Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கார்ல்மார்க்ஸ் 200 வது ஆண்டு: மா.சித்திவிநாயகம்

உலக மயமாக்கல் என்ற புதிய போக்கோடு முதாலாளித்துவ எல்லைகள் உலகின் அனைத்துத்துத் திசைகளையும் பற்றிக்கொண்டிருக்கிற நேரம் இது. நவீனக் கோட்ப்பாடுகள் மனித மூளையையும்,உழைப்பையும் நசித்து எடுக்கிற காலம்.மதவெறி இனவெறி மொழிவெறி நிறவெறி என்று எம்முள் எழுந்து நிற்கிற பிரிவினைகள் அற்றுப்போய்விடவில்லை. சாதுரியமாக அடக்கி வாசிக்கப்படுகின்றன. ஒவ்வொரு முதலாளித்துவ பெரு முதலைகளின் விந்தணுவில் இன்னமும் அவை சுரந்த வண்ணமே யுள்ளன, மதக் கொலையாளிகள் இன்னமும் மதவெறியை மறந்துவிடவுமில்லை இந்நிலையில் மனித குலத்தின் மகிழ்ச்சித்தத்துவம் அல்லது மனித வாழ்வின் விடியல் என்று நம் பூமியை ஆகர்ச்சித்த மார்க்ச்சிய தத்துவங்களை அதன் நினைவுகளை மீட்க்கும் முயற்சி அவசியமானதாகின்றது

பல்லின கலாச்சாரத்தில் தங்களைத் தக்கவைப்பதாகப் பெருமைப்பேசிக்கொண்டு தனித்தனிதீவாக தங்களை நிலைநிறுத்தும் முதலாளித்துவ மேட்டிமையில் தான் உலகம் நகர்ந்து செல்கின்றது. உலகத்தை உய்விக்க வந்த கம்யூனிச சித்தாந்தங்கள் பெரிதும் கவனம் பெறவில்லை. மார்க்சின் சிந்தனைகள் தோற்றுப்போனதாக சிலர் முகம் சுழிக்கின்றார்கள் உண்மையில் கம்யூனிசம் என்றைக்கும் தோற்பதில்லை.உலகில் போலிக் கம்யூனிஸ்ட்டுக்கள் தான் இன்று தோற்றுப்போய்க் கிடக்கின்றார்கள். முதலாளித்துவ பெரும் பூதங்களால் பிராண்டியெறியப்பட்டு அல்லற்பட்டு ஆற்றாது கண்ணீர் விட்ட புலம்பெயர் தமிழர்களாகிய நாமும் மானிட மேன்மையைப்பேசும் கம்யூனிச சக்திகளை இனம்கண்டு போற்றுகின்றவர்களாயில்லை. இத்தனைக்குப்பிறகும் இரட்டைநிலைப் போக்கில்தான் எம் காலம் பயணிக்கின்றது. நாம் புரட்சி பற்றிய பேசிய மறுகணமே சாதி சமய சாதக சீதன பெருவாழ்விற்குள் களம் இறங்குகின்றோம். கார் இல்லாதவன் காலில்லாதவன் என்றும், கைத் தொலைபேசி இல்லாதவன் காதிலாதவன் என்றும் ஆகிவிட்ட தேவை அதிகமுள்ள பொழுது இது. “தேவைதான் கண்டு பிடிப்பின் தாய்” என்பதாக நம் வாழ்வியல் செல்நெறி நீள்கின்றது. எம் வரலாறுகள்,தத்துவங்கள், இலக்கியங்கள் அவற்றைப் பேசுகின்ற அறிவியல் மேதைகள், பேராசிரியர்கள், தனிமனிதர்கள், ஊடகங்கள் என்று எவ்வித வேறுபாடுமின்றி எங்கும் எதிலும் இரட்டைநிலைப்போக்காய் விரிகின்றது. சோற்றிலிருந்து பிஸ்ஸா, பாஸ்தா, பெர்கர் என்று உணவில் மாறிய நம் இளம்தலைமுறை முதலாளித்துவ சிந்தனைகளில் ஒன்றிய அளவிற்கு சோசலிச சித்தாந்தங்களில், பொதுவுடைமைக் கொள்கைகளில் ஒன்றிப்போய்விடவில்லை. நேற்று லிபரல் இன்று முலாளித்துவம் என்று தாராளவாதகட்சிகளென்றும் பழமைவாதகட்சிகளென்றும் ,முதலாளித்துவகட்சிகளென்றும் தாவித்தாவி அரசியல் சதுரங்கம் விளையாடுகின்றார்கள். கம்யூனிசம் எனும் மானிடநேய பொதுவுடைமைக் கொள்கைகளில் அவர்கள் காலூன்றுவதில்லை. வறுமைப்பட்டோரின் ஆதாரமாக,உழைக்கும் மக்களின் உயிர் மூச்சாக போராடுகிற மக்களுக்கு உந்து சக்தியாக இருந்த கமியூனிச மார்க்சிய சிந்தனைகள் இன்று காலாவதியாகிக் கிடக்கின்றன இந்நிலையில் இன்னமும் உலகில் வாழும் கம்யூனிச சிந்தனையாளர்கள் கார்ல்மார்க்ஸ்சின் 200 வருட நினைவுகளை மீட்க நினைப்பது பெரு மகிழ்வைத் தருகின்றது

