Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

80 களில் தேசியப் போராட்ட அனுபவங்கள் (முதலாம் பாகம்) : கிளிங்டன்

80 களில் ரெலோ இயக்கத்தில் இணைந்துகொண்டு ரெலோ இயக்கம் புலிகளால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு  கைது செய்யப்படும் வரை அவ்வியக்கத்தோடு  இணைந்திருந்த ரெலோ இயக்கத்தின் முன்னை நாள் போராளி கிளிங்டன் எழுதும் தொடர்.

எல்லாச் சிறுவர்களைப் போலவே நாங்களும் எமது வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருந்தோம். எனது எதிர்காலம் தொடர்பான கனவுகளையும் புத்தகங்களையும் சுமந்துகொண்டே எனது ஒன்பதாம் வகுப்புப் படிப்பு ஆரம்பிக்கிறது. அன்பான அம்மா, அக்கறையுள்ள அப்பா சகோதரிகள், சகோதரர்கள் என்ற எனது  குடும்பம் மகிழ்ச்சிகரமான மெல்லிசையாகவே எம்மை நகர்த்திச்சென்றது. யாழ்ப்பாணது வெம்மைக்கு நிழல் தரமுடியாத பனைமரங்கள் கூட எதிர்காத்தின் கோரமுகத்தை அறிந்திருக்க நியாயமில்லை.

1977 ஆம் ஆண்டிலேயே எனது ஒன்பதாம் வகுப்பு அமைதியாக ஆரம்பமகிறது. அந்த ஆண்டின் வரலாற்று நிகழ்வுகள் என்னை அன்னிய தேசத்திற்கு அழைத்து வரும் என்று ஒரு நாள் கூட நான் கனவுகண்டதில்லை.
1977 இல் நடைபெற்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைத்துப் பிரச்சாரம் மேற்கொண்டது. மேடைகளில் இடிபோல பேச்சாளர்கள் முழங்கினார்கள். தமிழர்களுக்கு என்று ஒரு நாடு தேவை என்றார்கள். எங்கும் உதய சூரியன் கொடி பறந்தது.

அச்சுவேலியில் எனது சிறிய கிராமத்திலிருந்து பள்ளிக்கு சைக்கிளில் போகும் ஒவ்வோரு மூலையிலும் கூட்டணி வேட்பாளர்களின் சுவரொட்டிகள் உதய சூரியன் கொடியோடு காணப்பட்டன.
வீட்டில் அப்பாவிலிருந்து பள்ளியில் ஆசிரியர்கள் வரை கூட்டணிக்கே வாக்குப் போட வேண்டும் என்றே கதைத்துக்கொண்டார்கள்.

தமிழர் விடுதலைக் கூட்டணி அமோக வெற்றிபெற்றது. அதே போல தமிழர்கள் இல்லாத பகுதிகளில் எல்லாம் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் கட்சியான யூ.என்.பி வெற்றிபெற்றது.

ஜேயவர்தன ஆட்சிக்கு வந்த முதல் நாளே நாட்டைப் பிரிய விடமாட்டேன் என்றார்.

அப்போது யாழ்ப்பாணம் உயிர்த்துடிப்போடு இருந்த காலம். வார இறுதி களியாட்ட நிகழ்ச்சிகள், விவாத மேடைகள், நாடகங்கள், பாட்டுக் கச்சேரிகள் என்று துயரங்களைத் தொலைத்துவிட்டு வாழ்ந்திருந்தோம். 1977 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் நடைபெற்ற களியட்ட விழா (Carnival) ஒன்று முற்றவெளி மைதானத்தில் நடைபெற்றது. அதனைப் பார்க்கச் சென்ற நான்கு சிங்களப் போலீசார் பற்றுச் சீட்டு பெற்றுக்கொள்ளாமல் உள்ளே செல்ல முற்பட்டார்கள். பற்றுச்சீடு கேட்டவர்களைத் தாக்கிக் காயப்படுத்தினார்கள். இந்த மோதலின் பின்பு நாடு முழுவதிலும் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் ஆரம்பமாகின.

