Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

9/11 முதல் 5/19 வரை…:அஸ்வத்தாமா

9 /11க்குப் பின்னரான உலக ஒழுங்கு அரசியல் என்ற சதுரங்கத்தில் நாம் பகடைக்காய்களாக உருட்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இது இன்று நேற்றுத் தொடங்கியதல்ல. 9/11க்குப் பின், உலகம் புதிய பல வழிகளை கண்டுபிடித்துள்ளது. புதிய போக்குகளைச் சென்றடைந் துள்ளது. நடந்துமுடிந்த போர், அவற்றைப் பற்றிய புரிதலை முள்ளந் தண்டைச் சில்லிடவைக்கும் வகையில் எமக்கு உணர்த்தியிருக்கிறது.

9/11உம் அதையடுத்து ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் தாக்குதலும் எனும் போது, 9/11ஐ விளங்கிக் கொள்ளல் என்பது மிக முக்கியமானதாகிறது. ஒரு வகையில், 9 /1 என்பது வெறும் குறியீடு மட்டுமே ஆயினும்; அதைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள விடயங்கள் முக்கியமானவை. “9/11” என்ற சம்பவம் ஏன் நடந்தது? அது அவ்வாறு நடக்க என்ன காரணம் என்ன நிர்ப்பந்தம் என்பன போன்ற விடயங்கள் அதைப் பற்றி எம்மை ஆழமாகச் சிந்திக்க வைக்கின்றன.

சிந்தனையாளர் பியே போர்த்தியோ (Pierre Bourdieu) அழகாகச் சொல்லுவார், “விளையாட்டுச் சீட்டுகள் எல்லாவற்றையும் தன்னிடமே வைத்துக்கொண்டு விளையாட நினைக்கும் ஒருவனிடம், மறுதரப்பானது விதிகளை மாற்றி விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறது. அந்த விதிகளை மாற்றி விளையாட வேண்டிய கட்டாயத்திலும் கூட நியாயமான விதிகளை மாற்றி விளையாட முடியாத நிலவரத்தில் நியாயமில்லாத விதிகளைப் பின்பற்றவேண்டிய நிலைக்கு மாற்றுத்தரப்பு தள்ளப்படுகிறது”. 9ஃ11ஐ அவ்வாறு விளங்கிக் கொள்ளலாம் என்பது அவரது கருத்து.

அந்த அடிப்படையில் பார்ததால், 9 /11 என்பது, கெடுபிடிப் போரின் (பனிப்போர்) முடிவின் பின்னரான ஒற்றைப் பர்pமாண உலக ஒழுங்கை முற்றுமுழுதாக உலுக்க முனைந்த ஒரு சம்பவம். எனவே, அந்த ஒற்றைப் பர்pமாண உலக ஒழுங்கின் ஒரு விளைவாகவே 9 /11ஐப் பார்க்க முடியும். ஒருவகையில் 1990களின் பின்பு தீவிரமடைந்து துரிதப்படுத்தப்பட்ட உலகமயமாக்கலின் எதிர்வினையாகவும் 9 /11ஐ விளங்கிக் கொள்ளலாம்.

முக்கியமாக, 9 /11ஐ அடுத்து முதலாவதாக உருவாக்கப்பட்ட செய்நிரல் ‘இஸ்லாம் மீதான வெறுப்பைக் கட்டமைத்தல்’ அவர்கட்குத் தேவையானதாக இருந்தது. அதே நேரம் 9 /11 சம்பவத்துக்குக் காரணமான அல் கைதா என்கிற அமைப்பின் சித்தாந்தம், பலியாவதன் மூலம் உலகத்தைத் தீவிரப்படுத்துவது என்ற கோட்பாட்டின் அடிப்படையிலானது. அவ்வமைப்பினர் அதற்கமைய இயங்குகின்றனர். அதன் கோட்பாட்டு அடிப்படைக்கும் இஸ்லாத்திற்கும் இடையில் பரந்த வேறுபாடுகள் உள்ள போதும், இரண்டையும் ஒன்றாகச் சுருக்கி ஒரு பொது எதிரியை உருவாக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு இருந்தது. இஸ்லாம் பொது எதிரியாக முன்னிறுத்தப்பட்டது. இஸ்லாத்தைப் பொது எதிரியாக முன்னிறுத்தும் தேவை ஏன் ஏற்பட்டது? அவ்வாறு, குறித்த ஒரு இனம் குறித்த மத அடையாளங்களை மையப்படுத்தியதாக இஸ்லாத்தை முன்நிறுத்த வேண்டிய தேவை என்ன என்பது போன்ற கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன.

1970களின் இறுதிப் பகுதியில் சமுவெல் ஹண்டிங்ட்டன் ( Samual Huntigton) எழுதிய “நாகரிகங்கட்கிடையிலான மோதல்” (Clash of Civilizations) என்ற நூலை நினைவுகூர்வது நல்லது. அமெரிக்கா அல்லது மேற்குலம் உலகமயமாக்கற் செய்நிரலை முன்னெடுக்க வேண்டிய தேவையை வலியுறுத்தி ஹண்டிங்ட்டன் வழங்கும் விளக்கம் “மேற்குலகம் நாகரிகமானது. மற்றவர்கள் நாகரிகமற்றவர்களாக இருக்கிறார்கள். ஆகவே நாகரிகமற்றவர்களை நாகரிகமானவர்களாக மாற்றத் தேவை உள்ளது” என்பதாகும்.

9 /11இன் பின் இஸ்லாத்தைப் பொது எதிரியாக நிறுத்துகிறபோது, உலகமயமாக்கல் செய்நிரலை; முன்னெடுத்தற்கும் அதனூடு மேலாதிக்கத்தை ( hegemony) நிறுவுவதற்கும் எவ்வகையான வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று ஹண்டிங்ட்டன் தனது “நாகரிகங்கட்கிடையிலான மோதல்” என்ற நூலில் எழுதினாரோ, அதை இலகுவாக நடைமுறைப்படுத்த இஸ்லாத்தைப் பொது எதிரியாக நிறுத்துவது வசதியானதாகியது. அதனடிப்படையில் இஸ்லாம் ஒரு பொது எதிரியாக முன்னிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதல் நடாத்தப்பட்டது.

ஆஃப்கானிஸ்தான் மீதான தாக்குதலில் மூன்று விடயங்கள் கவனிக்கப்பட வேண்டும்.

