Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

டேவிட் ஐயா மற்றும் காந்தியத்துடனான அனுபவப் பதிவு : மு. பாக்கியநாதன்

சொலமன் அருளானந்தம் டேவிட் அவர்கள் ( எஸ்.ஏ.டேவிட்)
Solomon Arulanandam David, Bachelor of Architect (Melbourne, Australia)

இவர் ஒரு அமைதியான காந்தியவாதி, மென் சொல் பேசுபவர், மற்றையோர்களைக் குறைபேசத் தெரியாதவர். எந்த வேலையைப் பொறுப்பெடுத்தாலும் அதனைச் செவ்வனே நிறைவேற்றி விடுவார். 1973 இல் இருந்து 1982 வரை அவருடன் நெருக்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. இவரது நினைவுகளை மீட்கவேண்டுமேயாயிருந்தால் டாக்டர் சோ.இராசசுந்தரம் அவர்களைப் பற்றிய நினைவுகளை மீட்காமல் இவரது பொது வாழ்வு பற்றிப் பேச முடியாது.
வவுனியாவில் டேவிட் ஐயா என்ன செய்தார்? அவர்கள் இருவரும் கைது செய்யப்படும் வரை அவர்களோடு பழகும் வாய்ப்பு இருந்தது. 1977 கலவரத்திற்கு பின்பு நான் இராசசுந்தரம அவர்கள் வீட்டில்தான் தங்குவேன். இராசசுந்தரம் அவர்கள் கைது செய்யப்பட்ட அன்று நான் வீட்டிற்குச் சென்றிருந்தேன். நானும் நின்றிருந்தால் என்னையும் நிச்சயம் கைது செய்திருப்பார்கள். அப்படிக் கைதாகியிருந்தால் 1983இல் நானும் 54வது ஆளாக இருந்திருப்பேன். டேவிற் ஐயா அவர்கள் இறுதிவரை ஒரு உண்மையான பிரமச்சாரியாகவே வாழந்தார். “தனக்கென வாழாப் பிறர்குரியாளன்” என்ற சொல்லுக்கு இலக்கணமாக வாழந்தவர். யாருக்குமே தான் பாரமில்லாமல் வாழவேண்டும் ஆனால் தன்னால் எவரெவருக்கும் எந்தெந்த நேரத்தில் எந்த உதவி செய்ய வேண்டுமோ அதனை அவர் செய்து கொண்டேயிருப்பார். தமிழ் மக்களின் நிலம் பறிபோய்விடக் கூடாது. அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தார்.

1973ஆம் ஆண்டு கிளிநொச்சியைத் தலைமையகமாகக் கொண்ட “அகில இலங்கைக் காந்தி சேவா சங்கம்” வருடாந்தக் கூட்டம் வவுனியா நகரசபையில் நடைபெற்றது. அப்போது நாட்டின் பலபாகங்களில் இருந்து பழம் பெரும் காந்திய வாதிகள் அத்தனைபேரும் வந்திருந்தார்கள். இராசசுந்தரம் அவர்கள் என்னையும் அழைத்திருந்தார். அப்போது தான் நான் பட்டதாரிப் படிப்பினை முடித்துவிட்டு வேலை கிடைக்க முன்பு ஒரு வியாபாரத்தைத் தொடங்கி நடாத்தி வந்தேன். அப்போதுதான் நண்பன் இராசசுந்தரத்திற்கும் அவரது மனைவி டாக்டர் திருமதி சாந்தி இராசசுந்தரத்திற்கும் இடையே எனக்கு நட்பு ஏற்பட்டது. கூட்டத்திற்கு அமரர் டேவிட் ஐயா அவர்களும் வந்திருந்தார்கள். அவரது தோற்றம் அவர் ஒரு உண்மையான காந்தியவாதி, அகிம்சாவாதி என்பதனை உணரக்கூடியதாகவிருந்தது. கதர் வேட்டி, அரைக்கை கோடு போட்ட கதர் சேட் அதுவும் தோய்த்து உலர்ந்த அயன் செய்யாதது, காலில் செருப்பு இல்லை.

