Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

40.000 பேருடைய உயிரைக் காப்பாற்றியிருக்கலாம்… ! : சி. கா. செந்திவேல்

சிறீலங்காவின் இன்றைய சீத்துவக்கேடுகள் என்ன… சீரழிந்து போன தமிழர்கள் எப்படி சீர் பெறலாம்.. சிறீலங்கா இனவாத அரசு – இந்தியா – புலிகள் – புலம் பெயர் தமிழர் விட்ட தவறுகள் என்ன..சுமார் 50 வருடங்களுக்கு மேலாக இலங்கையின் கம்யூனிச பாரம்பரியத்தில் வந்த , புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சி.கா.செந்திவேல் நேற்று சனி 13.11.2010 அன்று டென்மார்க் வந்திருந்தார். வயன் நகரத்தின் இலக்கிய மன்றத்தினரால் நடாத்தப்பட்ட கருத்தரங்கில் அவர் கூறிய கருத்துக்களில் முக்கியமானவை இங்கு தரப்படுகின்றன.

நீண்ட காலமாகவே தூரப்பார்வையற்ற தமிழர் கூட்டணியினர், பிந்தய கூட்டமைப்பினர் போன்ற மேட்டுக்குடி அரசியல் வாதிகளுக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் போராடி வரும் இவர் சிறுப்பிட்டியை சேர்ந்தவர் என்று ஆரம்ப உரையில் டென்மார்க்கின் அரசியல் சமுதாய பணிகளில் ஈடுபட்டுவரும் தர்மா தர்மகுலசிங்கம் தெரிவித்தார்.

நிகழ்ச்சிகளை குறித்த நேரத்திற்கு அமைதி வணக்கத்துடன் ஆரம்பித்தும் வைத்தார். அத்தோடு எம்.சி.லோகநாதனின் உரையும் கூட்டத்தில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.நிகழ்ச்சியில் சுமார் ஒன்றரை மணி நேரம் சி. கா. செந்திவேல் உரையாற்றினார்.

அதைத் தொடர்ந்து கேள்வி நேரம் இரண்டு மணி நேரம் ஒதுக்கப்பட்டது.

பின் இரவு 21.00 மணியளவில் விருந்துபசாரத்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.கூட்டத்தில் கேட்ட கருத்துக்களில் முக்கியமானவை.

01. நடந்துவிட்ட எல்லாத் தவறுகளையும் பிரபாகரனின் தலையில் போட்டுவிட்டு நாம் ஏதுமறிய பேதைகள் போல வேடமணியக்கூடாது. முழுத் தமிழினமும் அந்தத் தவறுகளுக்கான பங்காளிகளே. ஒரு தலைவன் வருவான் எம்மைக் காப்பாற்றுவான் என்று எண்ணும் தமிழினத்தின் மனமே ஆயுதமேந்திய புலிகளும், அதே பாணியிலான மற்றய இயக்கங்களுமாகும்.

02. இன்று இலங்கையின் அரசியலை முன்னெடுக்க வந்துள்ள கூட்டமைப்பு, வரதராஜப் பெருமாள், டக்ளஸ், பிள்ளையான் உட்பட அனைவருடைய கரங்களும் இரத்தத்தால் தோய்ந்த கரங்களே. இவர்கள் எப்படி மீண்டுமொரு சரியான அரசியலை தமது இரத்தம் காய்ந்த கரங்களால் சரியாக முன்னெடுக்க முடியும் ?

 03. சிறீலங்கா இனவாத அரசு ஒரு ஜனநாயக நாடோ அல்லது சோசலிச நாடோ கிடையாது. அது மற்றவர்கள் உற்பத்தி செய்ததை விற்பனை செய்யும் மோசமான சந்தைப் பொருளாதார நாடு. அரசியல் அதிகாரப் பகிர்வோ, பரவலாக்கலோ எதற்குமே தயாரில்லாத ஓர் ஆட்சியே மகிந்த ராஜபக்ஷ நடாத்தும் ஆட்சியாகும். 80.000 சிங்கள இளைஞர்களையே கொன்று வீசிய சிங்கள இனவாதம், தமிழர்களை என்ன செய்யும் என்பதை நாம் தூரப்பார்வையுடன் உணர்ந்திருக்க வேண்டும்.

