அத்தோடு அவர் இலங்கை சமசமாஜக் கட்சியின் ஆதரவாளராக இருந்தார் என்பதையும் தெரிந்திருந்தேன்.
2004ம் ஆண்டுகளில் நான் மனித உரிமைச் செயல்பாடுகளில் குறிப்பாக தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் வன்முறைகள் தொடர்பாக கடும் எதிர்வினைகளையும், செயல் நடவடிக்கைகளையும் தீவிரமாகக் கொண்டிருந்த ஒருநாளில் அகிலன் கதிர்காமர் என்ற மனித உரிமைச் செயல்பாட்டாளரோடு எனக்கு உறவும் நட்பும் ஏற்பட்டது.
அகிலன் கதிர்காமர் ,நான் அறிந்திருந்த சீலன் கதிர்காமர் அவர்களின் மகன் என்பதை அறிந்து மகிழ்ச்சியும், இவர் மீதான நம்பிக்கைகளும் அதிகரித்தன. அகிலன் கதிர்காமரின் மனித உரிமைச் செயல்பாடுகளில் சேர்ந்து இயங்க எனது நண்பர்கள் சிலரையும் அறிமுகப்படுத்தினேன்.
இக்காலத்தில் என் தோழரும் நண்பருமான ரகுமான்ஜானின் உடனான உரையாடல் ஒன்றில் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் பற்றிய கதையும் வந்தபோது இது தொடர்பாக ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் இருப்பதாகவும் அதனை சீலன் கதிர்காமர் என்பவர் எழுதியிருப்பதாகவும் சொன்னார்.
இதனை தமிழில் கொண்டுவருவது பிரயோசனம் என்றும் அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ளலாம் என்றும் அபிப்பிராயப்பட்டார்.
சீலன் கதிர்காமரின் மகனோடு எனக்கு உறவு இருப்பதால் இதனை அனுமதி பெற்று மொழிபெயர்க்க முடியுமென நான் கூறினேன்.
நான் இது பற்றி அகிலன் கதிர்காமரோடு பேச, அகிலன் தன் தந்தையாராகிய சீலன் கதிர்காமரிடம் அனுமதியும் பெற்று தந்தார். நாங்கள் தமிழ் மொழியாக்க முயற்சிகளில் ஈடுபட்டோம்.
இக் காலத்தில் அகிலன் கதிர்காமர் மனித உரிமைகள் தொடர்பாக ஒரு கலந்துரையாடலை ஒழுங்க செய்ய விரும்பினார்.அதன் நிமித்தம் பேர்லீனில் நண்பன் சர்மாவின் முன் முயற்சியால் கருத்தரங்கும் ஒழுங்கு செய்யப்பட்டது. பலரும் இதில் கலந்துகொண்டு தங்கள் ஆதரவினையும் எதிர்கால செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கவும் முன் வந்திருந்தனர்.
இக் கருத்தரங்கிலேயே ‘’இலங்கை ஜனநாயக ஒன்றியம்’’ (SLDF) என்ற அமைப்பின் பெயரின் முதல் அறிமுகம் எமக்கு கிடைத்தது.இவ் அமைப்பு அனைத்து வன்முறைகளுக்கும் எதிரான ஒரு மனித உரிமை செயல்பாடுகளை கொண்டதாக இருக்க முடியுமென நாங்கள் நம்பினோம்.
சில காலங்களின் பின் இவ் அமைப்பு தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழ தொடங்கின.
இவ் அமைப்பானது, சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து பெருமளவு பணத்தை பெறுவதாகவும், இவ் அமைப்புக்கு பின்னால் லண்டனில் வாழும் நிர்மலா போன்றவர்கள் இயங்குவதாகவும் நாம் அறிந்தோம்.
இதன் பின்னான காலங்களில் அகிலன் கதிர்காமர் உடனான உறவுகளையும் செயல்பாடுகளையும் நான் துண்டித்து கொண்டேன்.
சென்ற யூலை மாதம் 25ஆம் திகதி என் முன்னைநாள் நண்பரான அகிலனின் தந்தையாரும், நான் அறிந்தவராகவும் இருந்த சீலன் கதிர்காமர் காலமான செய்தி அறிந்து கவலைகொண்டேன். அத் தருணத்தில் இப்போது எழுதிய இக் குறிப்புக்கள் நினைவுக்கு வந்தன.
இந்த குறிப்புக்கள் என்னால் எழுதப்பட கூடாத குறிப்புக்களாக வைத்திருக்கவே நான் விரும்பினேன். ஆனால் சில பதிவுகள் இன்றைய காலத்தில் அவசியமாக படுகின்றது.
03.8.2015