ஆனால் இப்படியாக பலர் வந்திருந்தர்கள். அவர்களில் காந்தி சேவா சங்கச் செய்லாளர் திரு சி.க.வேலாயுதபிள்ளை, கிளிநொச்சி குருகுலம் கதிரவேலு அப்பு, திருகோணமலை காந்தி மாஸ்ரர் என்னும் கந்தையா ஆசிரியர். இவர்கள் மூவரும் வேட்டியும் கட்டி மேலுக்கு சேட் இல்லாமல் துண்டினால் உடலை மூடி வந்தார்கள் (மகாத்மா காந்தி போடுவது போன்று) இதனை அவர்களது எளிமைக்காகவே கூறுகின்றேன்). இதில் குருகுலம் என்னும் அனாதைப் பிள்ளைகளை ஆதரிக்கும் குருகுலத்தை நடாத்தி வந்த கதிரவேலுவும் அவரது வயது வந்த மனைவியும் இந்தியன் IPKFனால் அடிக்கப்பட்ட ஷெல்லினால் இறந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு வாழந்த 300ற்கு மேற்பட்ட கடவுளின் குழந்தைகள் நடுத்தெருவில் கைவிடப்பட்டார்கள். இவர்கள் போலவே டேவிட் அவர்களும் மிக எளிமையாக கதர் உடையுடன் வந்தார்.

அன்றுதான் இராசசுந்தரம் அவர்கள் டேவிட் ஐயா அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். டேவிட் ஐயா அவர்கள் கொழும்பு Y.M.C.A இல்தான் வசித்து வந்தார். கொழும்பு செல்லும்போது அவருடன் சென்று கதைத்து வந்துள்ளேன். இராசசுந்தரம் அவர்களுக்கு இந்திய வம்சாவளியினரான தோட்டங்களில் இருந்து வவுனியா வந்து குடியேறிய மக்கள் மீது மிகுந்த பரிதாபத்துடன் கூடிய அன்பும், அவர்களுக்கும் அவர்களது எதிர் கால சந்ததியினரான அவர்களது பிள்ளைகளுக்கும் ஏதாவது சாத்தியபூர்வமான உதவிகள் செய்ய வேண்டும் என்பதனை ஒரு முறை எனக்குச் சொன்னார். அவரும் அவரது மனைவி சாந்தி டாக்டர் அவர்களும் மலைநாட்டு வைத்தியசாலையில் வேலைசெய்தபோது அக்குழந்தைகளின் போஷணையின்மை அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட பானை வயிறு, அவர்களின் சுகாதரமற்ற லைன் வாழ்விடம், அவர்களது உழைப்பின் சுரண்டல்கள், சந்தாக்கார தொழிற்சங்கங்களின் ஏமாற்று வித்தைகள் யாவற்றையும் BBCயில் இருந்து வந்து விவரணப் படம் எடுத்த குழுவினருடன் (கிறனடா குழு என்று நினைக்கிறேன்) சேர்ந்து மேற்படி மக்களின் வாழ்ககை முறையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

இதனை BBC ஒளிபரப்பியவுடன் அது இலங்கை அரசுக்கு பெரிய அவமானமாகவும் தேயிலை வியாபாரத்தில் வீழச்சியும் ஏற்பட இலங்கை அரசு டாக்டர் இராசசுந்தரத்தின் செயற்பாடுகளில் சந்தேகங் கொண்டு இரகசியப்பொலிஸ் மூலம் அவருக்கு பல நெருக்குதல் கொடுத்து விசாரணைக்காக கைது செய்தும் சென்றனர். அவர் வவுனியா வந்து சொந்த கிளினிக் தொடங்கிய பின்னரும் அவர்களுக்கு உதவும் மனப்பான்மையிலேயே இருந்தார்.

