Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

2015 ஜனாதிபதி தேர்தலில் ஒரு தேடல் : நோர்வே நக்கீரா

mahinda_2014பலபொய் முகங்களுடன் பிரசவமாகிய இத்தேர்தலின் உண்மை நிலைகள்தான் என்ன? யாரும் எதையும் எழுதலாம் என்பதால் செய்திகளின் நம்பகரத்தன்மை கேள்விக் குறியாகிறது. காதில் விழுந்த செய்திகள்
• கோத்தபாயர் கருணாவுடன் ஓடிவிட்டார்.
• மகிந்தர் வோட்டுப்போட்ட கையுடன் மாலைவீவுக்கு மாறிவிட்டார்.
• மூட்டை மூட்டையாக புலிகளின் நகைகளையும், பணங்களையும் ஏற்றிக் கொண்டு ராஜபக்கசகுடும்பம் பறந்து விட்டது.
• விலையுயர்ந்த கார்களையும் ஏற்றிக்கொண்டு மகிந்தரும் கோத்தபாயரும் நாட்டைபிட்டுப் பறந்துவிட்டார்கள். ஆனால் நேற்று இராஜபக்ச தனது தொகுதியிலும் வீட்டிலும் மக்களைச் சந்தித்திருக்கிறார். எப்படி?

தேர்தலில் ஒருவர் வென்றால் மற்றவர் தோற்றுத்தானே ஆகவேண்டும். இராஜபக்சவின் குடும்பம் என்ன செய்கிறது என்பதை விட தேர்தல் முடிவுகளும் வென்றவர் கண்டது என்ன? தோற்றவர் படித்தது என்ன? மக்கள் எதைவிரும்புகிறார்கள்? தொடர்ச்சியான அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும், இருக்கவேண்டும், அதற்கான சாத்தியக்கூறுகள் என்ன? எதிர்காலத்தை எப்படி அமையும் என்பனவே நாம் ஆய்வுகள், விமர்சனங்க ளினூடாக அறியவேண்டியவையாக உள்ளது.

தமிழர்களின் சினிமாப்போராட்டம் போலவே மகிந்தரின் தேர்தல் விஞ்ஞாபனமும் நடந்து முடிந்தது. தனிமனித பக்திவாதம் தலைகுனிந்தது. இந்தியத்தினத்தந்தியின் காணொளிக்கு இராஜபக்ச கொடுத்த செவ்வியில் தான் இத்தேர்தலில் வெல்வோன் என்பதையும் தமிழர்கள் மிகச்சொற்பமானவர்கள் அவர்களை வைத்து தேர்தல் விஞ்ஞாபனத்தை நடத்த முடியாது என்பதையும், மலையகமக்கள் எப்படியாயினும் தனக்கே வாக்களிப்பார்கள் தலை(ஆறுமுகம் தொண்மைமான்) தன்னுடன் இருக்கிறார் என்ற இறுமாப்பான செவ்வி இன்னும் எம்காதுகளை விட்டு அகல முன்னரே தேர்தல் முடிவு காதுக்குள் செருகிக் கொண்டது. சிறுதுரும்பும் பற்குத்த உதவும் என்பதை இராஜபக்ச மறந்துவிட்டார் என்பதை இத்தேர்தல் விளக்கியிருக்கும்.

மைத்திரி இத்தேர்தலில் தோற்றார்

சிறுபான்மையினரின் வாக்குகளை வெளியில் எடுத்து வைத்துவிட்டு சிங்களப் பேரினவாதத்தில் வாக்குகளை மட்டும் பார்த்தால் மகிந்தருக்கே வாக்குகள் அதிகம் என்பதை மறுக்க இயலாது. அப்படியானால் மகிந்தரின் ஆட்சியில் சிங்களமக்கள்; திருப்தியடைந்ததார்களா? வேலைவாய்வின்மை, பணவீக்கம், அன்றாட வாழ்க்கை யையே நடுத்தரமக்கள் கொண்டு சொல்லமுடியாதபோது எப்படி சாதாரண தொழிலாளர்கள் வாழ்கையை எதிர்கொண்டார்கள் என்ற பலவேள்விகள் தொக்கி நிற்கின்றன. மகிந்தரின் நிதி ஒதுக்கீடுகள் இராணுவத்துக்கே அதிகமாக இருந்தது. அப்போ அபிவிருத்தி எப்படி? இவை அனைத்தும் இராணுவத்தின் வோட்டுக்களா? பண வீக்கம் இருந்தபோதும் அரசஊழியர்களுக்கு ஊதிய உயர்வே கிடைக்க வில்லை. இவர்கள் மகிந்தருக்கு வாக்களித்திருப்பார்களா? ஆக கள்ளவோட்டு கள் இங்கே கலப்பதற்கான சாத்தியங்கள் தென்படுகின்றன. இதனால் மைத்திரி சிங்களமக்களிடம் தோற்றாரா? என்ற கேள்வியும் எழுகிறது

