Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

TELO இயக்கப் போராளிகள் அழிக்கப்பட்டு 30ஆண்டுகளின் பின் : சபா நாவலன்

leadersofenlfஈழ விடுதலைப் போராட்டத்தில் தனி நபர்களைப் படுகொலை செய்வதனூடாக அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதென்பது 80 களில் பொதுவான கலாச்சாரமாக மாற்றமடைந்திருந்தது. ஒரு புறத்தில் அறிதலுக்கான தேடல்கள் நிறைந்த இளைஞர்கள் மத்தியதர வர்க்கங்களிலிருந்து உருவாகியிருந்தனர். மறுபுறத்தில் தனி மனிதத் தாக்குதல்கள், தனிமனிதப் படுகொலைகள் போன்றன சமூகத்தின் அங்கீகாரம் பெற்ற பொதுப் புத்தியாக மாற்ரமடைந்திருந்தது.

தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்தின் ஒரே முழக்கம் அரசுக்கு எதிராக ஒன்றிணையுங்கள் என்பது மட்டும்தான். அதற்குமேல் அவர்களிடம் குறிப்பான சமூகப் பார்வையோ அதனை அடிப்படையாகக் கொண்ட வேலைத்திட்டமோ இருந்திருக்கவில்லை.

இந்திய அரசின் தலையீடும் வழங்கப்பட்ட ஆயுதப் பயிற்சியும் விடுதலை இயக்கங்களை வெற்று இராணுவக் குழுக்களாக மாற்றியமைத்திருந்தன. இந்த இராணுவக் குழுக்கள் தமது குழு நிலை நலன்களைப் பேணிக் கொள்வதற்காக தமக்கிடையே மோதிக்கொண்டன. தாமே சிறந்தவர்கள் என அறிவிப்பதற்கு ஒவ்வொரு இயக்கங்களுக்கும் ஒவ்வொரு பிரச்சார நியாயம் இருந்தது. புலிகளோ தாமே முதலில் போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் ஆக, தம்மோடு இணைந்துகொள்ளுங்கள் என ஆண்டபரம்பரை ஆணவத்தோடு கூறினர். ஏனைய இயக்கங்களும் இராணுவக் குழுக்கள் என்ற வகையில் இவ்வகையான நிலப்பிரபுத்துவக் குழுவாத போக்குகளில் மூழ்கியிருந்தனர்.

அன்று 1986 ஏப்பிரல் மாதத்தின் கடைசிப்பகுதி – 29 ம் திகதி காலை, எப்போதும் போல விடியவில்லை. ஆங்காங்கே துப்பாக்கிப் சத்தங்கள் நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு எதோ ஒரு பயங்கரத்தை அறிவித்தது. வேப்ப மரங்களைக் கடந்து தெருமுனைக்கு வந்து விசாரணை செய்ததில் புலிகளுக்கும் டெலோவிற்கும் சண்டை நடக்கிறது என்றார்கள்.அந்தக் காலத்தில் பலாலி இராணுவ முகாமிலிருந்து புறப்படும் குண்டுவீச்சி விமானங்கள் அதி காலையிலேயே ரோந்து செல்லப் பறப்பதற்கு ஆரம்பித்துவிடும். அன்று விமானங்கள் எதுவும் பறக்கவில்லை. அன்றிலிருந்து இரண்டு நாட்களுக்கு இலங்கை இராணுவம் தனது நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டது.

ஒரு பல்கலைக்கழகம் மக்களின் போராட்டத்தைத் தலைமை தாங்க முடியாது. அந்தவகையில், தான் சார்ந்த சமூகத்தின் அவலங்களில் தீர்க்கமான பங்கு வகித்த பெருமை யாழ்ப்பாணப் பல்கலைகழகத்திற்கு உண்டு. அங்கே சென்றால் தகவல்கள் தெரியாலாம் என எனது சைக்கிளில் பல்கலைகழகத்திற்குச் செல்கிறேன். ஒவ்வொரு மூலையிலும் பலர் கூடியிருக்கிறார்கள். டெலோ இயக்கத்தைப் புலிகள் அழித்துக்கொண்டிருகிறார்கள் என்ற தகவல் பரவாலகப் பேசப்படுகிறது. இனந்தெரியாத சோகம் அனைவரது முகங்களிலும் படர்ந்திருக்கிறது. டெலோவின் பிரதான இராணுவத் தளங்கள் அமைந்திருந்த யாழ்ப்பாணத்தின் புறநகர், கள்வியன்காட்டு கட்டப்பிராய் ஆகிய அருகருகேயான பகுதிகளை நோக்கிப் புலிகள் நகர்வதாகத் தகவல்கள் வருகின்றன.