1. அமெரிக்காவினுடைய தன்னிச்சையான தலையீடு

2. அமெரிக்காவின் “தற்பாதுகாப்புக்கான தாக்குதல்” ( self defence) என்ற வாதம்

3. மனிதாபிமான நடவடிக்கை ( humanitarion mission) என்று அதற்கு ஜக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் வழங்கியமை

9 /11இன் பின்பான உலக ஒழுங்கில் முக்கியமாகப் பயன்பட்ட ஒரு சொற்றொடர், இந்த “மனிதாபிமான நடவடிக்கை” (humanitation mission ) ஆகும். ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலில் போதே இந்த நடவடிக்கை முதன்முதலாக ஐக்கிய நாடுகள் சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அமெரிக்காவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது உலக ஒழுங்கில் மிகவும் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்திய ஒரு விடயம்.

அடுத்த அம்சம், பயங்கரவாதத்துக்கு எதிரான போரை வரையறுக்கும் போது, ஜோர்ஜ் புஷ் மிகவும் இலகுவான வரையறை ஒன்றைக் கொடுத்தார் . “நீங்கள் ஒன்றில் எங்களோடு இருக்கிறீர்கள், அல்லது பயங்கரவாதிகளோடு இருக்கிறீர்கள். எங்களோடு முரண்படுவது பயங்கரவாதிகளை ஆதரிப்பதற்கு ஒப்பானது.” பயங்கர வாதிகளாகவும் இல்லாமல், தங்களோடும் இல்லாமல் நடுநிலையாக இருத்தல் என்ற வாய்ப்பையே இல்லாமல் செய்யுமாறான ஒரு கருத்தியல் அங்கே கட்டமைக்கப்பட்டது. அதனடிப்படையில் எவ்விதமான எதிர்க் கருத்தும் எவ்விதமான மாற்றக் கருத்தும் பயங்கரவாதத்துக்கு ஆதரவான கருத்தாகவே முன்மொழியப் படுகிறது. அதன் விளக்கமும் அதேதான். அதன் பின்னணியில் அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் எந்த மாற்றுக் கருத்தையும் பயங்கரவாதத்துக்கு ஆதரவானது என்ற வரையறைக்குள் கொண்டுவரக் கூடியதான தன்மைகளின் அடிப்படையிலேயே 9 /11க்குப் பின்னர் கொண்டுவரப்பட்ட அமெரிக்க மக்கள் பாதுகாப்புச் சட்டம் (Citizen Law) ) உட்பட்ட சட்டங்கள் உருவாக்கப்பட்டன. “பயங்கர வாதத்துக்கு எதிரான யுத்தத்தை” அமெரிக்கா முன்னெடுத்தபோது உருவாக்கி வைததுள்ள சில முக்கியமான அடிப்படை விடயங்கள் இவை. காலப்போக்கில், பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்று உலகின் பல்வேறு நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட யுத்தங்களில் அதே முறைகள் அவ்வாறு பயன்படுத்தப்பட்டன.

அடுத்தது, ஈராக் மீதான தாக்குதலுக்குத் தவிர்ப்பு நடவடிக்கை (preemptive action ) என்று கொடுக்கப்பட்ட விளக்கம். அதாவது எதிரி தாக்குவதற்கு முன்னால் நாமே தாக்குவது என்று கொடுக்கப்பட்ட விளக்கம். எதிரி தாக்காத போதே, ஏதாவதொரு முன்முடிவின் அடிப்படையில், தாக்குதல் தொடுப்பதை நியாயப்படுத்துவதான ஒரு வழிமுறை இதுவாகும்.

அடுத்து இப் பயங்கரவாத ஒழிப்பு யுத்தத்திலே நாங்கள் கவனிக்க வேண்டிய இன்னொரு மிகவும் முக்கியமான விடயம் “மொழி” ஆகும். அதாவது இப் போரிலே “மொழி” என்பது, குறிப்பாகப் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் அறிவிக்கப்பட்டதன் பின்னர், எவ் வகையிற் பயன்படுத்தப்பட்டது என்பதாகும். தொடர்ச்சியாக இவ்வாறு உலகெங்கிலும் பயங்கரவாத்துக்கு எதிரான யுத்தம் நடைபெறுவதாகச் சொல்லப்படுகின்ற நாடுகளில் அது எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதும் கவனிப்புக்குள்ளாக வேண்டியதே. அதிலே முதலாவது ஆட்சி மாற்றம் (regime change) ஈராக் மீதான தாக்குதலுக்கு முக்கியமானதாகக் கருதப்பட்டது ஆட்சி மாற்றம். ஏன்னென்றால் அங்கே ஜனநாயக ஆட்சியில்லை ஆகவே ஜனநாயக ஆட்சி தோன்றுவதற்கான ஆட்சிமாற்றமொன்றைச் செயற்படுத்துவதற்கான நியாயமும், தேவையும் உள்ளன.

இன்னொன்று, ஈராக் மீது தொடுக்கப்பட்டது போரல்ல, அது ஈராக்கை விடுவிப்பதற்கான நடவடிக்கை (Operation Iraq Freedom ) என்ற கூற்று. மக்களை விடுவிப்பதற்கான நடவடிக்கை என்ற பெயர்pலே நியாயம் கற்பிக்கும் வழிமுறை இது. இப் போரியற் கலைச் சொற்களில், 90களின் கடைசிப் பகுதியிற் பயன்படுத்தப்பட்ட சொற்களுக்கும், 9 /11க்குப் பின்பு, குறிப்பாக பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் உருவாக்கப்பட்ட பின்பு பயன்படுத்தப்படுகின்ற சொற்களுக்கும் இடையே பெரிய வேறுபாடுகள் உள்ளன. முன்னர் போர்க்களம் ( battlefield) என்று சொல்லப்பட்டது இன்று செயல் அரங்கு ( theatre of action) என்று சொல்லப்படுகிறது. அந்தச் சொலலே இலங்கையிலும் பயன்படுத்தப் பட்டது. ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதும் போது battlefield(போர்க்களம்) என்று எழுதுவது குறைந்து அதனிடத்தில் theatre of action (செயல் அரங்கு) எனும் பதம் பயன்படுத்தப்படுகிற காரணம், பார்வையாளர்கள் திரையரங்கிலிருந்து திகிலூட்டும் திரைப்படமொன்றைப் பார்ப்பது போல அதைப் பார்க்க வேண்டும் என்பதாகும். அது ஒரு மனோநிலையைக் கட்டமைத்தல் போன்ற செயற்பாடு. அவ்வாறே, தாக்குதல் (attack ) இடம் பெறுவதில்லை. மாறாக, நடுநிலைப்படுத்தல் ( (neutralization) இடம் பெறுகிறது. இவ்வாறான புதிய சொற்கள் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தின் போது அமெரிக்காவால் முற்றுமுழுதாகப் பயன்படுத்தப் பட்டன. எனவே, யாரும் தாக்குவதில்லை. மாறாகச், சமநிலைப்படுத்துகின்றனர். ஏனெனிற் சமநிலைப்படுத்தல் எனும் போது அங்கே மனித உரிமைகள் தொடர்பாகவோ மனித உர்pமை மீறல்கள் தொடர்பாகவோ கொலைகள் தொடர்பாகவோ எவ்விதமான கேள்வியையும் கேட்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு. விடயம் என்னவென்றால், சமநிலைப்படுத்தும் தேவையால், சமநிலைப்படுத்தல் நடக்கிறதே ஒழியத் தாக்குதல் அல்ல.