04. கிளிநொச்சி வீழ்ந்த கையோடு ஆயுதங்களை மௌனிக்க வைக்கிறோம் என்று புலிகள் அறிவித்து, மக்களையும் விடுவித்திருந்தால் சுமார் 40.000 அப்பாவி மக்களின் மரணத்தை தவிர்த்திருக்கலாம். புலிகளின் மோசமான பிடிவாதமான, தூரப்பார்வையற்ற செயலால் இத்தனைபேர் வீண் மரணத்தை சந்தித்தார்கள்.

05. இத்தனை அவலங்கள் நடந்த பின்னரும், அதற்குக் காரணமான இந்தியா மறைந்திருந்து என்ன செய்தது என்பது தெரிந்த பின்னரும் இந்தியாவை தம் தொப்புள்கொடி உறவென்று சொல்லும் தமிழனை என்ன செய்வது..

06. சிங்கள இனவாத அரசுடன் உறவு கொள்ள புலிகளின் ஒரு பிரிவினர் இன்று கொழும்புக்கு ஓடுகிறார்கள். இன்னொரு பிரிவினர் இந்தியாவுக்கு ஓடுகிறார்கள். இது என்ன அரசியல்.. இதைவிட கேடுகெட்ட அரசியல் என்று ஓர் அரசியல் இருக்க முடியுமா ?

07. நாடுகடந்த அரசு என்று வெளிநாடுகளில் அமைத்துள்ளதாகக் கூறுகிறார்கள். இப்படியொரு அரசு இருக்கிறது என்பதைக் காட்டி இலங்கையிலும் ஓர் தமிழ் அரசு அமைய வழி செய்யலாம் என்று கனடாவில் கூறினார்கள். இதை யாரிடம் மகிந்த ராஜபக்ஷவிடமா காட்டியா ஈழம் அமைக்கப் போகிறீர்கள் என்று அங்கிருந்த பெண்மணி மறுபடியும் அவரிடம் கேட்டார். புலிகள் என்ற பெரிய இயக்கம் போராடியே சிங்கள இனவாத அரசு எதையுமே கொடுக்க முன் வரவில்லை நாடுகடந்த அரசைக்காட்டியா உரிமை பெற முடியும் ?

08. ஆனால் நாடுகடந்த அரசென்பது சிங்கள இனவாதம், இந்திய வல்லாதிக்கம் ஆகிய இரண்டுக்கும் உள்ளத்தில் பெரு மகிழ்ச்சியையே கொடுக்கும். புலிகளின் தனிநாட்டு கோரிக்கை இன்னமும் முடியவில்லை என்பதற்கு இவர்களையே உதாரணமும் காட்டும். அவசரகால சட்ட நீடிப்பு, கைதுகள், கொலைகள் போன்ற நித்திய கருமங்களை மாற்றமில்லாமல் சிங்கள அரசு செய்ய நாடுகடந்த அரசையே உதாரணம் காட்டும். நாட்டில் உள்ள அப்பாவிகள் தொடர்ந்தும் துன்பம் அனுபவிக்கவே இவர்களுடைய செயல் காரணமாக அமையும். புலிகள் மீதான தடையை நீடித்து தமிழ் மக்களை மீண்டும் பழிவாங்க இந்தியாவுக்கும் ஒரு பிடிமானமாக இவர்களுடைய முயற்சி அமையும்.

09. யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றியது புலிகள் செய்த மிகப்பெரும் தவறாகும். இன்று அகதிகளாக வாழும் முஸ்லீம்களின் அடுத்த தலைமுறை சுமார் 20 வருடங்களாக யாழ்ப்பாணத்திற்கு வெளியிலேயே வாழ்கிறது. அவர்கள் புலம் பெயர் தமிழரின் இரண்டாவது தலைமுறைபோல் யாழ்ப்பாணத்திற்கு பார்வையாளராகவே வருவார்கள். முஸ்லீம்கள் மறுபடியும் குடியேறுவதற்குக் கூட சிங்கள அரசு எதையுமே செய்யவில்லை.