நாடு முழுவதும் முன்னூறு தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். கொழும்பில் வன்முறை வெடித்தபோது பாதுகப்புப் படைகள் பார்த்துக்கொண்டிருந்ததாகச் செய்திகள் வருகின்றன.

எனது அக்கா திருமணமாகி கொழும்பிலேயே வாழ்க்கை நடத்தினார்.

செய்திகள் வர நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். அம்மாவும் அப்பாவும் கண்ணீரோடு வானொலிக்கு அருகில் உட்கார்ந்து கொள்வார்கள்.

கொழும்பில் தமிழர்கள் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அங்கிருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். வசதியுள்ளவர்களும் வசதியற்றவர்களும் ஏதோ ஒரு வழியில் யாழ்ப்பாணத்திற்கு வந்து சேர்ந்தனர். கொல்லப்பட்டவர்கள் போக ஆயிரக்கணக்கான காயப்பட்ட தமிழர்கள் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வேளையில் எனது அக்காவும் அங்கிருந்து தப்பி புகையிரதத்தில் யாழ்ப்பாணம் நோக்கி அவரது கணவரோடும் ஐந்து வயது மகளோடும் வருகிறார்.

அவர்கள் பயணம் செய்யும் போது வன்முறை ஓரளவு தணிந்திருந்தது. இருந்த போதும் யாழ்ப்பாணம் வந்த புகையிரதங்களின் மீது தாக்குதல்கள் நடைபெற்றன. அக்காவும் கணவரும் வந்த புகையிரதத்தின் மீது வியாங்கொடை என்னுமிடத்தில் சிங்களக் காடையர்கள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தினார்கள். அவ்வேளையில் ஐந்து வயது அக்காவின் மகளின் நெற்றியில் காயம் ஏற்படுகிறது.

அவர்கள் யாழ்ப்பாணம் வருவதற்கு முன்பதாக அனுராதபுரம் போன்ற பல இடங்களில் புகையிரதம் நிறுத்தப்பட்டாலும் அங்கெல்லாம் அவர்கள் இறங்கி மருத்துவமனைக்குச் செல்லப் பயந்தார்கள். அந்த இடங்களிலெல்லாம் சிங்களக் காடையர்கள் வன்முறையில் ஈடுபட்டிருந்தார்கள். தமிழர்கள் தாக்கப்பட்டிருந்தார்கள்.
இதனால் யாழ்ப்பாணத்திற்கு வந்திறங்கியவுடன் யாழ்ப்பாண மருத்துவமனைக்குச் சென்று மகளின் காயத்திற்கு மருந்து போட்டுக்கொண்டுதான் வீடுவந்து சேர்ந்தனர்.

நாமெல்லாம் அதிர்ர்சியில் உறைந்துபோனோம்.

பேரினவாத வன்முறை ஆரம்பித்த நாட்களிலிருந்து அக்கா யாழ்ப்பாணம் வந்து சேரும் வரையான இடைக்காலப்பகுதியில் நாம் அனுபவித்த வேதனை, குழந்தையின் மீதான தாக்குதல்கள் என்பன எனக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தன. தமிழ் மொழி பேசுகின்ற ஒரே காரணத்திற்காக இந்த நாட்டில் வாழ்வதே சாத்தியமில்லை என்ற உணர்வு என்னை விரக்திக்கும் வெறுப்பிற்கும் உள்ளாக்கியது.

மனித வாழ்வியலின் துன்ப துயரங்களைக் கூட அறிந்திராத சிறுவனான எனது மனத்தில் அப்பாவிகளான எம்மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைக்கு எதிராக எதாவது செய்தாக வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது.

