Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

21, ஜனவரி – மாபெரும் தலைவர் தோழர் லெனினை நினைவு கூர்வோம் : கு.கதிரேசன்

கொடுஞ்சுரண்டலுக்கு ஆட்பட்டு வறுமையிலும், அறியாமையிலும் உழண்டு கொண்டிருந்த பாட்டாளி வர்க்கத்திற்கு கலங்கரை விளக்கமாக மார்க்சிய தத்துவத்தை வழங்கியவர் காரல் மார்க்ஸ் என்றால் அதை செயல்முறை ரீதியாக நடைமுறைப்படுத்தி காட்டியவர் தோழர்.லெனின் ஆவர். இளம் வயதிலையே அன்பு தந்தையை பறி கொடுத்து , மார்க்சியத்தை அறிமுகம் செய்து அறிவு கண்ணை திறந்த அண்ணன் அலெக்சாண்டரை ஜார் மன்னனின் கொடுங்கோன்மைக்கு பறி கொடுத்த போதும் மார்க்சியம் அவருக்கு வழிகாட்டியது. இதற்கிடையே வழக்கறிஞராக தேர்ச்சி பெற்றார் லெனின் .

மார்க்சியத்தை நன்கு கற்று தேர்ந்த லெனின் தொழிலாளர்களை சந்தித்தார்,அவர்களின் அவல நிலைக்கு காரணங்களை விளக்கினார், ரகசிய கூட்டங்களை நடத்தினார். இதனால் கோபம் கொண்ட ஜார் அரசாங்கம் லெனினை சைபிரீயவிற்கு நாடு கடத்தியது. சைபிரீயாவில் இருந்து விடுதலையானவுடன் ஜெர்மன் சென்று ‘இஸ்கரா’ என்ற பத்திரிக்கையை துவங்கினார். இந்த பத்திரிக்கையை நாடு முழுவதும் கம்யூனிஸ்டுகள் கொண்டு சென்றனர். ஜெர்மனியில் தலைமறைவாக இருந்தபடி லெனின் அனைவருக்கும் வழிகாட்டினர். 1905 ஆண்டில் ஜார் அரசின் அடக்குமுறையை பொறுத்து கொள்ள முடியாத தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தங்களின் வறுமை நிலையை ஜார் மன்னனிடம் சொல்வதற்கு மகஜர் ஒன்றை தயாரித்து அதை கொடுப்பதற்கு ஊர்வலமாக சென்றனர். ஆனால் கொடுங்கோலன் ஜார் அந்த தொழிலாளர்களை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டான். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். இதனால் நாடு முழுவதும் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்தனர். ஆனாலும் அந்த கிளர்ச்சியை ஜார் மன்னன் கொடூரமாக ஒடுக்கினான்.

ஆனாலும் மனம் தளராமல் லெனின் வலிமையான போல்ஸ்விக் கட்சியை உருவாக்கினார். 1914 இல் ரஷிய மன்னன் ஜார் நாடு பிடிக்கும் ஆசையில் முதல் உலக போரில் குதித்தான். இந்த கொள்ளைகார ஏகாதிபத்திய போரினால் உழைக்கும் மக்களுக்கு நன்மை எதுவும் இல்லை, தொழிலாளர்கள் தங்களை சுரண்டி கொளுத்து கொண்டிருக்கிற முதலாளிகளுக்கு எதிராக அவர்களுக்கு தலைமை தாங்க கூடிய அரசுக்கு எதிராக போரிட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். 1917ல் பிப்ரவரி புரட்சி வெடித்தது ஜார் வீழ்த்தப்பட்டான். இருந்த போதும் முதலாளிகள் ஆட்சியை கைப்பற்றி கொண்டனர். பாரளமன்றத்தை அமைத்து அதை சந்தை மடமாக நடத்தி கொண்டு இருந்தனர். மக்கள் அதே வறுமையோடு வாழ்ந்து கொண்டுருந்தனர்.

லெனின் தொழிலாளர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். நவம்பர் 7 ல் பெத்ரோகிராடு வீதிகளில் தொழிலாளர்கள் ஆயுதங்களுடன் அணிவகுக்க துவங்கினர். அரசு அலுவலங்கள் , காவல் நிலையங்கள், வானொலி நிலையம் முதலியவை கைப்பற்றபட்டன. அரசின் தலைமையகமான கிரெம்ளின் மாளிகை இறுதியில் விழ்ந்தது . முதலாளிகள் ஊரை விட்டு ஓட்டமெடுத்தனர். முதல் பாட்டாளி வர்க்க அரசு அமைக்கப்பட்டது .ரசியா சோஷலிச நாடு என்று அறிவிக்கப்பட்டது, லெனின் அந்த நாட்டின் மாபெரும் தலைவரானார்.

சோஷலிச ரசியாவை பல நாடுகளும் ஓன்று சேர்ந்து நசுக்க வேண்டும் என்று படையெடுத்து வந்தன. அவை அனைத்தும் லெனினால் தலைமை தாங்கப்பட்ட சோவியத் ரஷ்யாவின் செம்படையால் தோற்கடிக்கப்பட்டது. ஜார் மன்னனால் பிடித்து வைக்கப்படிருந்த நாடுகளை விடுதலை செய்தார் லெனின். ஆனால் அந்த நாடுகள் சுரண்டலற்ற சோவியத் கூட்டமைப்பில் அங்கமாக விருப்பம் தெரிவித்த்தன. அங்கும் செங்கொடி பறந்தது. மார்க்ஸின் கனவுகளை அவரின் தலைமை மாணவரான லெனின் நனவாக்கினார். வலிமையான பாட்டாளிவர்க்க அரசை அவர் நிறுவினார். 1924 ம் ஆண்டு ஜனவரி 21 நாள் அன்று மரணத்தை தழுவினார். அன்று உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் தங்கள் தலைவனை பறிகொடுத்த சோகத்தில் மூழ்கினர்.

லெனின் உருவாக்கி வளர்த்த மார்க்சிய -லெனினச கோட்பாடுகள் நமக்கு இன்றும், என்றும் வழிகாட்டியாக திகழும் என்பது உறுதி. மாபெரும் தலைவர் தோழர் லெனினை நினைவு கூறுவோம்.




Exit mobile version