அவ்வாறே, யுத்தமும் இல்லை. மனிதாபிமான நடவடிக்கை ( humanitarian operation) தான் இடம் பெறுகிறது. ஈராக் மீதான நடவடிக்கையாயினும்;, இலங்கை உட்பட அதற்குப் பின்பான நடவடிக்கை எதுவாயினும், இடம் பெறுவது, மனிதாபிமான நடவடிக்கை தான், யுத்தமல்ல. எனவே இவ்வாறு மாறியமையும் போரின் மொழியானது 9 /11இன் பின்பான முக்கியமான ஒரு விளைவாகக் கருதப்பட்டது.

“பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்” முன்னெடுக்கப்படும் போது, நாட்டு மக்களின் மனநிலையை எவ்வாறு சரிவரப் பேணுவது என்பது எந்த ஒரு ஆட்சி பீடத்துக்கும் மிகவும் முக்கியமானது. ஆட்சிபீடத்தின் முக்கியமான அங்கங்களைப் பார்க்கும்போது, அதன் முக்கிய பங்காளிகளாக ஊடகங்கள் இருக்கின்றன. அவ் வகையில், ஊடகங்கள் எம் மாதிரியான செயற்பாடுகளைப் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்த யுத்தத்திலே கையாண்டன என்பது முக்கியமானது.

குறிப்பாக ஈராக் மீதான தாக்குதல் தொடங்கப்படுவதற்கு முன்பாக 250,000 அமெரிக்க டொலர் செலவில் பிரபலமான ஹொலிவுட் திரைப்படக் கலை இயக்குனர் ஓருவரைக் கொண்டு பிரமாண்டமான அரங்கொன்று ( set) டோஹாவில் உருவாக்கப்பட்டு அங்கிருந்தே ஊடகங்களுக்குத் தகவல்களும் காட்சிகளும் வழங்கப்பட்டன. யுத்தம் எவ்வாறு நடைபெறுகிறது, யுத்தத்தை எம்மாதிரிச் செய்து கொண்டு போகிறார்கள் என்பன போன்ற செய்திகள் வழங்கப்பட்டன. போரியற் செய்திகளை மக்களுக்கு வழங்குவதிற் கூட, எவ்வாறு வழங்க வேண்டும் அதன் நன்மை, அதிலொரு பிரமாண்டம், ஒரு விதமான சினிமாத்தனம். மக்கள் இரசிக்கக்கூடிய விதமாக அதை வழங்குதல் என்பன கவனம் பெற்றன. உண்மையாகப் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தின் பின்னர்தான் அவை கோட்பாட்டு ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் விருத்தி பெற்றன. போரை மக்கள் இரசிப்பிற்கு ஏற்றதாக மாற்றியது 9 /11க்குப் பின்பான காலப்பகுதியே.

போரை இரசிப்பதற்கும் வெற்றியைக் கொண்டாடுவதற்குமான மனநிலை 9 /11இன் பின்னர் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின் பின்பே உருவாக்கப்பட்டது. கருத்துக் கணிப்புக்களினூடு நோக்குகிற போது, அப்பொழுது உலகளாவிய முறையில், குறிப்பாக அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும், உயிரிழப்புக்களைப் பற்றிக் கவலைப்படுவதை விடப் போர் நடத்தப்படும் விதம், பயன்படும் ஆயுதங்கள், போரியல் தந்திரங்கள், போர் வீரம், தேசப்பற்று ஆகியவற்றிலேயே கூடிய அக்கறை காட்டினார்கள் என்று அறிய முடிகிறது. இவ்விடத்திலே தான் ஊடகங்களது பணி, குறிப்பாகப் பொதுப்புத்தி மனநிலையைக் கட்டமைப்பதன் தொடர்பில், ஆற்றப் படுகிறது.
9 /11 தாக்குதலின் பின்பு, அமெரிக்க ஊடகங்கள் ஒரு கிழமை முழுவதும் தொடர்ந்து செய்திகளை மட்டுமே வழங்கிவந்ததன் காரணமாக, அமெரிக்கத் தனியார் ஊடகங்கள் ஒவ்வொன்றிற்கும் சராசரியாக 320,000 அமெரிக்க டொலர் நட்டம் ஏற்பட்டது. அதை எவ்வாறு ஈடுகட்டுவது? அதே நேரம் தமது நாட்டின் மீதான அபிமானத்தையும் ஒவ்வொரு ஊடகமும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். இச் சிக்கலை அமெரிக்கப் பெருவணிகத் துறை ( corporate sector) எதிர்கொள்ள நேர்ந்தது. அதனடிப்படையிலேயே, பின்னர் போரியற் செய்திகளுக்கான விளம்பரங்கள் உருவாகின. நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் சான்றாகப் போரியற் செய்திகள் வழங்கப்பட்டன. அனுசரணையாளர் யார் என்ற தகவலும் எத்தனையாயிரம் ஈராக்கியப் படையினரை அமெரிக்கப் படைகள் கொன்றன, எத்தனையாயிரம் தலிபான்களைக் கொன்றன எனுமாறான போரியற் செய்திகட்கான விளம்பர அனுசரணையும் தொலைபரப்பானது.

