21 வருடங்களுக்கு முன் யாழ்பாணத்தில் இருந்து புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லீம் மக்கள் மீள் குடியேற்ற படவேண்டும் என்பதும், இதுவரை இவர்கள் குடியேற்ற படாமைக்கும் எதிர்காலத்தில் குடியேற்ற படுவதற்கும் தமிழ் மக்களே பொறுப்பு என்பதை இவ்வறிக்கை மையப்பொருளாக வைத்துள்ளது.
இலங்கை சிங்கள பேரினவாத அரசின் ஒடுக்குமுறைக்கும் இனவழிப்பிற்கும் உள்ளாகும் இனங்கள் தமது உள் முரண்பாடுகளை தீர்த்து கொள்வது ஐக்கியத்திற்கான ஒரு முன் நிபந்தனையாகும். வடகிழக்கு தமிழ் மக்கள், முஸ்லீம் மக்கள் தமக்கிடையில் தேசிய சிறுபான்மை என்னும் விடயத்தில் தத்தமது
பிரதேசங்களிலேயே தீர்வு காணவேண்டியது அவசியமாகும். அறிக்கையின் கால பொருத்தம் குறித்த விமர்சனத்துடன் அறிக்கை கொண்டுவரப்பட்டதன் நோக்கத்திற்கு அப்பால், யாழ் முஸ்லீம் மக்களின் பிரச்சனையை ஒரு சமூகமாக முதலில் வடகிழக்கு தமிழர் ஏற்றுக்கொள்ள வேண்டும். சமூக அக்கறை கொண்ட அனைத்து சக்திகளும் இவ் விடயத்தை தமது விவாத பொருளாக எடுத்து கொள்வது ஆக்க பூர்வ மானதாக அமையும்.
பொதுவாக இலங்கை தழுவிய அளவிலும், குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழர் மத்தியிலும் புதிய கருத்து, அரசியல் உருவாக்கம்,அணிசேர்க்கை, வேலைத்திட்டம், புதிய தலைமை என்பனவற்றிற்கான காலகட்டமாக இன்றைய சூழல் இருப்பதால், உருவாகும் அணிகள், கருத்துகள் தொடர்பான நிதானமான, சரியான விமர்சனங்கள் அவசியம் என்று கருதுகிறோம். நபர்களில் இருந்து அரசியலை பார்ப்பது, பிரமுகர் சண்டைக்குள் அரசியலை நிறுத்துவது, முத்திரை குத்தி ஒதுக்குவது, அணி சாயம் பூசுவது என்பன தமிழர் அரசியலில் இன்று புரையோடிவரும் போக்குகளாகும். நலிவுற்றிருக்கும் தமிழ் சமூக சூழலில், இனவெறி அரசின் கிடுக்குப்பிடிக்குள் சிக்குண்டிருக்கும் ஒரு சமூகத்தில் இவ்வகை அணுகுமுறைகள், சமூகத்தின் அடிப்படை ஜனநாயகத் திற்காக போராட முன்வரும் சக்திகளையும் கூட இல்லாதொழிக்கும் தன்மை கொண்டது. இவை கடந்த காலத்தில் தமிழ் பேசும் மக்கள் மீது திணிக்கப்பட்டிருந்த துருவசிந்தனைமுறையின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படவேண்டியிருக்கிறது.
அறிக்கையில் உள்ள யாழ் முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக தமிழ் சமூகத்தின் மீதான விமர்சனத்தை ஏற்றுக்கொள்வதுடன், ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் உரிமைகளில் அக்கறையுள்ள, சமூக மாற்றத்தில் அக்கறையுள்ள அனைத்து சக்திகளும் இதை பொறுப்பெடுத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வறிக்கையை வெளியிட்டவர்களிடம் சில கேள்விகள்:
சிங்கள பேரினவாத அரசினால் ஒடுக்கப்படும் ஓர் இனமாகிய முஸ்லீம்களது தேசிய உரிமை தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன?
குறிப்பாக யாழ்பாண முஸ்லீம் மக்களது மீள்குடியெற்றம் தொடர்பாக உங்களது தொடர்ச்சியான வேலைத்திட்டங்கள், நடவடிக்கைகள் என்னென்ன?
தமிழ் பேசும் ஒட்டுமொத்த சமூகமுமே இன்று தமது உரிமைகளை இழந்து ஒரு இராணுவ ஆட்சிக்குள் வாழும் சூழ்நிலையில், யாழ் முஸ்லீம் மக்களின் குடியேற்றம் தொடர்பான உங்களது அக்கறையின் குறிப்பான காரணம் என்ன?
சிங்கள பௌத்த பேரினவாத இலங்கையரசு வடகிழக்கில் தமிழ், முஸ்லீம் மக்களை இனரீதியாக கொடூரமாக ஒடுக்கி அவர்களது இன அடையளங்களை அழிக்கும் நடவிடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. வடகிழக்கு தமிழ் மக்கள் இனசுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். முள்ளிவாய்க்காலில் உலக அதிகாரங்களை சாட்சியாக வைத்து ஒரு இனப்படுகொலையையே நடத்திமுடித்திருக்கிறார்கள்; சமூக அக்கறையும் பெருந்தன்மையும் உள்ள இந்த 71 பேரும் இது தொடர்பாக என்ன செய்திருக்கிறீர்கள்? இலங்கை அரசை எதிர்த்த உங்களது நடவடிக்கைகளைஅல்லது கண்டனங்களை எங்களுக்கு பட்டியல் போட்டு காட்டமுடியுமா?
ஒடுக்கப்படும் இனங்களின் மீதான அக்கறையென்பது அவர்களை ஒடுக்கும் அரசிற்கு எதிரான குரலுடன் மட்டுமே வெளிப்படமுடியும். அதேநேரம் ஒடுக்கப்படும் தனது சொந்த இனத்தின் உரிமை பற்றி பேசாத ஒருவர் பேசும் சக இனத்தின் மீதான உரிமைக்குரல் என்பது நம்பிக்கைக்குரியதல்ல.
தமிழ் சமூகத்திற்கும் அதன் சிவில் அரசியல் பிரதிநிதிகளுக்கும் வேண்டுகோள் விடுத்திருக்கும் 71 பேரும் யாழ் முஸ்லீம் மக்கள் மீது காட்டிய அதே அக்கறையுடன் வடகிழக்கு தமிழ் மக்கள், இலங்கை வாழ் முஸ்லீம் மக்கள்,மலயக மக்கள் மீதான அக்கறையை வெளிக்காட்டுவதுடன் அவர்களது உரிமைப்போரில் இலங்கை அரசை எதிர்த்த போராட்டதிற்கும் முன்வரவேண்டும் என்றும் எதிர்பார்கிறோம்.
அதிகார பசியோடு, மக்கள் நலனை முன்னிறுத்தாது தேசியம் பேசும் வியாபாரிகள், புலி எதிர் வியாபாரிகள்,அரசு எதிர் வியபாரிகள்,புலிஆதரவு வியாபாரிகள்,ஏன் மக்கள் நலனை பேசிக்கொண்டு தம் மேதாவித்தனதினூடே அதே மக்கள் மீது கருத்தியல் அதிகாரம் செலுத்த முனையும் வியாபாரிகளும் மக்கள் முன் அம்பலப்பட்டே ஆவார்கள்.