அதிகாலையைக் கடந்துகொண்டிருந்த வேளையில் திருநெல்வேலி சந்தைக்கு அருகாமையில் இரண்டு பேரைப் புலிகள் உயிரோடு எரித்த தகவல்கள் மனிதாபிமானத்தின் உயிரை விசாரணை செய்தது.

நானும் வேறு சிலரும் அங்கே சென்று விசாரிக்கிறோம். ஆடியபாதம் வீதியில் தான் அந்தக் கோரம் நடந்திருந்தது. திருநெல்வேலிச் சந்தைச் சைக்கிள் தரிப்பகத்தைப் TELO நடத்திக்கொண்டிருந்தனர். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 14 வயதளவிலான சிறுவர்கள் அதற்குப் பொறுப்பாக இருந்திருக்கிறார்கள். அவர்களைக் கைது செய்த புலிகள் சில மீட்டர் தூரம் வரை கொண்டுசென்று அங்கே அவர்களை உயிரோடு எரித்திருக்கிறார்கள்.

நாங்கள் சென்ற வேளையில் புலிகள் அந்த இடத்திலிருந்து டெலோ நிலைகளை நோக்கி முன்னேறியிருந்தனர். எரிக்கப்பட்ட சிறுவர்களின் பிணங்களைப் பார்ப்பதற்கு எங்களுக்கு மனதில் துணிவு இருக்கவில்லை. அதற்கு முன்னாலிருந்த வீட்டு குடியிருப்பாளர்களிடம் பேசுவதற்காகக் கதவைத் தட்டினோம். யன்னலைத் திறந்து யார் எனக் கேட்ட வயதான பெண் ஒருவரிடம் விபரங்களைக் கேட்க முற்பட்ட போது, அவர் பேச மறுத்துவிட்டார். (டெலோ அழிக்கப்பட்ட சில வாரங்களின் பின்னர், நானும் சசி அல்லது தங்கராஜா என்ற கிராமிய உழைப்பாளர் சங்க செயலாளரும் அந்த வீட்டிற்குச் சென்று எம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்த வேளையில் அவர்கள் எரிக்கப்பட்ட குழந்தைகளின் அலறல் சத்தத்திலிருந்து இன்னும் மீண்டிருக்கவில்லை. வீட்டிலிருந்து இடம்பெயர்வதற்கான தயாரிப்புக்களைச் செய்துகொண்டிருந்தனர்.)

நான் இளைஞன்.  அவலங்களையும், அதிர்ச்சிகளையும் உள்வாங்கிக்கொள்ளும் மனோபக்குவும் இன்னும் ஏற்பட்டிருக்கவில்லை.

பல்கலைக்கழகத்திற்குத் திரும்பி வருகிறோம். டெலோ இயக்கப் போராளிகளுக்கு பயப் பீதியை ஏற்படுத்தும் நோக்கிலேயே உயிருடன் எரித்ததாக புலிகளின் முக்கிய உறுப்பினர் தனக்குக் கூறினார் என்று உதவி விரிவுரையாளர் மு,திருநாவுக்கரசு எமக்குக் கூறுகிறார். புலிகளை விமர்சன அடிப்படையிலேயே ஆதரிப்பதாக எப்போதும் கூறும் திருநாவுக்கரசு, நாம் இவை குறித்துப் பேசினால் கொல்லப்படுவதற்கான அபாயம் உருவாகலாம் என எச்சரிக்கிறார்.

மு.திருநாவுக்கரசு இப்போது சென்னயில் தங்கியிருக்கிறார். வன்னியில் இனப்படுகொலை நடைபெறும் வரை புலிகளுடனேயே தங்கியிருந்த அவர், இப்போது இந்திய அரசின் ஆதரவாளர். இந்தியாவைப் பகைத்துக்கொண்டதே இந்த அழிவுகளுக்கு எல்லாம் காரணம் என்றும், சீனாவிற்கு எதிராக இந்தியா ஈழம் பிடித்துத் தரும் என்ற கருத்தை முன்வைக்கிறார்.