இப்படியாக உதவிகள் செய்ய ஒரு அரச சார்பற்ற நிறுவனம் வேண்டும். அதனாலேயே 1973 பிற்பகுதியில் “காந்தியம்” என்னும் ஒரு அமைப்பு நிறுவப்பட்டது. அதன் முதல் கூட்டம் வவுனியா நகரசபை மண்டபத்தில் கூட்டப்பட்டது. ஏன் காந்தி சேவா சங்கத்தின் கிளையாக இயங்காமல் தனியான ஒரு அமைப்பாக இயங்க வேண்டும். எமது திட்டங்கள் சில அவர்களுடன் ஒத்துவராது என்பதனால் தனியாக இயங்க வேண்டும் அதாவது தீவிரமாகவும் (Radicals) காந்திய வழியிலும் இயங்கவேண்டும்.. காந்தியத்தின் குறிக்கோள்களாக பின்வருவன முடிவு செய்யப்பட்டன. அவையாவன Eradication of Poverty, Eradication of Ignorance and Eradication of Decease… அதாவது வறுமை ஒழிப்பு, அறியமையை அகற்றல், நோயை விரட்டல் ஆகியனவாகும். கூட்டத்தின் அதன் தலைவராக திரு எஸ்.ஏ.டேவிட் அவர்களும் , டாக்டர் சோ.இராசசுந்தரம் அவர்கள் அமைப்புச் செயலாளராகவும் (Organizing Secretary) மு.பாக்கியநாதன் (என்னை) நிர்வாகச் செயலாளராகவும் (Administrative Secretary) திரு. இராதாகிருஸ்ணன் பொருளாளராகவும் வேறு அறுவர் செயற்குழு உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர். அன்றிலிருந்து அவரது தொடர்பு தொடர்ந்தது.

முதலாவது கிராம விழிப்புணர்ச்சியாக வவுனியா நகரசபைக்குள் இருக்கும் நகரசுத்தித் தொழிலாளர்களது (தீண்டப்படாதவர்கள் என ஒதுக்கப்பட்ட இந்திய வம்சாவழியினர்) வசிப்பிடமான சூசைப்பிள்ளையார் குளத்தில் ஒரு சிறுவர் பாடசாலை, சிறுவர் பராமரிப்பு நிலையம், போஷாக்கு விநியோகம், ஆரம்ப சுகாதார வகுப்பு போன்றன ஆரம்பிக்கப்பட்டன. தொடர்ந்து வன்னியின் பழைய கிராமங்கள் தோறும், மலையக மக்கள் குடியிருந்த பகுதிகளைத் தெரிந்தெடுத்தும் மேற்படி சேவைகளை விஸ்தரித்தோம். முதலில் படித்துவிட்டு வேலையற்று இருக்கும் இளம் பெண்களைக் கிராமங்களில் இருந்து தெரிவு செய்து அவர்களுக்கு கிராம தலைமைத்துவம், பாலர் பாடசாலைப் பயிற்சி, சத்துணவு தயாரித்தல், குழந்தைகளுக்குப் பால் வழங்குதல் போன்றவையாகும். ஆரம்பத்தில் மேற்படி சேவைகளுக்கான பயிற்சியினை மொறட்டுவையில் உள்ள சர்வோதயத்தில் அதன் தலைவர் ஏ.ரி.ஆரியரட்ணாவின் அனுசரணையுடன் வழங்கப்பட்டது.

