Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கறுப்புத் துண்டு யூதாஸ் : காமராஜ்

தென் மாவட்டத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக விளங்கிய தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட வேண்டும் என்று 14 வருடங்களுக்குப் பின் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் தீர்ப்பளித்தது,இப்பொழுது நிறையபரிசுத்தவான்’கள் அத்தீர்ப்புக்கு உரிமை கொண்டாடுகிறார்கள்.அதில் ஒரு பரிசுத்தவானைப் பற்றிய சிறு பதிவு இது.

தென் மாவட்ட மக்களின் உயிருக்கே உலைவைக்கக் கூடிய ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக  துவக்கமான 1996 ஆம் ஆண்டு முதல் தூத்துக்குடியை மையப்படுத்தி பல போராட்டங்கள் நடைபெற்றன.பல்வேறு சிறு சிறு அமைப்புகள், இணைந்து நடத்திய ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் இதில் மூழு வீச்சில் இயங்கியது.அனைவரும் அப்பழுக்கற்று உண்மையான அக்கறையுடன் களத்தில் இறங்கினர்.

முற்றுகை, கப்பல் சிறைபிடிப்பு என்று பல கட்டப் போராட்டங்களை இந்த இயக்கம் நடத்தியது.ஆனால் இதில் எதிலும் இணையாமல் தனியாக ஆலைக்கு எதிராய் ஆவர்த்தனம் நடத்தியவர் இந்த பரிசுத்தவான்.அப்பொழுது தான் இவர் தனது தாய்க்கழகத்தில் இருந்து தனிக்கட்சி தொடங்கி மக்கள் வணிகம் ஆரம்பித்த நேரம் அது.பரிசுத்தவான் வெற்று அறிக்கைகளும் கண்துடைப்பு போராட்டங்களும் நடத்தினார்.அப்பொழுது இவருக்கு தென்மாவட்டத்தில் இருந்த அரசியல் செல்வாக்கினாலும், வல்லமை மிக்க பேச்சினாலும், ஊடக பலத்தினாலும் இவரது எதிர்ப்பு மட்டுமே ஆலைக்கு எதிரான போராட்டமாய் பொதுவெளியில் முன்னிலைப்படுத்தப்பட்டது.

மக்கள் திரள் போராட்டமான ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் உண்மையான போராட்டங்கள் எதிலும் முன்னிலைப்படுத்தப்படவில்லை. ஊடகங்களிலும் பதிவு செய்யப்படவில்லை. ஸ்டெர்லைட் எதிர்ப்பு என்றால் இவர் மட்டுமே  கதாநாயகன் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. இவ்வாறு இரண்டு ஆண்டுகள் கடந்தன. 1996 இல் ஆலைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட வழக்கில் இவர் இல்லை.ஆனால் 1997 இல் தன்னையும்  வாதியாய் இணைத்துக் கொண்டார்.

கொஞ்ச கால கட்டத்திற்குப் பிறகு,’கேளுங்கள் தரப்படும்’ என்பதன் படி ஸ்டெர்லைட் ஆலையிடம் கேட்டார்,நிறையக் கிடைத்தது.அதன்பின்பு கீழ்ப்படிதலே பாக்கியவான் என்பதன் படி ஆலைக்குக் கீழ்ப்படிந்தார்.(இவரது இரண்டு சகோதரிகளும் இவரது மனைவியும்,மகளும் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் உலக வரலாற்றைக் கரைத்துக் குடித்தவர் அல்லது மனப்பாடம் செய்து ஒப்பிப்பவர் என்பதாலும் பைபிள் வசனம் இவருக்கு அத்துப்படி)அதுபோக தனது தம்பியின் பெயரில் ஆலையில் மிக முக்கிய காண்ட்ராக்டுகள் பலவற்றை வாங்கிக் கொண்டார்.

அதன் பின் நாளடைவில் போராட்டத்தை படிப்படியாக நீர்த்துப் போகச்செய்தார்.ஆலைக்கு எதிரான வழக்கிலும் ஒருமுறைக்கு மேல் இவர் ஆஜர் ஆகவில்லை.அங்கும் கழுத்தறுப்பு வேலை செய்தார்.தற்பொழுது சென்னை உயர்நீதிமன்றமும் தனது தீர்ப்பில் ‘மனுதாக்கல் செய்த வைகோவோ அல்லது அவரது சார்பாக வழக்கறிஞரோ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை’’ என்று தெளிவாக சுட்டிக்காட்டி இருக்கிறது.

இந்த நிலையில் தான் ஆலையை உடனடியாக மூடச் சொல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மற்ற கட்சிகள் அனைத்தும் இதில் நல்ல விலைக்குப் போனாலும் அவர்கள் வாங்கியதை வாங்கிக் கொண்டு ‘நேர்மையாக’அமைதியாகி விட்டனர்.தீர்ப்புக் குறித்து எந்தக்கருத்தும் கூறவில்லை.ஆனால் என்ன கொடுமை பாருங்கள்,பரிசுத்தவான் இதில் வரிந்து கட்டிக் கருத்துக் கூறியுள்ளார்.சென்னையில் பத்திரிக்கை அலுவலகத்தில் இருந்து கொண்டே எந்தக் கள நிலவரமும் தெரியாத துப்பறியும் புலனாய்வுப்புலிகள் இவரிடம் தொலைபேசியில் கருத்தைக் கேட்டு வெளியிட்டுள்ளனர்.இந்த வெற்றிக்கு தான் தான் முழுப்பொறுப்பு என்பதைப்போலவும் அப்பழுக்கற்றவர் போலவும் பரிசுத்தவானும் அனைத்து ஊடகங்களிலும் கருத்துக் கூறியுள்ளார்.

என்ன கொடுமை பாருங்கள்.ஸ்டெர்லைட் பிரச்சனையில் பரிசுத்தவானின்  கபட நாடகம் தென்மாவட்டத்து மக்களிடம் அம்பலப்பட்டுப் போனாலும் தீர்ப்பு வந்தவுடன் தன்னை முன்னிலைப்படுத்தி அதிலும் வெற்றியும் கண்டுவிட்டார்.இதில் இன்னொரு கொடுமையும் உள்ளது.ஸ்டெர்லைட்டில் எதும் மிகப்பெரிய பெரு உயிரிழப்பும் விபத்தும் நடந்தால் அதில் பாதிக்கப் படப் போவது இவரது சொந்த ஊரும் ஆகும்.இதில் இப்பொழுதும் அவரது தாய் வசித்து வருகிறார்.

என்ன கொடுமை பாருங்கள்!

 

ன்று 30 வெள்ளிக் காசுகளுக்காக கர்த்தரை சிலுவையில் அறையக் காட்டிக் கொடுத்தான் யூதாஸ்.ஆனால் சிலுவையில் அறையப்பட்ட மறு நாளே செய்த செயலின் குற்ற உணர்ச்சி தாங்காமல் நாண்டுக்கிட்டு செத்தான் யூதாஸ் .ஆனால் இங்கோ காட்டிக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் இன்று மக்களைக் காப்பாற்றியதாகத் தம்பட்டமும் அடிக்கிறார் கறுப்புத்துண்டு யூதாஸ்.

 (யூதாஸிடம் இருந்த நேர்மை கருப்புத்துண்டிடம் இல்லை.அதனால் தலைப்பு முரணான ஒன்று தான்.யூதாஸே என்னை மன்னித்து விடு.)

Exit mobile version