39 பில்லியன் டாலர் பெறுமானம் மிக்க அதிர்ச்சி தரும் இந்த ஊழல் விவகாரத்தின் பின்புலத்தில் பல உள்ளூர் பிரமுகர்களிலிருந்து வெளிநாட்டுத் தலைகளும் தொடர்பு பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்திய அரசியல் வியாபரமும் வியாபாரத்திற்கான அரசியலும் ஒரு சில ஆளுமை மிக்க அரசியல் தலைவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.
தமிழ் நாட்டில் ஜெயலலிதாவும் கருணாநிதி குடும்பமும் வியாபார அரசியலில் ஆளுமைமிக்க புள்ளிகள். தனது ஊழல் சாம்ராஜ்யத்தின் பணபலத்தால் இந்தியப் பிரதமாராவதற்கான கனவுகளில் ஈடுபட்டிருந்தவர் ஜெயலலிதா என்பதும் இங்கு சுட்டிக்காகட்டத் தக்கது. அரசியல் வியாபாரத்தைத் தலமை வகிக்கும் இவ்வாறான முக்கிய புள்ளிகள் அல்லது பிரமுகர்கள் அதிகாரிகளையும், அமைச்சர்களையும் பதவியில் அமர்த்துவது தான் ஊழலின் ஆரம்ப நிலையாக அமையும்.
அதிகாரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனிமனிதர்கள் பின்னதாக மோசடியில் ஈடுபடுவதற்கான பொறிமுறைகளுக்காகப் பயிற்றுவிக்கப்படுவார்கள். பன்னாட்டுக் கம்பனிகளின் தொடர்புகளை ஏற்படுத்தல், இடைத் தரகர்களை அறிமுகம் செய்தல் ,இன்னொரன்ன வசதிகளை ஏற்படுத்தல் போன்ற பயிற்சிகள் ஒழுங்குசெய்யப்படும். இறுதியாக ஊழலில் ஈடுபடுத்தப்படும் அதிகாரி அல்லது அமைச்சருக்கான தரகுத் தொகை தீர்மானிக்கப்பட்ட பின்னர் அவர் அதிகாரத்தில் அமர்த்தப்படுவார்.
இந்த எல்லா வழிமுறைகளும் மு.கருணாநிதியால் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அந்திமுத்து ராஜா தொலைத் தொடர்பு அமைச்சராக நியமிக்கப்படுகிறார். அவர் அமைச்சராக நியமிக்கப்பட முன்பதாகவே ஊழலின் பெறுமானம் குறித்து அறிந்து வைத்திருந்தார். இதனால், ராஜா தன்னார்வ நிறுவனங்கள், குடும்ப நம்பிக்கை நிதி நிறுவனங்கள், ரியால் எஸ்டேட் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள், ஹவாலா நிறுவனங்கள் போன்றவற்றை உருவாக்கிக் கொண்டார். கருணாநிதியின் வியாபார அரசியலில் ஈடுபட்டிருக்கும் அவரது குடும்பத்தினருக்குத் தெரியாமலேயே மிகத் தந்திரமான வகையில் அ.ராஜா தனது சொந்த அரசியல் வியாபாரத்திற்கான சாம்ராஜ்யத்திற்கான அத்திவாரக் கற்களை நாட்டிக்கொண்டார். தவிர, கருணாநிதியின் மகளாண கனி மொழியுடனான தனிப்பட்ட உறவுகளும் பல வேறுபட்ட நம்பிக்கைகளை கருணாநிதியின் குடும்பத்தினருக்கு ஏற்படுத்தியிருந்தது.
மோசடியின் மூலகர்த்தாவான கருணாநிதிக்குச் சந்தேகம் ஏற்படாத வகையில் ராஜா மிகத் தந்திரமாக காய்களை நகர்த்திவந்தார். அ.ராஜா மீதான குற்றச்சாட்டுக்கள் எழும் போதெல்லாம் அவர் ஒரு தலித் என்பதனாலேயே அவதூறுகளுக்கு உள்ளாகிறார் என்று கருணாநிதி அவரை நியாயப்படுத்தி வந்தார். இந்த ஆண்டு மே மாதத்தில் ராஜாவை பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த போது கருணாநிதி இதையே மறுபடியும் கூறிவந்ததார்.