அப்போது நானும் எனது பள்ளி நண்பர்களும் இயக்கங்களைத் தேடியலைகிறோம். இயக்கங்களின் நடவடிக்கைகள் மிகவும் இரகசியமானதாகவே இருந்ததால் எங்களால் அவர்களைக் தேடிக் கண்டுகொள்ள முடியவில்லை. கல்வியில் நாட்டம் ஏற்படவில்லை. அம்மாவும் அப்பாவும் நான் டாக்ராகவோ எஞ்சினியராகவோ வருவேன் எனக் கனவுகண்டுகொண்டிருக்க நான் இயக்கங்களைத் தேடிக்கொண்டிருந்தேன்.

அப்போது வசாவிளானில் நான் படித்த பள்ளியில் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி என்ற அமைப்பு கூட்டங்களை நடத்தியது. அந்தக் கூட்டத்திற்கு சென்ற நானும் எனது நண்பர்க சிலரும், அவர்களது பேச்சைக் கேட்டு இது இயக்கத்தின் முன்னணி அமைப்பாகத் தான் இருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வருகிறோம்.

அவர்களிடம் பேசிப்பார்த்த போது அவர்கள் தெளிவாக ஆயுதப் போராட்டம் பற்றி எதையும் சொல்லவில்லை என்றாலும், நாங்கள் அது இயக்கமாகத் தான் இருக்க வேண்டும் என்ற அனுமானத்தில் இணைந்து கொள்கிறோம்.

1982 ல் அதன் தலைவர் என அறிமுகப்படுத்திக்கொண்ட விசுவானந்த தேவரைச் சந்திக்கிறோம். தான் கேகேஎஸ் சீமந்து தொழிற்சாலையில் வேலை பார்பதாகவும் தமது இயக்கமான என்.எல்.எப்.ரி பற்றியும் சொல்கிறார்.

இடைக்கிடை அவர்களின் சுவரொட்டிகளை ஒட்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம். அடிக்கடி விசுவானந்ததேவரை சந்தித்து அவர் கூறுவதைக் கேட்போம். எமக்குப் பெரும்பாலானவை விளங்குவதில்லை. புத்தங்கள் வெளியீடுகள் என்று வாசிப்பதற்குத் தருவார். நாங்கள் படித்தாலும் எதுவும் எமக்கு விளங்கிக்கொள்ளக் கூடியதாக இல்லை.

ஒரு கூட்டத்தில் மக்களை தமது இயக்கத்திற்கு ஆதரவாகத் திரட்டுவதற்கு என்ன வழி என்று ஆலோசனை சொல்லுமாறு விசு கேட்கிறார். என்னுடைய நண்பர் ஒருவர் மட்டும் ஆலோசனை சொல்கிறார். நாளை இராணுவம் போல உடுப்புப் போட்டுக்கொண்டு சிங்களத்தில் கதைத்து பஸ்நிலையத்தில் வைத்து மக்களைத் தாக்கினால் மக்கள் எம்மோடு இணைந்து கொள்வார்கள் என்று சொல்கிறார். அவரது பதிலால் விசனமடைந்த விசுவானந்ததேவர் இனிமேல் அவரை கூட்டங்களுக்கு வரவேண்டாம் எனத் திருப்பியனுப்புகிறார்.

நாங்கள் தொடர்ந்து விசுவின் அரசியல் வகுப்புக்களுக்குச் செல்கிறோம். ஒவ்வொரு கூட்ட முடிவிலும் எப்போது இராணுவப் பயிற்சி தருவீர்கள் என்பதே எமது கேள்வியாக இருந்தது.

இராணுவப் பயிற்சி தொடர்பான கேள்விக்கு அவர் மறுப்புத் தெரிவிப்பதில்லை. அவர் வேறு போராட்ட வழிமுறைகளையும் கூறுவதில்லை. கிளிநொச்சியில் இராணுவப் பயிற்சி முகாம் தொடங்கமுயற்சிக்கிறோம். விரைவில் இராணுவப்பயிற்சி தரப்படும் என்கிறார். நான் கல்விப் பொதுத்தராத சாதாரண தர பரீட்சையை முடித்துக்கொண்டு உயர்தர வகுப்பில் கல்விகற்க ஆரம்பிக்கிறேன். இன்னும் விசுவுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணுகிறோம்.