சர்வோதயத்தினால் இரண்டரைக் கிலோ நிறையுடய பால் மா ரின் ஒரு லொறி; அனுப்பப்பட்டது. உள்ளுர் நிதி உதவியுடன் தொடங்கப்பட்ட காந்தியம் மேலும் வளர நிதி தேவைப்பட்டது அதற்கு இராசசுந்தரம் அவர்கள்; ஒரு புறொஜெக்ற் றிப்போட் வரைந்து நோர்வேயில் உள்ள “நோவிப்” என்ற நிறுவனத்திற்கு அனுப்பியதன் பேரில் இருவர் வவுனியா வந்து டேவிட், இராசசுந்தரம் மற்றும் எமது அங்கத்தவர்களுடன்; பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் அதில் நானும் கலந்து கொண்டேன். நாம் நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் சிலவற்றை அவர்களை அழைத்துச்சென்று காண்பித்தோம். திட்டம் அங்கீகரிக்கப்பட்டது. அதில் ஒரு கொண்டயினர் கொண்ட பால மா, ஒரு ஜீப் அடங்கலாக 6 சிறிய லொறிகள், மூன்று மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மீண்டு வரும் செலவினத்திற்கு முதற்கட்டமாக 25 மில்லியன் ரூபாக்கள் ஒதுக்கப்பட்டன. இவைகள் இராசசுந்தரம் அவர்களின் அபார சாதனையாகும். இதன் காரணமாக ஆசிரியைகள் தொண்டர்களாக மட்டுமல்ல அவர்களுக்கு ஒரு அலவன்சும் கொடுக்க வழி ஏற்பட்டது.
1977ஆம் ஆண்டு இராசசுந்தரம் அவர்களும் சாந்தி அவர்களும் சாந்தி அவர்களின் உயர் படிப்பிற்காக லண்டன் சென்றார்கள். அவர்களை வழியனுப்ப நானும் கொழும்பு சென்றுவிட்டு திரும்பும் வழியில் இரவு மெயில் ரயில் அனுராதபுரத்தில் தரித்து நிற்கும்போது யாழ்ப்பாணத்திலிருந்து வரும் மெயில் ரயிலும் வந்து சேர்ந்தது. அப்போது அதிலிருந்து இறங்கிய சிலர் சிங்களத்தில் தெமுலு கானுவா தெமுலு கானுவா எனக் கத்திக்கொண்டு இறங்கிவந்து எமது ரயிலில் வந்த பயணிகளைத் தாக்கினார்கள். ஏன்னோடு இராசசுந்தரத்தின் அண்ணரும் வந்திருந்தார். அவர் ஒரு நேவி காரர். அவர் உடனே யுனிபோமைப் போட்டு எமது கொம்பாட்மென்ருக்குள் யாரும் வர அனுமதிக்கவில்லை. பின்னர் 1 – ஒண்டரை மணித்தியாலத்தின் பின்னர் ஆமியும் பொலிசும் வந்து கலவரத்தை அடக்கினார்கள். அதில் பலருக்கு பலத்த அடியும் வெட்டும் விழுந்தது. அதிகாலை ஐந்து மணிபோல் ரயில் வெளிக்கிட்டு வவுனியா வந்து சேர்ந்தோம்.

அந் நிகழ்வே இலங்கை முழுவதும் பெரும் இனக் கலவரமாக வெடித்து பல அகதிகள் பஸ்களில் அனுராதபுரத்திலிருந்து வந்து சேர்ந்து கொண்டேயிருந்தனர். அப்போது இராசசுந்தரமும் இல்லை டேவிட் ஐயாவும் இல்லை. நானும் சில அங்கத்தவர்களும் சேர்ந்து அகதியாக வந்தவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களை சைவப்பிரகாச வித்தியா சாலையில் தங்கவைத்து உணவும், பாலும் பரிமாறினோம். அரசாங்க அதிபரும் தமது உத்தியோகத்தர்கள் மூலமாக பல உதவிளைச் செய்தார்கள். வர்த்தக சமூகமும் பணம் சேர்த்து அவர்களும் உதவி செய்தார்கள். டேவிற் ஐயா அவர்களும் கொழும்பிலிருந்து ஒருவாறு வந்து சேர்ந்தபடியால் எமக்கு முடிவுகள் எடுக்கச் சுலபமாகியது. நிறைய இந்திய வம்சாவளியினர் நிர்க்கதியாக வந்து சேர்ந்தார்கள். யாழ்ப்பாணத்தவர்கள் தங்கள் இடம் நோக்கிப் பயணமாகினர்.