ஆனால் ராஜாவின் நிறுவனங்கள் குறித்த விபரங்கள் மத்திய அரச உளவுத் துறைகளின் ஊடாக வெளியான போது நிலைமை முற்றாக மாறிவிட்டது. 2010 டிசம்பரில் கருணாநிதி ராஜா குற்றம் செய்திருந்தால் தண்டனலி அனுபவிக்க வேண்டியவரே எனக் கூறியுள்ளார். ஆக, ராஜாவின் சொத்து விபரங்கள் வெளியான போது மிகவும் விலையுயர்ந்த வியாபார சாம்ராஜ்யத்தைக் கருணாநிதி குடும்பத்திற்கு வெளியில் உருவாக்கியுள்ளார் என்ற தகவல் வெளியான பின்னரே லஞ்சம், காட்டிக்கொடுப்பு, ஊழல், மோசடி, போன்ற அனைத்து அயோக்கியத் தனங்களிலும் தனிக்காட்டு ராஜாவாகத் திகழ்ந்த கருணாநிதிக்குத் தானும் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பது தெரியவந்தது. இன்று ராஜாவை கட்சியிலிருந்து நீக்கவேண்டும், கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அழகிரி மற்றும் ஸ்டாலின் போன்ற கருணாநிதியின் அரசியல் வியாபார சிம்மாசனத்தைச் சுற்றியிருக்கும் அவரது மகன்களிடமிருந்து எழுந்துள்ளது. ஏமாற்றப்பட்டதன் எதிரொலியே இது.
ராஜா தனது சொந்த வியாபாரச் அரசாட்சியைத் தனது உறவினர்களைக் கொண்டே உருவாக்கிக் கொண்டார். ராஜாவின் மனைவி, மூன்று சகோதரர்கள், நான்கு தங்கைகள், ஏனைய உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் ஆகியோரை உள்ளடக்கிய பல வியாபார நிறுவனங்கள் உலகிற்கு அறிமுகமாகின. வீடுவீடாகச் சென்று சேலைவியாபாரம் நடத்திக்கொண்டிருந்த ராஜாவிற்கு நெருக்கமான பாட்சா என்பவரின் பெயரில் சென்னையில் பல ரியல் எஸ்டேட் கம்பனிகள் உருவாக்கப்பட்டிருந்தன. பாட்சாவின் கம்பனிகளின் இன்றைய பெறுமதி 2000 கோடிகளாகும். 2004 ஆம் ஆண்டு ஒரு லட்சம் இந்திய ரூபாய்கள் செலவில் உருவான இவரின் கம்பனி சிங்கப்பூரில் தனது கிளையை 2006 இல் திறந்தது. 2007ம் ஆண்டு ராஜாவின் மனைவி பரமேஸ்வரி அதன் டைரக்ரர்களுள் ஒருவராக்கப்பட்டார்.
குறுகிய காலத்துள் கம்பனியின் பெறுமதி பல கோடி ரூபாய்களானது. 2009 ஆம் ஆண்டு சிங்கப்பூர் கிளை அந்த நாட்டின் நாணைய மாற்று நிர்வாகத்தை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டு மூடப்பட்டது. இவ்வாறு மேலும் பல சொத்து விபரங்களையும் டீல்களையும் சீ.பி.ஐ விசாரித்துள்ளது. கருணாநிதி குடும்பத்தாலும் கைவிடப்படும் நிலையிலுள்ள ராஜா அரசியல் வியாபாரத்தில் உறுதியான நண்பர்களற்ற நிலையில் காணப்படுகிறார். இதே வேளை ஊழலில் கருணாநிதி குடும்பத்திற்குள்ள தொடர்பைப் பயன்படுத்தி காங்கிரஸ் அவரோடு தேர்தல் பேரத்திற்கு விலை பேசிக்கொண்டிருக்கிறது. மறுபக்கத்தில் கருணாநிதி ராஜாவை மிரட்டிப் பங்குகளை தன்வசமாக்க கங்கிரஸ் செல்வாக்கைப் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் மக்கள் பணம் அரசியல் வியாபாரிகளின் சூதாட்டத்திற்குப் பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டின் தலைமை ஊழல் தாதாக்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் அதிகாரத்திற்கு வெளியில் ஒட்டுக் கட்சிகளுக்கு வெளியிலான சமூக ஜனநாயக எழுச்சியை மக்கள் அக்கறை கொண்டவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
==========================================================
http://netindian.in
http://www.savukku.net/