ஆனால் தேர்தல் மூலம் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியுமா?
நம் நாட்டில் இலவச அரிசி, இலவச உரல், இலவச உலக்கை என்ற பெயரில் மக்களின் வாக்குகளைப் பெறும் தேர்தல் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். ஒரு தனி மனிதனை இந்திரன், சந்திரன் என்று புகழ்ந்து, ஊடகங்களில் உயர்த்திப் பிடிப்பதன் மூலம் வாக்குகளைப் பெறும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். இந்த அரசியல்வாதிகளால் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்பது ஒரு புறம் இருக்கட்டும்; புரிந்து கொள்ளக் கூட முடியாது என்பது தான் உண்மையான நிலைமை. இதனால் வாக்களிப்பதில் எந்த விதமான பயனும் இல்லை என்று புரிந்து கொணடு உள்ள பலர் வாக்குச் சாவடிக்குச் செல்வதே இல்லை. வாக்களிக்க மறுப்பவர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருவதைக் கண்ட முதலாளித்துவ அறிஞர்கள், இப்பொழுது பொருட்படுத்தத் தேவையில்லாத அளவில் இருக்கும் இவர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் உயர்ந்தால், முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கு எதிரான கருத்து வலிமை பெற ஆரம்பித்து விடும் என்று அஞ்சி, நாங்கள் யாருக்கும் வாக்களிக்கவில்லை (NOTA – none of the above) என்று என்று பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ள ஆரம்பித்து உள்ளனர். இவ்வாறு செய்தால் இவர்களுடைய எதிர்ப்பு தனிப்பட்ட மனிதர்களுக்குத் தான் என்று பிரச்சாரம் செய்து, முதலாளித்துவத்திற்கு எதிரான கருத்தை மறைத்து விட விரும்புகின்றனர்.
கல்வி அறிவு குறைந்து உள்ள “புண்ணிய பூமியான” இந்தியாவில் தான் மக்கள் அரசியலில் இருந்து அந்நியப்பட்டு இருக்கிறார்கள் என்றால், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற கல்வி அறிவும், அரசியல் அறிவும் பெற்றுள்ளதாகக் கருதப்படும், வளர்ந்த நாடுகளின் மக்களும் தேர்தல் அரசியலில் இருந்து அந்நியப்படும் போக்கு வளர்ந்து கொண்டு வருகிறது. இதைப் பற்றி பிரிட்டன் செய்தி நிறுவனம் (BBC) 2.5.2015 அன்று ஒரு ஆய்வுரையை வெளியிட்டது.
அமெரிக்காவில் கிளிண்டன், புஷ் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே ஆதிக்கத்தில் இருந்து வருவது குறித்து, சாதாரண மக்களிடையே மட்டும் அல்லாது, அரசியல்வாதிகளிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக அதில் கூறப்பட்டு உள்ளது. மேலும் அமெரிக்கா பிரிட்டன் ஆகிய இரு நாடுகளிலும் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை 20% இலிருந்து 30% வரை குறைந்து உள்ளதைச் சுட்டிக் காட்டி, மக்கள் தேர்தல் அரசியலில் இருந்து அந்நியப்பட்டு வருவதாக அந்நிறுவனம் கூறி உள்ளது. இவ்வாறு தேர்தல் அரசியலில் மக்கள் ஆர்வம் இழந்து கொண்டு இருக்கும் நிலையில் அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளை, அரசியல் பிழைப்புவாதிகள் சூழ்ந்து கொண்டு ஆட்டிப் படைக்கும் நிலை உருவாகி உள்ளது. (Professional polticians tend to be surrounded by political professionals.) இதனால் தரமான அரசியல்வாதிகள் அழிந்து போகும் உயிரினங்களைப் போல் ஆகிவிட்டனர். (Conviction politicians have arguably become something of an endagered species.) அதாவது பிரிட்டனும், அமெரிக்காவும் அரசியலில் இந்தியாவைப் போல் ஆகிக் கொண்டு இருக்கின்றன. இனி இந்தியர்கள் தான் உலக அரசியலுக்கு வழிகாட்டி என்று பெருமைப்பட்டுக் கொளளலாம்.
சரி! நாம் பெருமைப்பட்டுக் கொள்வது ஒரு புறம் இருக்கட்டும். மக்கள் தேர்தல் அரசியலில் இருந்து அந்நியப்படாமல் இருந்தால் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்து விடுமா? அதாவது தேர்தலில் மக்கள் தீவிரமாகப் பங்கு கொண்டு, தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியுமா?
மக்கள் வாக்களித்து, தேர்தலில் வெற்றி பெற்ற அலெண்டே, தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முனைந்த போது, அவர் வெட்டிக் கொல்லப்படுகிறார் என்றால், முதலாளித்துவத் தேர்தல் என்பது எந்த விதத்திலும் நம்பிக்கைக்கு உரியது அல்ல என்று தெளிவாக விளங்குகிறது அல்லவா? முதலாளித்துவ முறையை ஒப்புக் கொள்வதற்கும், அதனால் ஏற்படும் கொடுமைகளை எல்லாம் தாங்கிக் கொள்வோம் என்பதற்குமான அடிமை முறிச் சீட்டு தான் முதலாளித்துவத் தேர்தல் முறை.
மக்கள் தங்கள் பிரச்சிகைளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றால் அதற்குச் சமதர்ம (சோஷலிச) முறையே சரியான வழியாகும். மற்றவர்களை அடிமை கொள்ளும் ஆசை இருந்தால் சமதர்ம அமைப்பில் அது முடியாது. மற்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு.
தேர்தல் அரசியலில் இருந்து அந்நியப்படும் மக்களே! இவ்வாறு அந்நியப்படுவது பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய முதல் படியாக இருக்கலாம். அப்படி முதல் படியிலேயே இருப்பது பயனை விளைவித்து விடாது. தொடர்ந்து சமதர்ம சமூகம் அமைக்கவும் அணியம் ஆக வேண்டும்.
(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 28.5..2015 இதழில் வெளி வந்துள்ளது)