ஐ.தே.கட்சி, பென்சேகாவின்கட்சி, சந்திரகா அம்மையரின் ஆதரவுகள் அனைத் தும் இருந்தும் மைத்திரி சிங்களப்பகுதியில் தோற்றார் என்பதே தான் உண்மை. இதிலிருந்து மைத்திரி தமது அரசியல் நகர்வுகளை மிக அவதானமாகவே நகர்த்த வேண்டியவராகவே உள்ளார். நாளை மகிந்தரின் கொம்பனியால் இது தலைகீழாக மாற்றப்படலாம். காரணம் மகிந்தருக்குக் கிடைத்த வாக்குக்கள் இதையே பறைசாற்றுகின்றன.

சிறுபான்மை இனங்களின் எதிர்காலம்

புலிகள் தமிழர்களை 2005ல் தேர்தலைப்புறக்கணிக்குமாறு பணித்து மகிந்தரை வெற்றியடையப் பண்ணினார்கள். தமது தலையில் தாமே மண்ணும் அள்ளிப் போட்டுக் கொண்டார்கள். இன்று அதே தமிழர்கள் தேர்தலைப் பகிஸ்கரிக்காது மகிந்தரை வீட்டுக்கு அனுப்பினார்கள். நாம் சிறுபான்மையினர் என்பதற்காக அதிகாரம் எம்மிடம் இல்லை என்று நாம் எண்ணுவது தவறானது. இராஜதந்திர நகர்வுகள் செய்பாடுகள் எமக்கு வெற்றியைத்தரும் என்பதை தமிழ்மக்களாகிய நாம் உறுதி செய்து கொள்வது அவசியம். காலம் எமக்காகவும் கனியும் சரியான அரசியில் எம்மிடம் இருந்தால். ஆனால் எமது அரசியல் தலைவர்கள் என்றும் எதிர்ப்பு அரசியலையே வளர்த்து வந்தார்கள். அதை இளைஞர்களும் நம்பினார்கள். பாராளுமன்றம் யாருக்கும் நிலந்தரமானது அல்ல என்பதை உணர்க. எம்மக்கள் தமது உரிமைகளை இழந்து நின்றாலும் தம்மிடம் மீதியாக உள்ள வாக்குரிமைகளால் சிலவிடயங்களை வென்றுள்ளார்கள் என்பதை பேரினவாதம் உணரவேண்டி உள்ளது. மகிந்தர் புலிகளுக்குப் பணம் கொடுத்து செய்த வாக்கை மீறி நேர்மையற்ற முறையில் புலிகளை அழித்தாதே அதே துரோகத்தனத்தை மைதிரி மகிந்தருக்குச் செய்தார். என்றும் தன்வினை தன்னைச்சுட்டது. புலிகளையும் தமிழர்களையும் கொன்று குவித்து ஒரே ஒரு தேர்தலில்தானே மகிந்தரால் வெல்லமுடிந்தது.

தமிழர்களால், சிறுபான்மை இனத்தவர்களால் தான் வெற்றிபெற்றேன் என்பதை நிச்சயமாக மைத்திரியதாலும் அவர் கொம்பனியாலும் உணரமுடியும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த நன்றிக்காகவாவது மைதிரிகொம்பனி தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க முயலுமா? இல்லை என்பதே தெளிவானது. அதற்கான காரணங்கள் பலமாகவே உள்ளன. தேர்தல் என்பது வெறும் ஜனாதிபதி தெரிவுடன் நின்றுவிடுவதில்லை. ஒருகணக்கேடுப்பையும் எமக்குத் தருகிறது.