முற்றாக வேறுவகைப்பட்ட தேசபக்திக் கருத்தியலோடு இவ் விளம்பரங்களை முன்வைக்கின்ற தன்மையும் ஒருங்கே உருவானது. அப்பொழுது முதல், ஊடகங்கள் ஒரு இரட்டைத் தன்மையைப் பேணத் தொடங்கின. ஓன்று, எவ்வகையிலோ தேசபக்தியை மையப்படுத்தித் தமது விளம்பரத்தைத் தொடர்ச்சியாக மக்களுக்குக் கொண்டு செல்லல். மற்றது, மக்களுக்குச் சேவை செய்கிறோம் என்ற விம்பத்தைத் தோற்றுவித்து அதைப் பேணுவது. அமெரிக்கத் தொலைக்காட்சிகளிலே அமெரிக்கத் தேசியக் கொடி ஆடுகின்ற சிறிய சலனப் படம் ஒன்றைத் தொலைக்காட்சியின் மேல் மூலையில் இடுவது 9 /11இன் பின்னர் தேசப்பற்றின் வெளிப்பாடாக்கப்பட்டது. அம் முறை இலங்கையிலும் பின்பற்றப் பட்டதை நாமறிவோம்.

இங்கே, விளம்பரங்கள் பற்றியும் அவற்றின் இலாபநோக்குப் பற்றியும் பார்த்தால், பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தின் போதும் தனியார் நிறுவனங்களும் பல்தேசியக் கம்பெனிகளும் ( multinational companies) தமது இலாபத்தைக் கைவிட ஒருபோதும் விரும்பவில்லை. உதாரணமாக, ஒப்றா வின்ஃப்றே ( Oprah Winfrey) தனது பிரபலமான நிகழ்ச்சித் தொடரின் போது, யுத்தத்தின் விளைவாக அமெரிக்க இராணுவத்திற் பணியாற்றிய கணவரை இழந்த கர்ப்பிணித் தாய்மாரை வைத்து நிகழ்ச்சி ஒன்றை நடத்திய வேளை, அதையொட்டி, ஆனால் அதற்குச் சம்பந்தமே இல்லாமல், முற்றாக மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அமெரிக்காவின் புகழ்பெற்ற உளவியல் வைத்தியரான டொக்டர் ஃபில் ( Dr. Phil ) உளவியல் ஆலோசனை வழங்குவதாக ஒரு செயற்பாடும் நடத்தப்பட்டது. டொக்டர் ஃபில் அதிற் தோன்றியது தனது வியாபாரத்தைப் பெருக்குவதற்காகவே. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை கூறுவது போலவும் தேசபக்தியின் காரணமாகவே தான் வந்திருப்பதாகவும் டொக்டர் ஃபில் சொன்னாலும் கொடிய வியாபார நோக்கை அதிற் காணலாம். உங்கள் கணவர் தேசநலனுக்கு முக்கியமான ஒரு நாட்டுப்பற்றாளனாக இருந்திருக்கிறார் என்று நீங்கள் பெருமைப்பட வேண்டும் என்பது போன்ற ஆலோசனைகள் அவரால் வழங்கப்பட்டனவேயொழிய, அப் பெண்ணின் எதிர்காலம் என்ன, அவளது குழந்தைளின் எதிர்காலம் என்ன, அரசாங்கம் அதற்கான வழிவகைகள் எதையாவது செய்கிறதா என்பன பற்றிய அக்கறையின்றி, அவை சம்பந்தமான எந்தவிதமான உத்தரவாதமும் வழங்காத குரூரமான வியாபார மனப்பான்மையோடு தான் நிகழ்ச்சி நடத்தப்பட்டமையும் கவனிக்கப்பட வேண்டும். பிற நாடுகட்கும் இது பொருந்தும்.

அடுத்ததுப், பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் பற்றி நோம் சொம்ஸ்கி (Noam Chomsky ) கூறிய கருத்தொன்று , “அமெரிக்கா தனக்குள் கட்டமைத்து வைத்திருக்கின்ற வீரத்துவம் ( heroism ) தான் அமெரிக்காவின் பெரிய பிரச்சனையே ஒழிய அது தீர்வல்ல”. இங்கு கவனிக்க வேண்டிய இன்னொன்று , அமெரிக்கா குர்திய மக்களை அடக்குவதற்காகத் துருக்கியையும், சதாம் ஹசைனையும் வெற்றிகரமாகப் பயன்படுத்தியது. பின்னர், சதாமுக்கு எதிரான அமெரிக்கப் படையெடுப்பு நடைபெற்றபோது அதே குர்திய தேசியவாதிகளை சதாம் ஹசைனுக்கு எதிராகப் பயன்படுத்தியது. விடுதலைப் போராட்ட இயக்கங்களும் விடுதலையை வேண்டிநின்ற மக்களும் செயற்பட்ட விதத்தைப்பற்றிய பெரிய கேள்விகளை இச் செயற்பாடு எழுப்புகிறது. அதாவது, எந்த அமெரிக்கா தங்களை ஒடுக்குவதற்காகத் துருக்கிக்கும் சதாம் ஹசைனுக்கும் ஆயுதங்களை வழங்கிக் குர்திய மக்களுக்கு எதிராக மோசமாகச் செயற்பட்டதோ, அதே அமெரிக்கா, தனது நலனுக்காக சதாம் ஹசைனுக்கு எதிராகச் செயற்படக் குர்தியத் தேசியவாதிகளை நாடியபோது, குர்தியத் தேசியவாதிகள் முழுமனதோடு அமெரிக்காவுக்கு உதவினார்கள். உலகப் புகழ்பெற்ற படம் ஒன்று இருக்கிறது. குர்திய எல்லைப் பகுதியில் அமெரிக்க டொலர்கள் நிரப்பப்பட்ட ஒரு பெரிய திறந்த லொறி ஒன்றில் ஒரு அமெரிக்க இராணுவச் சிப்பாய் படுத்துறங்குவதைக் காட்டுகின்ற படம். அந்தப் படம் எவ்வாறு குர்திய தேசியவாதிகள் அமெக்க டொலர்களுக்கு விலைபோனார்கள் என்பதை விளக்கும் எளிய சித்தரிப்பு. இது ஒரு விடுதலைப் போராட்ட இயக்கம் கைக்கொள்ளக் கூடிய சரியான நடைமுறையா, இவை போன்ற நடைமுறைகளிலிருந்து நாம் கற்கக்கூடிய பாடங்கள் என்ன என்பன இங்கே கேட்கப்படவேண்டிய கேள்விகள். குர்தியப் பிரச்சனை பற்றிய மேற்கூறிய விடயம் விடுதலைப் போராளி இயக்கங்கள் பற்றி விசாரிப்பதற்கான தேவையில் நம்மைக் கொண்டுவந்து நிறுத்துகிறது.

பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் ஒரு அரசு தன்னுள் ஒளித்து வைத்திருந்த பாசிசக் கூறுகளை நேரடியாக வெளிக்கொணர்ந்தது. அரச இயந்திரம் தந்திரமாகவும் மறைமுகமாகவும் செயற்படுத்தி வந்த பாசிச நடைமுறைகள், “பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்”; தொடங்கியதும் பட்டவர்த்தனமாகத் தெரியத் தொடங்கின. 9 /11இன் பின்னரான பெரும் உலக நிகழ்வுகளில் முக்கியமானது லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல். அதன்போது யாரும் இஸ்ரேலை கண்டிக்கவோ இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தவோ எவரும் பெரிதாக அக்கறை காட்டவில்லை. இஸ்ரேல் தானாகவே தோல்வியை ஒப்புக் கொண்டு தனது தாக்குதலை நிறுத்தும்வரை, ஐக்கிய நாடுகள் சபையோ எல்லோரும் சொல்லிக் கொள்கிற “சர்வதேச சமூகமோ” தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை.

இரண்டாவது, கொசோவோவின் விடுதலை. அதைப் பலர் பாராட்டி வரவேற்றிருக்கிறார்கள். ஆனால், கொசோவோ எக் காரணத்துக்காகத் தனி நாடாகப் பிரிக்கப்பட்டது, அதன் பின்னால் ஒளிந்திருந்த அமெரிக்க நலன் சார்ந்த அரசியல் என்ன, உண்மையிலே கிடைத்தது கொசோவோ மக்களுக்கான விடுதலை தானா போன்ற கேள்விகள் விசாரணைக்கு உட்படுத்தி நுணுகி ஆராய வேண்டியவை.

மூன்றாவது, இந்தோனேசியாவின் அச்சே விடுதலைப் போராளிகள் பேச்சுவார்த்தையுடாகத் தீர்வு கண்ட விதம். உண்மையிலே அச்சே விடுதலைப் போராட்டத்தின் முடிவானது இந்தோனேசியா அரசுக்கும் அச்சே விடுதலைப் போராளிகளுக்கும் மத்தியஸ்தராக கடமையாற்றிய மார்த்தி அர்த்தசாரியாலேயே தீர்மானிக்கப்பட்டது. ஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதியாக இருந்தபோது, கொசோவோவுக்குரிய ஒரே தீர்வாகத் தனிநாடுதான் இருக்கவேண்டும் என்று ஐ.நாவுக்கு வரைவு நகல் ஒன்றை வழஙகியவரும் இந்த அர்த்தசாரி தான். அச்சே போராட்டத் தீர்வு, பாரிய ஒடுக்குமுறைகட்கும் அப்பால், ஒரு உடன்படிக்கையாகக் கைச்சாத்திடப்பட்டது. 9 /11இன் பின்பான விடுதலைப் போராட்ட இயக்கங்களின் பொதுவான போக்கின் சில தன்மைகளை விளங்கிக் கொள்ள அதுவும் உதவலாம்.

அடுத்தது பலஸ்தீனத்தில் (வழமையாகப் PLO அமைப்பின் ஆட்சி நடந்துவந்த பின்னணியில்), ஹமாஸ் அமைப்பு முதன் முறையாக 2003ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியது. ஹமாஸ் அமைப்பு பலஸ்தீனத்தின் ஆட்சியைக் கைப்பற்றியதை ஏற்க அமெரிக்கா தயாராக இருக்கவில்லை. அமெரிக்கா உட்பட எந்த ஒரு மேற்கு நாடுமே அதை எற்கத் தயாராக இருக்கவில்லை. மேற்குலகம் சொல்லுகிறவாறு ஜனநாயகத் தேர்தலின் அடிப்படையிலே மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியாக ஹமாஸ் அரசாங்கம் இருந்தும் தாங்கள் அதை ஏற்கத் தயாரில்லை என்று முழு மேற்குலகும் சொல்லியது. பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. ஹமாஸ் அமைப்புக்கு எதிராகப் பாரிய தடைகள் விதிக்கப்பட்டன.

அடுத்து, கிழக்கு ஐரோப்பாவில் நடந்த வண்ணப் புரட்சிகள். கிழக்கு ஐரோப்பாவில் தொடங்கி முன்னாள் சோவியத் குடியரசுகள் வரை, தனக்குச் சார்பான ஆட்சிகளை உருவாக்க கிழக்கு ஐரோப்பா எங்கும் அமெரிக்கா நடத்திய “வண்ணப் புரட்சிகள்”. அவற்றோடு சேர்த்து ஜோர்ஜியாவிலுள்ள தென் ஒஸத்தியாவிலும் ( South Ossetia ) அப்காசியாவிலும் (Abkhazia) ரஷ்ய ஊடுருவலை நோக்கலாம். அதற்கு என்ன காரணம் கற்பிக்கப்பட்டது? ஜோர்ஜியாயும் அமெரிக்காவும் அதை எவ்வாறு விளக்கின? அதைப் பற்றி உலக நாடுகளுக்குச் சொல்லப்பட்ட செய்தி என்ன? இக் கேள்விகள் கவனத்தை வேண்டி நிற்கின்றன.

இக் காலப்பகுதியில் லத்தீன் அமெரிக்காவில் ஏற்பட்ட மாற்றங்கள், குறிப்பாக லத்தீன் அமெரிக்காவில் உருவான இடதுசாரி அரசாங்கங்களும் அவை சார்ந்த மாற்றங்களும், முக்கியமாகக் கருத்திற் கொள்ளப்பட வேண்டியவை. குறிப்பாக லத்தீன் அமெரிக்காவிலுள்ள பழங்குடி மக்களின் எழுச்சி. 500 ஆண்டுகள் கடந்து லத்தீன் அமெரிக்காவின் பழங்குடியினர் தங்களது உர்pமைகட்காகப் போராட ஆரம்பித்திருக்கின்றனர். அவை ஒரு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதாற்; பல நாடுகளில் அரசு மாற்றங்களும் அரசுகளின் இடதுசாரித்தன்மை போன்ற புரட்சிகர மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன.