காந்தியத்திற்கென ஏற்கனவே பண்ணை அமைப்பதற்கென பாலமோட்டையில் 100 ஏக்கர் திருத்தப்பட்டும் திருத்தப்படாமலும் இருந்த காணி ஒன்று வவுனியா டி.எல்.ஓ வாகக் கடமையாற்றிய திரு சண்முகராஜா என்னும் நண்பர் மூலம் கிடைத்திருந்தது. அக்காணியைப் பயன்படுத்தி இராசசுந்தரம் லண்டனில் இருந்தும் அவர்களின் வழிகாட்டலில் டேவிட் ஐயா, நான் மற்றும் அங்கத்தவர்களுடைய உதவியுடனும் நொவிப் பண உதவியுடனும் அவர்களுக்கு உதவி செய்து கொட்டில் அமைத்துக் கொடுத்து ஆரம்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து குடியமர்த்தினோம். இவ்வேளையில் 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வந்தது உடுப்பிட்டித் தொகுதியில் த.இராசலிங்கம் அவர்களை தமிழர் விடுதலைக் கூட்டணி அபேட்சகராக நிறுத்தியிருந்தது. அவருக்கு இளைஞர் பேரவையைச் சேர்ந்த பலர் வேலை செய்ய வந்திருந்தார்கள். எமது வீடு தேர்தல் காரியாலயமாக இயங்கியது அங்கு வெளியிடங்களில் இருந்து வந்தவர்கள் தங்கியிருந்து பிரசாரப்பணியைச் செய்தார்கள். அதில் முக்கியமானவர் சந்ததியார், செந்தூர்ராஜா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். நான் அப்போதுதான் சந்ததியாரைச் சந்திக்கிறேன்.

இரவு அவரோடு கதைத்துக் கொண்டு இருக்கும் போது எமது காந்திய நடவடிக்கைகள், குடியேற்ற நடவடிக்கைகள் பற்றி விபரித்துக் கொண்டிருந்தேன். அதில் அவர் ஈர்க்கப்பட்டு, இப்படியான வேலைகளைச் செய்வதற்கு என்னிடம் சில இளைஞர்கள் தயாராக உள்ளார்கள் அவர்களுக்கு உணவும் தங்குதிடமும் கொடுத்தால் அவர்கள் பண்ணை வேலைகள் அத்தனையையும் செய்வார்கள். இந்த இடையில் இராசசுந்தரம் தம்பதிகள் லண்டனிலிருந்து வந்து விட்டார்கள். அதனைத் தொடர்ந்து சந்ததியாரும் அவரது நண்பர்களும் ஒரு வானில் இராசசுந்தரம் அவர்களின் வீட்டில் வந்திறங்கினார்கள். அப்போது டேவிட் ஐயாவும் அங்கு இருந்தார். சந்ததியாரை அறிமுகம் செய்து வைத்தேன். அவரோடு சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்), (பாலமோட்டை) சிவம், பாலன், ராஜன் (சின்ன) வேறும் சிலர் வந்திருந்தனர் தற்போது எனக்குப் பெயர்கள் ஞாபகம் இல்லை. அவர்கள் டேவிட் ஐயா மற்றும் இராசசுந்தரம் அவர்கள் அவர்களுக்கு ஒரு சிறு சொற்பொழிவாற்றி அவர்களை வானில் ஏற்றிக் கொண்டுபோய் விட்டோம். சிறிது நாட்களில் பண்ணை ஒரு சிறந்த ஒழுங்கிற்கு வந்தது. கிணறு வெட்டப்பட்டது, விவசாயம் செய்தார்கள், அங்கு குடியேறியோர் சகலவற்றிலும் பங்கு கொண்டார்கள் நியாயவிலைக் கடையை நிறுவி அந்த ஊர்மக்களுக்கும் சேர்ந்து பல நன்மைகளைச் செய்தார்கள். ஆனால் இவர்கள் அடிப்படையில் இயக்க நடடிக்கைளில் ஈடுபடத் தாடங்கினர்.

