காலாவதியாகிக்கொண்டிருக்கும் முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையை தற்காலிகமாகப் பாதுகாக்க,உலகம் முழுவதும் புதிய பாசிச அரசுகள் தோன்றுகின்றன. கோமாளிகளான அரச அதிபர்களும் நிர்வாகிகளும் குறைந்த பட்ச ஜனநாயகத்தின் இருப்பைக் கேள்விக்கு உள்ளாக்கிகொண்டிருக்கின்றனர். ராஜபக்ச ,ஜோன்சன், மக்ரோன்,மோடி மற்றும் ட்ரம் போன்ற கேலிக்குரிய மனிதர்கள் ஆட்சியின் தலைமைப் பீடத்திலிருந்து பெரும் வியாபார நிறுவனங்களுக்காக மக்களை ஒடுக்குவதையே தமது குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்.
கொரோனா நோய்த்தொற்று ஆரம்பித்த நாளிலிருந்து ஊடகங்களால் இருட்டடிப்புச் செய்யப்படும் மக்கள் போராட்டங்கள் அரசுகளில் நாளாந்த அடக்குமுறைக்கு உள்ளாகின்றன. பிரான்சில் பொலிஸ். தீயணைப்புப் படையினர்,அரச நிர்வாகிகள் போன்ற அரசுகளின் நேரடிக் கூறுகளாகச் செயற்படக் கூடியவர்களே அரசுக்கு எதிரான போராட்டங்களைக் கடந்த காலாண்டுகளாக நடத்துகின்றனர். இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் மத வெறிக் கும்பலில் அருவருப்பான பிற்போக்கு சர்வாதிகாரம் மக்களதும், மானிலங்களதும் அடிப்படைச் சுதந்திரத்தைக்கூட மூர்க்கத்தனமாகப் பறித்துக்கொள்கிறது. இலங்கையின் பேரினவாத அரச பயங்கரவாதம் தனிமனித சர்வாதிகாரத்தைச் சட்டரீதியாக நிறுவனமயப்படுத்தியுளது.
கொரோனா பொது முடக்கத்தைப் பயன்படுத்தி உலகைத் தமது ஆதிக்கத்திற்கு உட்படுத்த முயலும் அதிகார வர்க்கத்திற்கு எதிராக அமேத்தியா சென் தனது உரையில் கூறும் போது,
“இன்றைய இந்தியாவில் அரசுக்கு எதிரான விமர்சனப் பார்வையை முன் வைப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள் ஆக்கப்படுகின்றனர். தனி மனிதர்களின் மனித உரிமை பல்வேறு வழிகளில் பறிக்கப்படுகின்றது. மனித உரிமைக்காகப் போராடுபவர்கள், அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். சர்வதேச மன்னிப்புச் சபையின் வங்கிக் கணக்குகளை முடக்கி அவர்களை இந்தியாவை விட்டு வெளியேற்றியிருக்கிறது மோடி அரசு. பல நூற்றாண்டுகளாக இணைந்து வாழ்ந்த இந்தியாவின் பூர்வ குடிகளான முஸ்லீம்களை இந்துத்துவ தீவிரவாத அமைப்புகள் நாட்டுக்குத் தீங்கு செய்யும் வெளி நாட்டவர்கள் எனக் குற்றம் சுமத்துகிறது. தீவிர வாத இந்துத்துவ அரசியல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பதாக இந்தியா இவ்வாறு இருந்ததில்லை.
இந்துத்துவ மதவதிகள் இந்து முஸ்லீம் கூட்டு வரலாற்று உணமையை மறைப்பதற்கு தம்மாலான அனைத்தையும் செய்கின்றனர்.
இந்துத்துவ அரசின் தலைமையில் இந்தியாவின் உருவாக்கத்தில் முஸ்லீம்களின் பங்களிப்பை மறைத்து பள்ளிப் பாடப்புத்தகங்கள் கூட திரித்து எழுதப்படுகின்றன.
இந்துக்கள், முஸ்லீம்கள் மற்றும் அனைவராலும் மதிக்கப்படும் ஜவர்கலால் பல்கலைக் கழகத்தின் மாணவர் தலைவரான உமார் காலீட், யு.பி.எப்.ஏ சட்டத்தைப் பயன்படுத்தி பயங்கரவாதி எனக் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
காலிட் மற்றும் ஏனைய மாணவர் தலைவர்களை பயங்கரவாதிகள் எனக் குற்றம் சுமத்தி சிறையில் அடைப்பதற்கு எந்த முகாந்தரமும் இல்லை என வெளி நாட்டிலும் உள் நாட்டிலும் பலர் தெரிவித்திருந்தனர். “
உலகம் முழுவதும், வெவ்வெறு வழிகளில் அரச சர்வாதிகாரம் மக்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்திவது உண்மையானாலும், தனது சொந்த நாடான இந்தியா தொடர்பாக, தான் அதிக அக்கறை கொண்டுள்ளதாக அமேதியா சென் குறிப்பிடுகிறார்.
இந்தியா மக்களுக்கு எதிராக மட்டுமல்ல தெற்காசியப் பிராந்தியத்திற்கே எதிரான இந்துத்துவ பாசிசத்திற்கு எதிரான மக்களின் எழுச்சி இன்றைய காலத்தின் அவசரத் தேவை. .
https://scroll.in/article/977260/amartya-sen-world-is-facing-pandemic-of-authoritarianism