10. சீனா – இந்தியா – ரஸ்யா – பாகிஸ்தான் – அமெரிக்கா போன்ற நாடுகள் எல்லாம் இந்தப் போரில் முக்கிய பாத்திரம் வகித்தன. இவர்களுடைய நோக்கங்களுக்காக ஈழத் தமிழர்கள் அநியாயமாக பலியானார்கள். புலிகள் அமெரிக்க சார்புடையவர்கள் என்பதால் அவர்கள் இலங்கையில் இருக்கக் கூடாது என்று இந்தியா கணக்குப் போட்டது. 2001 ற்குப் பிறகு ஆயுதமேந்திய அமைப்புக்கள் இருக்கக் கூடாது என்று அமெரிக்கா கருதியது. இரு சக்திகளும் புலிகளுக்கு எதிரானபோது முதலாம் கட்டம், இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டமென்று வெளிநாட்டு சக்திகளின் தேவைக்கேற்ப நடாத்தப்பட்ட போர் கடைசியில் மீண்டும் தொடங்க முடியாது ஒரு கட்டத்தில் நின்றும்போனது.

11. ஆனால் ஒடுக்கு முறைக்குள்ளான மக்கள் ஐந்தாண்டுகளோ பத்தாண்டுகளோ அல்லது இருபத்தைந்தாண்டுகளோ கழித்து மறுபடியும் எழலாம் ஆனால் அது புலிகள் போல தப்பான திசையில் எழுகிறதா அல்லது மக்கள் சக்தியாக எழுகிறதா என்பதைப் பொறுத்தே அதன் அழிவும் ஆக்கமும் தீர்மானமாகும்.

12. தமிழ் மக்கள் ஏறத்தாழ மந்தை நிலைப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். ஏனென்று கேட்காமல் ஒன்றன் பின் மற்றயது கூட்டமாகப் போகும் குணம் கொண்டவை செம்மறிகள். வெள்ளாடுகள் தனித்தனியாக மேயும் அவற்றை மேய்ப்பது கடினம். ஆனால் செம்மறிகளை மேய்க்க ஒருவன் போதும். அதுதான் ஒரு தலைவன் வருவான் என்று பாடித்திரிகிறார்கள். ஆண்ட பரம்பரை மறுபடி ஆள நினைப்பதில் தவறென்ன என்ற காசியானந்தனின் வரிகளை பாருங்கள் எந்தக்காலத்தில் தமிழ் மக்கள் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். மேட்டுக்குடிகளை தவிர தமிழரை ஆண்டவன் எவன்.. ? இவனா மறுபடியும் ஆளப்போகிறான் இப்படியான பிற்போக்குத் தனமான எண்ணங்களில் பின்னால் மந்தை நிலைப்பட்டது தவறு.

13. இவற்றையெல்லாம் அறிந்து காலத்தையும் சூழலையும் உணர்ந்து தமிழ் மக்கள் சரியான சக்தியாக மலர வேண்டும். தோல்வியடைந்த புலிகளை குத்திக்காட்டி பேசுவதில் யாதொரு பயனும் கிடையாது. இலங்கைவாழ் தமிழ் மக்களிடையே பெரும் அரசியல் வெற்றிடமும் விரக்தியுமே இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் 80 வீதமான மக்கள் வாக்களிக்கவே போகவில்லை. வெறும் ஒன்பதாயிரம் வாக்குகளை வைத்து தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்கிறது கூட்டமைப்பு. மறுபடியும் சேர் பொன் இராமநாதன் காலத்துக்குள் போய் குளிர்காய ஆசைப்படுகிறார் சம்மந்தர்.

14. கூட்டமைப்பை மன்மோகன் சிங் பாராட்டியதாக மாவை சேனாதிராஜா கூறுகிறார். அந்த வெட்டங்கெட்ட செயலை புரியாது கூட்டத்தில் இருந்தவர்கள் கைகளை தட்டுகிறார்கள். கடந்த ஒரு வருடத்தில் இந்திய செய்ததையே மறந்த தமிழனுக்கு பழைய வரலாறா தெரியப்போகிறது.. என்றார்.