சிங்களப்பகுதிகளின் மைத்திரியின் தோல்வியை எதிர்காலத்தில் கட்டி நிமிர்த்து வேண்டிய பொறுப்பு மைத்திரிக்கு உண்டு. இதை அவர் ஏற்கனவே உணர்ந்திருந்த காரணத்தினால் தான் கூறினார் இராணுவத்தை வடக்குக் கிழக்கில் இருந்து அகற்றமாட்டேன் என்றும், தமிழ்மக்களின் தீர்வுபற்றி எதையும் உறுதியாகச் சொல்லாது தவிர்த்தார்? இது இராஜதந்திரமானது எனினும் இவரும் முக்கியமாக சிங்கள வோட்டுக்களாலேயே வெற்றி பெறலாம் என்றே நம்பியிருக்கிறார். அதனால் தான் மகிந்தரில் இருந்து சந்திரிகா வரை போர்பெற்றிகளும் தமது பங்களிப்புக்களும் என்று ஆரம்பகால தேர்தல் பிரசாரத்தில் பேசிவந்தார்கள். இறுதிக்கட்டப்பிரசாரங்களில் போர்பற்றிய பறையடிப்புக்களைக் காணமுடியவில்லை. அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும் இன்று சிங்களவர்கள் விருப்புவது அரசியல் சினிமாவையோ, வெத்து வேட்டுக்களையோ அல்ல ஜதார்த்தமான அன்றாடப்பசி, வயிற்றுக்கு உணவு என்பதையே.

இத்தேர்தலில் மைத்திரிக்கு சிங்களப்பகுதியில் ஏற்பட்ட தோல்வி வருங்காலங்களில் சிங்களமக்களைத் திருப்தி செய்யவேண்டும் என்ற நிலைக்குக் கொண்டுவந்து விட்டுள்ளது. இதனால் எதைக்கொடுத்தாவது சிங்களமக்களை திருப்தி செய்யவே விரும்புவார் என்பது தெளிவு. அத்துடன் வடக்குக் கிழக்கிலுள்ள இராணுவத்தை அகற்றும் போது வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும் அதற்கு ஈடுகட்ட சீனாபோல் ஒருவெளிநாட்டைத் தேடவேண்டிய நிலையில் இன்று மைத்திரி உள்ளார். ஆக தமிழ்மக்களின் உரிமைகள் பற்றிச் சிந்திப்பதை விட சிங்களமக்களை நம்பியே அடுத்த தேர்தல்களுக்கு மைத்திரி தயாராகுவார். இந்த மைத்திரி கூட்டு இத்துடன் கலைக்கப்படும் போது தனது அரசில்வாழ்வு பற்றியும் மைத்திரி சிந்திப்பார். இதனால் சிங்களமக்களில் தங்கி வெல்லும் ஒரு அரசியல் வடிபத்தையே மைத்திரி தெரிவு செய்வார்.

இன்று தமிழர்கள் மைத்திரிக்குப் போட்ட வோட்டுகள் அவரின் கொள்கைகளுக்கோ, கட்சிக்கோ, நாளை தமிழ்மக்களின் உரிமையையோ, சுயநிர்ணய உரிமையையோ தருவார் என்றோ அல்லது வடக்குக் கிழக்கை அபிவிருத்தி செய்வார் என்ற நம்பிக்கையில் அல்ல. மகிந்ததை பதவி இறக்குவதைத்தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை என்பது துல்லிதமானது. இதற்கான காரணம் இராணுவ ஆக்கிரமிப்பு, உயிர், உடமை இழப்புக்கள், உரிமை மறுப்புக்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இதை மைத்திரியும் உணர்ந்திருக்காலாம். உணர்ந்திருந்தால் நாளை தமிழர்கள் மீது அவர் கொள்ளும் பார்வை எப்படி இருக்கலாம் என்பதை நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.