மதியம் கடந்த வேளையில் நான் சில பல்கலைக்கழக மாணவர்களோடு இணைந்து பேராசிரியர் சிவத்தம்பியைச் சந்திக்கிறேன். அவ்வேளையில் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் இராணுவத் தளபதியாக செயற்பட்ட டக்ளஸ் தேவானந்தவுடன் சிவத்தம்பி அரசியல் தொடர்புகளைப் பேணிவந்தார். சிவத்தமபியிடம் கொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைவிடுகிறோம். குறைந்தபட்சம் ஒரு அறிக்கையாவது வெளியிட வேண்டும் என்று கேட்கிறோம். அதற்கு, பல்கலைக் கழகத்தில் உடனடி எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டால் அதனைத்தொடர்ந்து புலிகளிடம் கோரிக்கைகளை முன்வைக்க தான் முன்வருவதாகக் கூறினார்.

அதற்காக டெலோ இயக்கம் இன்னமும் பலத்துடன் நிலைகொண்டுள்ள கள்வியன்காட்டுப் பகுதியில் கார்த்திகேசு மாஸ்டர் என்பவர் உண்ணாவிரதமிருப்பதாகவும் அவரைப் பல்கலைக்கழகத்திற்கு அழைத்துவந்து அங்கு போராட்டத்தைத் தொடர்ந்தால் அவரோடு ஏனையவர்களும் இணைந்துகொள்ளலாம் என்றார்.

அவரை அழைத்துவருவதற்கு நானும் யோகன் என்பவரும் இணக்கம் தெரிவிக்கிறோம். யோகனை எனக்கு நன்கு அறிமுகமில்லாதவர். புலிகளின் ஆதரவாளர். அவரது மூத்த சகோதரர் புளட் அமைப்பின் அரசியல் பிரிவில் காண்டீபன் என்ற பெயரில் செயற்பட்டவர்.

நாங்கள் கார்த்திகேசு மாஸ்டரை அழைத்துவரப் புறப்பட்ட வேளையில் டெலோ இயக்கத்தில் பலர் கொல்லப்பட்டிருந்தனர். கள்வியன்காடு பகுதியில் மட்டும் டெலோ இயக்கம் எதிர்த்தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்து. அங்கு டெலோ இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினம் தங்கியிருந்ததால் இராணுவ பலமும் அதிகமாக்கப்பட்டிருந்திருக்க வேண்டும்.

கள்வியன்காட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேளையில் சட்டநாதர் கோவில் பகுதியில் புலிகள் இயக்கத்தினர் டெலோ நிலைகளை நோக்கி முன்னேறியவாறிருந்தனர். அவர்கள் முதலில் எங்களைக் கைது செய்து விசாரணை செய்கின்றனர். யோகன், சிவத்தம்பி ஆகியோர் மீது அதிக சந்தேகம் கொள்ளவில்லை என்பதால் எம்மை தொடர்ந்து செல்ல அனுமதிக்கின்றனர்.

புலிகள் இயக்கத்தின் நிலைகளைத் தாண்டிச் செல்லும் போது டெலோ இயக்கத்தினர் எம்மை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்கின்றனர். நாங்கள் ஏற்கனவே தயார்செய்திருந்த வெள்ளைத் துணிகளை உயர்த்திக் காட்டுகிறோம். கொல்லப்படுகின்ற அவலங்களைப் பார்த்த எங்களுக்கு எமது உயிர் மீது கூட வெறுப்பு மட்டுமே எஞ்சியிருந்தது. ஒருவாறு கள்வியன்காட்டை அடைந்ததும், டெலோ இயக்கப் போராளிகளிடம் எமது நோக்கத்தைச் சொல்கிறோம். அவர்கள் எங்களை மேற்கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என்றும், இறுதி மூச்சுவரை போராடுவோம் என்றும் சொல்கிறார்கள்.