இன்றைய உலகப் பொருளியலில் முக்கால்வாசி முதலாளித்துவ பெரு முதலைகளிடம் தான் சிக்கி இருக்கின்றது.உழைக்கும் பாட்டாளி வர்க்கமாயிருக்கின்ற பெரும் பகுதி வெறும் தலையாட்டிகளாகவே உள்ளார்கள்.வெளியே சொல்ல முடியாத அடிமைத்தனம் அவர்களை ஆட்க்கொண்டுள்ளது. நவீன தொழில் நுட்பங்களால் ஆட்டிப்படைக்கின்ற மந்தைகளாயிருக்கின்றார்கள் அவர்கள். தொழிலாளர்களைப் பாதுகாக்கின்ற தொழிற்சங்கங்கள் இன்றைக்கு அருகி வருகின்றன. வேலை முகவர்களினால் ஏஜென்சீ அடிமைத்தனம் வித்தியாசமான முறையில் இன்று நுட்பமாக கையாளப்படுகின்றது. இதுவே பொது விதியாக முதலாளித்துவ நாடுகள் என்றில்லாமல் உலகின் பல்வேறு நாடுகளையும் ஆட்க்கொண்டு வருகின்றது. மனிதகுல வரலாற்றைப் புரட்டிப் போட்டிருக்கின்ற மிகப்பெரிய அவலமாக இருப்பது ஒருவன் உழைப்பை இன்னொருவன் உறிஞ்சுவதுதான். சிறு கைத்தொழில்களை யும் ,தற்சார்புப் பொருளாதாரத்தையும் விழுங்கி பெருமுதலைகள் இன்று உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தை ஏப்பமிடுகின்றன. இத்தகு நிலையிருந்து விடுபட்டு தொழிலாளர் நலம்காக்க பொருளாதார மற்றும் தொழில் நுணுக்கங்களை முறைப்படி அமைப்பதும் சமூக உறவுகள் தோற்றுவிக்கப்படுவதும் புதிதாய் மனிதர்களுக்கு அவற்றைப் போதித்து வளர்ப்பதும் முக்கியமானதாகின்றது. சரியாக 200 ஆண்டுகளுக்கு முன் இதற்காக தன் வாழ் நாளை அர்ப்பணித்த தீர்க்கதரிசியாய் இயற்கை அழகு கொஞ்சும் ஜெர்மனியின் “ரியர்” மாநிலத்தில் பிறந்தது மார்க்ஸ் எனும் மகத்துவம் மிக்க பொதுவுடைமை குழந்தை …. .ஆம் உலக மக்கள் தொகையின் பெரும் பகுதி மக்களின் தலை விதியை உன்னதமான முறையில் மாற்றி அமைத்த கம்யூனிசக்குழந்தை கார்ல் மார்க்ஸ் (5 மே 1818 – 14 மார்ச் 1883) ஒரு அற்புதமான தத்துவஞானி, பொருளாதார வல்லுனர், சமூகவியல், பத்திரிகையாளர் மற்றும் புரட்சிகர சோஷலிசவாதி. அப்போ ப்ரஸியா என அழைக்கப்படட ஜேர்மனிய தேசத்தின் ரியர் நகரத்தில் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவர் கார்ல் மார்க்ஸ். பின்னர் அவர் அரசியல் பொருளாதாரம் மற்றும் ஹெகலிய தத்துவங்களை படித்தார்.அன்று இயக்கவியல் தத்துவத்தின் இமயம் என்று உயர்ந்தும் ஆதிக்கம் வாய்ந்த ப்ருஸ்ச்சிய அரசிற்கு ஆதார அடிவருடியாக இருந்ததால் படுகுழி என்று தாழ்ந்தும் கிடந்தவர் ஹெகல் என கார்ல் மார்க்ஸால் வர்ணிக்கப்பட்டவர் ஹெகல் ”எதார்த்தமானவை அனைத்தும் பகுத்தறிவுக்கு உகந்தவை; பகுத்தறிவுக்கு உகந்தது அனைத்தும் எதார்த்தமானவை.” (All that is real is rational; and all that is rational is real).என்னும் ஹெகலின் புகழ்பெற்ற இந்தக் கூற்றைப்போல வேறெந்தத் தத்துவக் கோட்பாடும்மிகப்பெரிய விமர்ச்சனத்திற்குட்படுத்தப்படவில்லை உலகில் இரண்டு விதமான தத்துவங்கள் முதன்மையானவை. ஒன்று கருத்துமுதல் வாதம். இரண்டாவது பொருள் முதல் வாதம். ஹெகல், லுட்விக் ஆகிய இயக்கவியல் வாதிகளின் கருத்து முதல் வாத பொருள் முதல்வாத ஆய்வுகளை தீவிரமாக ஆய்வு செய்து கருத்து ,பொருள் முதல் வாதங்கள் வர்க்க உறவுகளின் மனிதர்களுக்கிடையேயான உறவுகள் சம்பந்தப்பட்டது என்பதை கண்டறிந்தவர் மாமேதை மார்க்ஸ் அவர்கள் .ஆதிக்க அரசியலுக்கு எதிரானவராக இருந்ததால் கைதாகும் நிலையில் இருந்த அவர் நாடு நாடாக அலைந்து நாடற்றவராக மாறினார், லண்டனில் தனது வாழ்நாளில் பெரும்பகுதியை செலவிட்டார். அங்கு ஜேர்மன் சிந்தனையாளரான பிரட்ரிக் ஏங்கல்ஸுடன் இணைந்து பல்வேறு படைப்புகளை வெளியிட்டார். 1848 அளவில் சிறு துண்டுப்பிரசுரமாக வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையானது உலகின் அறிவார்ந்த, பொருளாதார, மற்றும் அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மார்க்ஸ் ஜெர்மானிய மெய்யியலையும்,உலகில் முதல்முதலாக சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்று போர்க் குரலெழுப்பிய பிரெஞ்சின் சோசலிச அரசியலையும் இங்கிலாந்தின் பொருளியலையும் கற்று அறிந்த மேதை.