அப்போது அவரது வகுப்புக்களில் நாங்கள் கிரகிக்கக் கூடியதாக இருந்தது பிரபாகரன், உமாமகேஸ்வரன் போன்றவர்களிடையான மோதல்கள், ஏனைய இயக்கங்களிடையேயான பிரச்சனைகள் குறித்து மட்டுமே.

1983 கொழும்பிற்குச் சென்று அக்கவுடன் தங்கியிருந்து படிக்குமாறு எனது பெற்றார் அனுப்புகிறார்கள்.

நான் போய் வருவதற்கு இடைக்காலத்தில் விசு கிளிநொச்சியில் பயிற்சி முகாமை ஆரம்பித்துவிடுவர் என்ற நம்பிக்கையில் நானும் கொழும்பு செல்ல சம்மதிக்கிறேன்.

1983 இனப்படுகொலை*

1983 ஆம் ஆண்டில் ஜே.ஆர்.ஜெயவர்தன மீண்டும் ஆட்சிக்கு வந்து சில நாட்களின் பின்னதாக யாழ்ப்பாணத்தில் திருனெல்வேலி என்ற இடத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திற்கு சற்றுத் தொலைவில் இராணுவத் தொடரைணி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் ஒன்றை நடத்துகின்றனர். அத் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்படுகின்றனர். அதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் தமிழர்களுக்கு எதிரான வன்முறை இனப்படுகொலை போன்று கட்டவிழ்த்துவிடப்படுகிறது.

கொழும்பில் அக்கா வீட்டில் தங்கியிருந்து படித்துகொண்டிருந்த நானும் அக்காவும் வன்முறைகள் ஆரம்பமாவதை கேள்விப்பட்டு அச்சமடைகிறோம்.

ஒரு வார இறுதி சனிக்கிளமை அன்றே புலிகளின் தாக்குதல் நடைபெறுகிறது. ஞாயிறன்று செய்திகளில் தாக்குதல் தொடர்பான தகவல்கள் வெளியாகின்றன. மறு நாள் திங்கள் வழமையான வேலை நாள். அனைவரும் வேலைக்குச் சென்று விடுகின்றனர். நான் மட்டும் வீட்டிலிருந்து பரீட்சைக்காகப் படித்துக்கொண்டிருக்கிறேன். 77 ஆம் ஆண்டில் காயப்பட்ட எனது அக்காவின் மகளுக்கு அப்போது பாடசாலைக்குச் செல்லும் வயதாகிவிட்டது, அவரும் பள்ளிக்குச் சென்றுவிட்டார்.

திடீரென நாம் தங்கியிருந்த வீட்டிற்கு அருகாமையில் வாகன நெரிசல் அதிகமாகக் காணப்பட்டது. வெளியில் சென்று நான் பார்த்த போது தமிழர்களுக்கு எதிரான வன்முறை கொழும்பில் ஆரம்பமாகிவிட்டதாகத் பேசிக்கொள்கிறார்கள்.

பதைபதைத்துப் போன நான் எனது அக்காவின் மகள் சென்ற பாடசாலைக்குச் செல்கிறேன். அங்கிருந்து அவரை வீட்டிற்குக் கூட்டிவந்து விடுகிறேன்.