மிகுந்த ஏமாற்றத்துடன் நாங்கள் இருவரும் பல்கலைக் கழகத்தை நோக்கித் திரும்பிவருகிறோம். சிவத்தம்பி அப்போது அங்கிருக்கவில்லை. அவருக்காகக் சில மணிநேரங்கள் காத்திருக்கிறோம். டெலோ இயக்கம் முழுவதும் அழிக்கப்பட்டுவிட்ட செய்தியோடு அவரும் பல்கலைக்கழகத்திற்கு வருகிறார். டெலோ தலைவர் சிறீ சபாரத்தினம் வேறு சில முக்கிய உறுப்பினர்களோடு தப்பிச் சென்றுவிட்டதாகவும் பலர் கொல்லப்பட்டும் கைதுசெய்யப்பட்டுமிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

1983ம் ஆண்டில் இலங்கை அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையைத் தொடர்ந்து உருவான தேசிய எழுச்சியோடு நான் டெலோவில் இணைந்துகொண்டேன். பின்னதாக டெலோவில் மத்திய குழுவை உருவாக்கி ஜனநாயக மத்தியத்துவத்தைக் கொண்ட அமைப்பாக மாற்ற வேண்டும் என்று நடைபெற்ற போராட்டங்களில் நானும் இணைந்து கொண்டேன். ஆக, ஆறு மாதங்கள் வரை அவ்வமைப்பின் செயற்பாடுகளோடு இணைந்திருந்தேன். பின்னதாக முன்று மாதங்கள் வரை தொடர்ந்த உட்கட்சிப் போராட்டத்தில் பங்கெடுத்ததால் டெலோ இயக்கத்தினர் கொலை செய்வதற்காக என்னையும் தேடியலைந்தனர். உட்கட்சிப் போராட்டம் உச்சமடைந்திருந்த வேளையில் சிறீ சபாரத்தினத்தைச் சந்திப்பதற்காக வெறு சிலரோடு, ஈ.பி.ஆர்.எல்.எப் இன் முக்கிய உறுப்பினரன கபூர் என்பவரின் ஒழுங்குபடுத்தலில் சென்னைக்குச் சென்றோம்.

நாளாந்தப் பத்திரிகைகள் கூடப் படிக்காத குறைந்தபட்ச அரசியல் அறிவுமற்றவராக சிறீ சபாரத்தினத்தை நாம் சந்தித்த போது ஏற்பட்ட அதிர்ச்சி பல ஆண்டுகள் நீடித்தது. புலிகள் மற்றும் டெலோ ஆகிய இயக்கங்கள் தமிழரசுக் கட்சியின் தொடர்ச்சியாகவே தம்மைக் கருதிக்கொண்டனர். ஆக, அவர்களுக்கான அரசியலைத் தமிழரசுக் கட்சி என்ற வலதுசாரிக் கட்சியே வழங்கியிருந்தது. ஆக, இந்த இரண்டு இயக்கங்களுமே இடதுசாரி எதிர்ப்பு என்பதையும் தமது நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகக் கொண்டிருந்தன. 1984 ஆம் ஆண்டில், அண்ணாமலை என்ற டொஸ்கிய தொழிற்சங்கத் தலைவரும், விஜயானந்தன் என்ற ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத் தலைவரும் இரண்டு நாள் இடைவெளிக்குள் தெருவில் வைத்துப் புலிகளால் கொலைசெய்யப்பட்டதே முதலாவது இடதுசாரிகளின் மீதான நேரடியான கொலை.

டெலோ இயக்கம் அழிக்கப்பட்ட போது, சரணடைந்தவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், எதிர்த்துப் போராடியவர்கள் என்று சற்றேறக்குறைய 400 டெலொ இயக்கப் போராளிகள் அழிக்கப்படிருக்கலாம் என்று பின்னதாகத் தகவல்கள் வெளியாகின.தவிர பல ஆதரவாளர்களும் கொல்லப்பட்டனர். இந்திய அரசு, புலிகள், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஈரோஸ் ஆகிய இயகங்களுக்கு ஆயுதங்களை வழங்கியிருந்தது. டெலோ இயக்கத்திற்கு துப்பாக்கிகளை வழங்கிய போதும் அதற்கான ரவைகளை வழங்காமையால் துப்பாக்கிகள் கட்டப்பிராய் ஆயுதக் கிடங்கில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது. அவை அனைத்தையும் புலிகள் கையகப்படுத்திக்கொண்டனர். ஆக, புலிகளைப் பலப்படுத்தி டெலோவைத் தமது துணைக் குழுவாக மாற்றுவதற்கான இந்திய அரசின் தந்திரோபாயமே இது என பலர் கருதினர்.
புலிகளை, குறிப்பாகப் பிரபாகரனைப் பொறுத்தவரை டெலோ இயக்கத்தை அழிக்கவேண்டிய மற்றொரு தேவையும் இருந்தது. டெலோ இயக்கத்தின் தலைவர்கள் குடத்தனை என்ற இடத்தில் வைத்துக் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்த பின்னரும் இந்தியாவில் சிறீ சபாரத்தினத்தின் தலைமையில் டெலோ இயக்கத்திலேயே செயற்பட்ட பிரபாகரன், இந்திய இராணுவம் ஆயுத உதவியும் இராணுவப் பயிற்சியும் அறிவித்தெ வேளையில் 1982 இறுதிப் பகுதியில் டெலோவிலிருந்து செல்லக்கிளி போன்றவர்களுடன் பிரிந்து சென்று மீண்டும் புலிகள் என்ற பெயரில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்.