15. அதேவேளை இனப்பிரச்சனை என்ற விவகாரம் தீர்க்கப்பட வேண்டும். அதைத் தீர்க்காமல் வேறு நியாயங்களை பேசுவது அர்த்தமற்றது என்றார்.

இது குறித்து தமது கட்சி முன் வைத்துள்ள நான்கு அம்சக் கோரிக்கைகளையும் அதன் உப பிரிவுகளையும் எடுத்துரைத்தார்.இதேவேளை செந்தில்வேலிடமும் பல கேள்விகள் கேட்டப்பட்டன.01. ஏன் சண்முகதாசனும் நீங்களும் பிரிந்தீர்கள் ? நீங்கள் எதற்கு தேர்தலில் போட்டியிட்டீர்கள் ? முதற்கேள்விக்கு உட்கட்சிப் பிரச்சனை என்று கூறிய அவர் இரண்டாவது கேள்விக்கு பதிலளிக்கவில்லை.02. சீனா, ரஸ்யா என்பன கம்யூனிச நாடுகள் என்கின்றன இவை எதற்காக ஆயுதங்களை வழங்கி தமிழரை அழிக்க துணை போயின.. இத்தகைய கம்யூனிசம் தேவையா ? இன்றைய சீனா – ரஸ்யா ஆகிய நாடுகளை நாம் கம்யூனிச நாடுகளாக கருதவில்லை. நாம் இலங்கைக் கம்யுனிஸ்டுக்கள் அவ்வளவுதான்.03. கம்யூனிசநாடான கியூபா எதற்காக ஐ.நா வாக்கெடுப்பில் சிறீலங்காவிற்கு ஆதரவாக வாக்களித்தது ? சிறீலங்கா போன்ற மூன்றாம் உலக நாட்டை யுத்த குற்றவாளியாக நிறுத்தினால் அதை முன்னுதாரணம் காட்டி அமெரிக்கா மற்றய மூன்றாம் உலக நாடுகளையும் நிறுத்தும் என்ற அச்சமே காரணம்.புலிகளிடமும், கூட்டமைப்பினரிடமும், நாடுகடந்த அரசிடமும் என்னென்ன தவறுகள் இருக்கின்றன என்பதை அவர் துணிச்சலோடு சுட்டிக்காட்டினார். ஆனால் அதே தவறுகளே கம்யூனிஸ்டுக்களிடமும் வேறொரு வடிவமாக இருப்பதை கேள்வி பதில் நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பதில்களால் உணர முடிந்தது. எழுபதுகளில் கம்யூனிஸ்டுக்கள் பேசிய அதே இடத்திலேயே 2010 லும் நிற்கிறார்கள் என்ற உணர்வையும் கூட்டம் ஏற்படுத்தியது. எழுபதுகளில் சமுதாயம் இருந்தது போலவே இன்றும் மாற்றமில்லாமல் இருப்பதால் அதையே பேசுகிறார்களா இல்லை அவர்கள் தம்மை சித்தாந்தங்களுக்கு வெளியால் நவீனமயப்படுத்த முடியாமல் இருக்கிறார்களா என்ற இரு பெரும் ஆய்வுக்கான அவசியத்தை இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தியதே இதன் மீதான இன்னொரு பார்வையாகும்.முள்ளிவாய்க்காலுக்குப் பின் மிகப்பெரிய வெற்றிடம் நிலவுகிறது.. அதை நிரப்ப கம்யூனிஸ்டுக்கள் உட்பட யாரையுமே அடையாளம் காட்டமுடியாமல் அந்த வெற்றிடம் நகர்வதாகவே நிகழ்வின் முடிவில் மனதில் உணர்வுகள் ஓடின… இலங்கையில் இருந்து ஒரு பேச்சாளரை அழைத்து, இலவசமாக நிகழ்ச்சி நடாத்தி, பணமே வேண்டாது விருந்தளித்து, உண்டியல் குலுக்காமல், துண்டு விரித்து நிதிக்கு வராமல் ஒரு நிகழ்ச்சியை வயன் இலக்கிய மன்றம் நடாத்தியது பாராட்டுக்குரிய பணி என்பதை மறுக்க முடியாது.

Exit mobile version