நேபாளத்தில் ஏற்பட்ட மாற்றம் தென்னாசியாவின் 9 /11க்குப் பிந்திய அரசியலை உள்வாங்கிக் கொள்ள உதவும். பத்து ஆண்டுக்கால மக்கள் யுத்தத்தின் விளைவாக மாஓவாதிகள் ஜனநாயக முறைப்படி ஆட்சியைக் கைப்பற்றினர். ஆட்சியைக் கொண்டு நடத்துவதில் அவர்கள் எதிர்நோக்கிய சிக்கல்களும் அவற்றைத் தொடர்ந்து அவர்கட்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் தடைகளும் (பின்பு ஆட்சிக் கவிழ்ப்பும்) இன்று நேபாளத்தில் உருவாகியுள்ள நெருக்கடியான நிலைமையும், 9 /11க்குப் பின்னரான உலகில், விடுதலைப் போராட்ட இயக்கங்கள் எம்மாதிரியான சவால்களையும் சிக்கல்களையும் சந்திக்கின்றன என்பதை விளங்கிக் கொள்ளப் போதுமானவை.
யாரை நம்புவது, எதற்காக நம்புவது என்பனவற்றை விளங்கிக் கொள்ள மேற்கூறிய உலகநிகழ்வுகள் போதுமானவை என்பேன். அவற்றிலிருந்து எழும் இரண்டு அடிப்படையான கேள்விகள் சிந்தனைக்குரியன.

1. விடுதலைப் போராட்ட இயக்கங்களில் அனுபவங்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடிய பாடங்கள் எவை?

2. 9 /11க்குப் பின்பான உலகில் எவ்வகையான அமைதியும் சமாதானமும் இயலுமானவை?
இவ்விடத்து, இரண்டு முக்கியமான ஆவணங்களை கவனிக்கத் தக்கன. முதலாவது 9 /11க்கு பினபான உலகில் பயங்கரவாதம் என்பது உலகளாவிய நிகழ் தன்மையுடையது ( global phenomenon ) என்று ஐ.நாவாற் கருதப்பட்ட நிலையில 2004ம் ஆண்டு ஐ.நா. வெளியிட்ட “More Secure World, Our Shared Responsibility”எனும் அறிக்கையிற் குறிப்பிடப்பட்டுள்ள இரு முக்கியமான பரிந்துரைகள்.

1. Use of force: Rules and guidelines– வலுக்கட்டாயமான அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குரிய சட்டங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும் அதை ஐ.நா. ஒழுங்கு படுத்துவதையும்; பற்றியது.

2. Peace keeping: Keeping peace by force –– அமைதி காத்தலையும் வலுக்கட்டாயமாக அமைதி காத்தலையும்; பற்றியது.

இவை, 2004ம் ஆண்டு ஐ.நாவின் அறிக்கையிலே எதிர்கால உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்கான 12 பரிந்துரைகளில் இரண்டாகும். உலகில் இனி எம்மாதிரியான சமாதானம் இயலும் என்பதற்கு இவை எடுத்துக்காட்டுக்கள்.

இரண்டாவது முக்கிய ஆவணம் Centre for Strategic Studies, Association of the United States Army என்ற இரு அமைப்புக்கள் சேர்ந்து 2003இல் உருவாக்கிய ஆவணம். “வெல்வதற்கு விளையாடுதல்” (Play to Win ) என்ற அழகானதும் கவர்ச்சியானதுமான தலைப்பையுடைய இந்த ஆவணம் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுக்கப் பல நாடுகளிலே பயன்பட்டது. இன்னமும் பயன்படுகிறது.

அந்த ஆவணத்தின் சாராம்சம் எதிரிகளைப் பந்தாடுவதைப் பற்றியது. எனவே, போரை ஒரு விளையாட்டாகக் கருதுவது முக்கியமாகிறது. ஆதன் அடிப்படையில் 2003ம் ஆண்டு L Donald Rumsfeld ஈராக்குக்கு எதிராக போரிடும் அமெரிக்கப் படைகளிடையே பேசுகிற போது “உங்களைப் பார்க்க சந்தோசமாக இருக்கிறது. நீங்கள் எப்போதும் விளையாட்டுக் களத்தில் இருக்கிறீர்கள். உங்களுக்கு எப்பொழுதும் இலாபமே மிஞ்சுகிறது. நீங்கள் செய்கிற கடமை ஒரு “ TV game ” விளையாடுவது மாதிரி” என்று கூறினார். “Play to Win”என்ற ஆவணத்திற் குறிப்பிட்டுள்ள முக்கியமான விடயம் அமெரிக்காவின் நலன்களைப் பொறுத்தவரை, தோல்வியடைந்த அரசுகள் முக்கியமானவை. ஆனால் எல்லாத் தோல்வியடைந்த அரசுகளும் முக்கியமானவை அல்ல. தோல்வியடைந்த அரசுகள் சிலவற்றைத் தோல்வியடைந்த அரசுகளாகவே வைத்திருப்பது முக்கியமானது. அதே நேரம், தோல்வியடைந்த நாடுகள் சிலவற்றை ஜனநாயகப்படுத்துவது அதைவிட முக்கியமானது. இது இந்த ஆவணத்தின் அடிப்படையில் முதலாவது முக்கியமான செயற்பாடு.

இரண்டாவதாக, உலகளாவிய அபிவிருத்தியிலே அமெரிக்காவும் அமெரிக்காவுக்குத் துணை நிற்கின்ற நாடுகளும், சண்டை நடக்கிற போதோ நடந்த பிறகோ தேசத்தைக் கட்டியெழுப்பல் ( nation building) எனும் செயற்பாட்டிற் பங்கு பற்றக்கூடாது. அது அமெரிக்க அயலுறவுக் கொள்கைகளுக்குப் பாதகமாக அமையும்.

மேற்சொன்ன இரண்டு ஆவணங்களிலிருந்தும் 9ஃ11க்குப் பின்னரான அமைதி எவ்வாறு அமையும் என்பதை எம்மால் ஓரளவுக்குப் புரிந்து கொள்ள இயலும்.