அங்கு உமாமகேஸ்வரனும் வந்து போனார். ஆனால் என்னை ஒருநாளும் தங்கள் இயக்க நடவடிக்கைகளில் இணைத்துக் கொள்ளவில்லை. அதனை நான் விரும்பவில்லை என்பது சந்ததியாருக்குத் தெரியும். சந்ததியாரும் நானும் பல இடங்களுக்கு ஒன்றாக மோட்டார் சைக்கிளில் செல்வோம் ஆனால் புளொட் அங்கத்தவர்களுடன் தொடர்பு படுத்தவில்லை. நானும் அது பற்றி அக்கறை கொள்ளவில்லை. எனது நோக்கம் முழுவதும் அகதிகளுக்குத் தொண்டு செய்வதாகவே அமைந்தது.

காந்தியம் சிறிது சிறிதாக அரசியல் மயப்படுவது பற்றி இராசசுந்தரத்துடன் விவாதித்தேன். அவர் கூறினார் நாம் தமிழ் பொலிட்டிக்ஸ் மட்டும் செய்கிறோம் அதுவும் அகிம்சை வழியில். ஆனால் எனக்குத் தெரிந்தமட்டில் இராசசுந்தரமோ அன்றி டேவிட் அவர்களோ துவக்குத்தூக்கிப் போராடவில்லை. வவுனியாவில் குடியேற்றம் செய்தார்கள். தமிழ் அரசியல் வாதிகள் சிந்திக்காததனை அவர்கள் செய்தார்கள். எல்லைக் கிராமங்கள் பாதுகாக்கப்பட நடவடிக்கை எடுத்தோம்.

டேவிட் ஐயா, காந்தியத்திற்கு வருவதற்கு முன்பு எல்லைக் கிராமமப் பாதுகாப்பு அவ்வாறான கிராமங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று எழுதியும், பேசியும் செயலிலும் காட்டிவந்தார். முதலில் தமிழ் பல்கலைக் கழக இயக்கத்தினை இளைப்பாறிய நீதியரசர் கிருஷ்ணதாசன், பேராசிரியர் சின்னத்தம்பி அவர்களும் இன்னும் சில படித்தவர்களுடம் சேர்ந்து திருகோணமலையைத் தளமாகக் கொண்டு ஆரம்பித்தார்கள். திருகோணமலை சிங்களவர் குடியேற்றத்திலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதனை ஆரம்பத்தில் வலியுறுத்தியவர்கள் இதனாலேயே அமையப் போகும் தமிழ் பல்கலைக் கழகம் திருகோணமலையில் அமையவேண்டும் என்பதில் குறிக்கோளாக இருந்து அதற்கொன 3ஆம் கட்டையடியில் 5 ஏக்கரளவான நிலமும் வாங்கப்பட்டு அதில் சிறிய கட்டிடமும் அமைத்திருந்தார்கள். அது இன்றும் வெற்று நிலமாக இருந்ததளைக் கண்டுள்ளேன். ஆனால் இன்றைய நிலையில் அது என்னவாயிற்றோ தெரியவில்லை.

இதனைத் தொடர்ந்தே பதவியாவில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு தமிழ் நிலம் பறிபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் நெடுங்கேணி. பட்டிக்குடியிருப்பில் தமிழ் பல்கலைக்க கழக இயக்கம் சார்பில் நாவலர் பண்ணை என்ற ஒரு பண்ணையை டேவிட் ஐயா தொடங்கினார். ஆனாலும் ஒரு சிலரைத்தவிர அங்கு குடியேறுவதற்கு எவரும் முன்வரவில்லை, வுவனிக்குளம், விசுவமடு போன்று மக்கள் சென்று குடியேறவில்லை. இதற்கு எமது அரசியல் வாதிகள் ஆக்கமும் ஊக்கமும் கொடுக்காதது வேதனையானதே.