நான் வரும் வழியில் சில வீடுகளிலிருந்து புகை வருவதைக் காணக்கூடியதாக இருந்தது. தமிழர்களின் முகங்களில் அச்சமும் பீதியும் காணப்பட்டது. எதோ மிகப்பெரும் அவலம் நடக்கப்போவதற்கு முன்னறிவிப்பதாக அது காணப்பட்டது.
மதியம் கடந்த வேளையில் எனது வீட்டு பல்கனியிலிருந்து  பார்த்த போது அருகிலுள்ள வீடுகள் சில பற்றியெரிவதைக் காணக்கூடியதாக் இருந்தது. அப்போது அக்காவும் வீட்டிற்கு வந்திருந்தார். தெருவால் போகிற சில தமிழர்கள், வெளியே நிற்கவேண்டாம் என எச்சரித்துச் சென்றனர். இங்கு எல்லா இடங்களிலும் சிங்களக் காடையர்கள் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். எம்மைப் பாதுகாத்துக்கொள்ளுமாறு எச்சரித்தார்கள்.

தமிழர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. அங்கெல்லாம் இருந்த பொருட்களைச் கொள்ளையடித்த சிங்களக் காடையர்கள் வீடுகளுக்குத் தீவைத்துவிட்டுச் சென்றனர். தமிழர்கள் கையில் கிடைத்தால் அவர்களைக் கொன்று போட்டுவிட்டுச் சென்றனர்.

எமது வீட்டிலிருந்த தங்க நகைகளை மேல் மாடியின் கூரைக்குக் கீழிருந்த இடைவெளிக்குள் நாங்கள் மறைத்துவைத்துவிட்டு வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.

அந்த நேரத்தில்  நான் கத்தி ஒன்றைப் பாதுகாப்பிற்காக எடுத்து வைத்துக்கொள்கிறேன். அப்போது எனக்கு விஸ்வானந்த தேவர் மீது மேலும் வெறுப்பு உருவாகியது. அவர் சொல்லிக்கொண்டிருந்ததைப் போன்று என்னை இராணுவப் பயிற்சிக்கு அனுப்பியிருந்தால் சிங்களக் காடையர்களை எதிர்கொண்டிருக்கலாம் என்று தோன்றியது.
அப்போது எங்களுக்கு உதவி செய்யும் சிங்களம் பேசிய பேர்கர் பரம்பரையச் சேர்ந்த வேலு என்பவர் வருகிறார். எல்லா இடங்களிலும் தமிழர்களைத் தேடித் தேடி அழிக்கிறார்கள் என்றும் நாங்கள் அங்கிருப்பது பாதுகாப்பற்றது எனவும் எனது அக்கவிடம் அவர் கூறுகிறர்.

அப்போது எமக்கு முன் வீட்டிலிருந்த சிங்கள குடும்பத்தினர் எம்மைத் தற்காலிகமாக பாதுகாப்பதற்கு முன்வருகிறார்கள். நாங்கள் வீட்டிலிருந்தால் அங்கே வருமாறு வேலுவிடம் கூறியனுப்பியிருந்தனர்.

நாங்கள் அங்கிருந்த வேளையில் கொழும்பில் தமிழர்கள் விடுகள் பற்றியெரிகின்றன. எங்கும் குண்டுச் சத்தங்களும் அவலக் குரல்களும் கேட்கின்றன. நாங்கள் சிங்கள நண்பர்கள் வீட்டிலிருக்கும் போதே எங்களது வீடும் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டுவிட்டது, இந்தத் தகவல் எமக்குத் தெரிந்திருக்கவில்லை.

அக்காவின் கணவர் இன்னும் வீடுவந்து சேரவில்லை என்ற அச்சத்தில் நாங்கள் வீட்டுகுள்ளேயே முடங்கியிருந்தோம். அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் வாகனத்திலேயே வீட்டுக்கு வருவது வழமை.

அவர் வீட்டுக்கு வந்ததும் வீடு பற்றியெரிந்து கொண்டிருப்பதைக் கண்டு அவலக்குரல் எழுப்பினார். அதனைக் கேட்ட நாங்கள் தங்கியிருந்த சிங்கள வீட்டுக்காரர், வெளியே சென்று அவரைக் கூட்டிவந்தார்.