இலங்கையில், 9 /11க்குப் பிறகு 2002ம் ஆண்டு பெப்ரவரி மாதம் சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. உடன்படிக்கையின் பின்பு ஆறு பேச்சுவார்த்தைச் சுற்றுக்கள் நடைபெற்றன. அக் காலப்பகுதியில் இலங்கை மேலும் உலகமயமாக்கப்பட்டது, மேலும் தனியார்மயமாக்கப்பட்டது. அச் செயற்பாடு ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையிற் “சர்வதேச சமூகம்” முற்றிலும் வேறு வகையான நடத்தையைக் கைக்கொண்டிருந்தது. உதவி வழங்கும் நாடுகளின் சந்திப்பு, திட்டமிட்டே அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டது. விடுதலைப் புலிகள் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகையால் அவர்கள் அதிற் கலந்துகொள்ள முடியாது. இது தற்செயலானதல்ல. அப்போது அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவராயிருந்த அஷ்லி வில்ஸ் ( Ashley Wills) தெளிவாகவே ஒருமுறை கூறினார். “நாங்கள் எந்தப்பேச்சு வார்த்தைகளின் போதும் அவர்களோடு அமரவோ, கை குலுக்கவோ மாட்டோம்”. செய்திகள் இவ்வாறு தொடர்ச்சியாகச் சொல்லப்பட்டு வந்தன.

ஐரோப்பிய ஒன்றியத்தினுடைய தடைவிதிப்பு, அமெரிக்காவின் தடை நீடிப்பு போன்றவை, தனி நிகழ்வுகளாக நமக்குச் சொல்லப்பட்டுள்ளன. அதில் நாம் செய்திருக்கக் கூடியவை எவை, கவனித்திருக்கக் கூடியவை எவை என்பன ஒரு புறம் இருக்க, ஒரு அந்தத்தில் நின்று, வட்டுக்கோட்டைப் பிரகடனத்தின் அடிப்படையிலான தனிநாட்டுக் கோரிக்கையை வலியுறுத்தி அக் கோரிக்கை எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதைப் பற்றி எவ்வித கணிப்புமற்று, அக் கோரிக்கை சம்பந்தமான நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டமை ஒரு விடயம். மறுபுறம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரான்சின் சகல தமிழ் அமைப்புக்களும் சேர்ந்து “வட்டுக்கோட்டைப் பிரகடனமே தமிழ் மக்களின் ஒரே தீர்வு. சர்வதேச சமூகம் அதைப் பெற்றுத் தரவேண்டும்” என்று சொல்லியமையும் நோர்வேயில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் வாக்களித்து “தமிழ் மக்களுக்கான ஏகோபித்த இறுதித் தீர்வு வட்டுக்கோட்டைப் பிரகடனமே. அதன் அடிப்படையிலான தீர்வையே பெற்றுத்தர வேண்டும்” என்ற நிலைப்பாட்டை எடுத்தது இன்னொன்று. இரண்டிலும் கவனத்துக்குரிய விடயங்கள் சில இருக்கின்றன.

இன்னொன்று இஸ்ரேலைத் தமிழீழத்தோடு ஒப்பிடுதல் அடிக்கடி நடைபெறுகிறது. இஸ்ரேல் போன்றதொரு நாடுதான் சாத்தியம் என்றவாறான கருத்துக்கள் பலரால் முன்வைக்கப் படுகின்றன. சியோனிச விரோத இஸ்ரேலிய யூதரான மைக்கல் வார்ஷாவ்ஸ்கி ( Michael Warschawski) எழுதிய “திறந்த கல்லறையை நோக்கி” ((Toward an Open Tomb) என்ற நூலிற் சொல்லப்பட்டுள்ள முக்கியமான ஒரு விடயத்தைத் இங்கு தொட்டுக்காட்ட விரும்புகிறேன். இஸ்ரேலிய சமூகம் எவ்வாறு நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் சரிக்கும் பிழைக்கும் வேறுபாடு தெர்pயாத சமூகமாகத் தனக்குள்ளே சீரழிந்திருக்கிறது என்பது பற்றி அந்த நூலிலே அவர் நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார். அதாவது இஸ்ரேலிய சமூகம் இன்று சகல நியாய அநியாயங்கட்கும் அப்பால் தன்னை நிலைநாட்டுவதை அதி முக்கியமானதாகவும் பொதுமக்களில் எவரதும் நலன் சாராததுமான செயற்பாட்டைக் கொண்டிருக்கிறதையும், ஜனநாயகமும் அறஞ்சார்ந்த பார்வையுமற்ற சமூகமாகவும் எவ்வாறு இஸ்ரேல் மாறியிருக்கிறது என்பதையும் பற்றிச் சொல்லியிருக்கிறார்.