1977 இனக் கலவரத்தை அடுத்து தமிழர் புனர் வாழ்வுக் கழகம் வுசுசுழு அமைக்கப்பட்டது அதற்குத் தலைவராக திரு கே.சி.நித்தியானந்தா அவர்கள் தலைவராகவும் திரு கந்தசாமி, சட்டத்தரணி அவர்கள் செயலாளராகவும் இயங்கினர். (இவர் பின்னர் ஒரு இயக்கத்தினால் சுட்டுக்கொல்லப்பட்டார்) இவர்கள் காந்தியத்துடன் சேர்ந்து குடியேற்றங்களை அமைத்தார்கள். முன்பு பெரிய தமிழ் வர்த்தக நிறுவனங்களுக்கு 500 ஏக்கர் வீதம் கொடுக்கப்பட்டு விவசாயம் செய்தார்கள். காலப்போக்கில் அவை வரிவராமல் போகவே அதனைக்கைவிட்டார்கள். அப்படியான காணிகளை டொலர் கோப்பறேசன், கென்ற் பாம் ஆகியவற்றினை அதன் உரிமையாளர்களிடம் இருந்து ரிஆர்ஆர்ஓ பொறுப்பெடுத்து குடியேற்றங்களைச் செய்தனர். முழுக்க முழுக்க இந்திய தோட்டத்துறையிலிருந்து அகதியாக வந்தவர்களே குடியேற்றப்பட்டனர். பராமரிப்பதற்கு மட்டும் யாழ் இளைஞர்கள் பேரவை உறுப்பினர்கள் இருந்து செயற்பட்டனர்.

காந்தியத்தின் சிறுவர் பாடசாலை, போஷாக்கு நிலையம் ஆகியன அமைக்கப்பட்டு நடந்து வரும்போது அங்கு ஏதோ பயங்கரவாத வேலைகள் நடப்பதாகக் கூறி ஆமி அங்கு சென்று பல முறை சோதனையிட்டது அத்தோடு மக்களையும் தொண்டர்களையும் வருத்திக் கொண்டேயிருந்தது. இப்படியாகப் பலமுறை செய்யச் செய்ய குடியேறிய மக்கள் தாங்களாகவே அவ்விடத்தை விட்டுவேறிடம் நோக்கிச் சென்றனர். இதன் பின்பே அங்கு அரசாங்கத்தால் சிறைக் கைதிகள் அதில் காடையர் கடைப்புளியர் கொலைகாரர் யாவரும் கொண்ட குழுவினரைக் குடியமர்த்தினர். இவர்களையே விரட்டும் நோக்கில் ஒரு இயக்கம் சுட்டுக் கொன்று விரட்டியடித்தது. எனினும் மீளவும் அரசாங்கள் இராணுவ முகாமும் அமைத்து பாதுகாப்புடன் குடியேற்றம் செய்து அதனை பதவியா மணலாறு ஆகியவற்றுடன் இணைத்ததோடல்லாமல் அப்பிரதேசத்தை அனுராதபுர மாவட்டத்துடன் இணைத்துக் கொண்டது. எமது அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் யாவுமே அர்த்தமற்றதாகிப் போய்விட்டது. வவுனியா வடக்கின் நெடுங்கேணிப் பகுதியின் ஒரு பகுதி கபளீகரம் செய்யப்பட்டு அனுராதபுரத்துடன் சேர்க்கப்பட்டதோடல்லாமல். இன்று அங்கு இராணுவ முகாமும் பதவியாவிலிருந்து சிறந்த றோட்டும் அமைக்கப்பட்டுள்ளது.

நன்றி.

(டேவிட் ஐயாவோடு 1973-1982 வரை காந்தியத்தோடு கூடவே இயங்கிய பாக்கியநாதன் அவர்களின் அனுபவப் பதிவு இது. அண்மையில் ரொறொண்டோவில் நடந்த டேவிட் ஐயாவின் நினைவேந்தலில் ஆற்றிய உரையின் எழுத்துவடிவம்.
அதை இங்கே பிரசுரிக்க அனுமதி தந்த பாக்கியநாதனுக்கு நன்றி – இளங்கோ)

Exit mobile version