அப்போது நாங்கள் வெளியே சென்று பார்க்கிறோம். வீட்டின் அரவாசிப் பகுதி எரிந்து முடிந்திருந்தது.

நாம் தற்பாதுகாப்பிற்காகத் தங்கியிருந்த வீட்டுக்காரர் ஒரு விமானி. தனது இரண்டாவது மனைவியுடனேயே வாழ்ந்துவந்தார். நாம் அங்கிருந்த வேளையில் முதலாவது மனைவியின் மகன் அங்கு வருகிறார். அங்கு வந்த அவர், தமிழ் மக்களின் மீதான வன்முறைகளையும் இனப்படுகொலையையும் நியாயப்படுத்துகிறார். யாழ்ப்பாணத்தில் சிங்கள இராணுவத்தினரைத் தமிழர்கள் கொலை செய்ததற்கான பழிக்குப் பழியே இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்கிறார். அவர் தனது தந்தைக்குச் சிங்களத்தில் கூறி விவாதித்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். மரண பயத்திலிருந்த எமக்கு அது மேலும் வேதனையளித்தது. விமானியான தந்தை அவரை மேலும் பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. ஆனால் எங்களின் அச்சம் அதிகரிக்கிறது.

மகனின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் நாம் தொடர்ந்தும் அங்கிருப்பதற்து பாதுகாப்பானதல்ல என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

மறு நாள் காலையில் அகதி முகாம்களுக்கு தமிழர்களை அழைத்துச் செல்வதற்கு லொறி ஒன்றில் ஒலிபெருக்கியின் மூலம் அறிவித்துக்கொண்டு சென்றார்கள்.

நாங்கள் கிடைத்த உடைகளை எடுத்துக்கொண்டு லொறியில் ஏறி சிங்கள நண்பரிடமிருந்து விடைபெற்றுக்கொள்கிறோம்.
நாங்கள் முகாம் வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம். உணவு பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நிற்கிறோம்.

சாப்பாட்டிற்காக வரிசையில் அணிவகுத்து நிற்பதை பின்னர் இயக்கத்தில் பல தடவைகள் பார்த்திருக்கிறேன். ஆனால் அதன் முதல் அத்தியாயம் அகதி முகாமில் தான் ஆரம்பமானது.

அவ்வேளையில் யாழ்ப்பாணத்தில் என்னுடன் படித்த நண்பர் ஒருவர் மஜிஸ்ரிக் சினிமாவின் பின்பகுதியில் தங்கியிருந்தார். அவரது அண்ணா கணக்கியலாளராக வேலை செய்தார். வேலை நிறுவனம் அவருக்கு தங்குமிட வசதிகளை அங்கு செய்து கொடுத்திருந்தது. அது முஸ்லீம்களின் குடியிருப்புப் பகுதி என்பதால் அப்பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை.

முகாமில் தங்கியிருந்து, அங்கு பதிந்திருந்தால் தான் கப்பலில் யாழ்ப்பாணம் அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்ததால் அவர்களும் முகாமிற்கு வந்திருந்தனர்.

அவர்களுடனேயே நான் பொழுதைக் கழிக்கிறேன். முகாமில் குளிப்பதற்கும் மலசலகூட வசதிகளும் அருகியே காணப்பட்டதால் தமது வீட்டிற்குச் சென்று குளித்துவிட்டு வருவோம் என்று தீர்மானிக்கிறோம்.
நான் எனது அக்கவிற்கு அறிவித்துவிட்டு முகாமின் பின்பகுதி சுவரைக் கடந்த எனது நண்பர்களுடன் அவர்கள் தங்கியிருந்த பகுதிக்குச் செல்கிறோம்.

