பு (கொம்பு) என்றவுடன் அதன் வெண்மை நிறமே நினைவிற்கு வரும்.
“ஒளிறு மருப்பின் களிறு அவர
காப்பு உடைய கயம் படியினை“
: புறநானூறு 17: 9-10
களிற்றின் கொம்புகள் ஒளி விடும் தன்மையினைக் கொண்டவை எனக் கபிலர் பாடுகின்றார். அதே வேளை யானையின் கொம்புகள் இலங்கும் தன்மையுடையவை என `எருமை வெளியனார்` என்ற புலவர் பின்வரும் பாடலில் பாடுகின்றார்.
“கயம் தலை மட பிடி புலம்ப
இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே“
:புறநானூறு 303: 8-9.
{பெரிய தலையையுடைய இளம் பெண்யானைகள்(பிடி) தனிமையுற்று வருந்துமாறு, ஒளிரும் கொம்புகளையுடைய களிறுகளைக் கொன்ற என்னைக் காண வருகின்றான்}
“பிணர் மருப்பு யானை செரு மிகு நோன் தாள்
செல்வக்கடுங்கோ வாழியாதன்” 30
:புறநானூறு 387: 29-30.
{சொரசொரப்பான கொம்புடைய யானைகள் செய்யும் போரில்…..}
மேலுள்ள பாடலில் யானையின் மருப்புச் சொரசொரப்பானது என `குண்டுகட் பாலியாதனார்` என்ற புலவர் பாடுகின்றார். யானையின் மருப்பு நீண்டு வளைந்து இருக்கும் எனப் புறநானூறு 334வது பாடலில் மதுரைத் தமிழக்கூத்தனார் என்ற புலவர் பாடுகின்றார்.
“உயர் மருப்பு யானை புகர் முகத்து அணிந்த
பொலம் புனை ஓடை “
:புறநானூறு 334: 8-9.
யானையின் கொம்புகள் நீளமானவை என்பதுடன், அவற்றின் கழுத்தில் புள்ளிகள் காணப்படும் எனவும் மேலுள்ள பாடலில் சொல்லப்படுகின்றது.
யானையின் கண்கள் எவ்வாறிருக்கும் என இப்போது பார்ப்போம்.
“சிறு கண் யானை பெறல் அரும் தித்தன்
செல்லா நல் இசை உறந்தை குணாது“
:புறநானூறு 395: 18-19
யானையின் நெற்றி உயர்ந்திருக்கும் என அகநானூறு 252 வது பாடலில் நக்கண்ணையார் எனும் புலவர் பாடுகின்றார்.
“உயர் நுதல் யானை புகர் முகத்து ஒற்றி
வெண் கோடு புய்க்கும் தண் கமழ் சோலை“
: அகநானூறு 252:3-4
யானையின் நெற்றியானது செந்நிறமானது எனப் புறநானூறு 348 வது பாடலில் பரணர் பாடுகின்றார்.
“செம் நுதல் யானை பிணிப்ப
வருந்தல-மன் எம் பெரும் துறை மரனே” 10
: புறநானூறு 348: 9-10.
கட்டப்பட்டிருந்த யானையின் நெற்றி சிவப்பாகவிருந்தமை குறிப்பிடப்படுகின்றது.
யானையின் காதுகள் சுளகு (சொலவு / முறம்) போன்று காட்சியளிக்கும் எனப் பெயர் அறியாப் புலவர் புறநானூறு 339 வது பாடலில் பாடுவார்.
“முறம் செவி யானை வேந்தர்
மறம் கெழு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே“
:புறநானூறு 339: 13-14
{முறம் போன்ற காதுகளையுடைய யானைகளைக் கொண்ட…..}
இது காறும் மேலே யானையின் தும்பிக்கை, கொம்பு, நெற்றி, கண், காது என்பன எப்படிக் காணப்படும் எனப் பார்த்தோம். இந்த உறுப்புகள் எல்லாவற்றினையும் உள்ளடக்கிய யானையின் முகம் எவ்வாறு காணப்படும் என இப்போது பார்ப்போம்.