த.தே.கூட்டமைப்பு

எதிரி பலமாக உள்ளபோதுதான் எமது உள்கட்டமைப்பும் பலமாக இருக்கும் என்பதை புலிகளின் போர்நிறுத்த காலத்தில் உணராது போனமையே புலிகளின் வீழ்ச்சிக்குப் முக்கிய காரணமாக இருந்தது என்பதை மறுக்க இயலாது.இதை த.தே.கூ உணரவேண்டிய காலம் இது. மைத்திரின் கூட்டு உதிரிகளின் இணைவு. ஆனால் மகிந்தருடையது அப்பப்பட்டதல்ல. த.தே.கூ தம்மை உறுதியான கட்சியாக உருவாகவேண்டிய காலம் இதுவே. இந்தாட்சிமாற்றத்தின் பங்காளி களாக இஸ்லாமியக்கட்சிகளும் உள்ளனர் என்பதையும் மறந்துவிடல் ஆகாது. கூட்டமைப்பானது உள்வாங்கிய அமைப்புக்களுடன் பரஸ்பரமாக பேசி தமிழ்மக்களின் உரிமைகளை மட்டும் கருத்தில் கொண்டு, சுயலாப அரசியலை விட்டு, சரியான கொள்கைகளை வகுத்து எதிர்பரசியலைத் தவிர்த்து, இராஜதந்திர அரசியலை நடத்த முற்படுவது மட்டுமே தமிழர்களின் சில அபிலாசைகளையாவது வென்றெடுக்க வசதியாக அமையும். எடுத்தவுடன் துரோகிப்பட்டம் கட்டுவதை தமிழர்களோ, கட்சிகளோ நிறுத்தி மக்களின் உரிமைகளுக்காக இணைந்து செயற்படுவது அவசியமாகும். எதிரிகளுடன் பேசுபவன் துரோகி ஆகமுடியாது. போர்புரிவது என்றாலும் எதிரியுடன் பேசித்தானே ஆகவேண்டும். கற்பனை கதைகள் அனைத்தையும் துறந்து ஜதார்த அரசியிலில் இறங்குவதே எமக்கு நன்மைபயக்கும். இலகுவாகத் தட்டிப்பறிக்க வேண்டியவற்றை எதற்காக உயிர் உடமைகளைக் கொடுத்துப் பெறவேண்டும். சேர் பொன் இராமநாதன் போன்றோர்க ளிடம் இருந்து டி.எஸ் போன்றவர்கள் எதை எதையெல்லாமோ தட்டிப்பறிக்க வில்லையா? எமது நிலங்களும் உயிர் உடமைகள் அனைத்தும் அடைவு கொடுக்கப்படவில்லையா? எதிரி பலமாக இருக்கும் போது நெஞ்சை நிமிர்த்தும் சினிமா அரசியல் இனி எமக்கு வேண்டாம். இன்று பலமில்லா எதிரி ஆட்சியமைத்தகாரணத்தால் அற்பவிடயங்களுக்கே தடம்மாறும் நிலை ஏற்படலாம். அடைமழை ஓய்ந்து விட்டது என்று அட்டணைக்கால் போட்டுக் கொண்டு த.தே.கூ இருக்க இயலாது. இந்நிலைதான் எதிரி எம்மை இலகுவாக கறையான் அரிப்பதுபோல் அரித்து மெல்ல மெல்ல அழிப்பான்.

தமிழர்களின் தலைமைக்கட்சிகளாக இருந்த தமிழரசுக்கட்ச,p காங்கிரஸ், கூட்டணி த.தே.கூட்டமைப்பு அனைவரும் வலதுசாரித்துவப்போக்கைக்கையே கொண்டவர்கள். தமிழர்கள் என்றும் ஐ.தே.க உடன்தான் கூட்டமைத் திருக்கிறார்கள். ஆனால் இவர்களைக் கால்வாரி விட்டதும் ஐ.தே.கட்சியே. இதைத் தெரிந்திருந்தும் மகிந்தர் தமிழர்களின் வோட்டுக்களை அலட்சியம் செய்ததன் (தினத்தந்திக்குக் கொடுத்த பேட்டி) விளைவை இன்று அவர் அறுவடை செய்திருக்கிறார். ஐ.தே.கட்சியை உடைக்க முடிந்த மகிந்தரால் த.தே.கூ உடைக்க முடியாமைக்குக் காரணம் அவர்களின் ஒற்றுமையல்ல. வேறு வழியில்லாமையே. அதாவது புலிகளுக்கு ஈடாகவே அல்லது புலியெதிர்ப்புக்கு ஈடாகவே வேறுகட்சிகள் பலமாகவில் லாது இருந்தமையே. இந்த நிலை இந்த ஒற்றுமை தொடர்ந்து இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்பதை உள்ளுரல்களினூடு த.தே.கூ உணர்ந்திருக்கும்.

எமது நீண்டகால அரசியில் வரலாற்றில் தமிழர்களுக்கு என்று பலமான மக்கள் செல்வாக்கைப் பெற்ற இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட ஒரு அரசியல்கட்சி அமையாது போனது துர்ப்பாக்கியமே. அது உருவாகுவதற்கு இதுதான் காலம் அல்ல எனினும் அதன்தேவையும் வெற்றிடமும் தொடர்ந்தும் தமிழர்களுக்கு இருந்து கொண்டே உள்ளது என்பதை நாம் மறந்து விடலாகாது.