இப்போது சென்னையில் வாழும் நாகராஜா என்ற புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால தலைவர் ஒருவரை சென்னையில் வைத்து பிரபாகரனும் வேறு சிலரும் கடத்தி வந்து கொலை செய்ய முற்பட்ட போது, சிறீ சபாரத்தினம் தலையிட்டு தன்னைக் காப்பாற்றியதாக 2009 ஆம் ஆண்டு சென்னையில் அவரைச் சந்தித்த போது என்னிடம் கூறினார். 1982 ஆம் ஆண்டு தன்னைக் கைது செய்த போது டெலோ இயக்கத்தின் இரண்டாவது தலைவர் என்ற அடிப்படையிலேயே பிரபாகரன் கடத்திச் சென்றதாகக் குறிப்பிட்டார். பிரபாகரன் 70 களின் பிற்பகுதியில் மீண்டும் டெலோவில் இணைந்த போது, அவரை இணைத்துக்கொள்ள வேண்டும் என தீவிரமாக வாதிட்டவர் சிறீ சபாரத்தினம் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை.

சிறீ சபாரத்தினம் கோண்ட்டாவில் பகுதியிலுள்ள அன்னங்கை என்னுமிடத்தில் மறைந்திருந்தார். புலிகள் அவரைத் தேடிப் பல இடங்களைச் சுற்றிவளைத்தனர். பலர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். வசதி படைத்தவர்கள் கொழும்பிற்கும், சிலர் இந்தியாவிற்கும் தப்பியோடினர். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த போராளிகள் மாற்று வழிகள் இன்மையால் கைதுசெய்யப்படுக் கொலைசெய்யப்பட்டனர்.

இறுதியாக மே 5ம் திகதி சிறீ சபாரத்தினம் தலைமறைவாக இருந்த பகுதி புலிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. கிட்டு என அறியப்பட்ட சதாசிவம் கிருஷ்ணகுமாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு சிறீ சபாரத்தினம் இரைகிப் போகின்றார்.

பின்னதாக ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்திலிருந்த கபூர் அந்த இயக்கத்தின் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
சிறீ சபாரத்தினத்தின் மறைவிடத்தைப் புலிகளுக்குக் காட்டிக்கொடுத்தது ஈரோஸ் இயக்கம் என்று தனக்குச் சந்தேகமிருப்பதாக அவர் என்னோடு பேசும் போது ஒரு தடவை தெரிவித்தார்.

சிறீ சபாரத்தினதின் மறைவிடம் அவர் கொலைசெய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்பதாக ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்திற்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர்கள் அவரை மீட்டு இந்தியாவிற்கு அனுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர் என்றும் தெரிவித்தார். இறுதியில் கோண்டாவிலில் இருந்து அவரை அழைத்து வருவதற்கான முயற்சியில் ஈரோஸ் இயக்கத்தையும் ஈடுபடுத்த எண்ணிய ஈ.பி.ஆர்.எல்.எப் தலைமை அவர்களிடம் அது குறித்துப் பேசியதாகவும், இரு இயக்கங்களும் இணைந்து வைக்கல் நிரப்பிய லொறி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தாகவும் கூறினார். வைக்கல் நிரப்பப்பட்ட லொறி சிறீ சபாரத்தினத்தின் மறைவிடத்தை அண்மித்ததும் பழுதடைந்து நின்றுவிட்டதாகவும், அதன் பின்னர் அரை மணி நேரத்திற்குள்ளாக சிறீ சபாரத்தினத்தின் மறைவிடத்திற்குப் புலிகள் சென்று அவரைப் படுகொலை செய்ததாகவும் கூறினார்.