“மணி மயில் உயரிய மாறா வென்றி
பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும் என“
: புறநானூறு 56: 7-8
{நீலமணி போன்ற நிறத்தையுடைய மயில் கொடியை உடைய, மாறாத வெற்றியையுடைய, பிணிமுகம் என்ற யானையை ஊர்தியாகக் கொண்ட ஒளியையுடைய செய்யோனாகிய முருகவேளும்}
யானை `பிணிமுகம்` என அழைக்கப்படுவதனைக் காணலாம். சிலர் பிணிமுகம் என்பதற்கு மதம் சார்ந்து பிற் காலத்தில் `மயில்` என உரை எழுதியிருந்தாலும், சங்க காலப் பாடல்களை அணுகிப் பார்த்தால் யானையினையே பிணிமுகம் எனக் குறிப்பிடப்படுவதனைக் காணலாம். மேலும் இங்கு முருகனின்(குறிஞ்சி நிலத் தலைவன்) ஊர்தியாக யானையே குறிப்பிடப்படுவதனையும் காணலாம் {மயிலுக்கு மேல் ஏறியிருக்க , மயில் தாங்குமா என்ன!}. இன்னொரு பாடலினையும் பாருங்கள்.
“பாய் இரும் பனி கடல் பார் துகள் பட புக்கு
சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து அமர் உழக்கி “
: பரிபாடல் 5: 1-2
பிணிமுகம் (யானை) மீது ஏறிப் போர் செய்தமை பற்றிப் பரிபாடல் பாடுகின்றது. இங்கு யானையின் முகத்திலிருந்து கண்ணீர் வடிவது போன்ற தோற்றமிருப்பதாலேயே, `வருத்தமுடைய முகம்` என்ற பொருளிலேயே, யானையானது `பிணிமுகம்` என அழைக்கப்படுகின்றது. இவ்வாறு `பிணிமுகம்`என்ற ஒரு சொல்லாடல் மூலம் யானையின் முகத் தோற்றமானது படம் பிடித்துக் காட்டப்படுகின்றது.
அடுத்ததாக யானையின் கால்களைப் பார்ப்போம். யானையின் கால்கள் உரல்கள் போன்றிருக்கும் எனச் சொல்லப்படுகின்றது.
“கறை அடி யானை இரியல்_போக்கும்
மலை கெழு நாடன் மா வேள் ஆஅய்”
: புறநானூறு 135: 12-13
மேலுள்ள பாடலில் மலையையுடைய நாடன் உரல்கள் போன்ற கால்களையுடைய யானையினை விரட்டிவிடும் செய்தியினை முடமோசியார் என்ற புலவர் பாடுகின்றார். இதே போன்று புறநானூறு 39 வது பாடலிலும் `கறையடி யானை ` என யானையின் காலானது உரல் போன்றது எனச் சொல்லப்படுகின்றது. யானையின் காலடி பரந்துபட்டிருக்கும் என புறநானூறு 233 வது பாடலில் சொல்லப்படுவதன் மூலம் யானையின் கால்கள் பருத்திருக்கும் எனச் சொல்லப்படுகின்றது.
“பா அடி யானை பரிசிலர்க்கு அருகா
சீர் கெழு நோன் தாள் அகுதை_கண் தோன்றிய“
: புறநானூறு 233: 2-3
மேலுள்ள பாடலில் யானையின் காலடிகளின் பருமன் சொல்லப்படுகின்றது.
அதே போனறு யானை ஒரு பெரிய விலங்கு என்ற செய்தியும் பாடப்பட்டுள்ளது.
“கடி_மரம் தடிதல் ஓம்பு நின் 10
நெடு நல் யானைக்கு கந்து ஆற்றாவே“
: : புறநானூறு 57: 10-11.
மேலுள்ள பாடலில் `நெடு நல் யானை` என யானையின் உயரம் குறிக்கப்படுகின்றது. மேலும் பல பாடல்களில் யானையின் தோற்றமானது மலையுடன் ஒப்பிடப்படுகின்றது { `வரைபோல் யானை` – புறம் 238 :9}.