மார்க்சின் தத்துவம், மனிதர் அனைவரும் சமமாக இயற்கையின் வளத்தை பங்கிட்டுக்கொண்டு வளமும் நலமும் பெற்று வாழ்வதற்கான உயரிய தத்துவமாகும். மக்கள் வறுமை நீங்கி இப்பூவுலகில் வாழ்வதற்கான வழி வகைகளைச் சிந்தித்த பொருளாதார முறைமை தான் மார்க்ச்சியம். தொழிலாளர்கள் தமக்கான அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க துணைபுரியும் மாபெரும் தத்துவம் அது .மனித குலத்தில் வறுமை என்ற ஒன்று இருக்கும் வரை மார்க்சிய தத்துவமும் இருக்கும். “மார்க்சின் தத்துவம் முதலாளித்துவ தனிச் சொத்துடமைக்கும், சுரண்டலுக்கும் எதிரானதாக இருந்தது. எனவே அது உழைக்கும் மக்களுடைய தத்துவமாயிற்று”

போராடுகிற மக்களுக்கு உந்துசக்தியாக விளங்கிய கார்ல் மார்க்சின் வாழ்க்கை மிக்க வறுமையும்,துன்பமும் துயரமும் நிறைந்த வாழ்க்கையாகும். அவரது பிரிய துணைவியார் ஜென்னியின் உயிருள்ள உருக்கமானான கண்ணீர்க் கடிதங்கள் இன்னமும் ரியர் நகரில் மார்க்ஸ்சின் இல்லத்தில் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதை நான் கண்ணீரோடு தரிசித்து வந்தவன். ஜென்னி தன் நாட்க்குறிப்பில் இவ்வாறு பதிவு செய்கின்றார் “எம் குட்டிதேவதையாக வந்து உதித்த “பிரான்சிஸ்கா” மார்புச்சளியால் மூன்று நாட்களாக மூச்சத் திணறியபடியே மருந்தின்றி மரணமாகின்றாள் .அவள் பிறந்த போது தொட்டில் வாங்கக்கூட எங்களிடம் காசில்லை இறந்த போது சவப்பெட்டிக்கும் வழியில்லை. மார்க்சின் ஆணி வேராக திகழ்ந்த ஜென்னி கூட புற்று நோய் கண்டு மருந்தில்லாமல் இறந்து போகின்றாள் .ஜென்னியை நல்லடக்கம் செய்யும் போது, இந்த உலகில் “”மகத்தான தத்துவம் உருவாவதற்கு உற்றத் துணையாக இருந்த மாதரசி ஜென்னி”” என்று மார்க்சின் தோழன் ஏங்கெல்ஸ் கதறி அழுதார். .இப்படித்தான் தோழர்களே பொருள் முதல்வாதத்தின் தந்தை பொருள் அற்று மடிந்து போன கதை.

சோவியத் ருசியா உடைந்து சுக்கு நூறாகி பலதேசங்களாகப்பிரிந்து சிதைந்து அழிந்தபோது மார்கஸ்சின் தத்துவம் பொய்த்துவிடப்போகிறது என்றுதான் பலரும் எண்ணி இருந்தார்கள் ஆனால் 21 ஆம் நூற்றாண்டின் ஆயிரம் ஆண்டுகள் சிந்தனையாளர்களின் வரிசையில் முதலாம் இடத்தில் நிற்பவர் கார்ல் மார்க்ஸ் என்கின்றது தத்துவவியல் ஆர்வலரின் கருத்து மதிப்பீடு. உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள் உங்களிடம் இழப்பதற்கு ஒன்றும் இல்லை!. பெறுவதற்கு ஒரு புதிய பொன்னுலகம் காத்துக் கொண்டிருக்கிறது!!! என்ற கார்ல் மார்க்சின் குரல் என்றைக்கும் இவ்வுலகை விட்டு ஓய்ந்து போகாது!!

Exit mobile version