ஈரோஸ் இயக்கத்தில் அதன் தலைவர் பாலகுமார் ஊடாகவே தொடர்புகளைப் பேணியதாகவும், ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தில் அதன் உளவுப் பிரிவிற்குத் பொறுப்பாகவிருந்த ஜேம்ஸ் என்பவரே மீட்பு முயற்சியை ஒழுங்கு செய்ததாகவும் அறியக் கூடியதாகவிருந்தது.

சிறீ சபாரத்தினம் மரணித்த செய்தி வெளியான போது அதற்காகக் கண்ணீர்வடிக்க முடியவில்லை. நாம் ஏன் கொல்லப்படுகிறோம் என அறியாமலே மரணித்துப் போன நூற்றுக்கான போராளிகள் கொசுக்கள் போலச் சாகடிக்கப்பட போது, இதயம் கனத்தது.

————————————————–

இவையெல்லாம் வெறுமனே சம்பவங்களோ மறுபடி இரைமீட்பதற்கான வரலாற்றுப் பதிவுகளோ அல்ல. நமது தவறுகள் ஒரு சுழற்சி போல ஒரு எல்லைக்குள்ளேயே மீண்டு வருகின்ற போது மீண்டும் மீண்டும் கற்றுக்கொள்ள வேண்டியவை.

அதிலும், தமிழ்ப் பேசும் மக்கள் மீதான் ஒடுக்குமுறை திட்டமிட்டு இலங்கை அரசிற்கும் புலிகளுக்கும் இடையேயான போர் என்ற விம்பம் உருவமைக்கப்பட்ட நாளிலிருந்து மிகவும் அவதானமாகக் கையாளப்பட வேண்டிய கற்கைகள். இந்த விம்பத்தின் ஒருபகுதியான புலிகளுக்கு எதிரன அரசியலெல்லாம் இலங்கை அரச சார்பானதாக மாற்றமடைந்து விடுமோ என்ற அச்சம் எழுவது இயல்பானது.

இவற்றிலிருந்து வெளியேறி, தவறுகளை சுயவிமர்சம் செய்துகொள்ளவும், அதன் வெளிச்சத்தில் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் சரியான திசைவழியை நோக்கிச் செல்லவேண்டும் என்பதுவும் சமூகப்பற்றுள்ள ஒவ்வொரு மனிதனதும் அவா.

தவறுகளைக சாவகாசமாகக் கடந்து சென்று மனிதாபிமானமற்ற கோரத்தனமான சமூகத்தைத் தோற்றுவிக்க நாம் காரணமாகிவிடக்கூடாது.

ஒவ்வொரு தவறுகளையும் எமது எதிரிகள் பயன்படுத்திக்கொண்டு முழுப் போராட்டமும் தவறு என நியாயப்படுத்துவதற்கான வழிகளை நாமே ஏற்படுத்திக்கொடுக்கிறோம்.

புலிகளுக்கும் புலி எதிர்ப்பாளர்களுக்கும் நூலிடை இடைவெளி தான் காணப்படுகிறது. இரு பிரிவினருமே குறைந்தபட்ச சமூக அக்கறை கூட இல்லாமல் தமது சொந்த நலன் சார்ந்த உணர்ச்சி அரசியலையே முன்வைக்கின்றனர். ஏதாவது ஒரு வகையில் இவ்விரு பிரிவினருமே எங்காவது ஒரு அதிகாரவர்க்கத்தின் நேரடியான அல்லது மறைமுகமான ஆதரவு நிலைப்பாட்டையே வரித்துக்கொள்கின்றனர். தாம் சார்ந்த குறுகிய நலன்களை நோக்கி அரசியல் தலைமையற்ற ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களை ஒன்றிணையக் கோருகின்றனர். இறந்துபோன காலத்தின் அவலங்களை மறுபடி பேசுவதெல்லாம் இந்த இரண்டுக்கும் அப்பாலான புதிய அரசியல் சிந்தனையை உருவாக்குமானால் தெற்காசியாவின் தென் மூலையிலிருந்து புரட்சிக்கான வேர்கள் படர வாய்ப்புக்களுண்டு.

Exit mobile version