பாட்டும் கதையும் :-
இது காறும் யானையின் ஒவ்வொரு பகுதியும் எவ்வாறிருந்தது எனத் தனித்தனியாகப் பார்த்தோம். இது ஒரு வகையில் பார்வையற்றோர் தனித் தனியாக யானையின் ஒவ்வொரு உறுப்புகளைத் தொட்டுப் பார்த்துச் சொன்னது போலவேயுள்ளது. கதையில் வருவது போன்றே, சங்க காலப் பாடல்களிலும் `யானையின் காது முறம் போன்றது`, `கால் உரல் போன்றது` என்ற செய்திகளைக் காணலாம். யானை பார்த்த கதை சொல்லும் கருத்து யாதெனில் எதையும் தனித்தனியாக மேம்போக்காகப் பார்க்காமல், முழுமையாகப் பார்த்தாலேயே ஒன்றின் முழுமையான வடிவத்தினை அறிந்து கொள்ளலாம் என்பதேயாகும். எனவே சங்க இலக்கியங்கள் தனித் தனியாக யானையின் உறுப்புகளைப் பார்த்ததனைக் கொண்டு , யானையின் முழு வடிவத்தினையும் தொகுத்தே பார்க்க முடியும். தனியாக ஒரே பாடலில் யானையின் வடிவத்தினை முழுமையாகப் பாடியுள்ளார்களா! என இப்போது பார்ப்போம்.
“தூங்கு கையான் ஓங்கு நடைய
உறழ் மணியான் உயர் மருப்பின
பிறை நுதலான் செறல் நோக்கின
பா அடியால் பணை எருத்தின
தேன் சிதைந்த வரை போல 5
மிஞிறு ஆர்க்கும் கமழ் கடாஅத்து
அயறு சோரும் இரும் சென்னிய
மைந்து மலிந்த மழ களிறு
கந்து சேர்பு நிலைஇ வழங்க
பாஅல் நின்று கதிர் சோரும் ” 10
:புறநானூறு 22 : 1-10.
{ பொருள் – தொங்கிக்கொண்டு அசைகின்ற தும்பிக்கையுடனே, தலை நிமிர்ந்த நடையை உடையன;
மாறிமாறி ஒலிக்கும் மணியுடனே, உயர்ந்த கொம்பினை உடையன;
பிறை போன்று இடப்பட்ட மத்தகத்துடனே, சினம் பொருந்திய பார்வையை உடையன;
பரந்த அடியுடனே, பெரிய கழுத்தை உடையன;
தேனடை கலைந்த மலையைப் போல
தேனீக்கள் ஆரவாரிக்கும் மணக்கும் மதநீருடன்
புண்ணிலிருந்து வடியும் நீருடன் பெரிய தலையை உடையன;
இப்படிப்பட்ட வலிமை மிகுந்த இளங்களிறுகள்
கம்பத்தை ஒட்டி நின்ற நிலையிலேயே அசைந்துகொண்டிருக்க}
மேலுள்ள பாடலில் புலவர் குறுங்கோழியூர்க்கிழார் யானையின் முழுமையான வடிவத்தினையே தனியொரு பாடலில் தந்துள்ளார். இப் பாடலினைக் காதால் கேட்டாலே, பார்வையற்ற ஒருவர் கூட யானையினை தனது மனக் கண்ணில் காண முடியும்.
குறிப்பு – மேலுள்ள பாடலில் அண்மைக் கால அரசியல் செய்தியும் ஒன்றுள்ளது. அதாவது தமிழ்நாடு சட்ட மன்றத்தில், `அடக்கப்பட்ட யானைக்கே மணியோசை வரும்` எனக் கூறப்பட்ட செய்தி ஊடகங்களில் அடிபட்டது. மேலுள்ள பாடலிலும் அடக்கப்பட்டுக் கம்பத்தில் கட்டப்பட்ட யானையிலேயே மணி கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடப்படுகின்றது.