மறுபுறம் இஸ்ரேலினுடைய கொடுமைகளை நியாயப்படுத்தப் பலஸ்தீனத்தினப் பயங்கரவாதம் ஒரு வகையில் உதவுகிறது என்பது இங்கு குறிப்பிட வேண்டியது. பலஸ்தீனப் போராளிகள் இஸ்ரேல் மக்கள் மீது தொடுக்கும் தாக்குதல்கள் எவ்வாறு இஸ்ரேலினுடைய கொடூரத்தை நியாயப்படுத்த உதவுகின்றன என்பதும் கவனிக்க வேண்டியதாகும். அதே வேளை, இஸ்ரேலியத் தேர்தல்களின் போது, லெபனான் மீதான படையெடுப்பையும் 75,000 மக்கள் கொல்லப்பட்டதையும் பற்றி எவ்வித அக்கறையுமற்று ஹிஸ்புல்லாவை தோற்கடிக்கத் தவறிமையும் இரண்டு படைவீரர்களை மீட்கத் தவறியமையுமே இஸ்ரேலிய அரசாங்கத்தின் மிகப்பெரிய பிழைகளாக முன்வைக்கப்பட்டன. கொல்லப்பட்ட மக்கள் பற்றியோ அங்கு நடந்த மனித உ மை மீறல்கள் பற்றியோ அக்கறையற்ற சமூகமாகவே இஸ்ரேலிய சமூகம் இருந்திருக்கிறது. நூலின் முடிவுரையில் அவர் கூறியிருப்பது போல, பலஸ்தீன மக்களுக்கு நியாயம் கிடைக்கிறவரை இஸ்ரேல் என்கிற நாடு ஒரு அமைதியான நாடாக இருக்கப் போவதில்லை. இந்தச் செய்தி எமக்கும் பொருந்தி வரக்கூடியது. எவ்வளவுதான் மக்கள் வரலாற்றை உருவாக்கினாலும் நாம் மக்களின் வரலாற்றுப் பாத்திரத்தை மறக்கின்றபோது, தனி மனிதர்கள் மீதும் தனிமனித ஆளுமை மீதும் நம்பிக்கை வைக்கிறோம். சமூகப் பொறுப்புக்களைச் சிலரது கைகளிலே ஒப்படைத்துவிட்டு நாம் ஒதுங்கி நிற்கிற ஆபத்தான செயலைச் செய்ய விழைகிறோம். அதன் பலன்களையும் நாமின்று அனுபவியாமலில்லை. விடுதலைப் போராட்ட இயக்கங்கள் அமெரிக்காவின் ஆதரவை நாடுவதும் அமெரிக்காவின் ஆதரவைப் பெற்ற தீர்வை நாடுவதும் போன்ற விடயங்களின் தொடர்பாக, விடுதலைப் போராட்டங்கட்கு அமெரிக்க ஆதரவு எம்மாதிரி இருந்திருக்கிறது என்பது பற்றிச் சில விடயங்களை மட்டும் சொல்கிறேன்.

எரித்திரியாவின் உருவாக்கத்தை எடுத்துக் கொள்வோம். எத்தியோப்பியாவிலே ஹெய்லே செலாசீ ( (Haile Selassie)
என்ற கொடுங்கோல் அரசனின் காலத்தில் எரித்திரியா மீதான பயங்கரமான எதியோப்பிய ஒடுக்குமுறையை அமெரிக்கா ஆதரித்தது. அந்த ஆட்சியைக் கவிழ்த்த ராணுவப் புரட்சியின் சிலகாலம் பின்பு வந்த மரியம் மெங்கிஸ்து ( Mariam Mengistu ) தலைமையிலான ஆட்சிக்கு முதலில் ஆதரவளித்த அமெரிக்கா, விரைவாகவே அவ்வாட்சி இடதுசாரிப் போக்கிற் போனதும், எதியோப்பிய ஒடுக்குமுறைக்கெதிராக எரித்திரிய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தது. அமெரிக்க ஆதரவு எதியோப்பிய ஆட்சி மாற்றம் பற்றியதே ஓழிய எரித்திரிய மக்களின் விடுதலை பற்றியதல்ல. எரித்திரிய சுதந்திரத்தின் பின்னர், எத்தியோப்பியாவில் தனக்குச் சாதகமான ஆட்சியை உருவாக்கியுள்ள அமெரிக்கா, இரு நாடுகட்குமிடையே பிரச்சனை வந்த போது எத்தியோப்பியாவுக்குச் சார்பாக எரித்தி;ரியாவின் மீது குண்டு வீசியது. இவ்வாறு, ஒரே நாளில் அமெரிக்க ஆதரவுபெற்ற விடுதலைப் போராட்ட இயக்கம் பயங்கரவாத இயக்கமாக மாறியது.

இன்னுமொரு உதாரணம், யுகோஸ்லாவியாவைப் பிரித்துச் சிதைத்து அதைத் துண்டுதுண்டாக்க அமெரிக்கா தேசியவாதத்தை வெற்றிகரமாகக் கையாண்டது. இன்று யுகோஸ்லாவியா ஏழு நாடுகளாகவும் ஒரு தன்னாட்சிப் பிரதேசமாகவும் துண்டாடப்பட்டுச் சிதைந்து போயுள்ளது. யுகோஸ்லாவியாவில் இருந்த சேர்பிய, குறொவேஷிய, பொஸ்னிய முஸ்லிம், ஸ்லொவீனிய, மசிடோனிய, மொண்டிநெக்ரெ, அல்பேனிய மக்கள் பிளவுபட்டனர். மக்களைப் பிரித்துத் துண்டாடத் தேசியவாதத்தை எப்படிக் கையாண்டார்கள் என்பதற்கு யுகோஸ்லாவியாவை விட சிறந்த எடுத்துக்காட்டு இல்லை. தனது தேவைகட்காகக் கொசோவா போன்ற நாட்டை உருவாக்க அமெரிக்கா தயங்காது. அமெரிக்கா ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உர்pமையை என்றும் ஆதர்pத்ததுமில்லை ஏற்றதுமில்லை. இது முக்கியமானதும் கவனிப்புக்குரியதுமாகும்.

நேபாள மாஓவாதித் தலைவர் பிரசண்டா அண்மையிற் சொன்னது போல “இந்த நூற்றாண்டில் மையமான பிரச்சனை சனநாயகம் பற்றியது. மக்கள் தங்கள் வாழ்வின் மீதும், தங்கள் வளர்ச்சி மீதும் முழுமையான ஆளுமையைச் செலுத்துவதுதான் ஜனநாயகம்”.

ஒடுக்கப்பட்ட மக்களது விடுதலைப் போராட்டம் விடுதலைக்கும் ஜனநாயகத்துக்குமானது. அதன் வெற்றி போராளிகளின் ஆயுதங்களில் மட்டுமல்லாது ஒடுக்குமுறை யாரின் பாதுகாப்பின் பெயரால் நடக்கிறதோ அந்த மக்களின் நடுவே உள்ள ஜனநாயக சக்திகளை வலுப்படுத்துவதிலும் தங்கியுள்ளது. முதலாளித்துவம் ஜனநாயக வரையறைக்குள் தன் சுரண்டலை மேற்கொள்ளவும் அதிகாரத்தைத் தொடரவும் இயலாமற் போகும்போது அப்பட்டமான அடக்குமுறையை ஏவிவிடும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அது அதற்கான புதிய வழிகளையும் நியாயங்களையும் தேடுகிறது. 9 /11இன் பின்னரான உலக ஒழுங்கில் அது தன்னை அப்பட்டமாக வெளிக்காட்டி நிற்கிறது. மக்கள் அதற்கெதிராக அணிதிரள்வதும் போராடுவதும் தவிர்க்க இயலாதன.

Exit mobile version