எதிர்வு

சர்வ அதிகாரமும் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாகக் கூறியே மைத்திரியுடன் பலகட்சிகள் இணைந்து செயற்பட்டனர். ஜேஆர், ஐதேகட்சி உருவாக்கிய இந்தமுறையை சரியாகப் பயன்படுத்தி ஆட்சியில் நீடித்தவரும், பிராந்திய வல்லரசுகளின் குளறுபடிகை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியவரும் மகிந்தர் என்பதை யாரும் மறுக்க இயலாது. அதே ஐ.தே.கட்சியா லேயே இம் முறைமையை முடியடிக்க முடியவில்லை. உடனடியாக மைத்திரி இந்த ஜனாதிபதி முறைமையை மாற்றியே ஆகவேண்டும். இது தவறும் பட்சத்தில் இந்த ஜனாதிபதி முறைமை மீண்டும் மகிந்த அன்கோவுக்கு சாதகமாக அமையும் என்பது திண்ணம்.

டக்லஸ் போன்றவர்கள் சந்தர்ப்பம் பார்த்துக் குத்துக்கரணம் அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இக்குத்துக்கரணம் த.தே.கூ க்கு தலையிடியாகவே அமையும்.

சீனாவுடன் செய்த சிலஉடன்படிக்கைகளை இரத்துச் செய்யமுடியாது போனா லும் இனி ஐரோப்பிய, அமெரிக்க, இந்திய முதலீகளை நாம் போதியளவு எதிர்பாக்க லாம். அதாவது சர்வதேசச்சந்தை ஒன்றை இலங்கையில் எதிர்பார்க்கலாம். ஒரு புதிய பொருளாதாரக் காலணித்துவத்தை இலங்கை மக்கள் எதிர்கொள்வார்கள். இங்கே ஓரளவு மத்திய உயர்வகுப்பினர் பயன்பட்டாலும் கீழ்தட்டு மக்கள் (முழு இலங்கையி லுள்ள) எதிர்வரும் பொருளாதார நெருக்கடியை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பது பெரும் கேள்விக்குறியாகவே அமைகிறது. தேர்தலை அடுத்து பங்குச் சந்தையில் இலங்கை ரூபாவின் விலை அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது வெளிநாட்டு முதல்கொண்டு முதளைகளின் சமிஞ்ஞை எனவே கொள்ளலாம். இச் சமிஞ்ஞையை நாம் அவதானமாகக் கிரகிக்க வேண்டியவர்களாக உள்ளோம்.

நாட்டை பொருளாதார ரீதியாக உயர்த்துவதற்கு இராணுவத்துக்கான செலவை குறைப்பது அவசியம் ஆகிறது. இதை பனிப்போரின் பின்னர் இன்றைய வல்லரசுகள் போதியளவு செய்துள்ளன. இராணுவத்தில் உள்ளவர்களை அங்கிருந்து அகற்றி, அபிவிருத்திப் பணிகளில் அமர்த்துவதன் ஊடாக ஒரு உரமான சிவில் நிர்வாகத்தைக் கட்டமைக்கலாம். இங்கே இராணுவத்துக்கான புதியதளபாடத் தேவைகளும் குறை யும்;. இப்படியான அபிவிருத்திநோக்கம் இருக்குமானால் வடக்குக் கிழக் கில் இராணுவப் பரவலாக்கம் குறைக்கப்படும். நாடு முக்கியமில்லை நாம் அரசியலில் தொங்கிக்கொள்வது தான் முக்கியம் என்று புதியகூட்டணி கருதுமாயின் மீண்டும் மகிந்தரின் கொம்பனியால் அனைவரும் அனைத்து கட்சிகளும் சுக்கு நூறாக்கப் படுவார்கள். மகிந்த அன்கோவுக்கு எதிர்கட்சி ஒன்று இல்லை என்றநிலை உருவாகு வதை யாரும் தடுக்கவே முடியாது போகும்.

மகிந்தரைத் தொடர்ந்து அத்துமீறிய குடியேற்றங்களை மைத்திரியும் செய்வாரானால் அடுத்த தேர்தலில் மைத்தி இன்று மகிந்தர் சந்தித்த நிலையை விட மோசமான நிலையை எதிர் கொள்வார்.

தெற்கில் மகிந்தர் பெற்ற வாக்குவீதத்தைப் பார்த்தால் அடுத்து தேர்தலில் மகிந்தர் போதியளவு வாக்குகளுடன் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. இதைத்தவிர்க்க சரியான அரசியல்வியூகங்களை சிங்களக்கட்சிகள் அமைக்கவேண்டிய கட்டாயத் தினுள் மாட்டுப்பட்டுக் கொண்டுள்ளார்கள். அடுத்த தேர்தலில் நிச்சயமாக இந்தக் கூட்டணி இருக்காது என்பது உறுதியானதே. ஆதலால் ஒவ்வொரு கட்சிகளும் தம்மைப்பலப்படுத்துவதில் தீவீரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை

நோர்வே நக்கீரா 09.01.2015

Exit mobile version