இந்தியாவில் படித்தவிட்டு விடுமுறைக்கு வந்த நண்பர்கள் சிலரும் அங்கு எம்மோடு வந்திருந்தனர். நான் யாழ்ப்பாணம் சென்று இயக்கத்தில் சேர்ந்து ஆயுதப்போராட்டம் செய்யவேண்டும் என்று அவர்களிடம் சொன்ன போது, தமிழ் நாட்டில் ஈழத் தமிழ் இயக்கங்கள் பற்றி அவர்கள் சொன்னார்கள். பாண்டி பஜாரில் நடைபெற்ற துப்பாக்கி மோதல் தொடர்பாக எல்லாம் அவர்கள் சொன்னார்கள்.

இரண்டு மணியளவில் நாங்கள் மறுபடி முகாமிற்குச் செல்லத் தீர்மானித்த போது மீண்டும் தெருவெங்கும் மக்கள் ஓலமும், குண்டுச் சத்தங்களும் கேட்க ஆரம்பித்திருந்தது. அந்த நாள் இனும் என் நினைவில் அகலாமல் உள்ளது ஜூலை மாதம் 29 ஆம் திகதி 1983 ஆம் ஆண்டில் இது நடைபெறுகிறது.

அப்போது அந்தப் பகுதியிலிருந்த முஸ்லிம் நண்பர் ஒருவர் எம்மிடம் வந்து மீண்டும் சிங்களக் காடையர்கள் தாக்குதல்களை ஆரம்பித்துவிட்டதாகச் சொன்னார். கோட்டைப் பகுதியில் புலிகள் வந்துவிட்டதாகவே சிங்களக் காடையர்கள் தாக்குதல்களை ஆரம்பித்திருந்தனர்.

புலிகள் வந்திருக்கிறார்கள் என்ற வதந்தியைக் கேள்விப்பட்டே சிங்களக் காடையர்கள் காலிப் பகுதியிலிருந்து புகையிரதத்தில் வந்திறங்கியிருந்தார்கள் என அறிந்துகொண்டோம்.

அதே வேளை ஓய்வுபெற்ற இராணுவ மேயர் ஒருவர் வீட்டில் தமிழ்க் குடும்பம் ஒன்று நாங்கள் தங்கியிருந்த பகுதிக்கு அருகமையில் வாடகைக்கு வசித்து வந்தனர். அதனால் சிங்கள மேயரைத் தேடி சிங்களக் காடையர்கள் சென்றிருக்கிறார்கள். அவர் அங்கு அப்படி யாரும் தங்கியிருக்கவில்லை என காடையர்களைத் திருப்பி அனுப்பியது மட்டுமல்ல, போலிசுக்கும் அறிவித்திருந்தார்.

அந்தக் காடையர் கூட்டம் நாம் தங்கியிருந்த பகுதியை நோக்கி வந்துகொண்டிருந்தது. அதைக் கேள்விப்பட்ட நாங்கள் ஐந்து பேரும் குளியலறைக்குள் போய் ஒளிந்துகொண்டோம். குளியலறைக்குள் எங்களை வைத்து எமது முஸ்லிம் நண்பர்கள் பாதுகாப்பிற்காகப் பூட்டி வைத்தனர். முழுமையாகப் பூட்டப்பட்டிருந்தால் சந்தேகம் வரும் என்பதால் நாம் கதவை திறந்தபடியே வைத்திருக்கக் கேட்கிறோம். காடையர் கூட்டம் அப்பகுதியை நோக்கி கொலை வெறியோடு வந்துகொண்டிருந்தது.

தொடரும்..

*கறுப்பு ஜூலை எனக் குறிபிடப்படும் 1983 ஆம் ஆண்டு அரச ஆதரவுடன் நடைபெற்ற இனப்படுகொலையில் 3000 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகின. ஆயிரக்கணக்கான தமிழர்களின் குடியிருப்புக்கள் சூறைய.அடப்பட்டன. நிராயுதபாணிகளான 54 சிறைக்கைதிகள் கோரமாகக் கொல்லப்பட்டனர்

Exit mobile version